Headlines News :
முகப்பு » , , , » தேசபக்தியின் குறுக்குவழி! (1915 கண்டி கலகம் –16) - என்.சரவணன்

தேசபக்தியின் குறுக்குவழி! (1915 கண்டி கலகம் –16) - என்.சரவணன்


உலகம் முழுவதும் தேரவாத பௌத்தத்தை பரப்புவதிலும் நிலைநாட்டுவதிலும் பாரிய பங்களிப்பை செய்த தர்மபால; தூர நோக்கில் இலங்கை தூய சிங்கள பௌத்த நாடாக ஆக வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். அதற்காக பௌத்தர்களை இனவாத மனநிலைக்கு தூண்டினார். அதனை பௌத்தத்தின் பேரால் செய்தார். இன்றல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட வெறுப்புணர்ச்சி மேலிட்ட புனைவுகளை மேலதிக சேர்ப்புக்களுடன் புதுப்பித்து இன்று வலிமையாக நிறுவப்பட்டுள்ளது. தர்மபாலாவுக்கு பௌத்த வழிகாட்டிகளாக இருந்தவர்கள் ஆங்கில, கத்தோலிக்க எதிர்ப்புடன் நின்றுவிட்டார்கள். ஆனால் தர்மபாலாவின் வெறுப்புணர்ச்சி பட்டியலில் ஏனைய இனங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
“உங்கள் வளவில் உள்ள மரத்தில் ஒரு சோளக்காட்டு பொம்மையை கட்டிவைத்து “வெள்ளையனை அடிப்பேன்...! வெள்ளையனை அடிப்பேன்...! என்று கூறி தினசரி காலையிலும் மாலையிலும் உங்கள் பிள்ளைகளை அடிக்கச் சொல்லுங்கள்!” என்று கிராமம் கிராமமாக சென்று கூறினார்.
அநகாரிக தர்மபால அளவுக்கு வேறெவரும் ஆங்கிலேயர்களை அவமானத்துக்கும், திட்டுதலுக்கும் உள்ளாக்கியவர்கள் வரலாற்றில் இருக்க மாட்டார்கள்.

தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர். ஏனைய இனங்களின் வளர்ச்சி குறித்த உதாரணங்களை சிங்களவர்கள் அவர்கள் மீது எரிச்சலூட்டும் பாணியில் பிரச்சாரம் செய்தார்.

அதுபோல பேச்சாலும் எழுத்தாலும் வரலாற்றில் தனது சொந்த மக்களை மிகக் கேவலமாக திட்டி, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டி சிங்கள பௌத்த உணர்வை மேலிடவைத்ததில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். அவரது ஆத்திரமூட்டலிலிருந்து எந்த தரப்பும் தப்பவில்லை. அப்பேர்பட்ட ஆத்திரப்படுத்தலுக்கு கௌரவம் கிடைத்த ஒருவரும் அவர் தான். ஒரு சிங்களவர் கூட அவரின் இந்த சீண்டலை எதிர்த்து நிற்கவில்லை.  “சிலர் அவரைப் பார்த்து மதவெறிப் பிடித்த பைத்தியம் என்றார்கள்” என்று விளக்குகிறார் அவரைப் பற்றிய நூலில் எழுதுகிறார் கனேகம சரணங்கர தேரர்.

பின் அவர் வழிவந்தவர்களும் அவரின் போதனைகளை அவரின் வெறுப்புணர்ச்சியை தொடர்ச்சியாக தலைமுறைகளுக்கும் கடத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகை இனவாதத்தை மேலும் கவர்ச்சிகரமாக விரிவாக்கி, சித்தாந்தமயப்படுத்தி, ஜனரஞ்சகப்படுத்தி அதற்கு நிறுவன வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவையே இன்று இலங்கை தேசம் அனுபவிக்கிறது.

மதுவொழிப்பு இயக்கத்தின் பாத்திரம்
அனகாரிக்க தர்மபால தனது பிற்காலங்களில் ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் “சிங்கள கிறிஸ்தவர்களுக்கு” எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார். 

1911இல் “மதுவொழிப்பு, மாட்டிறைச்சி உண்ணாதீர்” என்கிற பிரச்சாரத்தை நாடு பூராவும் கொண்டு சென்றார். இந்த இயக்கத்தை முன்னின்று தீவிரமாக வழிநடத்திய தர்மபாலாவுக்கு ஆதரவாக பல சிங்கள தலைவர்கள் ஒன்றிணைந்தனர். இந்த ஒன்றிணைவு காலப்போக்கில் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான காரணிகளில் ஒன்றாக தொழிற்பட்டது. “சிங்கள பௌத்தயா” பத்திரிகை இந்த பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட தலைவர்களே 1915 கலவரத்தின் போது அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். சேனநாயக்க சகோதரர்கள், டீ.பி.ஜயதிலக்க, வலிசிங்க ஹரிச்சந்திர, ஆதர வீ டயஸ், பியதாச சிறிசேன, போன்ற பலரை அடுக்கிக்கொண்டு போகலாம். கலவரத்தின் பின் சிங்கள பௌத்தயா பத்திரிகை தடை செய்யப்பட்டு அதன் காரியாலயத்தில் இருந்த அத்தனையையும் அள்ளிக்கொண்டு போனது ஆங்கிலேய அரசு. அநகாரிக தர்மபாலாவை சிறை வைப்பதற்கு ஆதாரமாக காட்டப்பட்ட விடயங்களும் இந்த காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையில் வெளிவந்தவற்றின் உள்ளடக்கங்கள் தான்.

மதுவொழிப்பு மற்றும் மாடுகளை அறுப்பதற்கு எதிரான பிரச்சாரம் முதன் முதலில் பெருமளவு மேற்கொள்ளப்பட்டது இந்த காலத்தில் தான். தனது இந்திய பயணங்களின் போது இந்து சமயத்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த மாட்டிரைச்சி உண்ணாமை என்பவற்றால் அவர் மேலும் கவர்ந்திருக்க வேண்டும். பௌத்தம் போற்றும் தம்மபதம் கூறும் ஐம்பெரும் குற்றங்களில் உயிர்களைக் கொல்லாமை முக்கிய அங்கம். ஆனால் அது மாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. சகல உயிர்களுமே அதில் அடக்கம்.

இலங்கையில் முதன்முதலில் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரத்தை 1837இல் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். 1912இல் இலங்கை முழுவதும் கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான தயாரிப்புகளை அன்றைய சேர் ஹென்றி மெக்கலம் மேற்கொண்டார். இலங்கை முழுவதையும் குடிகாரர்களின் நாடாக ஆக்குவதற்கான சதி என்று அநகாரிக தர்மபால உறுதியாக பிரச்சாரம் செய்தார். கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான முயற்சிகளை ஆதரித்து இருந்தவர் ஆங்கிலேயர்களின் பரம விசுவாசியான கரைநாட்டு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சார் சாலமன் கிரிஸ்டாப்பல் ஒபயசேகர (Solomon Christoffel Obeyesekere). இதற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களுடன் இந்த விடயத்தில் முரண்பட்டுக் கொண்டு கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று சிங்கள நூல்கள் பல பாராட்டுவதையும் காண முடிகிறது.

பொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆனால்  1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பரம விஞ்ஞான சங்கத்துடன் சேர்ந்து பல மாநாடுகளில் பங்குபற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. பௌத்த-இந்து உறவை பலப்படுத்தும் நோக்குடன் பௌத்த-இந்து பாடசாலைகளை அமைப்பதற்காக ஒல்கொட்டோடு சேர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் பணியாற்றியிருக்கிறார். இப்பேர்பட்ட உறவுகளும் பொன்.இராமநாதன் 1915 கலவரத்தின் போது சிங்கள பௌத்த தரப்பை பாதுகாக்க காரணிகளாக தொழிற்பட்டிருக்கிறது.

மாட்டிறைச்சி குறித்த பிரச்சினை காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக உருமாற்றமடைந்த பின்னணி தனியாக பார்க்க வேண்டிய ஒன்று.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பலை
முஸ்லிம்களின் மீதான இனவாத பிரசாரத்தின் பின்னணி வர்த்தகத்தை மையப்படுத்தியே தொடங்கப்பட்டது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டியது.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்து ஏற்றுமதி வியாபாரம் செய்து ஆங்கிலேயர்களுடனும் பங்குதாரர்களாகி வளர்ந்துவந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான பகைமையை சிங்கள வியாபாரிகள் இனவாத ரீதியில் திசைதிருப்பினர். அதற்கு “மண்ணின் மைந்தர்”,“தேசபக்தி”, “சுதேசம்” போன்றவற்றையும் கருத்தேற்றி பரப்பினர். அனகாரிக்க தர்மபால இந்த “அந்நியவியாபாரிகளை” “தென்னிந்திய தெருப்பொறுக்கிகள்” என்றே அழைத்தார்.

அவர் எழுதிய ஒரு குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“அந்நியரான முககதியர் ஷைலோக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தர்களாக மாறினார்.... தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமத்தவனைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான். மண்ணின் மைந்தன்’ பின் தள்ளப்படுகிறான்...”
1915 ஆம் ஆண்டு கலவரம் முடிந்த பின் 15.06.1915இல் அவர் எழுதிய குறிப்பில் (தர்மபால கடிதங்கள் – குருகே வெளியீடு) இப்படி குறிப்பிடுகிறார். (கவனிக்க: முதலாம் உலக யுத்த காலம் இது)
“...பிரித்தானியர்களுக்கு ஜெர்மானியர்கள் எவ்வாறோ சிங்களவர்களுக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. சிங்களவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர்களே., பௌத்த சமயம் இல்லாவிடின் சிங்களவர்களுக்கு மரணமே மிச்சம். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரம், ஆன்மீகம் என்பனவே காரணங்கள்...”
ஒருபுறம் தர்மபாலாவின் “சிங்கள பௌத்தயா” இத்தகைய பிரசாரங்களை செய்ய அதற்கு நிகராக இன்னும் சில பத்திரிகைகளும் தமது பங்குக்கு முஸ்லிம் எதிர்ப்பை வெளியிட்டன. “சிங்கள ஜாத்தி” (சிங்கள இனம்) எனும் பத்திரிகை
“...கரையோர முஸ்லிம்களிடமும், கொச்சியர்களிடமும், அந்நியர்களிடமும் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்க வேண்டாம்...” என்று எழுதியது.
குர் ஆனில் இருந்த கதைகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒரு இடத்தில் மனித இனத்தின் தோற்றம் குறித்து குர் ஆனில் குறிப்பிட்டுள்ளவற்றை எடுத்துக்காட்டாக எடுத்து கேலிசெய்திருக்கிறார். 

தர்மபால சித்தாந்தத்தின் வகிபாகம்
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமயமாக்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வயதைத் தாண்டிவிட்டது. சிங்கள பௌத்த பேரினவாத கருத்துக்களை ஆங்காங்கு இலங்கை வரலாற்றில் காணக்கிடைத்த போதும் அது சித்தாந்தமயப்படுத்தப்பட்டது ஒரு நூற்றாண்டுக்குள் தான். அது நிறுவனமயப்பட்டது அதன் பின்னர் தான். அதன் பின்னர் தான் சிங்கள பௌத்த அரசுருவாக்கம் நிகழ்ந்தது. சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகளை சம்பவங்களாக இதன் வழி வரிசைப்படுத்தி, கோர்த்துப்பார்த்தால் இதன் தொடர்ச்சியையும் போக்கையும் எவராலும் இனங்கண்டுகொள்ள இயலும். அதன் நீட்சியாக இலங்கையின் இனப்பிரச்சினை, இனப்போராட்டம் வரை இட்டுச்சென்று ஈற்றில் சிறுபான்மை இனங்களும் மதங்களும் மோசமான முறையில் நசுக்கப்பட்டன.

தமிழ் மக்களுடன் சேர்த்து இன்று முஸ்லிம் மக்களின் மீதும் மலையக மக்கள் மீதும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது மோசமான இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இலங்கை தேசியம், பின்னர் சிங்கள தேசியவாதமாகவும், பின் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் பரிணாமமுற்று ஈற்றில் அது பாசிச வடிவத்தை எட்டிவருவதை அதற்கு சமீபமாக இருந்து கவனித்து வருகிறோம்.
சிங்கள பௌத்த உணர்வுகளால் தூண்டப்பட்ட சாதாரண மக்கள் அந்நிய மக்களை வெறுக்க கற்றுகொடுகப்பட்டார்கள். எந்த இன, மத சிறு சலசலப்பும், சர்ச்சைகளும் அடுத்தடுத்த அடுத்தடுத்த பரிணாமத்தையும், பரிமாணத்தையும் எட்ட தயார் நிலையில் இருந்தது. அப்படி நிகழ்ந்தது தான் 1915 கலவரம். அந்த சிறு பொறி எங்கு பற்ற வைக்கப்பட்டது என்பதை அடுத்த இதழில் பாப்போம்.
தொடரும்

நன்றி - தினக்குரல்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
 • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 • ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
 • මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
 • “යටත් විජිත බුදු දහම” -  ප්‍රේමකුමාර ද සිල්වා - (විජේසුරිය ග්‍රන්ථ කේන්ද්‍රය, 2009)
 • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
 • “ජාතියේ පියා හෙවත් අනගාරික ධර්මපාල” - ගණේගම සරණංකර නාහිමි (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd - 2012)
 • “දැනගත යුතු කරුණු” - අනගාරික ධර්මපාල (විසිදුනු ප්‍රකාශකයෝ, 1930)
 • “අනගාරික ධර්මපාල - සත්‍ය සහ මිථ්‍යාව” - එස්.පී.ලංකාපුර රත්නකුමාර (Nuwanee printers and publishers, 2014)
 • இலங்கையின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில் தர்மபாலவின் வகிபாகம்! - என்.சரவணன் (21.09.2014 தினக்குரல்)
 • மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்  (17.05.2015 தினக்குரல்)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates