Headlines News :
முகப்பு » , , » மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்

மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்

 

இம்மாதம் மே 26 அன்று இந்திரதன தேரரின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள். சிங்கள ராவய, ராவணா பலய உள்ளிட்ட பல அமைப்புகள் அவரின் நினைவு நாளில் கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது.
சம கால இலங்கை அரசியலில் குறிப்பாக யுத்தத்தின் பின் மாட்டை கொல்வது, மிருகபலி என்பவற்றை எதிர்ப்பது அரசியல் தளத்தில் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னான சிங்கள பௌத்த மீளுயிர்ப்புக்கு தேவையான காரணியாக இது ஆக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். மேலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதனை முன்னெடுப்பதில் உள்ள பேரினவாத நலனை வரலாற்று ரீதியில் ஆராய வேண்டியிருக்கிறது. யார் இந்த இந்திரதன தேரர்.

இந்திரதன தேரர் 
2013 ஆம் ஆண்டு மே 24 அதாவது புத்தர் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தன்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மடில்லே பங்ஞாலோக தேரரிடம் தொலைபேசியில் அழைத்து இன்று தலதா மாளிகையின் முன்னால் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. பின்னேரம் ஊடகங்களில் காணலாம் என்று கூறியிருக்கிறார்.

மாடுகள் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டி தலதா மாளிகையின் வாசலின் முன்னால் உரையாற்றியிருக்கிறார். ஒரு பெரிய கேனில் கொண்டு வந்திருந்த பெற்றோலை தலையில் முழுவதுமாக ஊற்றி தனது கையில் இருந்த லைட்டரை பற்ற வைத்த போது திடீரென்று எழுந்த நெருப்பை பாதையில் சென்றவர்கள் கண்டு திடுக்கிட்டனர். லைட்டரை பறிக்க முற்பட்ட ஒருவரும் தீ தொற்றிகொண்டதும் விலகி ஓடினார். தீயால் எரிந்துகொண்டிருந்த நிலையில் மாடுகளைக் கொல்லவேண்டாம் என்று கத்தியபடி அந்த இடத்தில் நடக்கத் தொடங்கினார் இந்திரதன தேரர். சிலர் உடனேயே தண்ணீரைக் கொண்டு வந்து அணைக்க முற்பட்டனர். அருகிலிருந்த படையினர் வந்து அந்த தீயை சிரமத்தின் மத்தியில் அணைத்த போதும் அவரது உடல் முழுவதும் தீக்காயங்களால் அதிகமாக சிதைவுற்றிருந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போதும் அவர் அங்கு இரு நாட்களில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இறந்து போனார்.


அவர் தன்னைத் தானே தீயிட்டுகொள்வதை சுவர்ணவாகினி தொலைகாட்சியினர் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இறப்பதற்கு முன் அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்தில் ஐந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.
1. மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்படவேண்டும்
2. பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படவேண்டும்
3. கட்டாய மத மாற்றம் நிறுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
4. பல்லின, பல்மத, சர்வமத கருத்தாக்க சதி ஒழிக்கப்படவேண்டும்
5. பௌத்த நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பு உருவாக வேண்டும்.
இவை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஒரு சக்தியாக உருவெடுத்து இவற்றை நிறைவேற்ற வேண்டும்.

இறந்த இந்திரதன தேரரின் உடலை அவர் பிறந்த ஊருக்கு அனுப்பவிடாமல் தம்ம்மிடம் கையளிக்குமாறு சிங்கள ராவய இயக்கத்தை சேர்ந்த பிக்குமார் போலீசாரோடு சண்டை செய்தனர். அந்த உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அரசியல் செய்ய முற்பட்ட அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.


இதற்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முகமாக வியட்நாமில் 11.06.1963இல் ஒரு பிக்கு நாடு ரோட்டில் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்திருப்போம். அதன் பின்னர் இந்திரதன தேரரின் தற்கொலை உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் பெல்மடுல்ல பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர் அவர். ஆனால் அவர் கட்சியின் அறிவித்தலையும் மீறி தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தற்கொலைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஜாதிக ஹெல உறுமய அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது. மாடுகள் கொல்வதற்கு எதிராக அவர் சிங்கள ராவய இயக்கத்துடன் சேர்ந்து இயங்கி வந்ததுடன் இடையில் சிங்கள ராவய இயக்கத்தில் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்துக்கான அமைப்பாளராக இயங்கி வந்தார். அது ஜாதிக ஹெல உறுமயவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. சம்பிக்க ரணவக்க வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கட்சியின் ஒழுங்கை மீறியதற்காக நீக்கப்பட்டார் என்று வெளியிட்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னேஸ்வரம் காளி கோவில் திருவிழா நிகழ்ந்த வேளை, அங்கு உயிர்கள் பலியிடப்பட்டால் தான் தற்கொலை செய்துகொள்வதாக இந்திரதன மிரட்டல் விடுத்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிங்கள ராவய அமைப்பின் பிக்குமார் மாடுகளைக் கொல்வதை தடை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போதைய ஜனாதிபதி மகிந்தவின் உறுதிமொழியைத் தொடர்ந்து அந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இந்திரதன தேரரின் தற்கொலையைத் தொடர்ந்து மீண்டும் பெரிய அளவில் இவ்விடயம் குறித்து பலமான விவாதங்கள் சிங்கள சூழலில் நடந்தது. புத்தர் புலால் உண்ணக்கூடாது என்று எங்கும் கூறவில்லை என்பதை எல்லாம் அந்த விவாதங்கள் சுட்டிக்காட்டின.
பௌத்த மதத்தின் தலையாய கொள்கையான பஞ்ச சீலத்தில் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர் மனைவியை கவராமை, கள்ளுண்ணாமை என்கிற ஐந்தையும் வலியுறுத்துகிறது. பஞ்சசீலக் கொள்கையை “பன்சில்” என்றும் பௌத்தர்கள் அழைப்பது வழக்கம். பஞ்ச சீலத்தின் முதலாவது சுலோகமே “பானாதிபாதா வேரமணி சிக்கா பதங் சமாதியாமி”. அதாவது ஒருயிரையும் கொல்லாமையை வலியுறுத்துகிறது அது. 
முஸ்லிம்களுக்கு எதிராக 
இன்றைய நிலையில் மாட்டரசியலை சிங்கள பேரினவாதம் வசதியாக பயன்படுத்தி வருவது முஸ்லிம்களுக்கு எதிராகவே. அவர்களின் பரப்புரையின்படி இறைச்சிக்காக மாடுகளை அதிகம் வெட்டுபவர்கள் முஸ்லிம்களே என்கின்றனர். அடுத்ததாக ஹலால் பண்பாட்டை ஏனைய இன-மதத்தவர்களுக்கு திணிக்கின்றனர் என்கின்றனர். இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை அதிகம் ஊதிப் பெருப்பித்து, முஸ்லிம்கள் இறைச்சிக்காக உலகளாவிய ரீதியில் உயிர்களை வதைத்து கொல்வதாக அங்காங்கு கிடைக்கும் காணொளிகளையும், புகைப்படங்களையும் விகாரப்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

இப்போதெல்லாம் ஹஜ் பெருநாள் கிட்டும்போதெல்லாம் நாட்டில் பெருமளவு மாடுகளை கொல்கிறார்கள் என்கிற பிரச்சாரம் சூடு பிடித்துவிடுகிறது. சென்ற வருடம் குர்பான் இறைச்சியை பங்கு போடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பல சந்தர்ப்பங்களில் பிக்குமாரும், சிங்கள பௌத்த சண்டியர்களும் அவற்றை தடுத்து நிறுத்தி சண்டித்தனம் செய்து கைப்பற்றி பொலிசாரிடம் பிடித்துகொடுத்தனர். குர்பானுக்காக இறைச்சியை அனுப்பிய தனவந்தர்கள் இதற்கு விரிவான விளக்கமளித்து அவற்றை விடுவிக்க கடுமையாக போராட வேண்டியேற்பட்டது பற்றி பல செய்திகள் வெளியாகின. சில இடங்களில் பலாத்காரமாக மாடுகளை விடுவித்து வீரச்செயலாக காட்டினர். ஏற்கெனவே பல இறைச்சிக்கடைகளை மூடச்செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படி இலங்கையில் மாட்டிறைச்சிக்கு கடும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி அதன் விலையை அதிகம் உயர்த்தியதில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு. மாட்டிறைச்சி புரதச் சத்துள்ள சத்தான உணவாக கொள்ளப்படுகிறது. மந்த போசனத்தால் பாதிக்கப்படும் சிறுவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால் இன்று சாதாரண ஏழைகளுக்கு மாட்டிறைச்சி கிடைக்கவிடாதபடி இந்த பேரினவாத செயல் ஆகியிருக்கிறது. போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் கூட பெரும்பான்மை சிங்கள பௌத்த அடிநிலை மக்களே. இவையெல்லாம் மிக சமீப காலமாக பேரெழுச்சியுற்றுவரும் இனவாதத்தின் வடிவங்கள் தான். 

ஜீவகாருண்யம்
“ஒரு ஈ எறும்புக்கும் தீங்கிழைக்கக் கூடாது” என்று பௌத்தம் போதிக்கிறது. பௌத்தம் மாட்டுக்கு மட்டும் கருணை காட்டவில்லை. சகல உயிர்களதும் நலன்கள் குறித்தும் தான் பேசியது. கடலினங்கள், கால்நடை உயிரினங்களும் அதற்குள் அடக்கம். வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டுக்கும் அதாவது மீன்பிடி, கால்நடை என்பவற்றுக்கு தனித்தனியான அமைச்சு கூட “பௌத்த” இலங்கையில் இருக்கிறது என்பது தான். இலங்கையில் கால்நடை அமைச்சரும், மீன்பிடி அமைச்சரும் கூட சிங்கள பௌத்தர்கள் தான்.

கோழி, ஆடு, பன்றி போன்றவற்றிற்கு ஏன் இந்த காருண்யம் காட்டப்படுவதில்லை. அதென்ன மாட்டுக்கு மட்டும் விசேஷம். மாடு வெட்டுவதை பிரச்சினையாக்குபவர்கள் வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அழகாக பொதி செய்து இறக்குமதி செய்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதை ஒரு போதும் எதிர்த்ததில்லையே ஏன். எழுத்தாளர் காமினி வியங்கொட எழுதிய கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார். “சிங்கள பௌத்த மாட்டிறைச்சி”க்குப் பதிலாக “மேற்கத்தேய கிறிஸ்தவ மாட்டிறைச்சி”யை பிரதியீடு செய்யச் சொல்கிறார்களா? என்று அவர் வினவுகிறார்.

மாட்டைத் தாயாகவும் பால் கொடுக்கும் தெய்வமாகவும், வணங்குவதற்குரிய தெய்வமாகவும் உணர்வுபூர்வமாக பிரச்சாரம் செய்து, புனித நிலைக்கு உயர்த்தி ஐதீகமாக பரப்பி அதனை நம்பப் பண்ணி அதனை உண்ணக்கூடாது, கொல்லக்கூடாது என்பது வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. மேலும் இலங்கையில் ஏராளமான “அசைவ” உணவு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எந்த எதிர்ப்பையும் இவர்கள்  காட்டுவதில்லை.கொல்லக்கூடாது ஆனால் கொல்லப்பட்டதை விற்கலாம், புசிக்கலாம் என்கிற முரண்நகை இதிலும் தொடர்கிறது. மேலும் பெரும்பாலான பௌத்த பிக்குகள் உணவுடன் கடலுணவை சேர்த்துக்கொள்கிறார்களே. பௌத்த மதம் உள்ள சில ஆசிய நாடுகளில் அசைவ உணவு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலுள்ள ஷிண்டோ மதத்தின் கடவுள்கள் புத்தரின் அவதாரங்களாக பார்க்கப்படுகிறது. அந்த மதத்தில் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் பல அனுமதிக்கப்பட்டவை.

அண்மைக் காலமாக சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய அங்கமாக மாடுகளை விடுவிக்கும் செயற்திட்டமும் ஆகியிருக்கிறது. Stop killing cows என்கிற ஒரு இயக்கம் சிங்கள பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்கிறது.

புத்தரின் போராட்டம்
இன்றும் தம்மை சைவர்களாக (மரக்கறி உணவாளர்களாக) காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் வேத காலத்திலிருந்தே மாடு, குதிரை உள்ளிட்ட எல்லாவற்றையும் அடித்துக் கொன்று தின்றிருப்பதை அவர்களின் ரிக் வேதம் சாட்சி கூறுகிறது. ரிக் வேதத்தில் யாகம் வளர்ப்பு என்கிற பேரில் தீயில் மாடுகளை எரித்து பங்கு போட்டு பிரித்து உண்ணும் வழக்கம் குறித்து விலாவாரியாக ரிக் வேதம் பேசுகிறது. அந்தவேளை தான் வேத மறுப்பாளனாக பார்ப்பனியத்தின் மாபெரும் எதிரியாகத் தோன்றுகிறார் புத்தர். உழவுத்தொழில் செய்யவே மாடுகள் இல்லாதபடி இரக்கமற்ற இந்தப் பார்ப்பனர்கள் வேதத்தின் பேரால் யாகம் என்ற பொய்யுரையால் எல்லா மாடுகளையும் அடித்துக் கொன்று தின்ற அட்டூழியத்தை எதிர்த்துப் புத்தர் போராடுகிறார். மாடுகளைப் பாதுகாக்க எழுந்த இயக்கமே புத்தரின் இயக்கம். புத்த மதத்தின் எழுச்சியால் ஆட்டம் கண்ட பார்ப்பனியம் தம் மதத்தைப் பாதுகாப்பதற்காக தாங்கள் மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டு வந்த மாட்டுக்கறி உணவைத் துறந்து சைவ உணவுககு மாறுகிறார்கள்.

மாடு உண்ணார் மேலோர், உண்போர் கீழோர் என்கிற வஞ்சகமான பரப்புரையை பார்ப்பனர் வெற்றிறெச் செய்து விட்டனர். மாட்டிறைச்சி என்பது தீண்டத்தகாதவர்களின் உணவாக மாற்றிவிட்ட பார்ப்பனியம் காலப்போக்கில் அவர்களிடமிருந்தும் அதனை பறித்து ஏறிய துணிந்து விட்டது. மாட்டிறைச்சி குறித்து இந்து மதத்தின் பெயரால் உணர்ச்சியூட்டி நச்சு கருத்தியல்களை பரப்பி வைத்திருக்கிறது.

இலங்கையில் மாட்டிறைச்சிக்கு எதிரான ஐதீகம் இந்து மதத்திலிருந்தே தொற்றிகொண்டது என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.

இந்தியத் தடை
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் மாட்டிறைச்சியை தடை விதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவ பாசிச போக்கின் ஒரு அங்கமாகவே அது கொள்ளப்பட்டது. இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் விளிம்புநிலை மக்களின் ஊட்ட உணவாக மாட்டிறைச்சி இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கு மலிவாக கிடைக்கும் உணவாக காணப்படுகிறது.

மாடு சிவனின் வாகனம் என்று கூறிகொண்டு அதை கொல்லக்கூடாது என்று கூறும் இந்தியா உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில இருக்கிறது. முதலாவது இடம் பிரேசில். அது மட்டுமல்ல கடந்த வாரம் ஊடகங்கள் இன்னொறரு உண்மையை வெளிப்படுத்தியிருந்தன. இந்தியாவில் அந்த பிரதான மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் முதல் 6 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. அவர்கள் தமது மாட்டிறைச்சி கம்பனிகளை முஸ்லிம் பெயர்களில் நடத்தி வரும் பித்தலாட்டங்களும் அம்பலப்படுத்தப்பட்டன.

அநகாரிக தர்மபால
உண்மையை சொல்லப்போனால் இறைச்சி உண்போரைப் நோக்கி “மாட்டிறைச்சி மட்டும்” உண்ணாதீர்கள் என்று நிர்ப்பந்திக்கும் அரசியல் அப்பட்டமான பம்மாத்து.

மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்து அநகாரிக தர்மபால ஒரு இயக்கமே நடத்தியிருந்தார். அது கூட ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் எதிராகத் தான் மேற்கொள்ளப்பட்டது. “கள் குடிப்பவன்  இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்” என்பது அவரது சுலோகம். மாட்டிறைச்சிக்கு எதிரான பிரசாரத்துக்காக ஒரு வண்டியை தயாரித்து “மாட்டிறைச்சியை உண்ணாதீர்” என்கிற வாசகத்தை பெரிய எழுத்தில் அதில் பொறித்து நாடு முழுதும் கொண்டு சென்றார். அவரது அந்த வாசகம் சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யமானது. அந்த வாசகத்தைத் தான் இன்றும் உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் அவரது 150 வது வருட நினைவையொட்டி அந்த வாகனத்தை இன்னொரு வாகனத்தில் வைத்து நாடெங்கிலும் கண்காட்சியாக கொண்டு சென்றனர். இன்றும் அந்த வாகனம் மருதானையில் உள்ள மகாபோதி சங்க தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனகாரிகவின் வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவிலேயே செலவிட்டவர். அவரது நெருங்கிய சகாக்களாக இந்துக்களும், சங்கர மடத்தவர்களும் தான் இருந்தனர். பிராமணியத்தின் பாதிப்பு அவரிடம் இருந்தது. இந்துக்கள் மாட்டை புனிதமான ஒன்றாக ஆகியிருக்கின்ற ஐதீகமும், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பழக்கமும் அனகாரிகவையும் பாதித்திருந்தது. இலங்கையை பொறுத்தளவில் சிங்கள விவசாயிகள் மாட்டிறைச்சி உண்ணுவதில் அதிக அக்கறை காட்டாதவர்கள். ஆனால் நகர்ப்புறங்களில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் அதிகம் உண்டு. குறிப்பாக அனகாரிகவின் காலத்தில் இந்த நிலை தான் இருந்தது.

ஆங்கில கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்காகவும் அவர் மாட்டிறைச்சி பிரச்சினையை கையில் எடுத்தார். அதனை சிங்கள பௌத்த முலாம் தடவி சிங்கள பௌத்தர்களுக்கு பருக்கினார் என்றே கூறலாம். அவர் மாட்டிறைச்சி உண்ணுவதிலிருந்து சிங்கள பௌத்தர்களை மீட்பதற்கு அதிகம் பிரயத்தனம் செய்தார். 

1955ம் ஆண்டில் முதல் முறையாக பிரசுரிக்கப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்கவின் “உண்மை, நேர்மை” எனும் நூலில் உள்ளீர்க்கப்பட்டிருந்த குறிப்பு உசிதமென்பதனால் இங்கு குறிப்பிடுகின்றேன்.
“புனித தூதர்கள் தொடர்பாக ஏற்பட்ட எழுச்சியின் பிரதிபலிப்பினாலேயே மாட்டு ஊர்வலம் நடத்துவது நாடு பூராகவும் வேகமாகப் பரவியது. மாட்டு ஊர்வலத்தை பார்த்த அன்னியர்கள் நாடு ஒன்றுபடுகிறது, எல்லோரும் போகிறார்கள், பாருங்கள் நாம் மாத்திரம் போகாமலிருப்பதெப்படி என நினைத்து அன்னியர்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டார்கள்.”
பேரினவாத தரப்பு தமது சமூக ஊடக செல்வாக்கைப் பயன்படுத்தி உச்சபட்ச அளவில் மாட்டிறைச்சி குறித்த பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் ஜனரஞ்சகமாக்கி வெகுஜன பங்குபற்றலையும் ஊக்குவித்துள்ளது. ஏலவே பரப்பப்பட்டுள்ள ஐதீகங்களையும், புனைவுகளையும் இலகுவாக அடுத்தடுத்த வாசகர் பரப்புக்கு பல்கிப்பெருப்பிக்கும் போக்கை அது வளர்த்துவிட்டுள்ளது. இவை தன்னியல்பாக நடக்கவில்லை. மிகவும் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுவரும் ஆயுதங்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தமிழரை சிறை செய்து மாடுகளை விடுவிக்கும் அரசியலை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாடுகளை பாதுகாக்க 500 பௌத்த பிக்குகள் தற்கொலைக்கு தயாராக இருப்பதாக சிங்கள ராவய அமைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. மாடுகளுக்காக தீ குளிக்க 500 பிக்குகள் தயாராக இருந்த இந்த தேசத்தில் மனிதர்களுக்காக ஒரு மாடு கூட இல்லாமல் போனது “ஆசியாவின் அதிசயம்” என்பதைத் தவிர வேறென்ன. இலங்கையில் இதுவரை நிகழ்ந்த எந்த பிரச்சினைக்காகவும் பிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொண்டது கிடையாது. சிங்கள பௌத்தமயமாக்களின் ஒரு அங்கமாகவே இந்த போக்கை கவனிக்க வேண்டியிருக்கிறது. 

மாட்டை வைத்து செய்யும் இந்தப் பேரினவாத அரசியல் நூற்றாண்டாக தொடர்ந்து வருவதுடன். இன,மத ஐக்கியத்தை மேலும் விரிசலுக்கு உள்ளாக்கும் ஒன்றாக மாறி எழுசியுற்றுவருவதை அலட்சியப்படுத்த முடியாது.

நன்றி - தினக்குரல் 17.05.2013
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates