பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் ஒரு செய்தியை விடுத்திருக்கின்றார் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க முடியும். அதனை மறுக்கின்ற அல்லது 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென்று கம்பனிக்காரர்கள் கூறுவார்களேயானால் அவர்கள் தோட்டங்களை ஒப்படைத்துவிட்டுத் தாராளமாக வெளியேறிச்செல்லலாம் என்பதே அந்தச் செய்தியாகும்.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த போது தோட்டத்தொழிலாளரின் சம்பளத்தை உடனடியாக உயர்த்திக் கொடுங்கள். இல்லையென்றால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று பெருந்தோட்ட கம்பனிகளைக் கேட்டிருந்தார்.
அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இதுவரையில் பெருந்தோட்டக் கம்பனியும் பதிலளிக்கவில்லை. அனைத்துக் கம்பனிகளும் வாய்மூடி மெளனமாக இருக்கின்றன. தொடர்ந்தும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றன. அதாவது தோட்டங்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தொழிலாளரின் சம்பளத்தை உயர்த்த முடியாது. உழைப்புக்கேற்ற வேதனம் வழங்கும் முறை என்பவற்றையே திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே புஸல்லாவையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
தோட்டத் தொழிலாளருக்கு நாட்சம்பளமாக 1000 வழங்குவதற்குரிய வசதிகளும் பணமும் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருக்கின்றன. கம்பனிகளால் தாராளமாக நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்க முடியும். வழங்க வேண்டும். தொழிலாளர்களின் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கக்கூடாது. அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட் சம்பளத்தை வழங்குவதற்கும் தோட்டக் கம்பனிகளை பொறுப்பேற்று நடத்துவதற்கும் பல புதிய கம்பனிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான கம்பனிகளைக் கொண்டு நல்ல முறையில் தோட்டங்களை நிர்வகித்து தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். இதனை மறுக்கின்ற தோட்டக்கம்பனிகள் தோட்டங்களை கொடுத்து விட்டு தாராளமாக வெளியேறலாம் என்று அமைச்சர் அங்கு கூறியுள்ளார்.
உண்மையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குமானால் அவற்றை அரசிடம் கொடுத்து விட்டு குறித்த கம்பனிகள் தாராளமாக வெளியேறலாமல்லவா? அதை விடுத்து தொடர்ந்தும் அவர்கள் கூறுவது போல் தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில் அதனையே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது ஏனோ?
ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்குமானால் அதனை மூடிவிட்டு அல்லது அதன் செயற்பாட்டை நிறுத்தி விட்டு வேறு நிறுவனங்களுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ கொடுத்து விட்டு வெளியேறுவதையே அநேகமான கம்பனிகள் கடைப்பிடிக்கின்றன. இதனையே நாமும் அறிந்திருக்கின்றோம். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகளோ தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ந்து பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனரே தவிர தோட்டங்களை அரசிடம் கையளித்து வெளியேறுவதாக இல்லை.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரங்கமாக தோட்டக்கம்பனிகளுக்கு இதனை அறிவித்தும் அதுபற்றி கம்பனிகள் அலட்டிக் கொள்ளாமலிருக்கின்றன. உண்மையில் தோட்டங்களை கைநழுவ விடுவதற்கு அவற்றை நிர்வகிக்கும் கம்பனிகள் தயாரில்லை. பெரும் வருமானம் கிடைக்கக்கூடிய தோட்டத் தொழில்துறையை விட்டு விட கம்பனிகள் முன்வராது என்பதே உண்மை.
அதேவேளை கூடிய இலாபம் கிடைக்க முழுமையான உழைப்பை வழங்கி வரும் தொழிலாளரின் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்குத் தயாரில்லை. இதுதான் நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களை நிர்வகித்து வரும் கம்பனிகளின் நிலைப்பாடு.
இதனடிப்படையிலேயே கடந்த 9 மாதங்களுக்கு மேலாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமலிருக்கிறது.
கூட்டு ஒப்பந்தம் மூலமாகவே தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட நலன்புரி விடயங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் 9 மாதங்களாக கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமலிருப்பது ஒரு உரிமை மீறலாகவே காணப்படுகிறது. இதனால் தோட்டத்தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தவிர உரிய நேரத்தில் செய்து கொள்ளப்படாத கூட்டு ஒப்பந்த முறைமை தேவைதானா? இதைப்பற்றி மலையக தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.
தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்ற போது தொழிலாளர்களுக்கு செய்து தருவதாக உறுதியளித்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட வில்லை. முன்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளருக்கான குடியிருப்பு, சுகாதாரம், உணவுப் பொருட்கள் விநியோகம் தோட்ட மக்களின் ஏனைய நலன்புரி விடயங்கள் அனைத்தையும் செய்து வந்தன. ஆனால் தற்போது இவை எதனையும் கம்பனிகள் செய்வதில்லை. வீடமைப்பு, பொது வசதிகள், குடிநீர் விநியோகம், கழிவறை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையுமே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மலையக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகள் மூலம் அநேகமான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் தோட்ட நிருவாகங்கள் இந்த விடயத்தில் என்னதான் செய்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுமானால் இதுபோன்ற நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய திகதி நலன்புரி விடயங்கள் அனைத்தும் சரியான முறையில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேவேளை தனியார்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள தொழிலமைச்சர் அது தொடர்பினால பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது ஒரு நல்ல ஏற்பாடு. இதனை நிச்சயம் தொழிலாளர்கள் வரவேற்பார்கள். அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்பட வேண்டிய சம்பள உயர்வை (1000ரூபா) பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தோட்டத்தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...