Headlines News :
முகப்பு » » வேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்லி

வேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்லி


உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் களமிறங்குவதற்கான தீவிர நடவடிக்கைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதற்காக கட்சி மட்டத்தலைவர்கள், நிருவாகிகள், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச மட்டத்தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல்களையும், கூட்டங்களையும் நடத்திவருகின்றன.

அதுமட்டுமன்றி வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகளிலும் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தேசிய கட்சிகள் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் பல தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் இணைந்து பங்காளிகளாக செயற்படுகின்றன என்றாலும் கூட எதிர்வரும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் போது, தனித்தனியாகவே தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை அந்தக் கட்சிகளின் தலைவர்களும் கூட உறுதிப்படுத்தியிருப்பதை செய்திகள் தெரிவித்தன.

கடந்தவாரம் ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்றகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இதனை தெரிவித்திருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் பிராந்தியக்கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், அமைப்புகள் என்பன பிரதான தேசியக்கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணிகளை ஏற்படுத்தியோதான் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும், இதுவே வழக்கமான நடைமுறையாகும்.

மலையக தொழிற்சங்க – அரசியல் கட்சிகளும் இதே நடைமுறையை காலங்காலமாக கடைபிடித்துவருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்களிலும் பெருந்தேசியக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்தே தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மலையகக் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எந்தவொரு மலையகக் கட்சியும் தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்டு விஷப்பரீட்சைக்குத் தயாராக இல்லையென்பதை கடந்தகால அனுபவங்களும் நடைமுறைகளும் உணர்த்தி நிற்கின்றன.

எதிர்வரும் தேர்தல்களிலும் கூட மலையகக்கட்சிகள் பெருந்தேசியக் கட்சிகளுடன் சேர்ந்தே போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகத் தெரியவருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது.

போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்ததுடன், அவர்களை அழைத்து நேர்முகத் தேர்வுகளையும் நடத்திவருகிறது.

இ.தொ.கா. தனித்துப்போட்டியிடப் போகின்றதா? அல்லது தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போகின்றதா என்பது பற்றிய இறுதித்தீர்மானம் இதுவரை வெளியிடப்படவில்லை. இ.தொ.கா தனித்துப் போட்டியிடும் முடிவிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்று, இது தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஏனைய மலையக் கட்சிகள் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இ.தொ.காவுடன் இணைந்து கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீல.சு.க விரும்புவதாகவும் தெரியவருகிறது. அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் கொட்டகலையிலுள்ள இ.தொ.கா அலுவலகத்துக்கு சென்று, முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இ.தொ.கா இறுதித் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அக்கட்சி தனித்துப் போட்டியிடுமோ அல்லது கூட்டணி சேர்ந்து போட்டியிடுமோ என்பதை உறுதிப்படுத்துவது சிரமம்.

இதேவேளை, தமிழ் முற்போக்குக்கூட்டணி ஏற்கனவே ஐ.தே.க கூட்டணியில் இணைந்தே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தக் கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரியவருகிறது.

கூட்டணி கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரி, அவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வை கடந்த வாரம் நடத்தியுள்ளது. எனினும், இறுதிவேட்பாளர் தெரிவு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விரைவில் அப்பணி பூர்த்தி செய்யப்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மற்றுமொரு பிரதான கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணியும், தமது கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தமுறை அதிகளவிலான வேட்பாளர்களை போட்டியிடச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

ஜனநாயக மக்கள் முன்னணியும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதென குறிப்பிடப்படுகிறது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி பெரும்பாலும் ஐ.தே.க கூட்டணியில் இணைந்தே போட்டியிடுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பொதுவாகவே ஒவ்வொரு கட்சியும் ஒரு வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே தயாரித்து ‘ரெடியாக’ கையில் வைத்திருக்கும். இதுதான் வழமை. தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள், பொதுத்தேர்தலில் தனக்காக வேலைசெய்தவர்கள், கட்சிக்காக செலவுசெய்யக் கூடியவர்கள் என்று பல்வேறு விடயங்களுடன் தொடர்புள்ளவர்கள் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு அந்தப்பட்டியல் தயாராக இருக்கும். 

எனினும் மேலதிகமாக சிலரை தெரிவுசெய்வதற்காக விண்ணப்பம் கோரல் நேர்முகப்பரீட்சைகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இவையும் வழக்கமானதே!

சில கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். பொது விழாக்கள், கட்சிவிழாக்கள், பாதைத்திறப்பு, பொது உட்கட்டமைப்பு வேலைகள் ஆரம்பநிகழ்வு என்பவற்றில் முன்வரிசையில் நின்று, மக்களுக்கு முகத்தைக் காட்டி, சிரிப்பது, கையசைப்பது, கைகொடுப்பது என ஆரம்பித்துவிட்டனர்.

மறக்காமல் வெள்ளை வேட்டி, முழுக்கை சேர்ட் அணிந்து கம்பீரமாக (?) வளம்வரத்தொடங்கிவிட்டதுடன், புகைப்படங்களை பத்திரிகைகளுக்கும், இணையத்தளங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய பொறுப்பு கட்சிகளுக்கு உள்ளது. தனது கட்சி உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்பதற்காக க.பொ.த சாதாரண தரம்கூட படிக்காதவர்களை தெரிவுசெய்யக்கூடாது. கல்வித்தரம், சமூகசேவையில் அவர்களுக்குள்ள ஈடுபாடு, குடும்பப்பின்னணி, தொழில் என்பவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக ‘தலைவர் வேட்பாளர்’ ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது பட்டதாரியாகவோ இருப்பது அவசியம். பொருத்தமில்லாத வேட்பாளர்களை நியமிப்பதால், அவர்களால் சபையை சிறப்பாக நடத்தமுடியாததுடன், குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் உரியமுறையில் ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த முடியாததொரு நிலைமை ஏற்படுகிறது. வேட்பாளர்கள் தெரிவுவிடயத்தில் கட்சிகள் கவனமாக செயல்பட வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates