கடந்த இரு வாரங்களாக கைதிகள் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் உட்பட இது சார்ந்த ஏனைய விவகாரங்களை தீர்ப்பதற்கு 'ஒத்திவைப்பு வேளை பிரேரணை' என்ற யுக்தியை கையாள உள்ளதாக அறிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இது கைதிகளுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும். கைதிகள் பிரச்சினை இன்று ,நேற்று பேசப்பட்டு வரும் விடயமல்ல.
இறுதி யுத்தத்தின் பின்னர் 'அரசியல் கைதிகள்' என்ற பெயரில் பெரும் துன்பத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர். பல வருட காலமாக உறுதியான காரணம் ஏதும் இல்லாமல் கைதிகள் விவகாரம் இழுத்தடிப்பட்டுச் செல்கின்றது. இந்த அரசியல் சார் பிரச்சினையை ஒத்திவைப்பு வேளை பிரேரணையினூடாக தீர்த்து விட முடியமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இது இவ்வாறிருக்க கைதிகள் விவகாரத்தில் திறப்புடன் திரியும் தரப்பினர் எவ்வாறு இதனை கையாண்டுள்ளார்கள். இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இவ்வார 'அலசல்' அலசுகிறது.
விடுதலைப்புலிகள் எனும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டுள்ள சுமார் 137 கைதிகளை அரசியல் கைதிகள் என தமிழர் தரப்பு அரசியலும் ஊடகங்களும் விளிக்கின்ற போதும் அவர்கள் அரசியல் கைதிகள் இல்லை என்றும் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்றும் அரச தரப்பில் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மறுபுறம் ஹர்த்தால்கள் நடத்தப்பட்டாலும் தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் கடுமையான குற்றம் இழைத்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்பது அவரது வாதம்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டதாகவுமே 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் அரசியல் கோஷம் முன்வைக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு காட்டியது. இருந்தும் சுமார் 137 பேர் இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டும் நேரடியாக போரில் ஈடுபட்ட பலருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டும், இரண்டாம் நிலை தலைவர்களும் அவர்களது உறவுகளும் அரசியல் களத்தில் செயற்பாட்டாளர்களாக வந்த பின்னரும் கூட இப்போது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் அதி பயங்கரமானவர்கள் என முன்வைக்கப்படும் வாதம் புரியும்படியானதாக இல்லை. இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர்களை பார்த்தால் விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலத்தில் பிரபலமாக பேசப்பட்ட பெயர்களாக தெரியவில்லை. அப்படியாயின் அவர்கள் எந்த அடிப்படையில் மிகப்பயங்கரமானவர்களாக சித்திரிக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்கு றியாக உள்ளது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டால் கூட அவர்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கச் செயற்பாடுகளை ஆரம்பித்து விடுவார்கள் என்பதுபோன்ற அச்சத்தையே அரச தரப்பு வெளிப்படுத்துவதாக உள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வாரகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் கடந்த எட்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை நான்கு வருடங்களாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் சாட்சிகளான இராணுவத்தினருக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் வவுனியாவுக்கு வந்து சாட்சியமளிக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை சிங்களப் பிரதேசமாகிய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சாட்சிகள் தரப்பில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த வழக்கு சட்டமா அதிபரினால் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கு சிங்களப் பிரதேசமாகிய அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மொழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுடைய சட்டத்தரணிகளும் அங்கு செல்வதற்கு இயலாதவர்களாக இருக்கின்றார்கள். எனவே, இந்த வழக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என்று இந்தக் கைதிகள் கோரியிருக்கின்றனர். தமது கோரிக்கையை முன்வைத்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
தங்களது விடுதலையைக் கூட வலியுறுத்தாது விசாரணை செய்யும் நீதிமன்றத்தையாவது மாற்றித்தாருங்கள் எனும் கோரிக்கைக்காக அவர்கள் உயிரைப்பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. இதனை விளங்கிக்கொள்ள முடியாதவராக இருக்கும் ஜனாதிபதி வாருங்கள் மேசையில் உட்கார்ந்து பேசுவோம் என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைக்கின்றார்? இத்தகைய கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விவாகாரம் சட்டத்தின்பாற்பட்டது மட்டுமல்ல.
அரசியல் காரணங்களினாலும் ஆனது. எனவே சட்ட ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அணுகி அவர்களின் விடுதலை தீர்மானிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வருகிறார்.
பாராளுமன்றத்தில் அவர் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையிலும் இதனை வலியுறுத்தியிருந்தார். அண்மையில் ஊடகங்களுக்கும் இதே கருத்தினை தெரிவித்து இருந்தார். நீதிமன்ற விசாரணைகளுக்கு வெளியிலேயே அமைச்சர்கள் மட்டத்தில் இந்த சிறைக்கைதிகள் விவகாரம் குறித்து அமைச்சர்களும் அரசியல் வாதிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்கள் அரசியல் ரீதியானவையாக அமைகின்றமையை அவதானிக்கின்றபோது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கூற்று நூற்றுக்கு நூறுவீதம் உண்மையானது என்பது தெளிவாகின்றது.
இவர்கள் அரசியல் கைதிகள் தானா என்கின்ற வாத விவாதங்களுக்கு அப்பால் இவர்களது கைதிலும் விடுதலையிலும் அரசியல் நேரடியாக தொடர்புபடுகின்றது என்பது தெளிவாகின்றது. எனவே தனியே குற்றச் செயல்களுக்காக மாத்திரமின்றி அரசியல் காரணங்கள் அடிப்படை யிலும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள் எனில் அவர்களது விடுதலையும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளின் ஊடாகவும் இடம்பெற வேண்டும்.
இரா.சம்பந்தன் தெரிவிப்பதுபோல இவர்களின் விடுதலை அரசியல் ரீதியாகவும் அணுகப்பட வேண்டியது எனில் அதனைச் செய்வது யார் எனும் கேள்வியை அவரிடமே முன்வைக்க வேண்டியுள்ளது. இவர் கூட்டமைப்பின் தலைவர் மாத்திரமல்ல பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரும் அவரே. எனவே தமிழ் கைதிகளின் விவகாரம் அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டுமெனில் அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கே உண்டு. அந்தப் பொறுப்பினை அவர் நிறைவேற்றியுள்ளாரா என்கின்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அரசியல் ரீதியான அணுகுமுறை தேவை என தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதற்காக ஒரு முறைதானும் பாராளுமன்றத்தில் தங்களுக்கு உள்ள வாக்குபலத்தை பயன்படுத்த முனையாததது ஏன் என்கின்ற கேள்வி எழுகின்றது.
தாங்கள் ஜனாதிபதியிடம் இதுபற்றி பேசுவதாக தெரிவிக்கும் கூட்டமைப்பினர் இப்போது ஜனாதிபதியுடன் ஊடலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் அவர்கள் காதல் கொண்டுள்ள பிரதமரிடம் இதுபற்றிய பேசாதது ஏன்? பிரதமரிடம் பேசி தாங்கள் அரசாங்கம் கொண்டு வரும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பது எனில் சிறைக்கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
அவர்கள் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. புனர்வாழ்வு அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுவித்து தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்ளும் வகையிலான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனும் நிபந்தனையையோ முன்வைத்து கூட்டமைப்பு தங்களது வாக்குபலத்தை பிரயோகித்தால் என்ன?
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைச்சொன்றின் மீதான பிரேரணை முன்வைப்பின்போது வாக்குகளின் எண்ணிக்கை முப்பது அளவில் இருந்த நிலையில் ஒரு வாக்கு வித்தியாசத்திலேயே அரசாங்கம் அதனை வெற்றி கொண்டது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் கூட்டு எதிர்கட்சிக்கும் பெரும் சர்ச்சை நிலவியது. இதற்காக பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு கூட கூட்டு எதிரணியினர் தயாராகியது நினைவிருக்கலாம். அந்த நாளில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறப்பினர்கள் சபையில் குறைவாக இருந்த நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாக்குகளினாலேயே அரசாங்கத்தின் பிரேரணை வெற்றிபெற்றிருக்கிறது. அன்று இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு கூட்டமைப்பு தனது வாக்குகளைப் பயன்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் நடைபெற்று அடுத்தவாரத்தில் ஆளும் கட்சி குழு கூட்டம் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போது தலைமை வகித்த ஜனாதிபதி, வாக்கெடுப்பு இடம்பெற்ற ஒளிநாடாவை முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அன்று வாக்கெடுப்பு நடந்த விதத்தை பார்த்து சிரித்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கடும்தொனியில் பேசியதோடு, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று வாக்களித்திருக்காவிட்டால் இன்று இப்படி நீங்கள் சிரித்திருக்க மாட்டீர்கள். ராஜபக்ஷ சிரித்துக்கொண்டிருந்திருப்பார். என்னையும் சிறையில் அடைத்திருப்பார் என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க பேசியுள்ளார்.
எனவே தான் சிறை செல்ல நேரிடுவதை நினைக்கும்போதே கண்கலங்கும் ஜனாதிபதியை அன்று காப்பாற்றிய கூட்டமைப்பினரின் வாக்குகள் ஏன் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பயன்படக்கூடாது. ஜனாதிபதிக்கு அதனை நினைவூட்டியும் பிரதமருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதையும் மீள்பரிசீலனை செய்து தமிழ் கைதிகளின் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகவேண்டியது கூட்டமைப்பேயன்றி வேறுயாருமல்ல என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
உங்களது சிந்தனை சரியானதே. அதனை செயற்படுத்தினால் அப்பாவி இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள்.
நன்றி - வீரகேசரி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...