வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்கள், குறிப்பாக மலையகப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்த நாடுகளில் ஏமாற்றப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்
லெபனான், ஜோர்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் ஒரு சில இலங்கையர்கள் அந்த நாடுகளிலுள்ள சில உள்ளூர்வாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருக்கலாம்.
ஆனால், மோசடிக்காரர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள்தான் என்பது உண்மை. இந்த மோசடிக்காரர்களில் சிலர் பெண்களாக இருப்பதுதான் அதிக கவலைக்குரிய விடயம்.
வீட்டுப் பணிப்பெண்களாக வேலைசெய்யும் பெண்களோடு இவர்கள்; தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அதிக சம்பளத்தோடு வேறு வீடுகளில் நல்ல வேலை பெற்றுத்தருவதாக அல்லது வேறுவிதமான பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசைகாட்டி அவர்களை, அவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறச் செய்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்களை வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அத்தகையோரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்த வீட்டு சொந்தக்காரர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் (கமிஷன்) பெற்றுக் கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் அவர்களை வாடகை வீடுகளில் தங்க வைத்து மாறிமாறி வெவ்வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி அதிலும் தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இதுபோன்ற மோசடிக்காரர்களை நம்பி வீடுகளிலிருந்து வெளியேறும் இலங்கைப் பணியாளர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் பணியாளர்களாகின்றனர். அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும்போது சிறை செல்ல நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் அல்லது விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளைகள் பெற்ற நிலையில் கைவிடப்பட்டு, பாரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு ஆட்கடத்தல் செய்யப்படுகிறார்கள்.
இந்த மோசடி நபர்களின் செயற்பாடுகள் குறித்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் நமது பெண்கள் அறியாமல் இருப்பாதால் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து வெளியேறக் கூடாது.
·தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் எப்பொழுதும் அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கே செல்ல வேண்டும்.
·ஏற்கனவே வெளிநாடுகளிலுள்ள தங்கள் உறவினர்களோடு தொடர்பு கொண்டும், இவ்வாறான மோசடி நபர்களை நம்பியும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தவேண்டும்.
பல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் குடும்ப நலன்கருதி வெளிநாடு செல்லும் எமது பெண்களை பாதுகாப்பதற்கு முடிந்தவற்றைச் செய்வது அனைவரினதும் கடமையாகும். நீண்ட காலமாகக் காணாமல் போனவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற சிலர் வெவ்வேறு வீடுகளுக்கு மாறியதன்மூலம் அல்லது சிறையிலோ அல்லது மேற்கூறியதுபோன்று ஏமாற்றுப் போவழிகளிடம் ஏமாந்து வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும். அவர்களால் தங்களது குடும்பங்களோடு தொடர்புகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனால் இவர்கள் காணமற்போனவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். மேற்கூறிய காரணத்தினால் மட்டுமல்ல, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் குடும்பங்களோடு தொடர்புகளை சிலர் துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருசிலர் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருப்பதால் தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான முறையில் குடும்பமாகி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு தங்களுக்கெனக் குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இலங்கையிலுள்ள தங்களது குடும்பங்களோடு தொடர்புகளை துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜோர்தானில் இவ்வாறானவர்களுக்கென மணிலா குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு தனியான இடமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. லெபனானில் இவ்வாறானவர்கள் தனியான ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளாமல் இருப்பவர்கள் இப்படி தங்களுக்கென அங்கு குடும்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களாக இருக்கலாம்.
இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் காணமற்போனவர்களைத் தேடும் முயற்சிகளை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கைவிட்டுவிடக் கூடாது. அவர்களின் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வழங்கியோ அல்லது இந்த விடயத்தில் உதவி செய்யும் நிறுவனங்களை நாடியோ அவர்களை தேட முயற்சிக்கலாம்.
எவ்வாறெனினும், வேண்டுமென்றே தங்கள் குடும்பத்தவரோடு தொடர்புகளை அறுத்துக்கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமான காரியந்தான். இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக ஒருசில உத்திகளைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலுள்ள தங்களது குடும்ப அங்கத்தவர்களோடு எப்போதும் தொடர்புகளை பேணவேண்டும். வசதி கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு தொலைபேசியிலோ வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தியோ (ஸ்கைப்) பேசவேண்டும். அவர்கள் பிள்ளைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து அறியத்தரவேண்டும்.
வெளிநாட்டிலுள்ள தங்கள் உறவினர் அனுப்பும் பணம், பொருள் என்பவற்றைவிட அவர்மீது நீங்கள் அதிக அக்கறை உள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரச் செய்யவேண்டும். அவர் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களுக்காக அவர்களுக்காக குடும்பத்திலும், கோயில்களிலும் பிரார்த்தனை செய்து, அவ்வாறு செய்வதாக அவர் அறியச் செய்யவேண்டும். அவர் எந்த நோக்கத்திற்காக வெளிநாடு சென்றாரோ அந்த நோக்கத்தை முடியுமானவரை நல்ல முறையில் நிறைவேற்றி வருமாறு எப்போதும் அவருக்கு உணர்த்துவது நல்லது.
முடியுமானவரை இரண்டு ஆண்டுகள் வேலை ஒப்பந்தம் முடிந்தவுடன் தொடர்ந்தும் வேலை செய்வது என்று தீர்மானித்தால் வேலை ஒப்பந்தத்தை நீடித்து அந்த நாட்டில் இருப்பதை தவிர்த்து நாட்டுக்கு திரும்பி வந்து குடும்பத்துடன் உறவுகளை புதுப்பித்து, அவசியமானால் மீண்டும் செல்லுமாறு வலியுறுத்துவது நல்லது. பணம், தொழில் என்பவற்றைவிட உறவுகளை பேணுவது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும். வெளிநாட்டில் உங்கள் குடும்ப அங்கத்தவருக்கும் இந்த விடயத்;தை உணர்த்துங்கள்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...