கடந்தகால ஆட்சியில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி எமது வாக்குகளைப் பெற்றனர். நாடு சுதந்தரம் பெற்ற காலத்தில் இருந்து பெற்றுக் கொண்டதையும் விட இழந்தவைகளே அதிகம். இருந்ததையும் இல்லாமல் ஆக்கினர். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்திய வம்சாவளி மக்கள் இருந்த இஎன்.சரவணன்ம் தெரியாமல் விரட்டியடிக்கப்பட்டனர். விரட்டப்படுவதற்கு ஏதுவாக பல இனவெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நட்சா என்ற வெற்றுத் திட்டம் ஒன்றுக்காக கலஹா போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். நுவரெலியா மாவட்டத்திற்கு நிகராக அப்பகுதிகளில் பாரிய தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. திட்டமிட்ட வகையில் அவை கைப்பற்றப்பட்டன. வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் அங்குள்ள மாற்று இனத்தவருக்கு குற்றேவல் செய்து வருகின்றனர்.
தற்போதைய நல்லாட்சி அரசுக்கு எமது ஒட்டுமொத்த ஆதரவை வழங்கிய காரணத்தால் தற்போது ஓரளவு சலுகைகள் கிடைத்து வருகின்றன. எதிரணியினருக்கு இதன் காரணமாக எம்மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணலாம். தப்பித்தவறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எம்மை பழிவாங்க முனைவார்கள் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. எழுபதுகளில் இது நடந்தது. பச்சைக் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்ததால் தோட்டங்கள், தேசியமயம் என்ற பெயரில் துண்டாடப்பட்டன. ஏறத்தாழ அரைவாசி மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். எனவே ஆபத்து மிக்க எதிர்காலமே எம்முன்னே நிழலாடுகிறது. இவற்றைக் கருத்திற்கொண்டு காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்.
தற்போதைய அரசின் நல்லெண்ணத்தால் பெருந்தோட்டங்களில் வீடுகள் அமைக்கப்பட்டு காணியுறுதிகளும் வழங்கப்படுகின்றன. எவ்வளவுதான் விரைந்து செயற்பட்டாலும் ஐம்பதாயிரம் வீடுகளைத் தானும் கட்டி முடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குள் அரசாங்கங்கள் மாறும் சூழலும் காணப்படுகிறது. தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கும் போது மகிழ்ச்சியடைபவர்களை விட முட்டுக்கட்டைப் போடுபவர்களும் பொறாமைப்படுபவர்களுமே அதிகமாக இருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச வீடு வசதிகள் போன்றவற்றுடன் சகல சௌபாக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தென்பகுதி பெரும்பான்மையினரின் கருத்தாக இன்றும் நிலவி வருகிறது.
“இலங்கையைப் பொறுத்தவரை தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்து செல்கிறது. முன்பு சிலோன் டீ என்றால் முதலிடத்தில் இருந்தது. இன்று அவை மாறி கென்யா தேயிலை, சீனா தேயிலை என்றெல்லாம் புதுப்பொலிவு பெற்றுள்ளன. எனவே தேயிலைக் கைத்தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பயிர் என்பது எமது பொருளாதாரக் கட்டமைப்பில் இருந்து தூரமாகும் காலம் தொலைவில் இல்லை.
ஆனால் சுற்றுலாத்துறை திடீர் வளர்ச்சியைக் காட்டுகிறது. சுற்றுலாத்துறை என்றால் வெளிக்காட்சியையே சிலர் காண்கின்றனர். சுற்றுலாத் துறையில் ஆயிரக்கக்கான தொழில்துறைகள் மறைந்துள்ளன. வேலை வாய்ப்புகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். மாணவர்களும் பெற்றோர்களும் இதுபற்றி அறிந்திருக்கவில்லை. எனவே அவர்களுக்கு அறிவூட்டுவதும் சுற்றுலாத் தினக் கொண்டாட்டத்தில் ஒன்றாகும்!’’
தேயிலைப் பயிரின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் தலைவர்கள் மத்தியில் இவ்வாறுதான் இருக்கிறது.
எமது மக்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமான அனைத்தையும் துரித கதியில் முன்னெடுத்துச் செல்வதில் தலைமைகளுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.
வீடமைப்புத் திட்டத்தில் தொழிலாளர்கள் மட்டத்தில் மத்திரமே தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை கற்றறிந்த இளைஞர், யுவதிகளுக்கு விஸ்தரிக்க வழிகாண வேண்டும். ஆசிரியர்களாகவும், அரச ஊழியர்களாகவும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களாகவும், சாரதிகளாகவும் அனைத்துத் துறைகளிலும் எமது யுவதிகளும், இளைஞர்களும் பணியாற்றி வருகிறார்கள். நகரங்களில் வர்த்தகர்களாகவும், ஊழியர்களாகவும் மற்றும் தோட்ட சேவையாளர்களாகவும் பணியில் இருக்கிறார்கள்.
இத்தகையவர்களின் பெற்றோர் பெரும்பாலும் தொழிலாளர்களாகவே இருந்தவர்கள் அல்லது இருக்கின்றவர்கள். தோட்ட லயன்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலட்சக்கணக்கில் கடன் வாங்கி காணிகளையும் வீடுகளையும் கொள்வனவு செய்வதில், வாழ்வில் பெரும்பகுதியைக் கழிக்கின்றனர். இவர்கள் இதற்காக பெறும் வங்கிக் கடன்களை வாழ்நாள் முடிந்த பின்பும் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லும் நிலைமையே காணப்படுகிறது.
எனவே இத்தகையோருக்கு சலுகை அடிப்படையில் காணிகளைப் பெற்றுக்கொடுத்தால் தாங்களாகவே வீடுகளை அமைத்துக்கொள்வார்கள். அவர்கள் வாழும் பகுதிகளிலேயே காணிகள் கிடைக்குமாயின் தோட்டங்களை நகரங்களாக்கி விடலாம். காணிகளை விலை கொடுத்து வாங்குவதற்கு உடன்படுவோர் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். பெற்றோரின் பெயர்களிலேயே காணிகளைப் பெறலாம். தங்களால் இயன்ற அளவு வீடுகளை அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தோட்டமும் துரித கதியில் கிராமமாக, நகரமாக மாறிவிடும். பெற்றோரையும் பாதுகாத்துக்கொள்ள வழிபிறக்கும்.
சீனா போன்ற நாடுகளுக்கு விலைமதிப்பற்ற காணிகளை தாரை வார்ப்பவர்களுக்கு இந்த விடயம் பாரியசிக்கலை ஏற்படுத்தாது. மலையகம் மற்றும் நாட்டின் நகரங்களில் வாழும் தென்பகுதி மக்கள் தங்கள் சம்பாத்தியத்தை தமது கிராமங்களிலேயே முதலீடு செய்கிறார்கள். வட– கிழக்கு தமிழ் மக்களும் மற்றும் முஸ்லிம் மக்களும் இவ்வாறே தாம் பிறந்த மண்ணுக்கே வளம் சேர்க்கிறார்கள். தோட்டங்கள் கைமாறி துண்டாடப்படுவதற்கு முன் இக்காணிப் பிரச்சினைக்கு வழிகாண வேண்டும். எமது நாட்டு ஜனாதிபதியும் பிரதமரும் பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அங்குல நிலமும் சொந்தமில்லை என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கின்றனர். அவர்களது உணர்வலைகள் திசை திரும்பும் முன் எமது தலைமைகள் இது குறித்து யோசிக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் தமிழ்– முஸ்லிம் வாக்குகளை நம்பியே பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது தலைமைகளும் தங்கள் சமூகத்துக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எந்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும் இரு கைகளையும் உயர்த்தி பேராதரவு அளித்து வருகின்றனர். காலம் கடப்பதற்குமுன் காட்ட வேண்டியதைக் காட்டி (வாக்குச்சீட்டு) பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.
காணியுறுதியோடு தனி வீட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் அமைச்சர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். அவரது பணிக்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் சகலருக்கும் காணி பெற்றுத்தரும் திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும். காணிகளை மட்டும் பெற்றுக்கொடுத்து விட்டால் எமது யுவதிகளும் இளைஞர்களும் ஒரே ஆண்டில் ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டி முடித்து விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. சரித்திரம் படைக்க வேண்டும் நல்லாட்சி அரசாங்கம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...