Headlines News :
முகப்பு » , » தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் (01) - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் (01) - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கையின் இந்திய தமிழர்கள் இந்தியாவின் சிலோன்காரர்கள். இவர்கள்தான் மலையகத் தமிழர்கள் என ஒரு எளிமையான ஒரு வரைவிலக்கணத்தை கூட மலையகத்தமிழருக்கு வழங்கலாம். தமது இன அடையாளத்தை இலங்கையில் நிறுவும் நோக்கோடு மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் அவதானிக்க முடியும். எடுத்துக் கூறவும் முடியும். 

இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்னும் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இந்தியத் தமிழர் (இந்தியானு தெமள) என்றே அழைக்கப்படுகின்றார்கள். இந்திய வம்சாவளி தமிழர் என்பதுகூட நடைமுறையில் சொல்லிக்கொள்ளப்படுவதுதான். இலங்கையில் இந்த இந்திய அடையாளம் மலையகத்தமிழர் முழுமையான இலங்கைத் தேசிய அடையாளத்தை பெறுவதில் ஒரு தடை என்பதாக சுதந்திரத்துக்கு பின்னர் பரவலாக உணரப்பட்டது. 

சுதந்திரத்துக்கு முன்னான காலப்பகுதியில் இந்தியவம்சாவளி தமிழரிடையே முதல் தொழிற்சங்க கட்டமைப்பைத் தோற்றுவித்தவர், முதல் அரசியல் பிரதிநிதி, முதல் சிறுகதையாளர் என மூன்றுக்கும் சொந்தக்காரர் கோ.நடேசய்யர் என்பது பல்வேறு ஆய்வறிஞர்களால் நிரூபிக்கபட்டிருக்கின்றது. கோ.நடேசய்யரில் காணப்பட்ட மிக நுட்பமான அரசியல் முன்னெடுப்பு இந்தியதமிழர்களான இவர்கள் இலங்கை அடையாளத்தைப் பெற வேண்டும் என்பதே. அவரது அரசியல் தொழிற்சங்க இலக்கிய முன்னெடுப்புகளில் அதனை அவதானிக்க முடியும். 

சுதந்திரத்துக்கு பின்னரான குடியுரிமை பறிப்புக்கு தாம் கொண்டிருந்த இந்திய அடையாளம் பிரதான காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எனவேதான் அந்த காலத்தில் இலக்கிய படைப்புகளில் முன்னின்ற சி.வி.வேலுப்பிள்ளையின் எழுத்துக்களில் மலைநாடு எனும் சொற்பதம் பரவலாக இடம்பெற்றுள்ளது. இந்திய மண்வாசனையுடன் கூடிய இந்த மக்களின் நாட்டார் பாடல்களை அவர் தேடி சேகரித்து தொகுத்த நூலுக்கும் கூட மலைநாட்டு மக்கள் பாடல்கள் என தலைப்பிட்டிருப்பார் சி.வி.வேலுப்பிள்ளை.

1964 ல் செய்யப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக சுமார் மூன்று லட்சம் அளவான மக்கள் இந்தியாவுக்கு திரும்பிச்செல்ல நேரிட்டது கூட அவர்கள் கொண்டிருந்த இந்திய அடையாளம் என்பது கண்கூடு. எனவேதான் இந்த காலத்தில் தோன்றிய இலக்கிய எழுத்துக்களிலும் செயற்பாடுகளிலும் மலையகத் தமிழர் எனும் தொடர்கொண்டு இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை சுட்டும் மரபு உருவானது.

இன்று மலையக மக்கள் என்றால் அது இலங்கையில் வாழும் சுமார் பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளி தமிழரைக் குறிக்கும் என்பது பொதுவான புரிதலைக் கொடுக்கக் கூடியது. இந்த பொதுப்புரிதலை உருவாக்க மலையக இலக்கியம் பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளமையை மறுக்க முடியாது. இதனால்தான் அரசியல் ரீதியாக இன்னும் தீர்வுகாணப்படாத இந்த அடையாளப்பிரச்சினைக்கு இலக்கியம் எப்போதோ தீர்வு கண்டு பண்பாட்டு அடிப்படையில் அதனை மக்களிடையே நிறுவியுள்ளது. 

மலையக இலக்கியம் இந்த மக்களின் இன அடையாளத்தை மலையகத் தமிழர் எனம் அடையாளம் நோக்கி திருப்பிய வரலாற்றை நாம் கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர.சிவலிங்கம் என பல்வேறு சமூக, கலை, இலக்கிய, தொழிற்சங்க, பண்பாட்டு, அரசியல் ஆளுமைகளின் பெயர்களளினூடே பட்டியலிட முடியும். 

மலையகத் தமிழர் எனும் தேசிய அடையாளத்தை இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியேயும் கொண்டு சென்ற பெருமை கூட மலையக இலக்கியத்திற்கே உண்டு. தமிழர்களுக்கு எல்லாம் ஆரம்பத் தளமாகத் திகழும் தமிழ் நாட்டில் இந்த மலையகத் தமிழர் மலையகத் தமிழ் இலக்கியம் குறித்த கவனம் குறைவு அல்லது பரவலான புரிதல் இல்லை அல்லது தவறான புரிதல்களே உண்டு எனும் ஐயப்பாடு மலையகம் சார் செயற்பாட்டாளர்களிடம் உண்டு. எனினும் தமிழ் சிறுகதை வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத படைப்பாளியான புதுமைப்பித்தன் கதைகளிலேயே மலையகம் சார்ந்த படைப்புகள் வந்துள்ளன.

' துன்பக்கேணி' யில் அவர் காட்டிய மலையகம் அப்போதானது. எனினும் அந்த மலையகம் இப்போது எப்படி உள்ளது என அறிய இன்றைய தமிழக படைப்பாளிகளுள் எவரையும் குறிப்பிட முடியவில்லை. இடையில் பார்த்தசாரதியின் மேகங்கள் மூடிய மலைகளின் பின்னால் எனும் நாவல் பேசமுனைந்தபோதும் அது சுற்றுலா பயணியின் நாட்குறிப்பாக அமைந்தது என்ற விமர்சனத்தையே பெற்றது. தமிழ்மகனின் வனசாட்சி எனும் நாவல் இறுதியில் ஈழப்போராட்டத்தோடு பிணைந்து தன்னைத் தடம் மாற்றிக்கொண்டது. 

தோட்டக்காட்டீ எனும் பா.வினோத்தின் கவிதைத் தொகுப்பு ஒரு ஆவணத்தொகுப்பாகவே அமைந்தது. கு.அழகிரிசாமி, பொன்னீலன், இன்குலாப், சி.மகேந்திரன், வல்லிக்கண்ணன், கோமல் சுவாமிநாதன், கு.பா.சின்னப்பபாரதி, போன்ற படைப்பாளிகளும் மலையகத்திற்கு வந்து சென்றுள்ள தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. எனினும் தமிழ்நாட்டுக்கும் மலையகத்துக்குமான இலக்கிய தொடர்புகள் பெரிதளவில் இல்லை. 

இந்த பின்னணியில் மலையகத்தமிழர் எனும் அடையாளத்திற்கு வித்திட்ட மலையக இலக்கிய பக்கத்தில் நின்று 1960களில் தோற்றம் பெற்று இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் அண்மைக்கால முயற்சியாக தமிழ் நாட்டில் மலையகத் தமிழ் இலக்கிய ஆய்வரங்கங்களை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழத்துடன் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும் இணைந்து இலக்கிய கருத்தரங்கம் ஒன்றை நடாத்துவதற்கு  முயற்சி மேற்கொண்டபோதும் இண்மையில் அதுவே தமிழ்நாட்டின், திண்டுகல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திலும் மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகத் தமிழ் சங்கத்திலும் இடம்பெற்று முடிந்தது. 

மாத்தளை சோமு என அறியப்படும் மலையக எழுத்தாளர் இப்போது  புலம்பெயர்ந்து சிட்னியில் அவுஸ்திரேலியா சிட்னியில் வாழ்ந்து வருகிறார். தவிரவும் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் (சிட்னி)  சங்கத்தின் தலைவராகவும்  செயற்படுகிறார். இந்த இரண்டு இலக்கிய ஆய்வர ங்கங்களையும் ஏற்பாடு செய்வதில் முக்கியமானவராக முன்னின்றவர் மாத்தளை சோமு. பன்னூலாசிரியரான இவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரந்து சென்றுவிட்ட பின்னரும் கூட தமிழ்நாட்டு எழுத்தாளர்களுடன் கொண்டிருந்த தொடர்பு தமிழ்நாட்டில் அதுவும் பல்கலைகழக மட்டத்தில் ஒரு மலையகத் தமிழ் இலக்கிய ஆய்வரங்கத்தை நடாத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம். 

இலங்கை மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் ஆரம்ப பணிகளை அதன் காப்பாளர்களில் ஒருவரான எம்.வாமதேவன் மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து இணைச்செயலாளரான இரா.சடகோபன் இணைப்பாளராக செயற்பட்டபோதும் அவரால் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாத நிலையில் ஒழுங்கமைப்புப் பணிகளை முன்னின்று செய்தவர் மன்றத்தின் உபதலைவர் மு.சிவலிங்கம். 

2017 செப்டெம்பர் 8, 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக ஆய்வரங்கிற்கு இலங்கையில் இருந்து பத்து பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பித்து இருந்தனர். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் சாஹித்யரத்னா தெளிவத்தை தலைமையில் உபதலைவர் மு.சிவலிங்கம், இணைச்செயலாளர் பதுளை சேனாதிராஜா, செயற்குழு உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர் ஆகியோர் பங்கேற்றனர். 

மலையக அரங்கியல் தொடர்பான கட்டுரை வாசிப்பதற்கு நிகர் சஞ்சிகையின் ஆசிரியர் அ.லட்சுமணன், நாட்டாரியல் தொடர்பான கட்டுரையை வழங்குவதற்கு நாட்டுப்புற கலைஞரும் ஆசிரியருமான  வே.ராமர், மலையக இதழியல் தொடர்பான கட்டுரையை வழங்க கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா, பிற மாகாண மலையக நாவல்கள் குறித்த கட்டுரை வழங்க கே.பொன்னுத்துரை, மலையக இலக்கியமும் இதழியலும் எனும் தலைப்பில் கட்டுரை வழங்க வீரகேசரி சங்கமம் இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் ஜீவா சதாசிவம் ஆகியோர் சுயாதீன பங்கேற்பாளர்களாக வருகை தந்திருந்தனர். சுயாதீன ஊடகவியலாளராக மகேஸ்வரி விஜயநந்தனும் வருகை தந்திருந்தார். 

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த மலையக எழுத்தாளர் மாத்தளை சோமு, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் ஆகியோர் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உறுப்பினர்களை மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர். 

மதுரையில் இருந்து 65 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு சென்றடைந்த குழுவினரை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.நடசாரன் வரவேற்றர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் வடிவேல்கிருஸ்ண மூர்த்தியும் இலங்கை குழுவினருடன் இணைந்துகொண்டார். பங்குபற்றுனர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளை காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தமை சிறப்பு. 

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்கு கீழ் இயங்கும் ஒரு பலக்லைக்கழகம். சின்னாளப்பட்டி எனும் இந்த ஊரிற்கு காந்தி கிராமம் என பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யம். சுதந்திர போராட்ட காலத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று பிரசங்கம் செய்து வந்தவேளை தங்களது ஊருக்கு காந்தியடிகள் வரவேண்டும் என இந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு ரயிலை வழிமறிதுள்ளனர். அந்த ரயிலில் இருந்து இறங்கிய காந்தியடிகள் அங்கு மக்களை சந்தித்து உரையாடிச் சென்றதன் பின்னர் அந்த ஊர் காந்தி கிராமம் என அழைக்கப்படுகின்றது.

காந்தியடிகள் நினைவிடம்
- சின்னாளப்பட்டி
1946 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாக அந்த நினைவிடம் சொல்கி
றது.  அதேபோல காந்தியடிகளுடன் தொண்டாற்றிய முனைவர்களான ஜி.ராமச்சந்திரன் சௌந்திரம் தம்பதியர் தமக்கு சொந்தமான நிலத்தினை காந்தியடிகளின் பெயரில் வழங்கி உருவா க்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் காந்தியடிகள் கால்பதித்து சென்ற இந்த காந்தி கிராமத்திலேயே அமையப்பெ ற்றிருக்கிறது.

மொழித்துறை, விஞ்ஞானதுறை, தொழிநுட்பதுறை, விவாசயத்துறை என பல்வேறு துறைகளைக் கொண்டியங்கும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம். பல்துறை ஆய்வுகள் இடம்பெறுகின்ற இந்த பல்கலைக்கழகத்தில் அயல்நாடான இலங்கையில் மலையகத் தமிழ் இலக்கியம் எனும் இலக்கிய வடிவத்தை ஆய்வு செய்ய அங்கிருந்து மலையக இலக்கிய செயற்பாட்டாளர்களையும் தமிழகத்தில் வாழும் தாயகம் திரும்பியவர்களான மலையகத் தமிழ் இலக்கிய செயற்பாட்டாளர்களையும், தமிழக ஆய்வாளர்களையும் இணைத்துக்கொண்டு இரண்டு நாள் அமர்வாக ஆய்வரங்கம் ஒழுங்கு செய்ய ப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 

திண்டுக்கல் காந்தி கிராம, கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற
மலையக கருத்தரங்கு தொடர்பில் சூரிகாந்தியில் வெளிவரும்
தொடரின் முதலாவது பாகம்  - நன்றி சூரியகாந்திShare this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates