நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் மாணவர்களுக்கான இலவச பாடநூல், சீருடைகள், பயணச்சீட்டு, பாதணிகள், மதிய உணவு போன்றவற்றை வழங்கி வருகின்றது. அத்துடன், புலமைப்பரிசில்கள், ஆசிரியர்கள், பாடசாலைக்கான ஆளணி பெளதீக வளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் பெற்றுக்கொடுக்கின்றன.
தரமான கல்வியினூடாக தரமான சமூகம் என்பதுதான் இன்றைய கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக நாட்டின் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் ,பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம், பூரண கலைத்திட்டம் போன்ற செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், இந்த இலவச கல்வியின் ஊடாக தரமான கல்வியை அடைந்து கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு பணச்செலவுகளும் தொடர்ச்சியாக ஏற்படுவதை அவதானிக்கலாம். குறிப்பாக, க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் இன்றைய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் (கிழமைக்கு 2) பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், பேனை, பென்சில், மேலதிக வாசிப்பு நூல்கள், போக்குவரத்துச் செலவுகள், பாடசாலை சீருடைகள், பாதணிகள், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் போன்றவற்றைப் பெற்றோரின் மாத வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டியுள்ளதை அவதானிக்கலாம்.
இதற்கு மேலதிகமாக பாடசாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி, நவராத்திரி விழா, நத்தார் விழா, கல்விச் சுற்றுலாக்கள், கலை விழா, தமிழ் மொழித்தினம், ஆங்கில தினம், சமய தினம் போன்ற பல்வேறான விடயங்களுக்கு பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை விட பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கான பணம், பாடசாலை வசதிகள் சேவைகள் கட்டணம், வருட ஆரம்பத்தில் வகுப்பறையை அழகுபடுத்துவதற்கான செலவு, உயர்தர மாணவர்களுக்கான தனியாள் செயற்றிட்டம், குழுச் செயற்றிட்டம் போன்றவற்றுக்கும் ஒரு தொகை பணம் செலவு செய்யப்படுகின்றதை அவதானிக்கலாம்.
மேலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் தனியார் வகுப்புக்களுக்காக மாதாந்தம் பாரியளவு தொகையை செலவு செய்கின்றார்கள். ஒரு சில விடயங்களுக்காக பெற்றோர்களிடம் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.
குறிப்பாக, பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து உயர்தரத்திற்கு தெரிவாகி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேற்கூறிய செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பெற்றோர்களின் மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.
இன்று உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி படிப்பதற்கு விடுதிக் கட்டணம், மேலதிக வகுப்பு கட்டணம், போக்குவரத்து செலவு உட்பட தனிப்பட்ட செலவுகளையும் சேர்த்து மாதாந்தம் குறைந்தது 12,000 ரூபா தேவைப்படுகின்றது. இதனை பெற்றோர்களே கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
தோட்டத்தில் வேலை செய்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித, வர்த்தக கலைப் பிரிவில் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோமாயின் அப்பிள்ளைக்கான மாதாந்த கல்விச் செலவை குறிப்பிட்ட பெற்றோர்களால் கொடுக்க கூடிய வாய்ப்புள்ளதா? என தேடிப்பார்க்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.
ஒரு புறம் மலையக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறுவது குறைவு, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெறுவது குறைவு என வாதிடப்படுகின்றது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தங்களுடைய கல்விச் செலவை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு பெற்றோர்களின் மாத வருமானம் மிகவும் குறைவாக உள்ளமையேயாகும்.
தற்போதைய விலைவாசி உயர்வில் இவர்களுடைய அன்றாட அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதளவிற்கு அவர்களுடைய மாத வருமானத்தில் பற்றாக்குறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து க.பொ.த. உயர் கல்வி கற்கும் தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு தனவந்தர்கள் உதவ முன்வரவேண்டும். உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் இடைவிலகுவதற்கும் கற்றலில் ஆர்வம் குறைவதற்கும் இவர்களுடைய பொருளாதார பற்றாக்குறை பாரிய ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.
மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தமக்குக் கிடைக்கும் சந்தாப்பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான செலவுகளை வருடாந்தம் சேகரித்து கொடுப்பதற்கு நம்பிக்கை நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும். மிகவும் சிறப்பாக படிக்கின்ற பிள்ளைகளை தெரிவு செய்து உதவி செய்ய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
உயர்தர மாணவர்கள் பாடசாலையில் படிக்கும் போதே ஏதாவது சுயதொழிலை செய்து கொண்டு அவர்களுடைய கல்விச்செலவை ஈடு செய்து கொள்வதற்கான சூழலையும் செயற்றிட்டங்களையும் தொழிற்சங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து தோட்டவாரியாக உருவாக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை பழக்க வேண்டும். பாடசாலை கல்வியை பெருந்தோட்ட மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெருந்தோட்டப் பிரதேசத்தில் உயர்தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய சேவையை முழுமையாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு செய்வதற்கு முன்வர வேண்டும். கூடியளவு பாடசாலையிலேயே மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முறையாகவும் முழுமையாகவும் முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக, மேலதிக வகுப்பிற்கு செலவு செய்ய முடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடிந்தளவு இலவசமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பாடசாலையில் ஒரு பாடத்தையும் மேலதிக வகுப்பில் (டியூசன்) இன்னொரு பாடத்தையும் படிக்கலாம் என்பதையெல்லாம் ஆசிரியர்கள் விட்டு விட முயற்சிக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தலை வினைத்திறனாக செய்ய வேண்டும். டியூசன் வகுப்பிற்கு வந்தால் மட்டுமே படிக்கலாம் விளக்கமாக இருக்கும். குறிப்பிட்ட வகுப்பிற்கு மட்டுமே வரவேண்டும். என்னிடம் மட்டுமே படிக்க வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் பாடசாலையில் அனுமதி கிடைக்காது. நான் தான் எல்லாம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மாணவர்கள் விரும்பிய வகுப்பில் விரும்பிய ஆசிரியர்களிடம் படிப்பதற்கு உரிமையுண்டு.
உயர்தர வகுப்பாசிரியர்கள் ஒரு சிலர் வற்புறுத்தல்கள், கட்டளைகள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமை, விளக்கமாக படிப்பிக்காமை, தேவையற்ற விதத்தில் தண்டனைகள் வழங்குகின்றமை, மிகக் கடுமையாக நடந்து கொள்ளல், மாணவர்களை உதாசீனம் செய்தல், அலட்சியப்படுத்தல், பிள்ளைகளையும் குடும்பப் பின்னணியையும் புரிந்து கொள்ளாமை, தான்தோன்றித்தனமாக மாணவர்களை நடத்துதல் போன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு தகுதியான துறையில் கற்பதற்கு ஆசிரியர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். சில மாணவர்களை துரத்தக்கூடாது. ஆசிரியர்கள் தனக்கேயுரிய சில விடயங்களை வைத்துக்கொண்டு பெறுவதே ஒரு சிறந்த ஆசிரியருடைய பண்பாகும்.
தன்னை நம்பி உயர்தர வகுப்பிற்கு வரும் மாணவர்களை முடிந்தளவு கற்பித்து அவர்களை கரை சேர்ப்பதே பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் கடமையும் பொறுப்புமாகும்.
கல்வி எங்கு விற்பனை செய்யப்படுகின்றதோ அங்கு கல்வி மட்டுமே விற்கப்படும். தொழிலாளர்களின் வியர்வை, செலவழித்த பணத்திற்கான பயன், பெறுமதி, பெற்றோர்களின் கனவு, நம்பிக்கை, சந்தோசம், எதிர்பார்ப்பு, அவர்களின் முயற்சி, சிந்தனை, செயல் எல்லாவற்றிற்கும் அர்த்தமுள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து தனது ஆசிரியர் தொழிலை புனிதமாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் சேவை மனப்பான்மையுடனும் சமூகப்பற்றுடனும் சமூக நோக்கத்துடனும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி தனக்கு சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் இத்தொழிலை சரிவர இதய சுத்தியுடன் செய்வதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் முன்வர வேண்டும். கல்விதான் மலையக சமூகத்தின் முதலீடு என்பதை உணர வேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...