உள்ளூராட்சி மன்றங்களுக்கான
தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களில் 25 வீதமானவற்றை
பெண்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மலையகப் பெண்களுக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில்
வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக
ஒதுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருந்த மலையகப் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
தோட்டத்தில் கொழுந்து பறிப்பதற்கும், அதன்பின் வீட்டு வேலைகளை செய்வதற்கும், தேர்தல்களில்
வாக்களிப்பதற்கும் மட்டும் மலையகப் பெண்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த
நிலை மாற்றப்பட்டு அவர்களும் உள்ளூராட்சி மன்றங்களினூடாக அரசியலில் பிரவேசிக்க
வாய்ப்பு கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதொரு செயற்பாடாகும்.
உள்ளூராட்சி மன்றங்களான
மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் திருத்தங்களுடன்
கடந்த திங்கள் கிழமையன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அன்றைய தினம்
இந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் இரண்டாம் மதிப்பீட்டு
விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற விவாதத்துக்கு
பின்னர் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சபையில் நிறைவேறியது.
அங்கு உரையாற்றிய
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பைஸர் முஸ்தபா மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்டம் தொடர்பான அறிவித்தல்
ஒருவார காலத்துக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜனவரி
மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி எனவும் அமைச்சர் திட்டவட்டமாக
சபையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஜனவரியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான
தேர்தல்கள் நடைபெறுவது உறுதியென தெரியவருகிறது.
ஏற்கனவே அதாவது 2012 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி
மன்றங்களுக்கான திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது அதற்கு
பொறுப்பாக இருந்த தினேஷ்குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த திருத்தச் சட்டமூலத்தில்
70 வீதம் தொகுதிவாரி
முறையும், 30 வீதம் விகிதாசார முறையையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறையொன்றே முன்மொழியப்பட்டிருந்தன.
இந்த முன்மொழிவினால்
சிறுபான்மை இன மக்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுமென்று
சிறுபான்மை மக்கள் தலைவர்கள் மற்றும் கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது மட்டுமின்றி, அரசாங்கத்துக்கும்
இது தொடர்பாக விளக்கியதுடன் இதில் மேலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்
என்று அரசாங்கத்திடம் சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பில்
பல்வேறு கலந்துரையாடல் நடத்தப்பட்டதுடன், சிறுபான்மை தலைவர்களால் திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து 60 வீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தையும், 40 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் கொண்ட
கலப்பு தேர்தல் முறைமையினை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இதற்கமைய தற்போது
மாநகர, நகர மற்றும் பிரதேச
சபை சட்டத்தில் 5 ஆம் விதியில் உள்ள உறுப்புரையிலேயே திருத்தம் செய்யப்படுகின்றது. குறிப்பாக
உறுப்பினர்களின் எண்ணிக்கை, நிர்வாகம் தொடர்பான தொழிநுட்ப விடயங்கள் ஆகியவற்றிலேயே சிறு
மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
உள்ளூராட்சி
மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர் பட்டியலில் 25 வீதத்தைப் பெண்களுக்குக்காக
கட்டாயமாக ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஏற்பாடு மலையகத்துக்கு
மிகமிக அவசியமானதொன்றாகும். மலையகத்தில் காலங்காலமாகவே பெண்கள் ஒதுக்கப்பட்டு வந்துள்ளனர்.
பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள்
அனைத்திலுமே பெண்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். ஓரிரு மலையக கட்சிகள் பெயருக்காக
ஓரிரு பெண்களை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன.
இதுவரை மலையகத்தை
சேர்ந்த எந்தவொரு பெண்மணியும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை. மாகாண
சபை பாராளுமன்றம் என்பவற்றுக்கு செல்ல உள்ளூராட்சி மன்றங்களே அடிப்படை ஆதாரம் என்ற
நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் பெண்களை உறுப்பினர்களாக
தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை உள்ளூராட்சித்
தேர்தலுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?
அதற்கான நடவடிக்கை
முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்விகளும் நுவரெலியா மாவட்ட மக்களிடையே மட்டுமன்றி, முழு மலையக மக்களிடையேயும்
எழுந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், எதிர்காலத்தில்
மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படலாம்
என்ற எதிர்பார்ப்பு நிலவுவதே இதற்குக் காரணமாகும்.
ஆனால், கடந்த வாரம் இது
தொடர்பில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனிடம்
இதுபற்றி வினவியபோது; நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளை 12 பிரதேச சபைகளாக
மாற்றும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த
உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா, அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை மற்றும்
வலப்பனை ஆகிய ஐந்து பிரதேச சபைகளே இயங்கிவருகின்றன. ஐந்து பிரதேச செயலகங்களே உள்ளன.
சுமார் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். நுவரெலியா பிரதேச செயலாளர்
பிரிவிலும், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும் மட்டும் தலா இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட
மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் தங்களது
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலுள்ள சிரமங்களை குறைக்கும் நோக்கிலேயே ஐந்து பிரதேச
சபைகளை குறைந்தபட்சமாக 12 ஆகவாவது உயர்த்தித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ் முற்போக்குக்கூட்டணித்
தலைவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு முன்னர், நுவரெலியா
மாவட்டப் பிரதேச சபைகளை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென்றும், ஹட்டன் – டிக்கோயா நகரசபை மற்றும் தலவாக்கலை –
லிந்துலை நகரசபைகளை மாநகரசபைகளாக தரம் உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்து
அரசாங்கத்தை வலியுறுத்தினர். அரசாங்கமும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகவே தெரிவித்து
வந்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி
மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தப்போவதாக மாகாணசபைகள்
அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனவரிக்கு
இன்னும் இரண்டரை மாதங்களே எஞ்சியுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி
மன்றங்களுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படுமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இரண்டரை
மாதகாலத்திற்குள் ஐந்து பிரதேச சபைகளை 12 ஆக பிரித்து அவை தனித்தனியாக செயற்படுவதற்கான
ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இது நியாயமானதொரு கேள்வி
என்றே கூறவேண்டும்.
ஏனெனில், நுவரெலியா
மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில், தற்போது வரை இதற்கான முதற்கட்ட பணிகள்கூட
ஆரம்பிக்கப்படவில்லை என்றே அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்வரும்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டப் பிரதேச சபைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...