Headlines News :
முகப்பு » , , , » அநகாரிக்க தர்மபாலாவின் பிரவேசம் (1915 கண்டி கலகம் –14) - என்.சரவணன்

அநகாரிக்க தர்மபாலாவின் பிரவேசம் (1915 கண்டி கலகம் –14) - என்.சரவணன்


19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அநகாரிக தர்மபாலாவின் பிரவேசம் பௌத்த மறுமலர்ச்சிக்கு பெரும் பாய்ச்சலை மட்டும் வழங்கவில்லை. பௌத்த மறுமலர்ச்சி எனும் பெயரில் சிங்கள பௌத்த இனவாத கருத்தாக்கம் வடிவம் பெற்றதில் தர்மபாலாவுக்கு பெரும்பங்குண்டு. இந்த கருத்துருவாக்கம் படிப்படியாக குறுகிய காலத்தில் நிகழ்ந்தது. பௌத்த மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு தலைமை தாங்கும் சக்தியாக உருவெடுத்தார் தர்மபால. அவர் நிகழ்த்திய உரைகள், அவரது பிரசுரங்கள், பிரசாரங்கள் அனைத்தும் படிப்படியாக ஏனைய சுதேச இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்த்தெடுத்தது. அவருக்குப் பின் இன்றுவரை மேற்கொள்ளப்படும் இனவாத முஸ்தீபுகளுக்கு தர்மபாலாவின் சுலோகங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவரது சுலோகங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று இது.
“நினைவில் வைத்துக்கொள்,
என்றாவது வெள்ளையன் இந்த நாட்டை விட்டுவிட்டு போவான். அவர்களின் பிள்ளகளைப்போன்ற இருபது முப்பதாயிரம் கருப்பு வெள்ளையர்களை உருவாக்கிவிட்டுத்தான் அவர்கள் வெளியேறுவார்கள். அதன் பின்னர் இந்த நாட்டை ஆளப்போவது இந்த கருப்புவெள்ளையர்களே. அவர்கள் சிங்கள மொழியையும், சிங்கள பண்பாட்டையும் வெறுப்பார்கள். இனம், மதம், மொழி வேறுபாடு தேவையில்லை என அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பார்கள். தமிழர்களும், மரக்கல, ஹம்பயாக்களும், கொச்சிகளும், போறகாரன்கள் அனைவரும் ஒன்றே என கூறுவார்கள். இந்த நாடு அனைவருக்கும் உரியது என்பார்கள். அப்படிக்கூறி ஆங்கிலத்திலேயே அதிகாரம் செலுத்துவார்கள். விகாரைகளைச் சுற்றி தேவாலயங்களையும், சைவ ஆலயங்களையும் கட்டுவார்கள். நீங்களோ, உங்களுக்காக உங்களை விடுவிக்கும் ராஜகுமாரர்கள் பிறக்கும்வரை காத்திருப்பீர்கள். பிறக்கவிருக்கும் உங்கள் ராஜகுமாரர்களையும் கருவிலேயே அழித்துவிட இந்த “கருப்புவெள்ளையர்களால்” முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது பிக்குமார்களுக்கு அவர்கள் போதைமாத்திரை கொடுத்துவிடுவார்கள். அதன் பின்னர் உங்கள் பிள்ளைகள் கொட்டையுள்ள வாழைப்பழங்களை விழுங்கிவிட்டு மலம் கழிக்க முடியாமல் முக்கிக்கொண்டிருக்கும் குரங்குகளைப்போல ஆக வேண்டியுறும்.”
1931 இல் அனகாரிக்க தர்மபால தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்பு இது. இந்த மேற்கோளை இனவாத தரப்பு எங்கெங்கும் வியாபகமாக பாவிப்பதைக் காணலாம். இந்த மேற்கோளை அடிப்படை கோஷமாக வைத்துத்தான் இன்றைய பல இனவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவர்களின் மேடைப்பேச்சுக்கள், துண்டுபிரசுரங்கள், நூல்கள், போஸ்டர்கள் நூல்கள் எல்லாவற்றிலும் இவற்றைக் காணலாம்.

தமிழ், சிங்கள பாடப் புத்தகங்களில் கூட இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாககாட்டப்படுபவர் அனகாரிக்க தர்மபால. இன்று நாடுமுழுதும் மதச் சிலைகளுக்கு அடுத்ததாக அனகாரிக்கவின் சிலைகளே அதிகம் உள்ளன.

வாழ்க்கை

1864ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பிறந்தார். அவர் தனது 79 வது வயதில் 1933 ஏப்ரல் 29 இல் இறந்தார். தெற்கிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்த தளபாட வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த குடும்பம். தொன் கரோலிஸ் கம்பனியின் உரிமையாளரான அவரது தந்தை ஒரு கொவிகம சாதியைச் சேர்ந்தவர். அவரது தாயார் துராவ சாதியைச் சேர்ந்தவர். பௌத்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு கத்தோலிக்க தேவாலயத்திலேயே தொன் டேவிட் எனும் பெயர் சூட்டப்பட்டது. புறக்கோட்டை வீட்டிலிருந்து கொட்டாஞ்சேனை வீட்டுக்கு அவர் தனது 10 வயதிலிருந்து குடியிருக்கத் தொடங்கினார்.  6 வது வயதிலிருந்து ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று கத்தோலிக்க பழக்க வழக்கங்களை கடைபிடித்தாலும் வீட்டில் பௌத்தகல்வி வழங்கப்பட்டது. 11 வது வயதிலிருந்து கல்கிஸ்ஸ தோமஸ் வித்தியாலத்தில் கல்வி கற்கத் தொடங்கினார். அங்கு பைபிள் பாடத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார். மது அருந்தும், இறைச்சி உண்ணும் பாதிரியார்களை விட அதை தவிர்க்கும் பிக்குமார்களே அவரது விருப்பத்துக்கு ஆளானார்கள். அப்படி அவர் பழக வாய்ப்பு கிடைத்தவர்கள் ஹிக்கடுவே சுமங்கல தேரர், மிகெட்டுவத்தே குனானந்த தேரர் போன்றோர். மேலும் அவர்கள் அப்போது மிகவும் பிரசித்திபெற்ற, மரியாதைக்குரிய பௌத்த பிக்குகளாக இருந்தவர்கள்.
அவரைக் ஈர்த்த பாணந்துரை விவாதத்தை அவர் காணச் சென்ற போது அவருக்கு வயது 10. கேணல் ஒல்கட்டை வரவேற்கச் சென்றவர்களில் டேவிட்டும் ஒருவர். ஒல்கொட்டை வரவேற்க கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி அவர் தனது நாட்குறிப்பில் இப்படி கூறுகிறார்.
“அவரது கைகளை முத்தமிட்டு வரவேற்ற அற்புதமான தருணம் அது. சர்வலோக சகோதரத்துவத்துவதுக்கான அபிலாசையும், மனித வர்க்கத்துக்காக மேற்கொள்ளப்படப் போகும் சேவை பற்றிய பேரார்வ உணர்வு அன்று ஏற்பட்டது.”
டேவிட் தனது மெற்றிக் வகுப்பை முடிப்பதற்கு முன்னர் அந்த பாடசாலையிலிருந்து தகப்பனால் நீக்கப்பட்டார். அதற்குக் காரணம் 1883இல் நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரம். அக்கலவரத்தைத் தொடர்ந்து அவரது தகப்பனார் ஹேவாவிதாரன கத்தோலிக்க தரப்பினர் மீது கடும் கோபம் கொண்டார். அதனைத் தொடர்ந்து டேவிட்டை அக் கத்தோலிக்க பாடசாலயிலிருந்து நீக்கினார். கொட்டாஞ்சேனைக் கலவரத்தைப் பற்றி ஆராய்வதற்காக 1884 இல் கேணல் ஒல்கட் மீண்டும் இலங்கை வந்த போது பிரம்மஞான சங்கத்தில் இணைவதற்கான தனது விருப்பை ஒல்கொட்டிடம் தெரிவித்தார் டேவிட். அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க மிஷனரிகளுக்கு எதிரான நாடளவிலான ஒல்கொட்டின் பேச்சுக்கள், படைப்புகள் அனைத்தையும் அதே உணர்வுடன் மொழிபெயர்த்தது தர்மபால தான். அதுபோல பௌத்த கல்வி அறக்கட்டளைக்காக பணியாற்றிய லெட்பீட்டரின் (C.W.Leadbeater) மொழிபெயர்ப்பாளராகவும் தர்மபாலாவே கடமையாற்றினார். ஒல்கொட்டின் நாடளாவிய பிரச்சாரம் தர்மபாலாவுக்கு பௌத்த உணர்வை மேலிடச் செய்தது.

1884இல் பரம விஞ்ஞான சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள சென்னை அடையாருக்கு ஒரு குழு இலங்கையிலிருந்து போவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் தர்மபாலவும் உள்ளடக்கப்பட்ட போதும் அவரது தந்தை இந்த பயணம் தொடர்பாக பயமுற்றார். அதற்கு அவர் கண்ட ஒரு கனவையும் வெளிப்படுத்தினார். ஆனால் ஒல்கொட், மற்றும் ப்லாவட்ஸ்கி ஆகியோரின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் அந்த அனுமதி வழங்கப்பட்டு அவர் விஜயம் செய்தார். இந்த விஜயம் தர்மபாலவுக்கு பல வெளிச்சங்களை உண்டாக்கியது. 

இந்த பயணத்தின் பின்னர் ப்லாவட்ஸ்கி அவரை அழைத்து பல உபதேசங்களை செய்து பாலி பாசையை கற்கும் படியும், மனித குலத்துக்காக தர்மத்தை போதிக்கும் பணியை ஏன் ஏற்கக்கூடாது என்றும் கேட்டார். 12.02.1886 தர்மபால தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன்னை பௌத்த தர்மத்தின் மேன்மைக்காக அர்ப்பணிக்கப்போவதாகவும் அதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் போதிய விளக்கத்தையும் தர்மபாலாவின் தந்தைக்கு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னை முழுமையாக பிரம்மஞான சங்கத்தின் பணிகளில் அர்ப்பணித்தார். தொன் டேவிட் எனும் தனது இயற்பெயரான அந்நிய பெயரை கைவிட்டு தர்மபால (தர்மத்தின் காவலன்)  ஹேவாவிதாரன எனும் சிங்கள பெயராக மாற்றிக்கொண்டார். அவரது பிரம்மச்சரியம் காரணமாக பின்னர் அவருக்கு அநகாரிக்க எனும் பெயரும் இணைக்கப்பட்டது.

மணமுடிக்காமல் பௌத்தத்துக்காக முழுமையாக உழைக்கும் ஒருவரையே அனகாரிக்க எனப்படுகிறார். அந்த வகையில் தர்மபாலாவே முதலாவது அனகாரிக்க எனப்படுகிறார். பிக்குவைப்போல மஞ்சள் உடை தரித்தபோதும் அவர் ஒரு பிக்குவாக இருக்கவில்லை. 

பௌத்த பிரம்மஞான சங்கத்தின் பௌத்த பிரிவின் செயலாளராகவும், பௌத்த வெளியீடு மற்றும் “சந்தரெச” பத்திரிகை ஆகியவற்றின் முகாமையாளராகவும், பௌத்த பாடசாலைகளின் முகாமையாளராகவும், அதன் பின்னர் பௌத்த பாதுகாப்பு சபையின் இணைச்செயலாளராகவும் தர்மபால தெரிவானார். பௌத்த கொடி உருவாக்கக் குழுவுக்கும் தெரிவானார்.

1886 இல் பௌத்த மத பிரசாரத்துக்காக “சந்தரெச” பத்திரிகையை ஆரம்பிப்பதில் கடுமையாக உழைத்த அவர் 1906இல் பௌத்த மத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் நோக்குடன் “சிங்கள பௌத்தயா” (சிங்கள பௌத்தன்) பத்திரிகையை ஆரம்பித்தார். இலங்கையில் இன்றும் வெளிவரும் நீண்டகாலமாக வெளியிடப்பட்டுவரும் ஒரே பத்திரிகையாக சிங்கள பௌத்தயாவைக் குறிப்பிடலாம்.

இந்த பத்திரிகை இலங்கையில் நீண்டகாலமாக இனவாத பிரசாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் மிக பழமையான பத்திரிகையாகக் கொள்ளலாம். இனவாத வரலாற்றை ஆராயும் எவரும் இந்த பத்திரிகையை தவிர்த்துவிட்டு செல்வதில்லை. கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா இந்த பத்திரிகை குறித்து போதிய அளவு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

கண்டியில் 1915 கலவரத்துக்கு தூபமிட்ட காரணிகளை ஆராயும் எவரும் அநகாரிக தர்மபாலாவின் சித்தாந்த வகிபாகத்தை ஆராயாமல் இருக்க முடியாது.

தொடரும்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  1. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  2. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
  3. පන්සලේ විප්ලවය - Victor ivan – (Ravaya publication – 2006)
  4. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  5. “යටත් විජිත බුදු දහම” -  ප්‍රේමකුමාර ද සිල්වා - (විජේසුරිය ග්‍රන්ථ කේන්ද්‍රය, 2009)
  6. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
  7.  “ජාතියේ පියා හෙවත් අනගාරික ධර්මපාල” - ගණේගම සරණංකර නාහිමි (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd - 2012)
  8. “දැනගත යුතු කරුණු” - අනගාරික ධර්මපාල (විසිදුනු ප්‍රකාශකයෝ, 1930)
  9. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  10. “අනගාරික ධර්මපාල - සත්‍ය සහ මිථ්‍යාව” - එස්.පී.ලංකාපුර රත්නකුමාර (Nuwanee printers and publishers, 2014)

நன்றி - தினக்குரல்

Share this post :

+ comments + 1 comments

மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates