Headlines News :
முகப்பு » , , » ரிசாத் பதியுதீன் – ஆனந்த சாகர தேரர்: முற்றுபெறாத விவாதம் - என்.சரவணன்

ரிசாத் பதியுதீன் – ஆனந்த சாகர தேரர்: முற்றுபெறாத விவாதம் - என்.சரவணன்


பாஹியங்கல ஆனந்தசாகர தேரர் (தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர்) மற்றும்  அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் 28.12.2015 அன்று இரவு 10 மணிக்கு நடந்த 3 மணித்தியால நேரடி தொலைக்காட்சி விவாதம் சம காலத்தில் நடந்த மிக முக்கிய விவாதம். ஹிரு தொலைக்காட்சியில் பலய (அதிகாரம்) எனும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விலேயே அது இடம்பெற்றது.

ஆனந்த சாகர தேரர் விகாரமகாதேவி பூங்காவில் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கடந்த டிசம்பர் 19ஆம் திகதியன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நில ஆக்கிரமிப்பு, ஊழல், சுற்றுச் சூழல் அழித்தல், முஸ்லிம் காலனியை உருவாக்குதல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல கோஷங்கள் அவருக்கு எதிராக எழுப்பப்பட்டன. இது குறித்து விளக்கமளிக்க பகிரங்க விவாதத்துக்கு வருமாறு என்று ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்திருந்தார். அதன் எதிரொலியாகவே இந்த தொலைகாட்சி விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதே ஹிரு தொலைகாட்சி சில மாதங்களுக்கு முன்னர் இனவாதிகளின் பேச்சைக் கேட்டு முஸ்லிம்கள் குடியேறிய பிரதேசங்களை பறக்கும் கமராக்களின் (Drone camera)  மூலம் வீடியோ எடுத்து அவை வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமானது எனும் பிரசாரத்தை மேற்கொண்டது. அந்த பிரச்சாரங்களே பின்னர் இனவாதிகளுக்கு மேலும் சாதகமாக அமைந்தது.


பொதுவாக பேரினவாதத் தரப்பு ஏனைய தேசிய இனங்கள் மீது பரப்பி வரும் பல போலிப் பிரசாரங்களை சிங்கள மொழியில் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்படும் சில சந்தர்ப்பங்களில் சிங்கள மொழிக் குறைபாடுகளுடனேனும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தமிழ் பேசும் தரப்பை பாராட்டவே வேண்டும்.

சொந்த மண்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்வைத்த கருத்தை இப்படி சாரப்படுத்தலாம்
“...முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டதாகவும் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும்  கூறப்படும் வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் இருக்கும் இருபத்தெட்டு கிராமங்களை உள்ளடக்கிய முசலி பிரதேச சபையின் ஐந்து கிராமங்களே குறிப்பிட்ட பிரச்சினைக்குரியதாகும். அதில் முள்ளிக்குளம் கிறிஸ்தவர்களை கொண்டதாகவும், ஏனைய மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி எனும் நான்கு கிராமங்களும் முஸ்லிம் மக்களுக்குரிய கிராமங்களாகும். இந்த பகுதிகளில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ குடும்பங்கள் பல முன்னர் வாழ்ந்தன. இந்த பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை எவரும் மறுக்க இயலாது. சேதமுற்ற நிலையில் இருக்கின்ற பாழடைந்த முஸ்லிம் பல்லிவாசல்கள், முஸ்லிம் பாடசாலைகள் என்பன இன்னும் இருக்கின்றன. (அந்த புகைப்படங்களையும் காட்டினார் ரிசாத்) முஸ்லிம்களுக்கு சொந்தமான நூறாண்டுக்கும் முற்பட்ட காணிப் பத்திரங்கள் இதோ இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்த பிரதேசங்கள் எல்லா காலத்திலும் சரணாலயமாகவே இருந்தன என்றும் அதையே முஸ்லிம்கள் ஆக்கிரமதிருக்கிரார்கள் என்று பிரச்சாரம் செய்வது என்ன நியாயம். இந்த பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் 1990 இல் புலிகளால் இரண்டு மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டு விரப்பட்டபோது வெறும் சொப்பின் பையுடன் வந்தவர்கள். அவர்கள் தமது சொந்த நிலத்துக்கு திரும்பப் போகக் கூடாதா. யுத்தம் முடிந்தவுடன் வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மரிச்சிக்கட்டி, பாலக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்கள் வில்பத்து தேசிய சரணாலயங்களுக்கு சொந்தமானது என்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அங்கிருந்து தான் இந்த சிக்கல் தொடங்கியது. அதை வைத்துக்கொண்டு தான் சுற்றுச் சூழல் அமைப்புகள் எனும் போர்வையில் இதோ ஆதாரம் என்று கூறிக்கொண்டு இம்மக்களின் மீள் குடியேற்றத்துக்கு எதிராக கிளம்பியிருக்கின்றனர்...”
ரிசாத் பதியுதீன் 1990 இந்த பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் ஒருவர். விவாதத்தின் போது எனது மக்கள் என்று அவர் விழித்த இடங்கள் குறித்து நடத்துனர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆம் நானும் பாதிக்கப்பட்ட அந்த அதே பிரதேசத்தையும் அதே சமூகத்தையும் சேர்ந்தவன் தான். எனவே தான் எனக்கு இந்த தகவல்கள் நன்றாகவே தெரியும். அதேவேளை எனக்கு பொறுப்பும் இருக்கிறது” என்றார்.


பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் சோம தேரோவோக்கும் அஷ்ரப்புக்கும் இடையில் நடந்த பகிரங்க TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்திபெற்றது. (இது குறித்து எனது விரிவான கட்டுரை 1999.09.30 சரிநிகரில் வெளியாகியிருக்கிறது). அந்த விவாதத்தில் அன்றைய அமைச்சர் அஷ்ரப் தரப்பே உறுதியான தர்க்கங்களை முன்வைத்து சோம ஹிமியின் வாதங்களை ஆதாரபூர்வமாக உடைத்தெறிந்தார். அவரே வெற்றிபெற்றார் என்றே முஸ்லிம், தமிழ் தரப்பு நம்பியது. அதேவேளை சிங்கள தரப்பும் அஷ்ரப்பை தாம் தோற்கடித்ததாக பிரச்சாரம் செய்தது.

19ஆம் நூறாண்டின் இறுதியில் பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதியில் கத்தோலிக்க மிஷனரிகளுடன் நடத்திய “பஞ்ச மகா விவாதம்” என்று அழைக்கப்படும் விவாதங்கள் இப்பேர்பட்ட விவாதங்களுக்கு எல்லாம் முன்னோடி. பஞ்ச மகா விவாதத்தின் 5வது விவாதமான பாணந்துறை விவாதம் பிரசித்திபெற்றது. இந்த விவாதங்களே சிங்கள பௌத்த தரப்பை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றன. அந்த விவாதத்தில் பௌத்த தரப்பு வெற்றிபெற்றதாகவே இலங்கையின் பாடப் புத்தகங்கள் வரை எழுதப்பட்டுள்ளன.

2009 யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதத் தரப்பின் நேரடி இலக்காக ஆகியிருக்கிறது முஸ்லிம் சமூகம். தொடர்ச்சியாக பல்வேறுபட்ட முனைகளில், பல தரப்புகளால், பல வடிவங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பிராசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முஸ்லிம் மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு வெறுப்புணர்ச்சி இப்போது வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. அது எப்பேர்பட்ட வன்முறை வடிவத்தை எடுத்து வருகிறது என்பதை அளுத்கம சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களில் நேரடியாக கண்டு வருகிறோம்.


சிங்கள சார்பு விவாதம்.
இப்படியான இனவாத குற்றச்சாட்டு தொடர்பான விவாதங்கள் அனைத்திலும் சூட்சுமமாக பௌத்த தேரர்களையே பங்குபற்றச் செய்கின்றனர். இதன் மூலம் பௌத்த புனிதர்களாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மரியாதைக்குரிய பிக்குமார்களையே ஈடுபடுத்துகிறார்கள். பௌத்த மதகுருக்கள் “பன” எனப்படும் பௌத்த உபதேசத்தை மிகவும் மரியாதை செய்து பழக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள். அப்படிப்பட்ட பௌத்த உபதேசங்களோடு இனவெறியையும் சேர்த்து வெளிப்படுத்துவதை பல இடங்களில் காணமுடிகிறது. இன்று அவர்கள் பௌத்த உபதேசம் மட்டும் வழங்குவதில்லை ஏனைய சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களுடன், இனவுரிமை, மதவுரிமை போன்றவற்றை இனவாதம் கலந்து நச்சூட்டும் பணியும் நடக்கின்றன.

அப்படி பௌத்த உபதேசங்களோடு இனவாத கருதேற்றியவர்களில் முக்கியமானவர் மறைந்த சோம ஹிமி. இவ்வாறான விவாதங்களில் பௌத்த தேரர்களை நுழைப்பதன் மூலம் அவர்கள் சொல்வதே சரி என்கிற நம்பிக்கைக்கு ஊடாக நியாயமான தர்க்கம் கூட உடைக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி பௌத்த தேரர்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்பட்டு, குரல் உயர்த்தி, முஷ்டி உயர்த்தி, ஆத்திரமூட்டக்கூடிய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த முடியும். அவர்களால் அசிங்கமாக கேலியும் செய்ய முடியும். ஆனால் எதிர் தரப்பில் வாதிடும் பௌத்த மதகுரு அல்லாதவர் எவரும் அதனை செய்ய முடியாது. அதற்கான சமத்துவமும் இல்லை. அந்த பிக்குகள் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பௌத்த பிக்குகளின் இப்படியான ஆத்திரமூட்டல் ஏனையோரின் சுயகௌரவத்தை சீண்டும் அணுகுமுறைகளாகவே தொடர்ந்து வருகின்றன. தமது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு வாதங்களில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பிரதிவாதிகள்.

இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட விவாதங்களில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் பேசும் தரப்போடு தமிழில் வாதம் செய்ய முன்வந்ததில்லை. தமிழ்பேசும் தரப்பு தான் அவர்களின் அடுத்த மொழியை இயலுமானவரை கற்றுக்கொண்டு தம்மால் முடிந்த அளவு தம் தரப்பு நியாயங்களை சிங்களத்தில் ஒப்புவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது.

இந்த வாரம் சில முஸ்லிம் ஊடகங்கள் ஹிரு தொலைக்காட்சியோடு இப்படிப்பட்ட ஒரு விவாதத்துக்கு போயிருக்கவே கூடாது என்கிற கருத்தை வெளியிட்டுள்ளன.

சில இடங்களில் சிங்கள பௌத்த தரப்புக்கு முஸ்லிம்கள் எவ்வளவு சாதகமானவர்கள் என்பதை காட்டுவதற்காக ரிசாத் பதியுதீன் வெளியிட்ட விடயங்கள் தமிழர் விரோத போக்குக்கு சாதகமானவை. “ஆங்கிலேயர்கள் தமிழ் பொன்னம்பலம்களிடம் என்ன வேண்டும் என்று கேட்ட போது அவர்கள்  50/50 கேட்டார்கள். அதே கேள்வியை டீ.பி.ஜாயா போன்ற முஸ்லிம்களிடம் கேட்டபோது நாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொள்கிறோம் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றார்கள்... பிரபாகரன் என்னைக் அழைத்து கூறினார், நாம் தமிழ் பேசும் மக்கள். ஏன் எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். எம்மோடு சேர்ந்து இந்த நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள் என்றார். நாங்கள் உடன்படவில்லை.” என்று ரிசாத் கூறியது யாரை சமாளிக்க. யாரைக் காட்டிக்கொடுக்க என்கிற கேள்வி எழாமல் இல்லை. அவற்றை ரிசாத் தவிர்த்திருக்கலாம்.

சிங்கள மொழி அந்நிய மொழியாக இருந்தும் அம்மொழியில் ஈடுகொடுத்து வேகமாக உரையாடிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாராட்டப்படவேண்டியவர். பல இடங்களில் ரிசாத் பதியுதீன் திறமையாக ஆதாரங்களை முன்வைத்தபோதும் சில இடங்களில் அவரால் தர்க்கங்களுக்கு உறுதியான பதில் அளிக்க முடியவில்லை. கூறியதைத் திரும்பத் திரும்பக் கூறுதல், சம்பந்தமில்லாத பதிலுக்குள் நுழைதல். நேரடி பதில் அளிக்காமை, நீண்ட பதிலில் எதிர் பார்க்கப்பட்ட பதில் இல்லாமை போன்றவற்றால் அவரது தரப்பு பலவீனப்பட்டுக்கொண்டே போனது.  அதனை ஏனையோர் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். பிரதிவாதியான ஆனந்தசாகர தேரர் மட்டுமல்ல எதிரில் இருந்த நான்கு நடத்துனர்களையும் ரிசாத் பதியுதீன் எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக அந்த நிலங்களில் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு ஏற்கெனவே குடியிருந்த குடியிருப்பாளர்கள் தானா அல்லது வேறு முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டார்களா என்கிற கேள்வியை அனைவரும் சுற்றிவளைத்து தொடுத்தபோது. அப்படி புதியவர்கள் எவரும் குடியேற்றப்படவில்லை என்று உறுதியாக அமைச்சர் கூறினார். ஆனால் அங்கு குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சந்தித்து இரகசியமாக எடுத்த வீடியோக்களில் அவர்கள் முன்னர் வாழ்ந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ளும் பதிவுகள் காட்டப்பட்டன. பணம் கொடுத்து அப்படி பேசச்செய்திருக்கிரார்கள் என்று ரிசாத் அதற்கு அளித்த பதில் போதுமானதாக இருக்கவில்லை. நடத்துனர்களில் ஒருவரான செனவி தான் இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை உறுதிசெய்வதாகவும் கூறி மேலும் ரிசாத்தின் வாதத்தை மறுத்தார். இந்த விவாதத்தில் பல இடங்களில் நடத்துனர்கள் சிங்கள தரப்புக்கு சாதகமாகவே நடத்தியதை காணக் கூடியதாக இருந்தது.

25 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களில் இருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் யுத்தத்தின் பின்னர் மீள சொந்த இடங்களில் குடியேற்றும் நடவடிக்கைகள் சகல இடங்களிலும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மீள குடியேற்றப்படும் சில பிரதேசங்களில் கூட சிங்கள பேரினவாத தரப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்கெனவே இருந்த இடங்கள் அரசாலும், இராணுவத்தாலும் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவ நலன்களுக்காக வடக்கில் சொத்துக்கள் மட்டும் சூறையாடப்படவில்லை. பாதுகாப்பின் பேரால் சுற்றுச் சூழல் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த விடயத்தில் எந்த கேள்வியுமின்றி சூட்சுமமாக ஒதுங்கிக்கொள்ளும் சூழலியல் அமைப்புகள் இப்போது இந்த குடியேற்றங்களை சூழலியலின் பெயரால் எதிர்க்கின்றன. சூழலியலாளர்களின் முகமூடியுடன் பல இனவாதிகள் இப்படி களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். நாட்டில் சுற்றுச் சூழலை அழிக்கும் ஏனையோர்  இன ரீதியில் குற்றம் சுமத்தப்படுவதில்லை. ஆனால் தமது பாரம்பரிய இடங்களில் குடியேறும் இம்மக்கள்  மீது இன ஆக்கிரமிப்பாக திரிபுபடுத்தி வருகின்றனர்.

பொது பல சேனா தொடக்கியது
வில்பத்து சரணாலயத்தை ஆக்கிரமித்து முஸ்லிம்களை குடியேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு நீண்டகாலமாக சிங்களத் தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியேற்றம் குறித்து முதலில் திரிபுபடுத்தி சர்ச்சைக்குள்ளாக்கியது பொது பல சேனாவே. கடந்த 2014 மே  8 அன்று மன்னாரிலுள்ள மரிச்சுகட்டு பிரதேசத்துக்கு பெரும் திரளான சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று அங்கு குடியேறியிருந்த மக்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டார். தாம் தமது பாரம்பரிய இடங்களுக்கே வந்திருக்கிறோம் என்று அங்கிருந்த முஸ்லிம் மக்கள் விளக்கியபோது “வாயை மூடு.. இங்கே முஸ்லிம் கொலனியை உருவாக்க வந்திருக்கிறீர்கள்” என்றும். முஸ்லிம் மக்களை நோகடிக்கும் வகையில் ஹம்பயா, தம்பியா என்று மோசமான இன வசைச் சொற்களையும் கொட்டித் தீர்த்தார். அங்கு இருந்த மக்களுக்கும் ஞானசாரவின் கூட்டத்திற்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அன்று அதனை அடக்கினர்.

இதன் விளைவாக கடந்த 21.05.2015 அன்று நடுநிசியில் நீண்ட நேரடி விவாதமொன்று TNL தொலைக்காட்சியில் ஜனஹண்ட நிகழ்ச்சியில் (மக்கள் குரல்) அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இடம்பெற்றது. சர்ச்சைக்குரிய அந்த விவாதத்தை அந்த தொலைகாட்சி மீண்டும் 24 ஞாயிறன்றும் மீண்டும் ஒளிபரப்பியது. அதற்கடுத்த வாரம் வெளியான ராவய சிங்கள பத்திரிகையில் வில்பத்து சரணாலயம் எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும், குடியேற்றப்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் சேர்த்து கட்டுரையை வெளியிட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டின் போது அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “முஸ்லிம்கள் காடழிப்பில் ஈடுபடவுமில்லை ஒரு அங்குலம் காணியைக் கூட வளைத்துப் போடவுமில்லை.” என்று பதிலளித்தார். அரச தரப்பில் அளிக்கப்பட இந்த பதிலே அனைவருக்கும் போதுமானது. ஆனால் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்புவதன் மூலம் சிங்கள பௌத்தர்களை இனவெறியூட்டுவது தொடர்ந்து நிகழ்கிறது.


குர் ஆனில் சத்தியம் செய்
இறுதியில் விவாதம் முற்றுபெற்றது என்று கூறி முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் ஆனந்த சாகர தேரர் தான் கொண்டு வந்திருந்த குர் ஆனை நீட்டி சத்தியம் செய்யுமாறு ரிசாத் பதியுதீனை வற்புறுத்தினார். முஸ்லிம்கள் குர் ஆன் மீது சத்தியம் செய்வதில்லை என்று அவருக்கு பதிலளித்த பின்னரும் தேரர் தொடர்ந்து நிர்பந்தித்தார். இரு தரப்புமே குர் ஆனையும், தம்ம பதத்தையும் கொண்டு வந்து சத்தியம் செய்திருந்தால் இந்த விவாதமே தேவைப்பட்டிருக்காது. விவாதத்தின் படி தம் தரப்பு வாதங்களுக்கு தகுந்த ஆதாரங்களே முக்கியமானது. அடுத்த நாள் அதே ஹிரு ஊடக நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியான செய்தியில் “ரிசாத் குர் ஆனின் மீது கை வைத்து சத்தியம் செய்ய மறுப்பு!” என்று தலைப்பிட்டு தமது இனச் சேவகத்தை சீர்பட செய்தது. அதனை ஆதாரம் காட்டி ஏனைய பல சிங்கள ஊடகங்களில் அதே செய்தியை மீண்டும் மீண்டும் வெளியிட்டன.

ஆனந்தசாகர தேரர் இந்த விவாதத்தின் மூலம் சிங்கள மக்களின் புதிய கதாநாயகனாக ஆக்கப்பட்டுள்ளார். அவரது போராட்டத்தை வாழ்த்தி பல செய்திகள் வெளியாகின்றன. அத்துடன் இனவாத சமூக வலைத்தளங்களில் “ரிசாத்தின் முகமூடி கிழிக்கப்பட்டதற்கு” வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களும், கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அனைவரும் அவருக்கு பின்னால் அணிதிரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆக இந்த பிரச்சினை இப்போதைக்கு முற்றுபெறாது என்பது மட்டும் தெளிவாகிறது. அரச இயந்திரம் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள முடிச்சுகளை அவிழ்த்து முற்றுப்புள்ளி வைக்காதுவிட்டால் இதனை இன்னொரு பாரதூரமான இனநெருக்கடிக்குள் கொண்டுபோய் சேர்க்க வாய்ப்பிருக்கிறது.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates