உலகில் எல்லோரினதும் அன்பை இலகுவாக பெற்றுக்கொள்பவர்களும் பிறர்மீது கள்ளங்கபடமின்றி அன்பு செலுத்துபவர்களும் சிறுவர்கள் தான். அதே வேளை பிறரால் எளிதாக ஆபத்திற்கு உட்படுத்தப்படுபவர்களும் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பவர்கள் இச்சிறுவர் என்னும் பருவத்தினரே. இதனை ஒத்த அன்பும் ஆபத்தும் பெறுபவர்களாக இன்று மூத்தோர்களும் நோக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
மனித வளர்ச்சிப்பருவத்தில் பாதுகாப்பு பெறவேண்டிய முக்கிய கட்டங்களாக சிறுவர் பராயமும், முதியோர் பராயமும் காணப்படுகின்றன. இப்பருவத்தில் இவர்கள் வளர்ந்தோர்களினது அன்பிலும் அரவணைப்பிலும் சந்தோஷமாக வாழ வேண்டியவர்கள். பிறரில் தங்கியிருந்து வாழும் இவர்கள் சமூகத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள். எனினும் பெருந்தோட்ட பிரதேசங்களிலும், ஏனைய இடங்களிலும் பிறரில் தங்கி வாழ வேண்டிய இவ்விரு பராயத்தினரும் தமக்குள் தாமே தங்கி வாழ்வதே இன்றைய நிலைமையாகியுள்ளது.
பல்வேறு காரணங்களால் பிள்ளைகளிலிருந்து விலகி இருக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் சேவைகளையும் இன்று மூத்தோர்களே தமது பேரப்பிள்ளைகளுக்கு வேறு வழியின்றி செய்து வருவது பரவலாக காணப்படும் ஒன்றாக உள்ளது. மாறாக தமது தாய் தந்தையரால் மூத்தோர்க்கு செய்ய வேண்டிய பணிவிடைளை இன்று பேரப்பிள்ளைகளே ஆற்றி வருவதும் குறிப்பிட வேண்டியதாகும். இவ்விரு பருவத்தினரும் பிறரில் தங்கி வாழ வேண்டியவர்கள். ஆனால் அதிகமான குடும்பங்களில் தமக்கு தாமே துன்ப, துயரங்களை பகிர்ந்து கொண்டு வாழ்வது கவலைக்குரிய ஒன்றாக சர்வதேச முதியோர், சிறுவர் தின நாளில் நோக்கப்பட வேண்டியதாக உள்ளது.
சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு தொடர்பான வலியுறுத்தல் சிந்தனை 90 வருடங்களுக்கு முன்பே தோற்றம் பெற்றது. 1926 இல் உலகத் தலைவர்களால் சிறுவர் உரிமை பிரகடனத்தில் கையொப்பமிடப்பட்டது. இதன் உட்பொருள் சிறுவர்களின் உடல், உள பாதுகாப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதையே காட்டினாலும் இது எந்தளவிற்கு சாத்திய நிலையில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகிறது என்பது ஆராயப்பட வேண்டியதாகும். சிறுவர் உறுப்புரை 18 ஆம் அத்தியாயப்படி பெற்றோர்கள் இருவரும் கூட்டாக பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள் எனவும் இதற்கு அரசு உதவுதல் வேண்டும் என வலியுறுத்துகிறது.
இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மூத்தோரை நம்பியே விட்டு செல்கின்றனர்.
இவர்கள் தமது பிள்ளைகளை வளர்க்கவே தமது தாய் தந்தையரை வளர்க்கும் நிலைமையாகவே நோக்க வேண்டியுள்ளது. தமது தள்ளாத வயதில் கண்கள் பார்வையற்றும், கால்கள் தள்ளாடியும், கைகள் நடுக்கத்துடனும், தொடர்ச்சியான நோய் நொடிகளை தமக்குள் வைத்து பூட்டிக்கொண்டும் தம் பேரப்பிள்ளைகளுக்காக உடல், உள, சமூகத் தேவைகளை நிறைவேற்றும் மூத்தோர்களும் இந்நாளில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்தான்.
ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பது முதல், கல்வி தொடர்பான பல்வேறு விடயங்களிலும் இவர்களே முக்கிய பங்காற்றுகின்றனர். மேலும் சிறுவர்களின் உரிமை மீறலுடன் சம்பந்தப்பட்ட வறுமை, வீட்டு வன்முறை, வாழ்வதற்கு இடமின்மை, கேலிக்கு உள்ளாகுதல், பராமுகம், நோய்கள், கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தல், உழைப்பாளிகளாக பயன்படுத்தல், யுத்த நிலைமைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய பெற்றோர்களின் பொறுப்பை அதிகமான வீடுகளில் மூத்தோர்களே செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் போது காணப்படும் விதிமுறைகள் பிள்ளைகளுக்கு பாதுகாப்புப் பெற்றுக் கொடுத்தாலும் இவை தொடரப்படுகிறதா? அல்லது மீறப்படுகிறதா என ஆராயப்பட வேண்டும்.
பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் சம்பந்தமாகவும் ஒரு தொடர்ச்சியான வேலைத் திட்டமும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் சாசனம் 34 வது உறுப்புரையின் படி ஒவ்வொரு பிள்ளையும் பாலியல் சுரண்டல்கள், இம்சைகள் முதலியவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற உரிமையுண்டு என வலியுறுத்துகின்றது. இதில் விபசாரம், ஆபாசக் காட்சிகளும் அடங்கும். இவ்வாறான பாலியல் பிரச்சினைகளுக்கு உட்படும் பிள்ளைகள் தாம் அதனை பெற்றோரிடமே வெளிப்படுத்தும் சூழ்நிலையில் அவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தாத்தா, பாட்டி மூலமே நிவாரணம் தேட முயல்கின்றனர். இவ்வேளைகளில் மூத்தோர்கள் அதற்கு எதிராக போராட மன, உடல் வலிமையையும் அணுகுமுறை சம்பந்தமான அறிவின்மையாலும் விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் உறுப்புரை 28 வலியுறுத்தும் எல்லாப் பிள்ளைகளும் கல்வி கற்கும் உரிமையை ஏற்படுத்துதல் வேண்டும்.
இலவச கல்வி ஆரம்ப வகுப்புகளிலேனும் அமுல் செய்தலும் அரசின் பொறுப்பு என கூறப்படுகிறது. இலங்கைப் பல்கலைக்கழக படிப்புவரை இலவச கல்வி வழங்கப்படுவது சிறுவர்களுக்கு கிடைக்க வாய்ப்பாகும். எமது நாட்டில் தரம் 1 அனுமதி 98 வீதமாக இருப்பது மகிழ்ச்சிதரும் அதேவேளை கட்டாய கல்விப்பருவத்தில் 9 வீதமானோர் இடை விலகும் நிலையும் காணப்படுகிறது. இதில் பெருந்தோட்ட பிள்ளைகளின் செல்வாக்கு அதிகமாகப் பங்களிப்பதும் கவலைக்குரியதும், கவனிக்கக்கூடியதுமாகும். இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது பிள்ளைகளுக்கு உணவு, உடல், உள, வாழ்வு, பாதுகாப்பு, அபிவிருத்தி, பங்குபற்றல் என்பன பெற்றோர்களால் நிறைவேற்றப்படாமையே என தெரியவருகிறது. அதிகமான உரிமை மீறல்கள் உரியவர்களின் பாதுகாப்பு இன்மையினாலேயே நடைபெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது பெற்றோரின் அரவணைப்பு என்பது சிறுவர்களுக்கு மிகமுக்கிமானது. அதிலும் தாயின் அன்பிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கும் பிள்ளைகள் அனேகர் உண்டு. ஒரு தாயின் பிள்ளைக்குரிய சேவை வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாது. இங்கு குடும்பத்து சிரேஷ்ட பிரஜைகளே தாய், தந்தையின் வகிபாகத்தோடு அழைத்துச் செல்லல். வீட்டு வேலைகளில் உதவுதல் என்பனவற்றில் சிறுவர்களே உதவுகின்றனர்.
ஒக்டோபர் 1 ஆம் திகதி சிறுவர் முதியோர் தினங்கள் ஒன்றாக அனுஷ்டிப்பதன் நோக்கம் இவ்விரு பருவத்தினரும் ஒரே மன இயல்பு, உடல் பாதுகாப்பு தேவைகள், பராமரிப்பு, என்பனவற்றால் பிறரின் உதவியுடன் வாழ வேண்டியவர்கள் என்பதை நினைவுபடுத்துவதாகும். முதியோர் உரிமை, பாதுகாப்பு தொடர்பாக சாசன ரீதியாக மேலும் சட்டங்களும் அமைப்புகளும் தேவைப்படுகின்றன.
இலங்கையில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக 7 க்கு மேற்பட்ட அரச அமைப்புகள் இயங்குவது எமது நாட்டின் சிறுவர்களுக்கு கிடைத்த பெருமையாகும். அரச சார்பற்ற நிறுவனங்களும் அக்கறை செலுத்துகின்றமை பாராட்டத்தக்கது.
அதேவேளை உரிமை தொடர்பான சாசனங்கள், அறிக்கைகள், தினங்கள் கொண்டாடப்படும் இந்நிலையில் சிறுவர் உரிமை மீறல் தொடர்பானதும் அவர்களின் பிரச்சினை தொடர்பான அடிமட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் நடைமுறையில் எந்தளவிற்கு சாத்தியப்படுகின்றது என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக கல்வி, பொருளாதார ரீதியாக பின்னடைவைக் காணும் பெருந்தோட்ட, கிராமப்புற சிறுவர், முதியோர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் முறையாக அணுகப்படலும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுமே இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்குத் தேவையானதாகும்.
2030 ஆண்டளவில் தென்னாசிய நாடுகளில் இலங்கையிலேயே சிரேஷ்ட பிரஜைகள் அதிகமாக காணப்படுவர் என அறிக்கைகள் காட்டுகின்றன. இதனை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ளப்போகின்றோம் என்பது பொறுத்திருக்க வேண்டியது. அதேவேளை இன்று மூத்தோர் பராமரிப்பு பிள்ளைகளுக்கு இல்லாவிடின் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி கற்கும் நிலையும் இடைவிலகலும் மேலும் பாதக நிலையைக் காட்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்போம். இவர்கள் நாளைய தலைவர்கள் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. சாதாரண நற்பிரஜையாகவும், உடல் – உள அளவில் இந்நாட்டிற்குப் பொருத்தமானவர்களாக வளர்க்க வேண்டியதே சம்பந்தப்பட்டவர்களின் கடமையாக இத்தினத்தில் காணப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...