Headlines News :
முகப்பு » , , , , » சிங்களவர்களே எழுச்சியுறுங்கள்! (1915 கண்டி கலகம் –15) - என்.சரவணன்

சிங்களவர்களே எழுச்சியுறுங்கள்! (1915 கண்டி கலகம் –15) - என்.சரவணன்


அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த எழுச்சிப்  பணிகள் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. 1915 கலவரத்தைப் புரிந்துகொள்வதற்கு அவரின் வகிபாகத்தைப் அறிந்துகொள்வது முன்னிபந்தனயானது.

அதுபோல ஹேவாவிதாரன குடும்பத்தினர்  (தர்மபாலாவின் தந்தை) பெரும் நிதிப் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். கொட்டாஞ்சேனைக் கலவரம் முடிந்ததும். “மகனே இனிமேலும் நீ கத்தோலிக்க பாடசாலைக்குப் போவதை நான் விரும்பவில்லை.” என்று கூறி அவரது தந்தை தர்மபாலாவை இடைநிறுத்தியது மட்டுமன்றி அதன் பின்னர் இந்த நிதியுதவிகளை அதிகம் செய்திருக்கிறார்.

1884இல் பிரம்மஞான சங்கத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அதேகாலத்தில் கல்விக் கந்தோரில் ஒரு எழுதுவினைஞராகவும் தர்மபால கடமையாற்றினார். அதனை பின்னர் தூக்கியெறிந்துவிட்டு முழு நேர பௌத்த ஊழியரானார். அதே ஆண்டு சென்னையில் பிரம்மஞான சங்கத்தின் ஆண்டுவிழாவில் பிளவ்ட்ஸ்கியுடன் சென்று பங்குபற்றிய அனுபவத்தின் பின்னர் பிரம்மச்சரியத்தையும் லௌகீக வாழ்கையையும் தேர்ந்தெடுத்தார். டேவிட் எடும் பெயரை தர்மபால என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் அநகாரிக எனும் நாமம் மக்களால் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அவர் அந்த பெயரையும் தம்மபால என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்னணியில் ஒரு கதையுண்டு.
ஒரு கூட்டத்தில் பிரபல சிங்கள மொழி அறிஞர் மலலசேகரவைப் காட்டி உரையாற்றிய தர்மபால இப்படி கூறினார்.

இதோ இந்த பாளி மொழி பண்டிதர் ஆரம்பித்த சஞ்சிகைக்கு “ஸ்ரீ தர்ம ஸ்ரீ” என்று பெயரிட்டார். முன்னும் பின்னும் நடுவிலும் சமஸ்கிருதம் தான் இருக்கிறது. ஆனால் இந்த பாளி பண்டிதர் எவ்வளவோ சிங்கள சொல்லிருக்க கலாசார குருட்டுத்தனத்தை பாருங்கள்.” என்றார்.

அடுத்த நாள் தனிப்பட்ட ரீதியில் இதற்கு பதிலளித்த மலலசேகர உங்கள் பெயரின் தொடக்கத்தைக் கூறுங்கள் என்று தர்மபாலவிடம் வினவினார்.

“தர்ம... தர்ம.. தர்ம” என்ற தர்மபால தொடர்ந்து

“எனக்குப் புரிந்தது மலலசேகர. இனிமேல் நான் தர்மபால இல்லை. தம்மபால” என்றார். அதன் பின்னர் அவர் தம்மபால என்றே எழுதினார் என்று மலலசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மொழி, இனம், மதம், கலாசாரம், என்று எதிலும் கறாரான தூய்மைவாதத்தை வலியுறுத்தியது மட்டுமன்றி தன்னை அந்த விடயத்தில் ஒரு முன்மாதிரியாக எப்போதும் ஆக்கிக் கொண்டார்.

சிங்கள பௌத்த உணர்வை அவர் பவ்வியமாக ஊட்டவில்லை. அவர்களை சீண்டி, அவர்களின் சுயகௌரவத்தை சீண்டித்தான் புரியவைக்க முயன்றதை அவரின் வெளிப்பாடுகளில் எங்கெங்கும் காணலாம்.

தான் தினசரி புறக்கோட்டை பாதைகளில் கண்ட கூலித் தமிழர்கள் குறித்து “சிங்கள பௌத்தயா” வில் சிங்களவர்களுக்கு இப்படிக் கூறினார்.

“ரிக்ஸா ஓட்டும் தமிழன் சாப்பிட்டுவிட்டு ரிக்க்ஷாவிலேயே ஓய்வு எடுக்கும் வேளை பத்திரிகையை சத்தமாக வாசிக்கிறான். ஏனைய தமிழர்கள் அவனை சுற்றி நின்று காதுகொடுக்கிறார்கள். ஆனால் இந்த கொழுத்த சிங்கள மாடுகள் இந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள். கள்ளை அருந்திவிட்டு, சூது விளையாடிக்கொண்டு குண்டி சொறிந்துகொண்டு, சாப்பிட்டது செரிப்பதற்குள் குறட்டை விட்டு படுக்கிறான்.”

எவருக்கும் அஞ்சாமல் தனக்குப் பட்டதை அப்படியே செருக்குடன் வெளிப்படுத்தும் துணிச்சல் தர்மபாலாவுக்கு இருந்தது. அந்த நடத்தையே பின்வந்த இனவாதிகளுக்கும் பெரும் முன்மாதிரி.

சிங்கள ஆண்கள் தலையில் வைத்திருக்கும் சீப்பு பற்றி எதிர்ப்பு தெரிவிக்கையில் “சீப்பை தலையில் செருகாதே பறையா” என்று பேசிய கூட்டத்தில் அவரது தந்தை கரோலிஸ் அப்புஹாமி தலையில் சீப்பு வைத்திருந்தார். (பறையா என்பது சிங்களத்தில் சாதியைக் குறிப்பதல்ல. அது அந்நியனே என்கிற அர்த்தமுடையது ஆனால் வலிமையானது)

“எங்களுக்கும் ஒரு ஒரு டொக்டர் யானை இருக்கிறது, அவன் பற வெள்ளையனின் காற்சட்டையைத் தான் அணிவான்” என்று கூறும் போது அவரது சகோதரன் காற்சட்டையணிந்த டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரன அருகில் தான் இருந்தார்.

“ஜேகொப் முனசிங்க எனது மைத்துனன். ஆனால் அவன் ஏன் இன்னும் “பறப் பெயரை” இன்னும் கட்டிக்கொண்டிருகிறான் என்று தெரியவில்லை” எனும் போதும் அவர் எதைப் பற்றியும் கவலைகொள்ளவில்லை.
“சிங்களையா மோடயா! கெவும் கண்ட யோதையா” (சிங்களவன் மூடன்! பணியாரம் உண்ண ராட்சதன்) எனும் பழமொழியை கூறி சிங்களவர்களை உசுப்பேத்தினார்.

அவரின் துணிச்சலுக்கு உதாரணமாக இன்னொரு பிரசித்திபெற்ற கதையொன்றும் உண்டு.

ஒருமுறை கவர்னரின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றார் தர்மபால. இரண்டு மணிக்கு வரச்சொன்னபோதும் நேரத்தில் கறாரான தர்மபால சற்று முன்பே கவர்னர் மாளிகைக்கு சென்றுவிட்டார். ஆனால் குறித்த நேரம் கடந்து செல்லச் செல்ல தர்மபாலவுக்கு ஆத்திரம் அதிகரித்துக்கொண்டு சென்றது. உதவியாளரும் இதோ வந்துவிடுவார் என்று பதிலை மட்டும் சொல்லிச் சென்றார். இறுதியில் ஒன்றரை மணித்தியாலத்துக்குப் பின்னர் கவர்னர் வந்தார்.

“இப்போது நேரம் மூன்றரை. 2 மணிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எந்த எருமை மாடு உனக்கு கவர்னர் பதவி தந்தது.” என்று காலை முன்னகர்த்தி ஆத்திரத்துடன் ஆங்கிலத்தில் கொட்டிதள்ளிருக்கிறார். மேலும்

“நீ சொன்ன நேரத்திற்கு நான் வந்துவிட்டேன். நீ உண்டு படுத்துவிட்டாய். எனது பெறுமதிமிக்க காலத்தை வீனடித்துவிட்டாய். எனவே நீ போய் படு. உன்னோடு நான் கதைக்க விரும்பவில்லை. கவர்னர் பதவிக்கு மட்டுமில்லை. ஒரு சில்லறைக் கடைக்குக் கூட நீ லாயக்கு இல்லை” என்று ஆத்திரத்தை கொட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். (1915 கலவரத்தின் போது தர்மபாலாவுக்கும் அவரது சகோதரருக்கும் நேர்ந்த கதிக்கு இந்த சம்பவத்தையும் ஒரு பழிவாங்கலாக சிங்கள தரப்பில் கூறப்படுவதுண்டு)
இப்படி ஒரு தொகைச் சம்பவங்களை அவரது துணிச்சலுக்கு ஆதாரமாக கூறப்படுவதுண்டு.

ஒல்கொட் உறவு முறிவு
கேணல் ஒல்கொட்டுக்கும் தர்மபாலவுக்கும் இடையில் இருந்த உறவு முறிவடைவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. புத்தரின் உடற்பாகங்களை கொண்டு புனித இடங்களாக கருதப்படுபவற்றில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் புனிதப்பல் என்று கூறப்படுபவை மிருகங்களின் பல்லாகக் கூட இருக்கலாம் என்று ஒல்கொட் கூறியதை வைத்து முரண்பாடு வலுத்திருகிறது. அந்த சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது. ஸ்ரீ மகா போதி சம்பவம் குறித்த போராட்டத்தில் ஒல்கொட்டின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது அடுத்த காரணம். பின் வந்த காலங்களில் சிக்காகோ சர்வதேச மாநாட்டுக்கு தர்மபால அழைக்கப்பட்டபோதும் ஒல்கொட் அழைக்கப்படவில்லை என்கிற பொறாமை ஒல்கொட்டுக்கு இருந்ததாகவும் மேலும் ஒல்கொட் பௌத்தத்துக்கு மாறிய போதும் பௌத்தராக வாழவில்லை என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. பிரம்மஞான சங்கத்தால் வெளியிடப்பட்ட “சரசவி சந்தரெச” பத்திரிகைக்கு மாற்றாக “சிங்கள பௌத்தயா” எனும் பத்திரிகையை ஆரம்பித்தார் தர்மபால.
1911இல் அவர் ஆரம்பித்த “மாட்டிறைச்சியை உண்ணாதீர்” என்கிற பிரச்சாரம் தூய பௌத்தத்தை வலியுறுத்திய அதேவேளை அந்த பிரச்சாரம் ஏனைய சமூகங்களுக்கு எதிராக திருப்பப்பட்டது.

“கள் குடிப்பவன்  இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்” என்பது அவரது சுலோகம். மாட்டிறைச்சிக்கு எதிரான பிரசாரத்துக்காக ஒரு வண்டியை தயாரித்து “மாட்டிறைச்சியை உண்ணாதீர்” என்கிற வாசகத்தை பெரிய எழுத்தில் அதில் பொறித்து நாடு முழுதும் கொண்டு சென்றார்.
சிக்காகோ மாநாட்டில் விவேகானந்தருடன் அநகாரிக தர்மபால

சிங்களவர்களே எழுச்சியுருங்கள்!
புத்தகயாவை காப்பாற்றுங்கள்.!

என்கிற சுலோகம் அப்போதைய சிங்கள “பௌத்தயா” பத்திரிகையில் வெளிவந்த பிரசித்திபெற்ற சுலோகம்

இந்து மத எதிர்ப்புணர்வு தன்னுணர்வில் வளர்வதற்கு புத்தகயா போராட்டத்திற்கு பங்கிருக்கிறது. 1891இல் புத்தர் ஞானம் பெற்ற புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு சென்று அங்கு புத்தர் இந்துக்கடவுளாக வணங்கப்படுவதையும் அது இந்துக்களின் சங்காராச்சரியார் மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததைக் கண்டு அதனை பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் கொணர்வதற்காக அங்கிருந்தபடி சட்ட ரீதியில் போராடிய போது அதில் தோல்வி கண்டார். இந்திய சுதந்திரத்தின் பின் அந்த கோரிக்கை வெற்றிபெற்றது.
அநகாரிக தர்மபாலவின் இறுதி ஊர்வலம்
1892இல் தர்மபாலவால் தொடக்கப்பட்ட மகாபோதி எனும் ஆங்கில சஞ்சிகையை வாசித்தறிந்த உலகச் சமயங்களின் பாராளுமன்றம் 1893 ஆம் ஆண்டில் சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டுக்கு தேரவாத புத்த சமயத்தில் சார்பாக அழைக்கப்பட்டார். இந்த மாநாட்டில் தான் சுவாமி விவேகானந்தரின் பிரசித்தி பெற்ற சிக்காகோ சொற்பொழிவும் நிகழ்ந்தது. அதே மாநாட்டில் அனகாரிக்க தர்மபாலாவின் சொற்பொழிவும் மிகவும் பிரசித்திபெற்றது. சுவாமி விவேகானந்தரும் தர்மபாலவும் இறுதிவரை சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கிடையிலான கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. அதன் பின்னர் பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரச்சாரம் செய்து பௌத்த பிரசாரங்களில் ஈடுபட்டார்.

புத்தர் முதன்முதலாக உபதேசம் செய்தததாக கருதப்படும் சாரநாத் பகுதியில் தர்மபால அமைத்த கோவிலில் 1933இல் பிக்குவாக ஆனார். அதே ஆண்டு அங்கேயே மரணமானார்.
(தொடரும்)

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
 1. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 2. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 3. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
 4. පන්සලේ විප්ලවය - Victor ivan – (Ravaya publication – 2006)
 5. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
 6. “යටත් විජිත බුදු දහම” -  ප්‍රේමකුමාර ද සිල්වා - (විජේසුරිය ග්‍රන්ථ කේන්ද්‍රය, 2009)
 7. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
 8.  “ජාතියේ පියා හෙවත් අනගාරික ධර්මපාල” - ගණේගම සරණංකර නාහිමි (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd - 2012)
 9. “දැනගත යුතු කරුණු” - අනගාරික ධර්මපාල (විසිදුනු ප්‍රකාශකයෝ, 1930)
 10. “අනගාරික ධර්මපාල - සත්‍ය සහ මිථ්‍යාව” - එස්.පී.ලංකාපුර රත්නකුමාර (Nuwanee printers and publishers, 2014)
 11. இலங்கையின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில் தர்மபாலவின் வகிபாகம்! - என்.சரவணன் (21.09.2014 தினக்குரல்)
 12. மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்  (17.05.2015 தினக்குரல்)


நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates