தான் உறுதி அளித்தவாறு சனவரி மாதம் முதல் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு 2500/ - மாதாந்த வேதன அதிகரப்பைப் பெற்றுக் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படுவதுடன் மாத இறுதியில் பாராளுமன்றம் கூடியவுடன் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு. உரிய அங்கீகாரத்துடன் சனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வரையில் அமுல் படுத்தப்படும் என தொழில் அமைச்சர் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், பொருளாதார உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்களின் அழைப்பின் பேரில், கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு குழுவுக்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கோடு பெருந்தோட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கும் இடையில் நேற்று மாலை (13/01/2016) நடைபெற்ற கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் இந்த உறுதிப்பாட்டை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொழிலமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இச்ச்ந்திப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. தொழிலாளர் சார்பான தொழிற்சங்கங்கள் மாத்திரமல்லாது தோட்ட சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டிருந்தன. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அனைத்து தொழிற் சங்கங்களும் உறுதிபட தெரிவித்தன.
அத்துடன் பின்வரும் விடயங்கள் குறித்து தொழில் அமைச்சரினதும், சர்வதேச வர்த்தக அமைச்சரினதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
* பிராந்திய கம்பனிகள் முறையாக நிர்வகிக்கப்படாமை
* உடன்படிக்கைக்கு மாறாக தோட்டங்களை உப குத்தகைக்கு வழங்கியுள்ளமை
* பிரதான பயிரிடல் நடவடிக்கைகளை விடுத்து மரங்களை வெட்டி விற்பனை செய்தல், வாசனை திரவியங்களை பயிரிட்டு வெளியாருக்கு விற்றல், தோட்டங்களில் உல்லாச விடுதிகளை நடாத்தி வருமானம் ஈட்டுதல் மற்றும் மீளபயிரிடல் செய்யாமல் வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்தல்.
* முகாமைத்துவ செலவு எனும் பெயரில் பெருமளவு பணத்தினை கம்பனிகள் அறவிட்டு பின்னர் கம்பனிகள் நட்டம் என கையை விவரிப்பதாகவும்
* பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கவேண்டிய நிதி பங்களிப்பினை செலுத்தாமல் உள்ளமை
* சனவசம, எஸ்பிசி மற்றும் எல்கடுவை பிளாண்டேசன் ஆகிய நிறுவன்ங்கள் நிர்வகிக்கும் தோட்டங்கள் உரிய திகதியில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தினை வழங்காமல் இருப்பதுடன் ஊழியர் சேமலாப நிதி, மற்றும் நம்பிக்கை நிதியத்துக்கான பங்களிப்பையும் செலுத்தாமல் உள்ளமை.
குறித்த விடயங்கள் தொடர்பாக பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன
- பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் மேற்பார்வை பிரிவினை (PMMD ) அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து மேலும் வலுவுள்ளதாக்குதல்.
- பிராந்திய கம்பனிகளுடன் செய்துள்ள உடன்படிக்கையை மீளாய்வு செய்து புதுப்பித்தல்.
- பெருந்தோட்ட துறையில் கோல்டன் பங்குதார்ர் என்ற வகையில் திறைசேரியின் பங்கேற்பை அதிகமாக்குதல்
- பெருந்தோட்ட அமைச்சும், தொழில் அமைச்சும் இணைந்த மேற்பார்வை குழுவொன்றைத் தாபித்தல்.
- சனவசம, எஸ்பிசி மற்றும் எல்கடுவை பிளாண்டேசன் ஆகிய நிறுவன்ங்களுக்கும் தொழில் அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தல்
கலந்துரையாடப்பட்ட விடயங்களை பொருளாதார மறுசீரமைப்பு குழுவுக்கு கொண்டு செல்வதற்கும் அடுத்தசந்திப்பில் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதநிதிகளும் கலந்துகொள்ள செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொருளாதார உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உறுதி அளித்தார். இந்த சந்திப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...