இது நண்பர் இரா.சடகோபன் அவர்களின் முத லாவது சிறுகதைத் தொகுதி. முதலாவது சிறுகதைத் தொகுதி என்றாலும் அவருடைய ஏழாவது நூல் என்பது அழுத்தமாகக் குறிப்பிடக்கூடியதே.
ஒரு பட்டியலுக்காக இல்லை என்றாலும் அவற்றின் முக்கியத்துவத்துக்காக சடகோபன் அவர்களின் நூல் களைப்பார்ப்போம்.
1998- வசந்தங்களும் வசீகரங்களும் - கவிதைகள்
2002- ஆயிரம் ஆண்டு கால மனிதர்கள் - சிறுவர் நூல்
2008- உழைப்பால் உயர்ந்தவர்கள் - சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பு
2011- கசந்த கோப்பி - ஆங்கில நாவலின் மொழி பெயர்ப்பு
2012- எங்கள் கிராமம் - மார்ட்டின் விக்கிரமசிங்கவின் சிங்கள நூலின் மொழிபெயர்ப்பு
2014- கண்டிச்சீமையிலே - கோப்பிக்கால வரலாற்று ஆவணம்
2015 - சிறுகதைகளின் தொகுப்பு நூல்
முதல் நூலான கவிதைத்தொகுப்பு அவருக்கு மத்திய மாகாண சாஹித்திய விருதைப் பெற்றுக்கொடுத்தது. பின் மூன்றாவது நூல் அவரை ஒரு முக்கியமான மொழி பெயர்ப்பாளராக இனங்காட்டியது.
அந்த இனங்காட்டல் அவரை இந்த மொழி பெயர்ப் புத்துறைக்குள் மேலும் ஆழமாக ஈடுபடுத்தியது. எழுத்தாற்றல் மிக்கவரான சடகோபன் சிங்கள மொழிப்புலமையும் ஆங்கில மொழிப்புலமையும் மிக் கவர். அவருடைய அடுத்த இரண்டு நூல்களும் இலக்கியத்துறையில் அவருக்கான இடத்தை நிர்ண யித்தன. செவ்விய மொழிபெயர்ப்புக்கள் பொதுமைப் பரிமாணங்களையும் கடந்து சிறப்புப் பரிமாணங்கள் மீது ஊடுருவி உட்புகுந்து இலக்கு மொழிக்குள் கொண் டுவரும் கலைத்துவப் படைப்பையும் பண்பையும் உள்ளடக்கியுள்ளது. அந்த
வகையில் இலக்கிய மொழியாக்கம் செய்யும் தரம்மிக்க புலமையாளர் மத்தியில் நண்பர் இரா. சடகோபன் அவர்களுக்கு தனி இடம் உண்டு என்று குறிக்கின்றார் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள்.
இந்த மூன்று நூல்களும் அந்த அந்த வருடத்தின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. சாஹித்திய விருது என்பது ஒரு படைப் பின் தரத்துக்கான அடையாளம் ஆவதில்லை என்றாலும் கூட சட்டத்தரணி சடகோபன் அவர்களின் ஆறாவது நூல் 'கண்டிச்சீமையிலே" மலையகம் பற்றிய வர லாறு பேசும் நூல் வரிசையில் இது ஒரு மகத்துவம் மிக்க நூல். இன்றைய தங்கள் இருப்புக்காக உரு வாக்கத்துக்காக நம் முன்னோர் பட்ட துயரங்களை நமது மொழியில் தருகின்ற கண்ணீர் காவியம் இந்தக் கண்டிச்சீமையிலே.
இந்;த வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்டதுதான் என்று ஒரு சில குரல்கள் கேட்கலாம். மோல்ட்றிச் ஏற் கனவே சொன்ன இந்தச்சோக வரலாற்றை எத்தனை பேர் வாசித்தார்கள். அறிந்திருந்தார்கள். அரசியல்வாதிகள், சமூக பொருளாதார ஆய்வாளர்கள் என்று நிறைய பேரிடம் கேட்டேன். நிறையவே 'இல்லைகள்" தான் பதிலாகக் கிடைத்தன என்று பதிகின்றார் சடகோபன். சி.வி.யின் டீழசn வுழ டுயடிழரச என்னும் பிரசித்தி பெற்ற நூல் பற்றி உலகப்புகழ் பெற்ற கலைஞர் மார்ட்டின் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில் இந்த மக்களின் மொழியிலேயே இவைகள் எழுதப்பட்டிருந்தால் இதன் மகிமை இன்னும் பன்மடங்காகி இருக்கும் என்று ஆதங் கப்பட்டிருந்தமை என் நினைவில் எழுகிறது.
இந்த மக்களின் ஆரம்ப கால துயர் நிறைந்த சோக வரலாற்றை அந்த மக்களுக்காக அவர்கள் மொழியிலேயே தந்துள்ள முறைமையே இந்த கண் டிச்சீமையிலே நூலின் மகத்துவம்.
பரிசுகள் விருதுகள் போன்றவைகளுக்கு அப்பாற் பட்ட மகத்துவம் அது.
ஒரு சமூகத்தின் உயர்வும் முன்னேற்றமும் அச்சமூகத்தினர் அதனை மதிக்கும் போதும் தம் சமூகக்குறைகளைத் தாங்களே உணர்ந்து அவற் றைக்களைய முன்வரும்போதுமே ஏற்பட முடிகின்றது.
தன்னுடைய எழுத்துக்களை இதற்காகவே பயன் படுத்தும் ஒரு சமூக அக்கறையாளர் சடகோபன். மொழியை இயக்கத்தில் வைக்கும் எழுத்து. ஒரு சமூகத்தின் மனச்செயற்பாடு. சமூக மாற்றத்தை எழுச்சியை மீட்சியை விரும்புகிறவர்கள் தங்களின் சக்திக்கேற்ப அதற்கான விதைகளை விதைப்பதுடன் ஏற்கனவே யார் யாராலோ விதைக்கப்பட்டவைகளுக்கு நீரூற்றி, உரமிட்டு அவைகளை வளர்த்தெடுப்பார்கள். சடகோபன் அவர்களது மொழிபெயர்ப்புத் தேர்வுகள் இந்த வளர்த்தெடுப்புக்களே. வரலாற்று வேர்களைத் தேடுவதில் அதிலும் குறிப்பாக மலையக வரலாற்றின் வேர்களைத்தேடுவதில் வல்லமை கொண்டவர் இவர்.
வுhந ஐNனுழு-டுயுNமுயுNளு-வுர்நுஐசு 200 லுநுயுசு ளுயுபுயு என்ற மிகப்பாரிய நூலை எழுதுவதற்காக ஆயுனுசுயுளு நுனுஐவுழுசுஐயுடு ளுநுசுஏஐஊநு அமைப்பு இவ ரைத் துணைவராகத்தெரிவு செய்து கொண்டது என்பதே சடகோபன் அவர்களது வரலாற்று அறிவுக்கான, உணர்வுக்கான சான்றுதான். மனித வரலாறு என்பது ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை ஒடுக்குபவர்களுக்கு எதி ராக நடத்திய போராட்டங்களின் நீண்ட வரலாறு தான் என்கிறது மார்க்சியம்.
சடகோபனது மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமன்றி அவருடைய பெரும்பாலான சிறுகதைகளும் கூட வர லாற்றுச் சிறுகதைகள்தான்.
ஈழத்துத்தமிழ்ச் சிறுகதைத்துறைக்கு ஏறத்தாழ 150 ஆண்டு கால வரலாறு உண்டு (1865 - 2015). காலத்தில் முந்திய ஈழத்துச்சிறுகதை இலக்கியம் 1930களுக்குப் பிறகே (ஆரம்பித்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு) உருவப்பிரக்ஞையுடன் வெளிவரத்தொடங்கியதாக வர லாறுகள் பதிகின்றன.
உருவமும் உள்ளடக்கம் முற்போக்கு நற்போக்கு இலக்கியச் சண்டைகளுக்கு மத்தியிலும் எங்களை விட நீங்கள் பத்து வருடம் பிந்தி நிற்கிறீர்கள். அப்படி இப்படி என்னும் இந்தியத்தமிழிலக்கிய மேதாவிலாச இடைஞ்சல்களுக்கிடையிலும் தனக்கேயுரித்தான தனிப் பண்புடனும் ஈழத்துச்சிறுகதை வளர்ந்து வந் துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் எழுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன.
என்னுடைய இந்த எண்ணிக்கையின் அடிப்படையே ஒரு குத்து மதிப்புத்தான். நம்மிடம் இதற்கான கண க்கு எங்கே இருக்கிறது? கணக்கே இல்லாதபோது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும். தனி மனிதர்களால் சுமக்க முடிந்த பாரம் இது.
செங்கை ஆழியானும் தூக்க முயற்சித்தார் தான்! ஆனாலும் முடியவில்லை. பல்கலைக்கழகங்கள் ஏன் இது குறித்து மௌனமாக இருக்கின்றன.! கணக்கெடுப் புத்தேவையில்லை என்று நினைக்கிறார்களோ தெரிய வில்லை.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்துக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் மிக நெருங்கிய உறவிருந்த காலம் ஒன்றிருந்தது. அந்தக்காலம் மீண்டும் வரவேண்டும் என்பது எனது அவா. பல்கலைக் கழகங்களுக்கும் இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான உற வுப்பாலமாகப் பல்கலைக்கழகங்களை இயக்கும் ஆற்றலும் ஆளுமையும் இலக்கிய ஆர்வமும் வேட் கையும் கொண்டவர்கள் சிலர் இன்னமும் உள்ளே இருக்கின்றார்கள்தான்!
விபுலானந்தர் காலம், கணபதிப்பிள்ளைக்காலம், வித்தியானந்தன் காலம், கைலாசபதி, சிவத்தம்பி காலம் என்னும் அந்த வரலாறு மீட்சி பெற வேண்டும்.
மறதிகளால் சூழப்பட்ட ஒரு சமூகமாக ஈழத்தமிழ் சமூகம் மாறிவிட இடமளிக்க முடியாது. அவர்கள் எந்தப் பிரதேசத்தமிழராக இருந்த போதும் நினைவு களை மீட்டுத்தருவதாக அமைகின்ற எழுத்து சட கோபன் அவர்களின் எழுத்து. அதற்குள் ஒரு வன்மை இருக்கிறது. அவருக்கென்றே தனியான ஒரு நடை இருக்கிறது. அதில் ஒரு சுதந்திர தன்மையும் இருக் கிறது.
இதுவரை ஈழத்தில் எத்தனை தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன என்ற நினைவு வந்த போது ஆயிரத்துக்கு மேலான தொகுதிகள் என்று மதிப்பிட்டுக்கொண்டபோது அவைகளில் எத்தனை வர லாறு பேசுகின்ற தொகுதிகளாக வந்துள்ளன என்ற நினைவும் எழுந்தது.
ஐம்பதுகளில் அருள் செல்வநாயகம் அவர்கள் வெளியிட்ட தாம்பூவராணி ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள் என்றே வந்தது. இலங்கையின் மன்ன ராட்சிக்கால சரித்திரக்கதைகள் அவை. கல்கியின் வரலாற்றுக் கதைகளின் பாதிப்பாகவும் அவை இருக்க லாம். ஆனாலும் வரலாற்றுக்கதைகள் என்று மகுடமிட்டுக் கொள்ளாவிட்டாலும் பெரும்பாலான ஈழச் சிறுகதைகள் மனித வரலாறு பற்றி, மனித இடர் பற் றிப்பேசும் கதைகளாகவே அமைந்துள்ளவைதான்.
அதிலும் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கின் பெரும்பான்மைத்தமிழர்கள் பற்றியவைகள் தான்.
பலம் கூடியவர்கள் பலம் குறைந்தவர்களை அழிக் கும் நடைமுறை அவர்களின் மண்ணை, மண்ணின் வளத்தை அழித்தொழிக்கும் நடைமுறை மேற்குலக நாடுகளின் பலம் குறைந்த நாடுகளை அழித்த மத்திய வரலாற்றின் இன்னொரு முகம்தான்.
அந்த யுத்தத்தின் கோரத்தை, கொடூரத்தைக்காட்டும் கதை இந்த தொகுதியின் சூரியன் சாட்சியாக என்பது மட்டக்களப்பின் ஒரு கிராமத்து ஒன்றுமறியாத விவசாய மக்களை ஆண் பெண் பிள்ளைகள் என்ற பேதமின்றி வரிசையாக நிறுத்தி வைத்துச் சுட்டுக்கொன்று புதைத்த பயங்கரத்தைப்பதிவு செய்கின்ற கதை இது. போர் என்ற போர்வையில் அழித்தொழிக்கப்பட்ட கிராமத்தின் வரலாற்றுப்பதிவு இது.
இன்னல் படும் மக்களின் வரலாறுகளும் பதியப்படல் வேண்டும். மன்னர்கள் மட்டுமே வரலாற்று நாயகர்கள் அல்ல என்னும் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் அன்டோனியோ கிராம்சி என்னும் சிந்தனையாளர்.
சடகோபனின் கண்டிச்சீமையிலே நூல் பற்றிப் பேசும் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களின் நினைவிலும் கிராம்சி வந்திருக்கின்றார் என்பது சடகோபனின் எழுத் துக்களின் வளம் பற்றியது. பலம்பற்றியது.
மலையக மக்கள் பற்றி மட்டுமல்லாமல் இடருறும் எல்லா மக்கள் பற்றியும் துயர்படும் மனம் கொண்ட படைப்பாளர் இரா. சடகோபன் அவர்கள்.
ஈழப்போரே இடம்பெறாத மலையகத்தின் மக்கள் அனுபவித்த இன்னல்கள் எழுத்தில் அடங்காதவை. அவைகளை எழுத்துக்குள் அடக்கி ஒரு சமூகத்துயரின் நினைவுகளை மீட்டுத்தரும் சடகோபனின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
நாகரிகமடையாத, அறிவியல் அடிப்படையில்லாத, அரசியல் உரிமைகளற்ற என்பவற்றை மட்டுமே மையப் படுத்தப்பட்டுவிட்ட ஒரு சமூகத்தின் மறைக்கப்பட்ட மறு க்கப்பட்ட மற்ற மற்ற சிறப்பியல்புகளையும் கிண்டி எடுத்து மேலே கொண்டு வரும் நாட்கள் இவை.
இத்தனை உண்மைகளா, இத்தனை இன்னல்களா, என்ற வியப்பை தொடர்ந்தும் தந்து கொண்டே இருப்பவை மலையக எழுத்துக்கள்.
அந்த வகையில் மறுக்கப்பட்டவைகளின் இருத் தலை சதா நினைவூட்டிக் கொண்டே இருப்பவை சட கோபனின் சிறு கதைகள்.
சொந்த மண்ணின் அந்நியர், நேர்கோடுகள் வளை வதில்லை, உன்னைக் கொன்றவர்கள் யார், இன்னும் எத்தனை நாள், செல்லி அல்லது மணிராசு, புன்னகை மறைந்த அந்த நாளில், கருஞ் ஜூலை போன்ற பெரும்பாலான கதைகள் வரலாற்று துயர்களை மீட் டுத்தரும் கதைகள்.
ஒரு சிறுகதை என்பது ஜன்னல் ஊடாகக்காணும் காட்சிக்கொப்பானது. என்று கூறுவார்கள் சிறுகதைச் சாதனையாளர்கள்.
கரையைத் தொடாத ஓடங்கள், நெஞ்சின் அலை கள், கரிச்சான் குருவி, செவப்புக்கலருல ஒரு காரு, சூடேறும் பாறைகள், சொல்லாமலே போன்ற கதைகள் இன்னொரு சம்பவத்தை வாசகன் மனதில் பல்வேறு, உணர்வுகளுடன் வியாபிக்க வைக்கின்றன. செல்லி...தேன் மொழி போன்ற கதைகள் காதலை மையமாகக் கொண்டிருந்தாலும் வரலாற்றுணர்வுடனும் காதலுணர் வின் மென்மையுடனும் கூறப்பட்டிருக்கின்றன.
துயர்பட்ட மக்களின் ஒரு பின்னமான தமிழ் வாசகர் களை மேலும் துயர்படச் செய்யாத முடிவுகளைக் கொண்டவை இவை.
படைப்பாற்றலுடன் கூடிய சடகோபன் அவர்களின் இவ்வெழுத்துக்களுக்கான உழைப்பு வியப்பதைத் தருவது.
ஆறு நூல்கள் தந்திருக்கும் சடகோபனின் ஏழாவது நூல் இது என்பது இச்சிறுகதைகளின் சிறப்புக்கான சாட்சி ஆக முடியாது. ஆனாலும் இச் சிறுகதை நூலின் இலக்கிய இருப்புக்கும் கவனிப்புக்கும் இத் தொகுதியின் கதைகளே சாட்சியாக அமையும் என் பதை காலம் காட்டி நிற்கும்.
வாழ்த்துக்கள் சடா
என்றும் அன்புடன்
தெளிவத்தை ஜோசப்
தொ.பே: 0770248366
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...