Headlines News :
முகப்பு » » இரு தேசியக் கட்சிகளின் ஆட்சி இலங்கையை ஒரு தேசமாக்குமா? - சு. நிஷாந்தன்

இரு தேசியக் கட்சிகளின் ஆட்சி இலங்கையை ஒரு தேசமாக்குமா? - சு. நிஷாந்தன்உலக ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் இலங்கை போன்ற பல்லின மக்களும், பல்லின சமூகங்களும் வாழும் நாடுகளுக்கு அரசமைப்பே இன்றியமையாத வரமும், அளவிட முடியாத சொத்துமாகும்.

இனவாதத்தில் புரையோடிப்போன இலங்கையில் இன்று ஜனநாயக சுவாசக்காற்று வீசும் காலம் கனிந்துவருகின்றது என்றால் அது மிகையாகாது. நீண்டு நெடிய போராட்டத்திற்கு மத்தியில் இன்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சி நிலவுகின்றது என்றே மக்களின் எண்ண ஓட்டம் அமைந்துள்ளது. 

1956ஆம் ஆண்டு இலங்கையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால் நட்டுவைக்கப்பட்ட பெரும்பான்மை  சிங்கள பௌத்த தேசியவாதம் அசுர வேகமாக வளர்ச்சியடைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிவரை ஆலமரம்போல் பரந்து விரிந்து விருட்சமாகிக் காட்சியளித்ததை இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டதின்மூலமே  பெரும்பான்மை தேசியவாதம் நாட்டில் தலைவிரித்தாடத் தொடங்கியது. சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேய காலனித்துவத்திற்குக் கட்டுப்பட்டிருந்த சிறுபான்மை மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும்பான்மை பௌத்த தேசியவாதத்திற்குள் ஒடுக்கப்பட்டனர்.

இலங்கையில் முதன்முதலில் கொண்டுவரப்பட்ட கோல்புறுக், கமரன் சீர்த்திருத்தமே இலங்கையில் அரசியல் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது. அதற்கு முன்னர் 1505-1658ஆம் ஆண்டுவரை போர்த்துக்கேயரும், 1658-1796 வரை ஒல்லாந்தரும் ஆட்சி செய்திருந்தாலும் அவர்கள் கிடைக்கக்கூடிய வளங்களை மாத்திரமே இலங்கையிலிருந்து சுரண்டிச் சென்றனர். ஆனால், பிரித்தானியர்கள் வளங்களை இறக்குமதி செய்தமை மாத்திரமின்றி, அதனை பன்மடங்காகப் பெருப்பித்து தங்கள் தேசத்திற்குக் கொண்டுசென்றனர். 

பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் சுகத்தைக்கண்ட ஆங்கிலேயர்கள், இங்கு நிலைத்திருக்கும் தேவை ஏற்பட்டதன் விளைவாகவே நாளுக்கு நாள் எழும் மக்கள் சக்தியைக் கட்டுப்படுத்த அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியிருந்தனர். 1796முதல் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதிவரை ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சிசெய்திருந்தனர். அந்த 152 வருடங்களில் 6 அரசியல் சீர்திருத்தங்களை அவர்கள் கொண்டுவரத் தவறவில்லை. 1,700களின் அரைபாதியில் மேற்குலக நாடுகளுக்குக் கிடைத்த ஜனநாயக வாக்குரிமை ஆங்கிலேய காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தபின்னரே இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளுக்குக் கிடைத்தன. 

1931ஆம் ஆண்டு டொனமூரினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்தின் மூலமே இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. அதிலும் ஆங்கிலேய காலனித்துவ நாடுகளில் முதலில் இலங்கைக்குத்தான் சர்வஜன வாக்குரிமை கிடைத்திருந்தமை விசேட அம்சம். பின்னர் 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துடன், சோல்பரி அரசமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டபோதே சிங்களவர்களின் பெரும்பான்மை  ஆதிக்கம் அதனுள் அத்துமீறிப் புகுத்தப்பட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இந்த நாட்டின் பூர்வீக குடியாக வாழந்துவந்த தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரம் ஆங்கிலேயரின் பின்னர் சிங்களவர்களின் வசமாகியது.

இது இலங்கைச் சுதந்திரத்திற்கு முற்பட்ட வரலாறாயினும், சுதந்திரத்தின் பின்னரே இலங்கையில் இனவாத ஆட்சியும், சிங்கள பௌத்த தேசியவாதமும் சிறுபான்மை சமூகத்தின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்தன. தனிச் சிங்களச் சட்டம் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்புவரை பாரிய அழிவையே ஏற்படுத்தியது மாத்திரமின்றி, அஹிம்சை வழியில் போராடிய தமிழர்களை ஆயுதமேந்தவும் வைத்தது. 

வரலாற்றுக் காலம்  தொட்டு வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக   மலையகத்தில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் தங்களது உரிமைப் போராட்டத்தை மேற்கொண்ட தந்தை செல்வநாயகம், ஆறுமுகன் தொண்டமான் போன்றோரின் உரிமைக் குரல்கள் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டன. ஆங்கிலேயர்களிடம் பெரும்பான்மையான சிறுபான்மைத் தலைவர்களின் ஆதரவுடன் வென்றெடுத்த சுதந்திரத்தை வென்ற ஆண்டே மலையகத்தில் பறிக்கப்பட்டது. 

அதுவரைகாலமும் பொருளாதார அடிமைகளாக நடத்தப்பட்டுவந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தனர். அதுமட்டுமல்லாது, 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்று 1983ஆம் ஆண்டுவரை 3 இலட்சம் மலையகத் தமிழர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். வடக்கு, கிழக்கு சுயநிர்ணத்திற்காகப் போராடிய தந்தை செல்வாவின் குரல் ஒடுக்கப்பட்டமையின் விளைவாகவே தனித் தமிழீழத் தீர்மானம் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்டது. 1972, 1978ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முதலாம், இரண்டாம் குடியரசு யாப்புகளில் தனிச் சிங்களச் சட்டம் அமுலில் இருந்தது மாத்திரமின்றி, தமிழர்களை சிங்களர்கள் ஆளும் வகையில் சட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன.  அத்துடன், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களையும் அமைத்தனர்.

தொடர்ந்தும் சிங்கள ஆதிக்கம் தமிழர்களுக்கெதிராகத் தொடர்ந்தமையின் காரணமாகவே தமிழர்கள் ஆயுத ரீதியாகப் போராடக் களமிறங்கினர். இதன்காரணமாக சட்ட ரீதியான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு கைகூட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில்  தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன், யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளில் சமஷ்டி முறைமை குறித்தப் பரிசீலனை செய்ய இணக்கம் காணப்பட்டது. என்றாலும் ரணிலின் ஆட்சி கவிழ்ந்ததால் கைக்கு எட்டிய அதிகாரம் வாய்க்கு எட்டாமல் போனது.

பின்னர் மஹிந்த ஆட்சி, யுத்தம் என தமிழர்களின் பிரச்சினை இன்றளவும் தீர்க்கப்படாமல் நகர்ந்துக்கொண்டே இருக்கின்றது. சிறுபான்மையினருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டவிழ்த்துவிட்ட இனவாத ஆட்சியின் காரணமாக அவர் சிம்மாசனத்தைப் பறிகொடுக்க நேரிட்டது. இன்று ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே அவர் உள்ளார். 

2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதியுத்தத்தின் பின்னர் உலக சமாதான அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் வல்லாதிக்கச் சக்திகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமன தீர்வை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தன  விடுத்துக்கொண்டே இருக்கின்றன. அத்தருணத்தில் மஹிந்த ராஜபக்ஷ விடாப்பிடியாக விடாக்கண்டனாக இருந்தமையால் இலங்கையின் நடவடிக்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றுதிரண்டன. 

புலம்பெயர் தேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் தாயக மக்களின் உணர்வெழுச்சியால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் உலகின் பல்வேறு  நாடுகளிலும் குறிப்பாக, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டது. புலம்பெயர் மக்களின் போராட்டங்களும், மேற்குலகின் ஆட்சிமாற்றத் தேவையும், தாயகத்திலிருந்து ஒலித்த உரத்த குரலாலுமே  இன்று தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்ற பதம் ஜெனிவாவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் எதிரும் புதிருமாக இனவாதத்தைக் கட்டவிழ்த்துவந்த பிரதான இரு கட்சிகளும் இன்று ஒருசேர தேசிய அரசை அமைத்துள்ளன. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு கட்சி பேச்சுகளை நடத்த முன்வரும்போது அடுத்த கட்சி மறுபுறத்தில் இனவாதத்தைக் கக்கியதும்  கட்டவிழ்த்துவிட்டமையுமே வரலாறு. இன்று தேசிய அரசில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென பெருபாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சிங்கள புத்திஜீவிகளும் இதனை வரவேற்றுள்ளனர். 

இதனையே தமிழர்கள் 67 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதனை சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மை தேசியத் தலைவர்கள் இனவாதமாகப் படம்பிடித்துக் காட்டியது மாத்திரமின்றி, அவர்கள் மனதிலும் பெருபான்மை தேசியவாதத்தை விதைத்தனர். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலுக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களே சொந்தக்காரர்கள். 

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பில் தமிழர்களுக்கான தீர்வு 1987ஆம் ஆண்டு இந்தியஇலங்கையின் அனுசரணையில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் கிடக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை மையப்படுத்தி அமையக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாகவுள்ளனர். 13ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஓர் அரசியல் நாடகம் என்பதை தமிழ் மக்களுக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் நிராகரித்திருந்தனர். அதன் காரணமாகவே இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்த ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய சூழல் உதயமாகியது. 

வரலாற்றுக்காலம் தொட்டு இந்த நாட்டில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு இந்த நாட்டில் பூரண அதிகாரம் இருகின்றது. அதனை சிங்கள தலைமைகள் ஒரு போதும் நிராகரிக்க முடியாது. இரு தேசியக் கட்சிகளும் இணைந்து கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்பு என்பது சிங்கள மக்களுக்கான அரசமைப்பாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சமமாக இருக்கவேண்டும். தமிழர்களை தமிழரே ஆளும் நிலை வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதமாகவும் உள்ளது. இதுவே நியாயம்.

எனவே, ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் உரித்தாக்க தற்போதைய மைத்திரி  ரணில் அரசு முழுமூச்சுடன் செயற்பட வேண்டும். 2016ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்விலும், இலங்கையர்களின் வாழ்விலும் ஒன்றுமையாக நீண்டதூரம் பயணிக்க உதவும் வகையில் அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates