மலையக தோட்டத்தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இரண்டு நூற்றாண்டுகளாக பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், இந்த மக்களின் வாழ்க்கை இன்னும் அபிவிருத்தியடையாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அரசியல், சமூக, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வகையிலும் நசுக்கப்பட்ட மக்களாகவே காணப்படுகின்றனர்.
இம்மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது. அரசியல் ரீதியான உரிமைகளும் பொருளாதார நலன்களும் ஏனைய விடயங்களும் கிடைப்பதாக இல்லை. அனைத்தையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றத்திற்கு மலையக சமூகம் வழங்கிய பங்களிப்பை குறைவாக மதிப்பிட முடியாது.
மலையக சமூகத்தின் பிரதி நிதிகளாக பாராளுமன்றத்திற்கும் மாகாண சபை உள்ளூராட்சி சபைகளுக்கும் பல உறுப்பினர்கள் அனுப்பப்பட்டும் இது காலம் வரையில் இச்சமூகத்தின் பல தேவைகள் கிடப்பிலேயே உள்ளன இம்மக்கள் அரசியல் ரீதியாக பேரினவாதிகளாலும் தமது சமூக அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.
இவ்வாறான ஏமாற்று வார்த்தைகளை தேர்தல் மேடைகளில் இம்மக்களிடம் தெரிவித்து வாக்குகளை கொள்ளை அடிப்பதில் அனைவரும் திறமைகளைக்காட்டி வருகின்றனர்.
2015 இல் ஏற்பட்ட நல்லாட்சியில் பெரும் மாற்றத்தை இம்மக்கள் எதிர்பார்த்து இன்று தோற்றுப்போய்விட்டனர். இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக்கூட இன்று தீர்வு காண முடியாது அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். மலையகத்தில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இச்சமூகத்தின் அடையாளச் சின்னமாக காணப்படும் குடியிருப்பு இன்னும் அகற்றப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் (2006 இல்) தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கைத்திட்டம் 2006 – 2015 என்ற பத்தாண்டு திட்டம் முன்வைக்கப்பட்டது. 82 பக்கங்களைக் கொண்ட ஆலோசனைகள் 54 பக்கங்களை கொண்ட பின்னிணைப்புக்கள் (136 பக்கங்கள்) ஆலோசனைகள் என்பனவற்றை உள்ளடக்கிய இத்திட்டம் பற்றிய விளக்க நூலும் வெளியிடப்பட்டது. இப்பத்தாண்டு விளக்கத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, தொழிலும், தொழிற்பயிற்சியும், வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, பால் நிலை சமத்துவமும் மனித உரிமைகளும் ஆகிய திட்டங்கள் 2006 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இருந்திருந்தால் மலையக மக்களின் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
மலையக சமூகத்தை பொறுத்தவரை சமூக பிரதிநிதிகள் முன் வைக்கும் திட்டங்கள் வெறும் ஏட்டு சுரைக்காயைப்போன்றே உள்ளதை அவதானிக்கலாம்.
ஒரு சமூகத்தின் மறுமலர்ச்சி அல்லது எழுச்சி அச்சமூகத்திலுள்ள கல்விச்சமூகத்தால்தான் ஏற்படுத்த முடியும் என மார்ட்டீன் லூதர்கிங் கூறியதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு மார்ச் 31 உடன் செயலிழந்து விட்ட கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் செய்வதற்கு மலையகத் தலைமைகள் முன்வராமை அவர்களின் இயலாமையைக் காட்டுகின்றது. வெள்ளையர்கள் எந்தெந்த நாட்டை கைப்பற்றி விவசாய தொழிலாளர்களை உருவாக்கினரோ அந்நாடுகளில் எல்லாம் இன்றுவரை மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. அனைவரையும் பல நூற்றாண்டுகளாக முதலாளி வர்க்கத்திற்கு அடிமைகளாகவும் கூலிகளாகவுமே பதிவு செய்தும் சட்டம் இயற்றியும் வைத்து விட்டனர். அவர்களால் எழுதப்பட்ட பல ஆங்கில நூல்கள் இதை தெளிவாக தெரிவிக்கின்றன.
1970 ஆம் ஆண்டு இ.தொ.கா. சிறிமாவோ அரசிடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனைய துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மாதச் சம்பளம் வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்தது. அன்றைய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் என்.எம்.பெரேரா இக் கோரிக்கையை நிராகரித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க முடியாது. அது செயற்படுத்த முடியாத ஒரு நடைமுறை என தெரிவித்து விட்டார்.
இதை மலையக தொழிற்சங்கங்கள் உணர வேண்டும்.
1865 இல் ஆங்கிலேயரால் இலவசமாக அரிசியும் மாவும் தொழிலாளருக்கு வழங்கப்பட்டதுடன் ஆண் தொழிலாளர்களுக்கு 33 காசுகளும், பெண் தொழிலாளர்களுக்கு 25 காசுகளும் நாள் சம்பளமாக (கூலியாக) வழங்கப்பட்டது. 1930 இல் ஆணுக்கு 41 சதமும் பெண்ணுக்கு 33 சதமும் வழங்கப்பட்டுள்ளது. 1967 இல் நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 1 ரூபா 35 சதமும் பெண் தொழிலாளருக்கு 1 ரூபா 15 சதமும் வழங்கப்பட்டுள்ளது. 1979 இல் ஆணுக்கு 2ரூபா 51 சதமும் பெண்ணுக்கு 2 ரூபா 32 சதமும் 1988 இல் 31 ரூபா 76 சதமாக உயர்வடைந்தது. 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலமாக அடிப்படை நாட்சம்பளம் 95 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 2013 இல் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்த சம்பளமாக 450 ரூபாவும் வரவுக் கொடுப்பனவு இதர கொடுப்பனவுகளாக 170 ரூபாயுமாக உயர்வடைந்தது.
இன்று மலையகத்தில் மக்களின் சக்தியாக விளங்க வேண்டிய தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் குரோத அரசியலில் இறங்கியுள்ளமையால் ஒற்றுமை பிளவடைந்து தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு ஒப்பந்தம் கூட சின்னா பின்னமாகி விட்டது. கடந்த காலத்தில் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் குதித்த தொழிலாளர் வர்க்கம் இன்று முறையான தலைமைகள் இன்றி தடுமாறுகின்றனர்.
28.12.1939 இல் ஹேவாஹெட்ட முல்லோயா தோட்டத்தில் பதினாறு சதம் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி கோவிந்தன் என்ற தொழிலாளி பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். இன்று அதே தொழிலாளர் வர்க்கம் அரசியல் விளம்பரதாரர்களால் மழுங்கடிக்கப்பட்டு விட்டனர். நாடு முழுவதும் தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை பேசப்படுகின்றது.
மலையக மக்கள் மத்தியில் ஒரு ஸ்திரமற்ற குழப்ப நிலை காணப்படுகின்றது. முதலாளிமார் சம்மேளனமும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் திறந்த மேடையில் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்பேச்சு வார்த்தையின் போது எவ்வாறான நிலையில் பேச்சு இடம்பெறுகிறது என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன மலையக மக்கள் 2016 ஆம் ஆண்டில் எவ்வாறு இருக்கப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...