தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு உட்பட அவர்களின் நலன்புரி விடயங்கள் அனைத்தையும் கூட்டு ஒப்பந்தமே தீர்மானிக்கின்றது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்க அமைப்புக்களுமே தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு மற்றும் நலன்புரி விடயங்களை பேசித் தீர்மானித்து, அது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இறுதியாக 2013–2015 ஆண்டு காலப்பகுதிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. எனவே, புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, அது கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதியுடன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். சுமார் 10 மாதங்களாகியும் இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாததால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படாது, கிடப்பில் உள்ளன. இது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த வருடம் தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க அமைப்புக்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது.
முதலாளிமார் சம்மேளனமோ, தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் 1000 ரூபா சம்பள உயர்வு தரமுடியாதெனவும் கூறி வருகிறது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பல பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. தற்போது இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கிடப்பில் உள்ளது.
எனவே, இதுபற்றி தோட்டத்தொழிலாளர்கள் பலரிடம் நாம் வினவியபோது அவர்கள் தமது கருத்துக்களை பின்வருமாறு விளக்கமாக முன்வைத்தனர்.
இந்நிலையில், டயகம அக்கரப்பத்தனையைச் சேர்ந்த என். இராஜமாணிக்கம் பின்வருமாறு கூறினார். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் தொடர்ந்தும் தோட்டங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பதேன்? நட்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனத்தையும் அதன் நிருவாகிகள் தொடர்ந்தும் செயற்படுத்துவதில்லை.
அதனை மூடி விட்டு வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள். வேறு ஏதாவது தொழிலைச் செய்வார்கள். ஆனால், தோட்டக் கம்பனிகள் மட்டும் தோட்டங்களைவிட்டு வெளியேறாமல் இருக்கின்றன.
இலாபம் இல்லாமலா தொடர்ந்தும் தோட்டங்களை வைத்திருக்கின்றனர் ? தோட்டங்களை நடத்த முடியா விட்டால் உடனடியாக அரசாங்கத்திடம் அவற்றை கையளித்து விட்டு வெளியேற வேண்டும். கம்பனிகள் உடனடியாக அதனைச் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து புஸல்லாவையை சேர்ந்த கே. ராமராஜ் கருத்து தெரிவிக்கையில், தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இறுதியாக செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி சுமார் 10 மாதங்களாகி விட்டன.
ஆனால், இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. இதுவரை காலமும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. எனவே, கூட்டு ஒப்பந்தம் குறித்த காலத்தில் கைச்சாத்திடப்படாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இரு தரப்பினரும் திட்டமிட்டே இதனை ஒத்திப்போடுகின்றனரா? எனவும் சந்தேகம் எழுகிறது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் இருக்கின்றன.
கம்பனிகள் சம்பளத்தை உயர்த்திக்கொடுக்க மறுப்பதாகக்கூறும் சங்கங்கள் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுமில்லை, மாற்று நடவடிக்கைகளை எடுப்பதுமில்லை. இவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதுபற்றி உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உடனடியாக தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என்றார்.
மேலும், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமல் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரும் சம்பள உயர்வு பெற்றுக்கொள்ளும் நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் தோட்டக்கம்பனிகள் சம்பள உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தொழிலாளரின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, கூட்டு ஒப்பந்தம் உரிய காலத்தில் செய்து கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. நாட்டில் உணவுப் பொருட்கள் முதல் ஏனைய அனைத்தும் விலையுயர்ந்து காணப்படுகிறது.
வாழ்க்கைச்செலவு அதிகரித்துக்காணப்படுகிறது. வாழ்க்கைச்செலவு உயர்வுக்கேற்ப தோட்டத்தொழிலாளரின் சம்பளம் மட்டும் உயர்த்தப்படாமலிருக்கிறது. அந்த வகையில் தோட்டத்தொழிலாளர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கருதுகின்றனர். இது மேலும் நீடிக்கக்கூடாது என பசறை பிரதேசத்தை சேர்ந்த நந்தகுமார் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொகவந்தலாவையை சேர்ந்த வே. சபாரட்ணம் கூறுகையில், தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என்று கூறும் கம்பனிகள், தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறலாம் என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தும் எந்தவொரு கம்பனியும் தோட்டங்களை அரசிடம் கையளிக்க இதுவரை முன்வரவில்லை. நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் அரசிடம் தோட்டங்களைக் கையளித்து விட்டு வெளியேறலாம் அல்லவா? மெளனமாக இருப்பது ஏன்? உண்மையாகவே நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் ஒரு நாளும் தோட்டங்களை வைத்துக்கொண்டிருக்காது.
இதிலிருந்து தோட்டங்கள் நட்டத்தில் இயங்கவில்லை, இலாபத்தில்தான் இயங்குகின்றன என்பதை அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசாங்கத்திலிருக்கும் மலையக அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்த வேண்டும். மெளனமாக இருப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது எனத் தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு, தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று தொழிலமைச்சர் கூறியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும். இதைப்போன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்துக் கொடுப்பனவுகளும் மற்றும் சேமநலன்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு செய்வதானால் மட்டுமே தொழிலாளர்கள் நன்மையடைவார்கள். இல்லையென்றால், தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு போதும் விடிவு ஏற்படப் போவதில்லை.
இல்லாவிட்டால் தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களிடமே கையளிக்க வேண்டும். தொழிலாளர்கள் நல்ல அனுபவமுடையவர்கள். தோட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தோட்டங்களை நல்ல இலாபத்தில் நடத்திக் காட்டுவதற்குத் தயாராகவே இருக்கின்றனர். எனவே, தோட்டங்களைக் கையளிக்கத் தயாரா ? என வட்டவளை எம். தங்கராஜா கேள்வி எழுப்பும் வகையில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து லிந்துலை எஸ். நடராஜா தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆனால், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. எங்களது உழைப்பின் மூலம் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ளும் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களைப் பற்றி சிந்திப்பதில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் பகிஷ்கரித்தால் கம்பனிகளின் நிலைமை என்னவாகும். சிறிதும் சிந்திப்பதில்லை. தொழிலாளர்கள் பிரச்சினையின்றி இருந்தால்தான் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும். தொழிலாளர்களை பகைத்துக் கொண்டால் எல்லாமே வீணாகிவிடும் என்பதை கம்பனிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்களின் நிலைமையை யோசித்துப் பார்த்து சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதற்கு கம்பனிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கே. குமரகுருபரன் தெரிவிக்கையில், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க முடியாமைக்கு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதே காரணமென்று கம்பனிகள் கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. எல்லா தோட்டங்களும் இலாபத்திலேயே இயங்குகின்றன. தோட்டங்களின் நிருவாகங்கள் செய்யும் அநாவசிய செலவுகள் காரணமாகவே நட்டங்கள் ஏற்படுகின்றன. அதேவேளை, தோட்ட முகாமையாளர்கள், நிர்வாகிகள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இது போன்ற செலவுகளை குறைத்தால் நட்டம் ஏற்படுவதற்கு இடமிருக்காது.
தோட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் கம்பனிகள் தேயிலை உற்பத்திக்கு பிரதான காரணிகளாக விளங்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுவது ஏன் ? அதற்கான காரணத்தை கம்பனிகள் விளக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி கம்பனிகள் வாய்த்திறப்பதில்லை.
நன்றி - veerakesari
பசறை, நுவரெலியா, இரட்டைப்பாதை நிருபர்கள்
பசறை, நுவரெலியா, இரட்டைப்பாதை நிருபர்கள்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...