Headlines News :
முகப்பு » » வெளிநாடு செல்லும் முன்னர் மலையகப் பெண்கள் சிந்திக்கவேண்டியது ! - வசந்தா அருள்ரட்ணம்

வெளிநாடு செல்லும் முன்னர் மலையகப் பெண்கள் சிந்திக்கவேண்டியது ! - வசந்தா அருள்ரட்ணம்


மலையகம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்கள் தொடர்பில் அனைவர் காதுகளுக்கும் அண்மைக்காலமாக எட்டுவது துயரமான சம்பவங்களாகும். மலையகத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலரே மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி பணிப்பெண்களாக சென்று வந்தார்கள். எனினும், இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வருவது என்பது நாகரிகமாகவே மாறிவிட்டது.

வறுமை, கடன்சுமை, பிள்ளைகளின் எதிர்காலம், அழகிய வீடு, சீதனப்பிரச்சினை போன்ற பல்வேறு தேவைகளுக்காக மலையகப் பெண்கள் வெளிநாடு செல்ல எத்தனிக்கின்றனர். இவர்களின் அடிப்படைத் தேவையாக இருப்பது பணமே. இதனால் தான் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது வெளிநட்டு பயணத்தை மேற்கொண்டு இறுதியில் சிக்கல்களுடன் நாடு திரும்புகின்றார்கள். சிலர் அங்கேயே செத்தும் மடிகின்றார்கள். அதுமட்டுமின்றி, குடும்ப உறவுகளுக்கிடையிலும் விரிசல்கள் ஏற்படுவதற்கு வெளிநாட்டு பயணம் காரணமாக அமைகின்றது. எனவே, தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் பெண்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்திற்கு இணங்க உலகில் எந்தவொரு பகுதியிலும் தொழில் நிமித்தம் செல்வது என்பது தனிநபரின் உரிமையாகும். எனினும், பரிச்சயம் இல்லாத மொழி, பழக்கமில்லாத உணவுப்பழக்கவழக்கங்கள், மாறுபட்ட கலாசார பின்னணி, சட்டதிட்டங்கள், நீண்ட காலத்துக்கு குடும்பத்தினரை பிரிந்து வாழ வேண்டிய நிலை போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்கத் தயாரா? என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும், இன்று தோட்டத்துக்கு தோட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்று கூறிக்கொண்டு தரகர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. எனவே, இத்தகைய நபர்கள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணம் உங்கள் தேவையாக இருக்கும் பட்சத்தில் பணத்தினை காரணம் காட்டி வெளிநாட்டு ஆசையை உங்கள் மனதில் விதைக்கலாம். அதன்பின் வெளிநாட்டு தொழிலைப் பெற்றுத்தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகச் செயல்கள், பணமோசடிகள், கடத்தல்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்கு உங்களை ஈடுபடுத்த முயற்சிக்கலாம். எனவே, இத்தகைய தரகர்கள் தொடர்பில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் கிடையாது. சில சமயங்களில் தரகர்கள் உங்களின் நெருங்கிய உறவினராக கூட இருக்கலாம்.

மேலும் பெரும்பாலானவர்கள் இன்று முகவர் நிலையங்களூடாகவே செல்கின்றார்கள். எனவே, தாம் செல்லும் முகவர் நிலையம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, வெளிநாட்டுக்கு நபர்களை அனுப்புவது தொடர்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா? என்பவற்றையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தமது இரண்டு வருட சேவைக்கால ஒப்பந்தம், தொழில் உறுதிப்பத்திரம் போன்றவை தொடர்பிலும் போதிய அறிவினைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.

குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான இரு வருடகால சேவைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் அதனை திறம்பட வாசித்து புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இரு வருடகால சேவைக்கால ஒப்பந்தமானது அரபு, ஆங்கில மொழிகளிலேயே வழங்கப்பட்டது. எனவே, அதை புரிந்துகொள்வது என்பது சற்று சிரமான காரியமாகவிருந்தது. எனினும், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இதை தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்ளும் உரிமை தொழில் பெறுபவருக்கு உண்டு.

அதுமட்டுமின்றி, தமது குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் கருதி வெளிநாடுகளுக்கு செல்லும் தாய்மார்கள் ஒரு தரம் அவர்கள் இல்லாத அந்த குடும்பத்தின் நிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் பிள்ளைகள் வளரும் பருவத்தில் தனது அதிகளவான நேரத்தை தனது தாயுடனே கழிக்க விரும்புவார்கள். எனினும், தாய் அருகில் இல்லாத பட்சத்தில் அவர்கள் உடல், உளரீதியாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் தான் அரசாங்கத்தினால் குழந்தைகளின் நன்மைகருதி ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இருக்கும் தாய்மார்களை வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை காணப்படுகிறது.

மேலும், தாய்மார்கள் வெளிநாட்டுத் தொழிலை நாடிச் செல்வதால் அதிகளவில் பாதிக்கப்படுவது பெண் பிள்ளைகள் தான். தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தாய் ஸ்தானத்தில் இருந்து வீட்டு வேலைகள், சமையல், சகோதர சகோதரிகளை கவனித்தல் என பெண்பிள்ளைகள் அதிக சுமைகளுக்கு உள்ளாகின்றார்கள். இதனால் தமது பாடசாலை கல்வியைத் தொடரமுடியாமல் இடைவிலகல்களும் அதிகரிக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்பிள்ளைகளுக்கென்று பிரத்தியேகமான சில பிரச்சினைகள் காணப்படும். அவற்றை தமது தாயுடனே பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். ஆயினும், தாய் அருகில் இல்லாத சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதற்கு யாருமின்றி தனிமையை உணர்வதாலும், தாயின் அன்பையும், பாதுகாப்பையும் வேறு ஒருவரிடம் எதிர்பார்ப்பதாலும் தவறான நபர்களிடம் சிக்குண்டு தமது சிறுவர் பராயத்தின் வசந்தங்களை கைநழுவி விடுகின்றார்கள்.

சில சமயங்களில் தந்தை அல்லது நெருங்கிய உறவினரால் கூட பெண்பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோக செயல்களுக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

மேலும், மனைவி வெளிநாடு சென்றவுடன் வெளிநாட்டில் உழைக்கும் பணத்தில் கணவர்மார் சுகபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதனால் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேமித்துக் கொண்டு மீண்டும் குடும்பத்தினருடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாடுகளுக்கு செல்லும் மனைவிமார்கள் தொடர்ந்து ஏமாற்றங்களுடன் வெளிநாடுகளிலேயே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

எனவே, மலையகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்குத் தோட்டத் தொழில் என்ற ஒன்று இருக்கையிலேயே வெளிநாட்டு தொழிலை நாடிச் செல்கின்றார்கள். இதனால் தான் சில சமயங்களில் தோட்டத் தொழிலுமின்றி, வெளியூர் தொழிலுமின்றி நிர்க்கதியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். ஒரு வகையில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மலையகத்தில் அன்றாட செலவுகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன. நிரந்தரமான தோட்ட தொழில், குடியிருப்பு வசதிகள், குழந்தைகளுக்கான பாராமரிப்பு நிலையங்கள், சமூக பாதுகாப்பு, சுய தொழில் வாய்ப்புகள் போன்ற சலுகைகளும் கிடைக்கப்பெறுகின்றன.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates