தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 2
தமிழகத்தில் மிகப்பிரபலமான சொல்லாடல் இலங்கையில் தமது தொப்புள்கொடி உறவுகள் என்பது. உண்மையில் யார் இந்த தமிழகத் தொப்புள்கொடியின் உறவுகள் என்பது அங்கு சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அதற்கு ஊடகங்கள் பிரதான காரணம். அவை காவிச் செல்லும் தமிழுணர்வு செய்திகள் மலையகத் தமிழ்ச் சமூகம் என்ற ஒன்று இலங்கையில் வாழ்வது தொடர்பான தகவல்களை மறுதலிப்பதாகவே உள்ளது.
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பஞ்சம் பிழைக்கப்போன தமது தொப்புள் கொடி உறவுகளே இன்றைய மலையகத் தமிழ்ச் சமூகம் என்பதை உணரச்செய்ய இன்னுமோர் போராட்டம் செய்ய முடியாது. ஆனால், அந்த மலையகத் தமிழ் மக்கள் வளர்த்தெடுத்துள்ள மலையக இலக்கியத்தை வாசிப்பதன் ஊடாக இந்த வரலாற்றை தமிழக உறவுகள் உணர்ந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் மலையக இலக்கியம் குறித்த பல்வேறு முனைப்புகள் காட்டப்பட்டுள்ள போதும் பல்கலைக்கழக மட்டத்தில் அவற்றை ஆய்வுப்பொருளாக்குவதன் ஊடாக இளைய தமிழகத்தவர்களுக்கு அது சென்றடையக்கூடியதாகவிருக்கும் என்பது மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் எண்ணம். இந்த எண்ணத்துக்கு துணைநின்றவர் அவுஸ்திரே லியாவில் வசிக்கும் மலையகத்தவரான மாத்தளை சோமு. அந்த எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவர் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழத்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார்.
பா.ஆனந்தகுமார் தமிழ்த்துறை தலைவர் என்பதனால் தமிழார்வலர் மாத்திரம் கொண்டவரல்ல. மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி களையும் கற்றுத்தேர்ந்துள்ள இவர் தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள் தொடர்பான கற்கைகளுக்கான பீடத்தின் பேராசிரியர். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கொழும்புத தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற பாரதி விழாவில் உரையாற்றுவதற்கு வருகை தந்திருந்தவர் மலையக இலக்கியம் தொடர்பான புரிதல்களைப் பெற்றுக்கொண்டதோடு தமது பல்கலைக்கழகத்தில் இப்போது மலையகத் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வரங்கம் ஒன்றை நடாத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
அந்தவகையில் ஆய்வரங்கத்தின் அறிமுகவுரையை வரவேற்புரையாக வழங்கி தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை நடாத்துவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார். மலையக இலக்கியம் குறித்த அவரது வாசிப்புகள் அவரது உரையின் ஊடாக வெளிப்பட்டன. குறித்த ஆய்வரங்க மாநாட்டில் வாசிக்கப்பட்ட சில கட்டுரைகளைத் தொகுத்து மலராக வெளியிட்டிருந்தார். அதன் பதிப்பாசரியரும் அவரே. தவிரவும் 1920களில் பாடப்பட்ட நாட்டார் இலக்கிய மரபில் இயற்றப்பட்ட சிந்துப்பாடல்களின் தொகுப்பாக 'தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு' எனும் சிறுபிரசுரத்தினை மீளப்பதிப்பித்து, கோ.நடேசய்யர் இலங்கை மலையகத்தில் கால்பதித்த அதே காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கை மலையகத் தேயிலைத் தோட்டத்துக்கு சென்ற மக்கள் பற்றி தமிழகத்தில் பாடப்பட்ட பாடல்களை தொகுத்து வெளியிட்டிருந்தார்.
அதன் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
'ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள் மீது நிகழ்த்திய காலனியாதிக்கம் என்பது ஒரு புறம் ஆசியச் சமூகத்தை நவீனப்படுத்தியது என்றாலும் மற்றொருபுறம் முதலாளித்து சமூக அடிப்படையிலான காலனிய சுரண்டலுக்கும் வழிவகுத்தது. காலனியாதிக்க நாடுகளின் பெரும் மூலதனத் திரட்டலுக்காக ஆசிய நாடுகளின் மரபான வேளாண் முறைகள் சிதைக்கப்பட்டன. பணப்பயிர்களை பயிரிடும் முறை ஊக்குவிக்கப்பட்டது. தேயிலைக் காப்பித் தோட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இப்புதிய தேயிலைத் தோட்டங்களில் உழைப்பதற்கு ஏழை விவசாயிகள் தங்கள் சொந்த மண்ணைப்பிரிந்து அந்நிய நாடுகளில் புலம் பெயர்கின்ற அவலமும் நிகழ்ந்தது.
ஆங்கிலேயரின் காலனிய ஆதிக்கத்தால் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான தமிழர்கள், இலங்கை மலேசியா, பிஜி, தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு புலம்பெயர்ந்துச் சென்றனர். தென் ஆபிரிக்க சுரங்கங்களிலும் பிஜியின் கரும்புத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் இலங்கையின் தேயிலை, காப்பி தோட்டங்களிலும் தமிழர்கள் தம் ரத்தத்தை வியர்வைத் துளிகளாக சிந்தினர். கடுங்குளிரிலும் கங்காணிகளின் ஒடுக்குதலிலும் அட்டைக்கடியிலும் அவர்கள் பட்டத்துயரம் சொல்லவொண்ணாது. இவ்வாறு புலம் பெயர்ந்த தமிழர்களின் சோக வாழ்க்கை இலக்கிய பதிவுகளுமாகியுள்ளன. இதற்கு பாரதியின் 'பிஜித்தீவிலே இந்து ஸ்திரிகள்' (கவிதை), புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' (சிறுகதை), அகிலனின் 'பால் மரக்காட்டினிலே' (நாவல்) என்பன சிறந்த எடுத்துக்காட்டுகள்.
புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டக் கிராமம் ஒன்றில் இருந்து புலம் பெயரந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று கடும் இன்னல்களுக்கு உள்ளான 'மருதி' என்ற பெண்ணின் சோக வாழ்வைச் சித்திரிக்கின்றது. இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை துன்பம் நிறைந்த கேணியாக சித்தரித்த புதுமைப்பித்தனின் ஏட்டிலக்கிய பதிவிற்கு முன்பே நாட்டார் இலக்கிய மரபில் இயற்றப்பட்ட சிந்துப்பாடல்களின் தொகுப்புத்தான் 'தேச மக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு' எனும் சிறுபிரசுரம் ஆகும் எனக் குறிப்பிடுகின்றார்.
1928 ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீ மயில்வாகனன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு சங்கீத சரபம் டி.சபாபதி முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட (குஜிலிப் பதிப்பகம்) திரிசிரபுரம், டி.எம்.ஜனாப்பா புலவர், வீர மாநகர் செந்தமிழ் சேகர யாஸீன்தாஸ், ஆகியோரால் இயற்றப்பட்ட கண்டி சிலோன் காப்பித்தொட்டப்பாட்டு எனும் உபதலைப்புடன் கொண்ட 'தேச மக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு' எனும் தொகுப்பு தொடர்பாக பா.ஆனந்தகுமார் தரும் தகவல்கள் முக்கியமானவை. இந்த பதிப்புரையின் சாரமாகவே அவரது வரவேற்பரையும் அமைந்திருந்தது.
மேற்படி இரண்டு புலவர்களினதும் பாடல்களைப் பதிப்பித்த சங்கீத சரபம் தி.சபாபதி முதலியார் தனது பதிப்பரையையும் 12 பாடல்களாக தந்திருப்பதாக குறிப்பிடும் பா.ஆனந்தகுமார் ஒரு சில பாடல்களையும் இந்த தொகுப்பில் தந்துள்ளார்.
'திருவாரூர் தென்தீவில்
தேயிலையின் தோட்டமதில்
பெருவாரு நமதன்பர் பேதமையால் - ஒருவாரு
பட்டதுயர் பாட்டாக பாடவருள் மாமுகனே
திட்டமுடன் பதிப்பித்தேன்'
1928 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை மலையக மக்கள் பற்றிய பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பது இவரது பிரசுரத்தின் ஊடாக மீளவும் நினைவுபடுத்தப்படுகின்றது.
'தேயிலைத் தோட்டத்திலே நம
திந்தியர் சென்று மிரண்டு மெய் மறந்து
வாயிலாப் பூச்சது போல் மனம்
வாடிக்கிடப்பது கோடிக்கு மேலுண்டு
தாயிலாப் பிள்ளைகளும் வீட்டில்
தந்தைக்கு அடங்காமல் வந்ததுர் மைந்தரும்
சேயினை மார்களுடன் கூடி
சென்று பார்த்த பின்பு நின்று புலம்புரார் (பா.1)
மேற்சொன்ன பாடல், கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை எழுதி கவிஞர் சக்தீ பால ஐயா தமிழாக்கம் செய்த 'தேயிலைத் தோட்டத்திலே...' நெடுங்கவிதையின் சாயலில் பிரதிபலிப்பதை பார்க்கலாம்.
'புழுதிப்படுக்கையில் புதைந்த என் மக்களை
போற்றும் இரங்கல் புகல் மொழியில்லை...
பழுதிலா அவர்ககோர் கல்லறை இல்லை
பரிந்தவர் நினைவு நாள் பகருவார் இல்லை...'
என்ற சக்தீ பாலையாவின் தமிழாக்க வரிகளில் மேற்படி ஜனாப்பா புலவரின் தாக்கம் தொணிப்பதனைப் பார்க்கலாம்.
அதேநேரம் ஜனாப்பா புலவர் கங்காணிகளை அதிகம் குறை சொல்லும் அதேவேளை வெள்ளையர்களுக்கு ஆங்காங்கே நற்சான்றிதழ் கொடுப்பதாகவும் தனது விமர்சனத்தை முன்வைக்கின்றார் பா.ஆனந்தகுமார்.
நல்ல மழையானாலும்
ஏழை நண்பர் வேலை செய்ய வம்பர் துரத்துரார்
வல்லவர் வெள்ளையர் மேல் குற்றம் வாராது
சொன்னாலும் யேராது
புவியில் சொல்லவே நாவுமில்லை
பெறும் சூதர் கங்காணிசெய் வாதனையால் அங்கு
அல்லல் பாடுவதை பார்
அந்த ஆதிசேடனாலும் வோதிடலாகாது..
என்பதாக அந்த பாடல் அமைகின்றது. பொது இடங்களில் பாடப்பெற்றதால் வெள்ளையர் அரசாங்கத்திற்கு அஞ்சி இத்தகைய நற்சான்று வெள்ளையருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆனந்தகுமார் விபரிக்கின்றார். ஆனாலும் வெள்யைர் மீது குற்றம் சொன்னால் ஏற்படப்போகும் விபரீதம் என்ன என்பதையும், கங்காணியால் காட்டிக்கொடுக்கப்படுவார் என்பதையும் கூட மேற்படி பாடல் சொல்கிறது.
இந்த பின்னணியுடன் ஒப்பிடும்பேர்து இலங்கை மலையக தமிழ் இலக்கிய வரலாற்றில் பேசப்படும் ஆபிரகாம் ஜோசப் பற்றிய குறிப்புகளை இங்கு தொடர்புபடுத்த முடிகின்றது. வெள்ளையர்களை ஆதரித்து அவர் எழுதிய அல்லது அவரைக் கொண்டு எழுதச் செய்யப்பட்ட பாடல்களை நினைவுப் படுத்துகின்றது. ஆபிரகாம் ஜோசப் எழுதிய 'கோப்பி கிருஸிக் கும்மி' 1869 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணம் ஆஸ்பரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. அந்த நூல் கோப்பி காலத்தில் வெள்ளையர்களை போற்றிப்பாடும்படியாக எழுதப்படடது. எனவே வெள்ளையர்கள் மீதான் பயம் அந்த நாட்களில் எத்தகையதாக இருந்தன என்பது இங்கு தெளிவாகிறது.
இன்னுமொரு பாடலில் ..,
பாரத தேவியே நீ எழை
பக்கத் துணைவந்து தக்க வழிதேடு
மீறியவர் நடந்தால் இந்த
மேதினியில் வொரே பேதியில் கொண்டு போ (பா. 10)
என ஜனாப்பா புலவர் பாடுவதாகவும் அமைகிறது. அவர் அழைப்பது பாரததேவியை ஆனாலும் அது இந்தியாவைக் குறிப்பதாகக் கொள்ளல் வேண்டும். இந்த மக்களைத் துன்பங்களில் இருந்து மீட்க 'பக்க துணைவந்து தக்க வழி தேடு' என கவிஞர் பாடி அழைத்பதிருப்பதாகக் கொள்ளலாம்.
(ஆய்வரங்கம் தொடரும்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...