Headlines News :
முகப்பு » » உலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி

உலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி



மலையகத்தின் மலைச்சிகரங்களில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்டுள்ள கானகங்கள், ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்கா மற்றும் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்டுள்ள காடுகள் ஆகியன யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

உலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இக்காடுகள் அபூர்வமான எண்ணிக்கையிலான இயற்கைத் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் இயல் வாழிடமாக உள்ளன. மிக அபூர்வமாகவே மனிதர்கள் பிரவேசித்துள்ள மலையுச்சியிலும் அடிவாரத்திலுமுள்ள குளிர் வலயக் காடுகளும் இதில் அடங்கியுள்ளன. இது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமல்லவா? இவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து வர அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அனுசரணை மாத்திரம் போதாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதன் மூலமே நமது பங்களிப்பை எப்படி வழங்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அபூர்வ உயிரினங்கள் மற்றும் தாவரங்கள்

பல்லுயிர்த்தன்மை ஹொட்ஸ்பொட் என்றழைக்கப்படுகின்ற இப்பிரதேசத்தில் இலங்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட வட்டாரத்திற்குள் முதுகெலும்புடைய உயிரினங்கள் மற்றும் மலரினங்கள் 34 விதமான வட்டாரத்திற்குரிய தாவரங்கள், புதர்ச்செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியன பல்லுயிரித்தன்மை கொண்ட இக்குளிர் வலயக் காடுகளிலும் அதனோடிணைந்துள்ள புல்வெளிப் பிரதேசங்களிலும் அடங்கியுள்ளன. இப்பிரதேசங்களின் தாவரங்களின் பரிமாணம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான உறுதியான புவிச்சரிதவியல் மற்றும் உயிரியல் செயன்முறைச் சான்றுகளை இப்பிரதேச விலங்குகள் வழங்குகின்றன.

இப்பிரதேசத்திற்குரிய ஊதா நிறத்தை உடைய நீண்ட வால் குரங்கு (Semnopithecus vetulas) தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குரிய அமைப்பியல் ரீதியான இன்று அடையாளம் காணப்பட முடியாத பல்வேறு விதமான பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.

இலங்கையில் காணப்பட்ட ஜெனஸ்பந்தேரா (Genus Panthera) வகையில் எஞ்சியுள்ள ஒரே இனமான இலங்கைச்சிறுத்தைப் புலி 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூனை வகை உயிரினங்களிலிருந்து விரிவடைந்து பந்தேரா பார்டஸ் கொட்டியா (Panthera Pardus Kotiya) என்னும் ஒரு விசேட உப பிரிவாக வளர்ச்சியடைந்தது. இலங்கைக்கே உரிய உயிரினமான இச் சிறுத்தைப் புலிகளின் ஒரே வாழ்விடமாக அமைந்துள்ளது மேற்குறிப்பிட்ட மலையகப் பிரதேசங்களேயாகும்.

நீண்ட தனிமைப்படுத்தலும் தொடர்ச்சியான பரிமாணமும் தெற்காசியப் பிராந்தியங்களுக்கேயான மெல்லுடலிகளை (முதுகெலும்பற்ற உயிரினங்கள்) இலங்கையில் தோற்றுவித்துள்ளது.

மலையகக் குளிர்வலயக் காடுகள் பல அழிந்து வரும் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்குமான ஒரேயொரு வாழிடமாக இருந்து வருவதனால் ஸ்தல சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தகைய ஏனைய பிரதேசங்களையும் விட அதிகளவான உயிரின மற்றும் தாவர இனங்கள் இப்பிரதேசத்தில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. பிரதேசத்திற்குரிய உயிரினங்கள் மற்றும் தாவர வகைகள் என்ற அளவிலும் உயர்தரத்திலுள்ளது. 408 வகையான முள்ளந்தண்டுடைய விலங்குகள் 83 வீதமான நன்னீர் மீனினங்கள் 81 வீதமான நிலநீர் வாழ்வன ஆகியன மலையுச்சிக் கானகங்களுக்கே உரியனவாகும். இதில் 91.1% நிலநீர் வாழ்வனவும் 89 வீதமான ஊர்வனவும் ஹோட்டன் சமவெளிக்கும் 64 வீதமான நிலநீர் வாழ்வனவும் 51 வீதமான ஊர்வனவும் பாதுகாக்கப்பட்டுள்ள நக்கிள்ஸ் காடுகள் விசேடமானவையாகும்.

பயனுறுதி மிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்

இச் சொத்தின் பாகங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குளிர்வலயக் காடுகளின் வரையறுக்கப்பட்ட நீட்சி ஆகும். இப்பிரதேசம் பயனுறுதி மிக்க வகையில் பாதுகாக்கப்பட்டும் முகாமைத்துவம் செய்யப்பட்டும் வருகின்றன. பாதுகாக்கப்பட்டுள்ள மலையுச்சிக் காடுகள் பல பாதுகாப்பு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹோர்டன் தேசிய பூங்கா உள்ளிட்ட ஒரு பொது எல்லை இப்பிரதேசத்திற்காக வகுக்கப்பட்டுள்ளது. சூழவுள்ள நிலப்பாவனையிலிருந்து பாதுகாப்பு பெற பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைப்பிரதேசங்களினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குட்பட்ட ஏனைய பல அச்சுறுத்தல்களும் இனங்காட்டப்பட்டுள்ளன.

இச் சொத்து அரச உடமையாக உள்ளது. இது தொடர்பில் பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேசம் வலிமையானதும் பயனுறுதி மிக்கதுமான சட்ட ரீதியான பாதுகாப்பைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படுவதும் இற்றைப்படுத்தப்படுவதுமான மனிதன் ஒன்றுடன் ஒன்று இசைவான வெவ்வேறு திட்டங்களின் மூலமாகவே ஒவ்வொரு பாகமும் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலை மாறி முழுச் சொத்திற்குமான பொதுவான முகாமைத்துவ முறையின் தேவை உணரப்பட்டுள்ளது. போதுமான அளவிலான நிதியொதுக்கீடுகளும் தேவையாகவுள்ளன.

பாதிப்புகளும் இனங்காணப்பட்ட

அச்சுறுத்தல்களும்

தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமென இனங்காணப்பட்ட அச்சுறுத்தல்களின் தன்மையும் அளவும் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபட்டதாகவுள்ளது. மலையுச்சிக் காடுகளைப் பொறுத்த வரையில் சிவனொளிபாதமலைக்கு வருடாந்தம் வருகை தரும் இரண்டு மில்லியன் யாத்திரிகர்கள் காட்டிற்கும் சூழலுக்கும் வழிநெடுகிலும் மலையுச்சியிலும் குறிப்பிடத்தக்க அளவான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வுகளும் ஒரு அச்சுறுத்தலாகவேயுள்ளன.

மேலும், ஆக்கிரமித்துப் பரவும் தாவர மற்றும் விலங்கினங்களால் தாவரங்கள் பட்டுப் போதல் அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ அழிவுகள் மற்றும் ஏலக்காய் பயிரிடுதல் போன்ற அச்சுறுத்தல்களுமுள்ளன.

இவ்வச்சுறுத்தல்கள் உலகச் சிறப்பு வாய்ந்த இச் சொத்துக்களின் பெறுமதிக்கு ஊறிழைக்கா வண்ணம் பாதுகாப்பதற்கான பயனுறுதிமிக்க வேலைத்திட்டங்கள் தேவையாயுள்ளன. இப்பிரதேசத்தை சூழ வாழும் மக்கள் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதான ஒரு உறுதியான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இதில் அடங்கியுள்ள மூன்று பகுதிகளுக்கும் மேலதிகமாக இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள உலகப் பாரம்பரிய சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்திற்கும் இச்சொத்துக்கும் உறுதியான தொடர்பு உண்டு. இவ்விரண்டு சொத்துக்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates