நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி, கரகஸ்தலாவ (474 A), எல்பொட (474 J) போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் பிரிவு, பெரட்டாசி பிரிவு, பூச்சிகொட பிரிவு, பெரட்டாசி தொழிற்சலை பிரிவு, மேரியல் பிரிவு, அயரி பிரிவு, எல்பொட வடக்கு, மேமொழி பிரிவு, காச்சாமலை பிரிவு, கட்டுகித்துல தோட்டம், வெதமுல்ல கெமினிதன் பிரிவு, கந்தலா தோட்டம் போன்ற தோட்டங்களில் சுமார் 8000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாவர். இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மக்களின்; தேவையின் பொருட்டே பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் திட்டத்தின்கீழ் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன. அதற்கமைய இறம்பொடை பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை, ஹேவாஹெட்ட முல்லோயா தோட்ட வைத்தியசாலை, கந்தபொலை ஹைபோரஸ்ட் தோட்ட வைத்தியசாலை, கடுகன்சேனை, பார்கேபல் தோட்ட வைத்தியசாலை, ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் தோட்ட நிர்வாகங்களிடமிருந்து அரசாங்க வைத்தியசேவைக்கு உள்வாங்கப்பட்டன.
இதன்படி இந்த வைத்தியசாலைகளை திருத்தும் பணிகளும் இதற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை 3 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்டபோதும் தற்போதும் ஒரு மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியரும் 02 ஊழியர்களும் ஒரு காவலாளியுமே சேவையில் உள்ளனர்.
காலையில் பணிக்கு வரும் வைத்தியர் மாலையில் தன் இருப்பிடத்துக்கு போய்விடுவார். தொழிலாளர்களோ வேலை முடிந்து மாலையில்தான் மருந்து எடுக்க வருவார்கள். பணியிலுள்ள ஒரு வைத்தியரும் வேறு வேலைகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றால் அன்று வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும். இங்குள்ள ஊழியர்கள் வைத்தியசாலைக்குள்ளேயே தங்கியும் உள்ளனர். இவர்களுக்கான விடுதி இன்னமும் அமைக்கப்படவில்லை. நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது. கட்டில் போன்றவையும் இல்லை. பல இலட்சம் ரூபா செலவு செய்து, தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையால் தற்போது மக்களுக்கு எவ்வித பயனுமின்றி ஒரு மருந்தகமாக காணப்படுகின்றது. ஊழியர்கள் தங்குவதற்கு விடுதிவசதி இல்லை. இதனால்தான் புதிய வைத்தியர்கள் உட்பட ஊழியர்களை நியமிக்க முடியாத நிலை காணப்படுகின்றதாக தெரியவருகின்றது.
மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸல்லாவை வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம். காரணம் 25 கி.மீ. பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இப்பாதையில் அடிக்கடி பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பலர் இறந்தும் பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும், மகப்பேற்று தாய்மாரையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால் இடைவழியில் மரணமும் சம்பவித்துள்ளது. பாதையின் அவலமே இதற்குக் காரணமாகும். சில தாய்மார் இடைவழியில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். 9 பிரிவுகளைக் கொண்ட தோட்டத்தில் AMBULANCE இல்லை. பிரதேச மக்கள் பாதை திருத்தம், வைத்தியசாலை அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தியும் அதனால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
எனவே, விடுதிகள் அமைத்து தேவையான வசதிகளையும், வைத்தியர் மற்றும் ஊழியர்களை நியமித்து வைத்தியசாலை எப்போது முறையாக இயங்குவது? அதுவரைக்கும் 09 தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் எங்கு போய் வைத்திய சேவையைப் பெற்று கொள்ளப்போகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவசர தேவை ஏற்படும்போது தோட்ட லொறிகள் மூலமாக புஸல்லாவை பிரதேச வைத்திசாலைக்கு அனுப்பப்படுகின்றனர். இதுதொடர்பில் மத்திய மாகாண விவசாய அமைச்சரும், இப்பிரதேசத்தை பிரதிநிதித்துபடுத்துபவருமான மருதபாண்டி ரமேஸ்வரனிடம் வினவியபோது, கடந்த அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சிபாரிசுக்கமைய இந்த வைத்தியசாலை அமைக்கப் பட்டு, விடுதிக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் வந்ததும் குத்தகை தொடர்பில் மீள் பரிசீலனை செய்வது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்கவிடமும், மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகமவிடமும் பேசி உடனடியாகத் தீர்வு எடுக்கப்படும் என்று கூறினார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமிடம் வினவியபோது, இந்த வைத்தியசாலை பிரச்சினை தொடர்பாக பலமுறை நான் மத்திய மாகாண சபையில் பேசியுள்ளேன். 2016 வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் இந்தப் பிரச்சினை குறித்து சபையில் பேசினேன். அதற்கு சபைத் தலைவர் இநத பிரச்சினை சபையில் அடிக்கடி பேசப்படுகின்றது. அதனால் இதற்கு கட்டாயம் தீர்வு காணுமாறு உத்தரவிட்டார். அண்மைக் காலங்களில் இவ்வாறு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அவை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களினால் பின்னடிக்கப்பட்டும் வருகின்றன. மாகாண சபையில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 08 உறுப்பினர்களும் ஒரு அமைச்சரும் இருக்கின்றோம். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக சபைகளில் குரல் கொடுக்கவே இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறினார்.
மேலும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரனிடம் வினவியபோது, மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கின்றாரே தவிர, நுவரெலியா, கண்டி மாவட்ட வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு முன்வருவதில்லை. அத்துடன், மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசிற்கு தாரைவாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம், மாகாண சபையினால் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட மற்றும் கிராமிய வைத்தியசாலைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் தோட்ட மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் பெரட்டாசி தோட்ட வைத்தியசாலையின் பிரச்சினை தொடர்பில் மத்திய மாகாண வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறும்போது இது குறித்து சபையில் பேசி இந்த மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறினார்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகமவிடம் வினவியபோது, பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை தொடர்பில் உறுப்பினர்கள் அடிக்கடி சபையில் பேசுவார்கள். ஆனால், அதை முறையாக செயற்படுத்த முடியாமல் உள்ளது. ஊடகங்கள் இவ்வாறான இப்பிரச்சினைகள் தொடர்பில் தேடி ஆராய்ந்து எங்களிடம் கேள்வி கேட்பதை நான் வரவேற்கின்றேன். இருந்தும் இந்த வைத்தியசாலை பற்றி பூரண அறிக்கை ஒன்றை பெற்றுத் துரிதமாக விடுதி வசதி, நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், அம்புலன்ஸ் வசதி மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் , 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு மக்கள் முறையாக வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நன்றி - வீரகேசரி
+ comments + 1 comments
மலையக நிருபர்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
0740534838 - WhatsApp messenger
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...