குடபண்டா நுகவெல நிலமே |
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடெங்கிலும் பல்வேறு மதப் பதட்ட நிலையைத் தோற்றுவித்திருந்தன. 1883இல் கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்க – பௌத்த கலவரம், 1886 இல் கத்தோலிக்க – முஸ்லிம் கலவரம், 1896 இல் களுத்துறை “அரச மரக் கலவரம்” என்று இது தொடர்ந்தது. குறிப்பாக பௌத்தர்களின் பெரஹர ஊர்வல நிகழ்வுகள் இந்த பதட்ட நிலமைகளை அதிகரித்துக்கொண்டிருந்தன.
கம்பளை வளஹாகொட தேவாலயம் பற்றிய சர்ச்சைகளே கண்டி கலவரத்துக்கு தூண்டுகோலாக அமைந்தது.
தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறி வியாபாரமும், வட்டிக் கடன் கொடுப்பவர்களாகவும் இருந்த கரையோர முஸ்லிம்கள் குறித்து அப்போதைய சட்டசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்த எஸ்.சீ.ஒபேசேகர தனது சாட்சியத்தில் கூறும் போது.
“அவர்கள் எப்போதும் புதியவர்களாகவே காணபட்டார்கள். மக்களை தொந்தரவு செய்பவர்கள். அவர்களிடம் கொஞ்சம் பணம் இருக்கும். அது கூட இல்லாத நம் நாட்டின் சாமான்யர்களின் நிலங்கள் சில காலத்தில் அவர்களின் நிலங்களாக மாறிவிடும். எனக்கு தெரிந்தவர்கள் சிலர், சில நெல் மூடைகளை கடன் வாங்கி பின்னர் தமது முழு நிலத்தையும் பறிகொடுத்த கதையை நான் அறிவேன்.” என்கிறார்.
அன்றைய ஆளுநர் ரொபர்ட் சாமஸ் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தை ஆரம்பித்ததும் கூட இந்த வியாபாரிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காகவே என்கிறார் ஆர்மண்ட் டி சூசா தனது நூலில்.
1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த கூட்டுறவு சங்கத்தை தொடக்கி வைத்த விழாவில் பெத்தேவல என்பவர் இந்த “ஹம்பயாக்களால்” பாதிக்கப்பட்ட விவசாயிகள் கதைகள் பலவற்றை விபரித்துள்ளார்.
பல கத்தோலிக்க பெண்களைக் கடத்திச் சென்றார்கள், வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்கிற கதைகள் அப்போது பரவலாக பேசப்பட்டன. கத்தோலிக்க பாதிரிமார் இவற்றிலிருந்து போதுமான அளவு பல குடும்பங்களை பாதுகாத்து இருக்கிறார்கள் என்றும் கொழும்பு தொடக்கம் சிலாபம் வரை இந்த கரையோர முஸ்லிம்களின் கடைகளை பல காலமாக அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
சேர் ஜோன் அன்டர்சன் |
முதலாவது உலக யுத்தம் ஆரம்பமானபோது இந்த நிலைமை மேலும் மோசமானது. பலர் வேலையிழந்தார்கள். அல்லது வேளை நேரம் குறைக்கப்பட்டதால் சம்பளம் குறைந்தது. அப்போது அன்றாட பலசரக்குப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் சாதாரண பொருட்களை பதுக்கி வைத்து அதிக இலாபத்துடன் ஏழைகளுக்கு விற்று அவர்களின் வெறுப்புக்கும் சாபத்துக்கும் இலக்கானார்கள். உள்ளூர் முஸ்லிம்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள்.
கம்பளை என்பது பல வர்த்தக நிலையங்களைக் கொண்ட நகர். பல முஸ்லிம் கடைகளையும் கொண்ட ஒரு இடம். சூழ பல முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தார்கள். 1880 களில் பல புதிய பள்ளிகளின் கட்டப்படத் தொடங்கின. வளஹாகொட விகாரையின் பெரஹர வழமையாக செல்லும் அம்பேகமுவ பாதையிலும் புதிய பள்ளி கட்டப்பட்டது. அந்த பள்ளியைக் கட்டியவர்கள் “கரையோர முஸ்லிம்கள்” என்று அப்போது அறியப்பட்டவர்கள். அவர்கள் ஏற்கெனவே வெறுப்புணர்வுக்கு ஆளாகி வந்தவர்கள். இவர்களைத் தான் பொன்னம்பலம் இராமநாதன் தனது நூலில் ஹம்பயாக்கள் சம்மாங்காரர் என்றும் குறிப்பிடுகிறார்.
பௌத்தர்களுக்கு பெரஹர என்பது ஒரு முக்கிய மத நிகழ்வு. பெரஹர என்றால் யானைகள், மேள இசை வாத்தியங்கள், தீவட்டி விளையாட்டுகள், பாரம்பரிய நடனம் என அனைத்தும் இடம்பெறும். 1815 இல் ஆங்கிலேயர்களோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பௌத்த மதத்தை பேணிப்பாதுகாப்பதாகவும், பெரஹர போன்றவற்றை தங்குதடையின்றி நடத்துவதற்கு வழிவகுப்பதாகவும் கையெழுத்து வாங்கிவிட்டனர். வளஹாகொட விகாரை 900 வருடங்களுக்கு முன்னர் பராக்கிரமபாகுவால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற விகாரை. கண்டி கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே பெரஹர நடத்துவதற்கு ஆங்கிலேயர்களால் எந்த இடைஞ்சலும் இருந்ததில்லை. பெரஹர ஊர்வலமாக செல்லும் பாதையை வழமையாக வரையறுப்பவர் கண்டி பஸ்நாயக்க நிலமே உள்ளிட்ட தேவால பொறுப்பாளர்களுமே. பிரித்தானிய ஆட்சியாளர்கள் அந்தப் பாதைகளின் போக்குவரத்தை நிறுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதும் வழக்கம்.
ஆனால் வழமையாக அரசாங்க அதிபரிடம் இருந்து சம்பிரதாயபூர்வ அனுமதி பெற்றுக் கொள்வது வழக்கம். வளஹாகொட தேவாலயத்திலிருந்து கங்காதிலக்க விகாரை வரை பெரஹர செல்லும் பாதையில் இரு முஸ்லிம் பள்ளிகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையும் கடந்து செல்ல வேண்டும். இதில் ஒரு பள்ளி மெக்கன் சொஹொங்கே (meccon Sohonge) என்று அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலேயர்கள் வருமுன்பு கண்டி ராஜ்ஜிய காலத்தில் நிரந்தமாக வாழும் உள்ளூர் முஸ்லிம்களால் கட்டப்பட்டிருக்கிறது. அதுவரையான பெரஹர ஊர்வலத்துக்கு இவற்றால் எந்த வித சிக்கல்களும் ஏற்பட்டதில்லை. அன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கரையோர முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலால் தான் இந்த பெரும் கலவரத்துக்கு வித்திடப்பட்டுள்ளது.
முதன் முதலில் 1907 ஆம் ஆண்டு இந்த சர்ச்சை தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பள்ளியின் இரு மருங்கிலும் 100 யார் தூரத்தில் தூண்கள் எழுப்பப்பட்டு அந்த பகுதியில் பெரஹர வரும்போது தமது தாள வாத்தியங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனாலும் 1911 வரை இந்த எச்சரிக்கையை பொருபடுத்தாமல் வழமைபோல தமது பெரஹர ஊரவலத்தை நடத்தி வந்தார்கள் ஏற்பாட்டாளர்கள்.
அன்றைய கண்டி தலதா மாளிகை குடபண்டா நுகவெல நிலமே (தேவாலய தர்மகர்த்தா) இந்த தூண்களை அகற்றி 1912 இல் நடத்தப்போகும் பெரஹரவை தங்கு தடையின்றி செல்ல வழிசெய்யவேண்டும் என்று அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்க அதிபர் ஜி.எஸ்.செக்ஸ்டன் 100 யார் தூரத்தை 50 ஆக குறைத்து தீர்ப்பு சொன்னார். இத்தனைக்கும் பல தசாப்தங்கலாக இருக்கும் மெக்கன் சொஹொங்கே பள்ளி வாசல் பெரஹரவுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.
அரசாங்க அதிபரின் முடிவால் இரு தரப்பும் திருப்தியடையவில்லை. இந்த முடிவை எதிர்த்து நிலமே நுகவெல வரலாறு தொட்டு நிகழ்ந்துவரும் தமது பெரஹரவுக்கு இப்பேர்பட்ட தடை விதிப்பது பௌத்தர்களின் மனங்களைப் புண்படுத்தகூடியது என்று கடிதம் எழுதினார். இதனை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள; அந்த பள்ளியின் மத நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு பெரஹர செல்லக்கூடிய ஒரு நேரத்தை தெரிவிக்குமாறும் செக்ஸ்டனிடம் அவர் கேட்டுக்கொண்டார். அந்த கடிதத்தின் இறுதியில் அவர். இந்த பாதையில் ஒரு கிறிஸ்தவ பள்ளிவாசலும், இன்னுமொரு கிறிஸ்தவ தேவாலயமும் இருந்த போதும் அவை ஒரு போதும் இப்படிப்பட்ட இடைஞ்சலை செய்ததில்லை என்றும் “மரக்கல முஸ்லிம்களின்” ஹவுசேன் ஜவுசேன் (Haussan Jausein) விழா நடத்தப்படும்போது பெரும் சத்தங்களை வெளிபடுத்தி வருகின்றபோதும் ஒருபோதும் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால் அரசாங்க அதிபர் இதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டார். அவர் அந்த பெரஹரவை முழுமையாக தடை செய்தார். இந்த தடையை எதிர்த்து தமது உரிமைகளை உறுதிபடுத்தக்கோரி பஸ்நாயக்க நிலமே கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 1815 ஒப்பந்தத்தையும் சுட்டிக்காட்டி பௌத்த மதத்தை பாதுகாப்பதாகவும் பெரஹரக்களை தடையின்றி செய்வதற்கும் ஆங்கிலேயர்கள் தந்த உறுதிமொழியை சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நிலமேவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 15.02.1915 அன்று நிராகரித்து செல்லுபடியற்றதாக்கியது. மீண்டும் பௌத்தர்கள் தரப்பில் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு புதிய ஆளுநராக சேர்.ஜான் அண்டர்சன் நியமிக்கப்பட்டார். தனது முதல் கடமையாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் கமபளைக்கு வந்து சேர்ந்தார். சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் ஒன்று கூட்டி இரு தரப்புக்குமிடையில் பரஸ்பர நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றார். பெரஹரவுக்கு இடைஞல் செய்ய வேண்டாம் என்று பள்ளிவாசல் தலைவர்களிடமும், ஊர்வலத்தின் போது பள்ளிவாசலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பௌத்த தரப்பிடமும் கேட்டுக் கொண்டு முடிவுக்கு கொண்டு வந்தார்.
உச்ச நீதிமன்றம் தமக்கு எதிராக அளித்த தீர்ப்பு குறித்து பௌத்தர்கள் மத்தியில் அதிருப்தியும், சலசலப்பும் காணப்பட்டது. அதேவேளை கரையோர முஸ்லிம்கள் கண்டி, குருநாகல், பதுளை போன்ற இடங்களில் பௌத்தர்களை மட்டுமல்ல, இந்துக்களையும் தாக்கும் பணியில் ஈடுபட்டதில் ஆங்காங்கு பிரச்சினைகள் உறுவாகின. புத்தர் சிலைகளையும் உடைத்தனர். இத்தகைய தாக்குதல்கள் 1915 ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நிகழ்ந்தன என்று பொன்னம்பலம் இராமநாதனின் நூலில் விபரிக்கிறார்.
தொடரும்
நன்றி - தினக்குரல்
இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
- Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
- Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
- “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
- “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam, (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
- “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
- ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
- ශ්රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...