மதுவொழிப்பு இயக்கத்தில் அப்போது வெளிநாடுகளில் உயர்கல்வி கற்று நாடு திரும்பிய புதிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தீவிர ஈடுபாடு காட்டினர். எப்.ஆர்.சேனநாயக்க, டீ.பீ.ஜயதிலக்க, மார்கஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ், ஜோன் கொத்தலாவல, டபிள்யு,ஏ.டி.சில்வா, ஜேகப்.டி.சில்வா, பெர்னாண்டோ விஜேசேகர, ஹென்றி அமரசூரிய போன்றார் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்தச் சென்றவர்கள் அவர்கள். கிராமம் கிராமமாக பிரசாரங்களை முன்னெடுத்ததன் விளைவாக 1915 அளவில் 24033 அங்கத்தினர்களையும், 220 கிளைகளையும் கொண்டிருந்தனர்.
1910 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறூ-மக்கலம் சீர்திருத்தத்தம் புதிய மேட்டுக்குடி வர்க்கத்தினரை திருப்திபடுத்தவில்லை. அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான தளமாக மதுவொழிப்பு இயக்கத்தைப் பயன்படுத்திகொண்டார்கள். மதுவொழிப்பு பிரச்சாரக் கூட்டங்களில் அன்றைய ஆளுநர் மக்கலத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களையும் பகிரங்கமாக வெளியிட்டார்கள். தமது அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான பிரச்சார களமாக இவ்வியக்கத்தை ஆக்கிக்கொண்டார்கள்.
1072 இடங்களில் புதிதாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றது இவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே வளர்ந்து வந்த சாராய வியாபாரிகளும் மதுவொழிப்பு இயக்கத்திற்கு ஆதரவளித்தது தான் வேடிக்கை. மதுவொழிப்பு இயக்கத்தில் தலைமை பாத்திரம் ஏற்றவர்களில் கணிசமானோர் இப்படி சாராய வியாபார பின்னணியை உடையவர்களாக இருந்தனர் என்று ஒரு பட்டியலையே விக்டர் ஐவன் தனது “விகாரைப் புரட்சி” என்கிற நூலில் விளங்கப்படுத்துகிறார். தலைமை செயற்பாட்டாளர்களாக இருந்த டீ.எஸ்.சேனநாயக்க சகோதரர்கள் போன்றோர் கூட இந்த பின்னணியையுடயவர்கள் தான்.
இந்த சூழலில் கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நூற்றாண்டு நினைவையொட்டி தேசிய உணர்வை வலுப்படுத்தும் வெகுஜன பிரசாரங்கள் இணைந்துகொண்டன. இவை இலங்கை தேசியம் என்கிற உணர்வுக்குப் பதிலாக சிங்கள பௌத்த தேசியத்தை முன்னிறுத்தியே முடுக்கிவிடப்பட்டன. பிரித்தானிய ஆட்சியாளர்களை இவ்வாறு “சீண்டுகின்ற” தொடர்ச்சியான நிகழ்வுகள் பிரித்தானிய தரப்பின் வெறுப்பை அதிகரிக்கச் செய்துகொண்டிருந்தன.
அப்படிப்பட்ட சூழலில் தான் கண்டி கலவரத்துக்கு பின்புல காட்சிகள் நடந்தேறின.
கண்டி கலவரம் குறித்த ஆவணங்கள், நூல்கள், ஆய்வுகள் போதுமான அளவு தமிழில் வெளிவந்ததில்லை. அதே வேளை சிங்களத்தில் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளிவந்துள்ள நூல்கள் பெரும்பாலும் பக்க சார்பான தகவல்களையும் கருத்துக்களையுமே கொண்டிருப்பதால் காலப்போக்கில் அவற்றை மூலாதாரமாகக் கொண்டு திரிக்கப்பட்ட பல ஆவணங்களே இன்று எஞ்சியிருக்கின்றன. இந்த சூழலில் உண்மையைத் தேடி வரலாற்றைப் பதிவு செய்வது என்பது எவருக்கும் சிரமமான பணியே. ஆங்கிலத்தில் கூட கணிசமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானதும், முக்கியமானதுமான இரு நூல்கள் குறித்து வாசகர்கள் அறிந்திருப்பது அவசியம்.
ஆர்மண்ட் டி சூசா |
அந்த நூறு நாட்கள்
“இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கையில் 100 நாட்கள்” (Hundred days in ceylon under martial law 1915- Armand de Souza) என்கிற நூல் முதன்மையான நூல். இந்த நூலை எழுதிய ஆர்மண்ட் டி சூசா (1874 – 1921) அன்று பிரபல பத்திரிகையாளர். மோர்னிங் லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். இலங்கை தேசிய காங்கிரசின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். அவரது மகன் டொரிக் டீ சூசா ஒரு இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தலைமறைவு அரசியலில் ஈடுபட்ட லங்கா சமாஜ கட்சியைச் சேர்ந்த ட்ரொஸ்கிஸ்ட். செனட்டராகவும் இருந்தவர்.
சூசா எழுதிய நூல் வெவ்வேறு நபர்களால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அது எப்பேர்பட்ட திரிபை கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க இரண்டு மொழிபெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசங்களே போதும். இந்த இரு நூல்களின் முன் அட்டை தலைப்பைக் கூட “சிங்கள - மரக்கல கலவரம்” என்றே தலைப்பிட்டிருக்கிறார்கள். இன்றுவரை சிங்களத்தில் வெளிவந்துள்ள சகல ஆய்வுகளும், கட்டுரைகளும் கூட அப்படித்தான் இந்த கலவரத்தை அழைக்கின்றன. இலங்கையின் இனச்சிக்கல் குறித்து ஆராய்பவர்கள் எவரும் இந்த நூலை தவிர்த்திருக்க மாட்டார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நூல்.
விரிவான ஆதாரங்களுடனும், தகவல்களுடனும் கலவரம் நிகழ்ந்து சரியாக ஒரே வருடத்தில் 369 பக்கங்களில் இல் இந்த நூல் வெளியாகிவிட்டது.
நூலின் முன்னுரையை அவர் தொடக்கும் போது “இராணுவச் சட்டம் அமுலிலிருந்த போது ஒடுக்குமுறைக்கு உள்ளான இலங்கையர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக பிரித்தானியாவின் மனசாட்சியை தட்டியெழுப்புவதற்கு விரும்புகிறேன். இலங்கையில் பிறக்காதபோதும் நான் வாழ்வதற்கான நாடாக இலங்கையைத் தெரிவு செய்தேன். கடந்த மூன்று தசாப்தகாலமாக நான் இலங்கையர்களோடு ஒன்று கலந்து வாழ்கிறேன். நான் இந்த நாட்டின் எந்தவொரு இனத்துக்கோ, வேறு வகுப்பினருக்கோ, குழுக்களுக்கோ பாரபட்சமுடையவன் அல்ல... இந்த கலவரத்தின் ஒரு சாட்சியாகவே இதனைப் பதிவு செய்கிறேன்.” என்கிறார்.
பிரித்தானிய அரசுக்கு உண்மையை விளக்கும் நோக்குடனும், நீதி கோருவதற்காகவுமே இந்த நூலை அவர் சிரமப்பட்டு தொகுத்திருப்பது தெரிகிறது. குறிப்பாக அவர் அன்றைய ஆளுநர் ரொபெட் சால்மஸ் (Robert Chalmers) மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார். இந்த கலவரத்தின் போது முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிரித்தானிய அரசு ஆளுநர் ரொபெட் சால்மசை நீக்கி விட்டு இலங்கைக்கான புதிய ஆளுனரை நியமித்தது இன்னொரு கதை. இலங்கை வரலாற்றில் அப்படிப்பட்ட நீக்கம் எந்த ஒரு ஆளுநருக்கும் நிகழ்ந்ததில்லை.
ஆர்மண்ட் டி சூசா பிரித்தானிய அதிகாரிகளோடு தொடர்ச்சியாக பரிமாறிக்கொண்ட பல கடிதங்கலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. விசாரணை ஆணைக்குழுவின் அவசியத்தை வலியுறுத்துவதே அந்த கடிதங்களின் அடிப்படை சாராம்சமாக இருக்கிறது.
கலவரமும் இராணுவச் சட்டமும்
பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய “கலவரமும் இராணுவச் சட்டமும்” (Riots and Martial Law in Ceylon – 1915 – P.Ramanathan) என்கிற நூல். இந்த நூலும் மேற்கூறிய நூலும் 1916 வெளிவந்தவையே. 314 பக்கங்களைக் கொண்ட இந்த நூலும் நீதி கேட்டு பல சம்பவங்களையும் ஆதாரங்களையும் பதிவு செய்யும் ஒரு ஆவணமாகவே இராமநாதன் வெளியிட்டுள்ளார். சட்டம் படித்த ஒருவர் என்பதாலேயோ என்னவோ இந்த நூலின் அமைப்பு ஒரு சட்டப் புத்தகத்தைப் போன்ற அமைப்புடன் உள்ளடக்கத்தை சுருக்கமாக விளக்குகின்ற ஓரத் தலைப்புகளை ஒவ்வொரு பக்கங்களிலும் கொண்டிருக்கிறது. பல கடிதங்கள், அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. மேலதிக விளக்கங்களுக்காக புகைப்படங்கள், வரைபடங்கள் போன்றனவும் உள்ளடங்கிய விரிவான நூல் அது.
அன்றைய சட்டசபைப் பிரதிநிதியான பொன்னம்பலம் இராமநாதன் இந்த கலவரத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை பிரித்தானிய சென்று முறையிட்டு விடுவித்த கதையை பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இதுவரையான தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையுமே தமிழ் இனவாதிகளாக சித்திரிக்கும் சிங்கள பேரினவாத தரப்பு பொன்னம்பலம் இராமநாதன் குறித்து எப்போதும் ஒரு மென்போக்கைக் கடைப்பிடிப்பதன் பின்புலம் இது தான்.
சட்ட சபையில் 14.10.1915 அன்று இராமநாதன் நிகழ்த்திய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“ஐயகோ... எங்களுக்கு என்ன நடந்திருக்கிறது. எங்கள் மாட்சிமை தங்கிய அரசருக்கு என்ன நடந்திருக்கிறது. இந்த சட்ட சபைக்கு என்ன நடந்திருக்கிறது. எங்களைக் காக்க இந்த உலகில் எவரும் இல்லையோ...
...பொதுப்பணியில் தனிப்பட்ட நட்புக்கு இடமில்லை. இன்று மிகவும் சங்கடமான ஒரு நாள். இதுவரை சட்டசபைக்கு சராசரி 350 முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறது. இந்த முறைப்பாடுகளைக் கண்டு மிகவும் வருந்தேனேன். செய்யாத குற்றத்துக்கு துரதிர்ஷ்டவசமாக தண்டனை அனுபவிக்கும் இவர்களுக்காக ஏதாவது பரிகாரம் காண வேண்டும் என்பதை உணர்ந்தேன். இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி கூறமுடியாத அளவுக்கு நடந்தேறியுள்ள சட்டவிரோத அநியாயங்களுக்கு நீதி கிடைக்கசெய்யவேண்டும்...”
இந்த சட்டசபை உரையாடலின் சிறு பகுதியை இந்த நூலின் முன்னுரையில் சேர்த்திருக்கிறார் இராமநாதன்.
முஸ்லிம்கள் பற்றிய அறிமுகம்
ஆர்மண்ட் டி சூசாவின் நூலில் கலவரத்துடன் சம்பந்தமுடயவர்கள் குறித்து விபரிக்கையில் முஸ்லிம்களை தனியாக இனம்பிரிக்கிறார்.
“இலங்கையின் இராணுவச் சேவையில் பணியாற்ற வந்த மலே இனத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஏனைய இனத்தவர்களுடன் எந்த சர்ச்சையும் இல்லாது சிங்கள, தமிழ் சமூகங்களோடு கலந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். மேற்கு இந்தியாவிலிருந்து வியாபாரம் செய்வதற்காக வந்த போறா இனத்தவர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த ஆப்கான் இனத்தவர்களும் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இரு பிரிவினரும் அடகு வைத்தல், கடன் வட்டி வசூலித்தல் போன்றவற்றால் மக்களாலும் பொலிசாராலும் அதிருப்திக்கு உள்ளானவர்கள்.
இலங்கையின் மூன்றாவது பெரிய ஜனத்தொகையைக் கொண்டவர்கள் 283,000 பேரைக்கொண்ட முஸ்லிம்கள். வெவ்வேறு காலங்களில் அரபு நாட்டிலிருந்து வியாபாரத்துக்காக வந்து கரையோரங்களில் குடியேறி பெருகியவர்கள். குறிப்பிட்ட இன அடையாளத்தை குறிப்பிடமுடியாத நிலையில் அவர்கள் பொதுவில் “இலங்கை மரக்கல” என்றும் அழைக்கபடுகிறார்கள்.
இந்தியாவில் மலபார் கரையோரங்களிலிருந்து வந்த சிறு வியாபாரம் செய்து இங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக ஆன முஸ்லிம்கள் (ஹம்பயா) இருக்கின்றனர். இவர்களே கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர். பொதுவில் இவர்கள் விரும்பத்தகாதவர்களாக இருந்ததால் உள்நாட்டு முஸ்லிம்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சித்தனர் என்று கலவரம் பற்றிய விசாரணைகளில் தெரியவருகிறது. கலவரத்தின் போது மலே, போறா, ஆப்கான் போன்ற எந்த முஸ்லிம் பிரிவினருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. இந்த ஹம்ப மரக்கல பிரிவினரிடமிருந்து ஆரம்பித்து பின்னர் ஏனைய முஸ்லிம்களை நோக்கி அது விரிவுபெற்றது. இந்த கரையோர முஸ்லிம்களால் உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களை வென்றெடுக்க முடியவில்லை. “ஐரோப்பாவில் தனித்து வாழும் அந்நிய யூதர்களைப் போல வாழ்ந்தார்கள்.” என்று டேவி தனது நாட்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.”
ஆக மொத்தத்தில் இந்த இரு நூல்களின் உள்ளடக்கமும் முஸ்லிம்களுக்கு சாதகமானது அல்ல. பெரும்பாலும் சிங்களவர்களுக்கு நேர்ந்த அநீதிகளையே விளக்கிக் கொண்டு போகிறது. அவை ஆதாரத்துடன் முன்வைக்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் குறித்த அதிருப்தி எப்படிப்பட்டதாக இருந்தது. அப்படியான ஐதீகத்தை பரவலாகக் கொண்டிருப்பதற்கு எதுவாக முஸ்லிம்களின் (“மரக்கல”) நடைமுறை எவாறு இருந்தது என்பது குறித்து அந்த நூலில் மேலதிகமாக விபரித்துக்கொண்டு செல்கிறார் சூசா.
(தொடரும்...)
நன்றி - தினக்குரல்
இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
- Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
- Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
- “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
- “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam, (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
- “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
- ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
- ශ්රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...