Headlines News :
முகப்பு » » கலப்பு முறை கை கொடுக்குமா? - துரைசாமி நடராஜா

கலப்பு முறை கை கொடுக்குமா? - துரைசாமி நடராஜா


உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. கட்சிகள் இது குறித்து கலந்துரையாடி வருவதோடு வேட்பாளர் தெரிவிலும் கவனம் செலுத்தி வருகின்றமையையும் அறியக் கூடியதாக உள்ளது. இம்முறை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் முதன் முறையாக கலப்பு முறையில் இடம்பெற உள்ளமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இக்கலப்பு முறையானது மலையக மக்களை பொறுத்தவரையில் எதிர்பார்த்த சாதக விளைவுகளை ஏற்படுத்தமாட்டாது என்று பரவலாக கருத்துக்கள் எதிரொலித்து வருகின்றன. மேலும் கலப்பு முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செல்வாக்கு உள்ளவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

தேர்தலின் முக்கியத்துவம்

தேர்தல்கள் என்னும் விடயம் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக கருதப்படுகின்றது. ஜனநாயக நாடுகளில் ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டிற்கு தேர்தல்கள் உந்து சக்தியாக விளங்குகின்றன. ஜனநாயகத்தின் மத்திய அம்சமாக மக்களின் சுதந்திரமான தெரிவு செய்யும் உரிமை விளங்குவதாக எஸ்.கீதபொன்கலன் சுட்டிக் காட்டி இருக்கின்றார். மக்கள் எந்தவிதமான இடையூறுகளும் இன்றி தமது விருப்பத்திற்கேற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்தல் வேண்டும். எல்லா வயது வந்த ஆண்களும், பெண்களும் வாக்களிப்பதிலும் தேர்தலில் போட்டியிடுவதிலும் பதவி ஏற்பதிலும் சமமான உரிமை உடையவர்களாக இருக்க வேண்டும். மக்கள் பேசுவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒன்றுகூடுவதற்கும் உரிமை உடையவர்களாக இருப்பது அவர்களின் அரசியல் பங்குபற்றுதலை ஊக்குவிக்கும். இவை ஜனநாயகத்திற்கு அவசியமான பண்புகளாகும் என்றும் வலியுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல்கள் நம்பகத்தன்மைமிக்கதாக விளங்குதல் வேண்டும். எனினும் சமகாலத்தில் தேர்தல்கள் குறித்த அதிருப்தியான வெளிப்பாடுகள் அதிகமாக இருப்பதனையும் குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் இந்த அதிருப்தி நிலை காணப்படுகின்றது.

முறைகேடான வாக்குப் பதிவுகள், அச்சுறுத்தல்கள், அத்து மீறல்கள்,பொருளாதார ஆதிக்க நிலைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தேர்தல் குறித்த நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவித்து வருகின்றன. தேர்தல்கள் இடம்பெறும் பட்சத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேர்தலின் நடைமுறை குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் அறிக்கையானது முக்கியத்துவமிக்கதாக விளங்குகின்றது. தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகள் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி விடுகின்றன. நேரடி ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்று ஜனநாயகத்தில் இரண்டு நிலைகள் காணப்படுகின்றன. மக்கள் தொகை குறைவாக இருக்குமிடத்து நேரடி ஜனநாயகம் சாத்தியமுள்ளதாக அமையும். ஆரம்பகால கிரேக்க நகர அரசுகளில் நேரடி ஜனநாயகம் சிறப்பாக பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம் எடுக்கும் செய்முறையில் மக்கள் நேரடியாக இதில் பங்கேற்பர். எனினும் இன்று நாடுகளின் பரப்பு அதிகமாகவும், மக்கள் தொகை அதிகமாகவும் உள்ளதால் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையே பின்பற்றப்படுகின்றது. தமது சார்பாக முடிவுகளை மேற்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து அரசியலுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். இந்நிலையில் மக்கள் தமது நலன்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய சேவையாற்றக்கூடிய பிரதிநிதிகளை இனங்கண்டு தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் பிரதிநிதிகளும் எம்மிடையே இல்லாமல் இல்லை.

வாக்கு என்பது ஒரு வேட்டுக்கு சமமானது என்பார்கள். ஒரேயொரு வாக்கு ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் உந்து சக்தியாகிவிடும். எனவே தேர்தலின் போது வாக்கினை உபயோகிக்கும் வாக்காளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகும். வீணான அச்சுறுத்தல்களுக்கும், ஆதிக்கத்திற்கும் பயந்து பிழையான வழியில் வாக்கினை பிரயோகிக்கக் கூடாது. வாக்குரிமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்படுதல் வேண்டும்.

விகிதாசார தேர்தல் முறை

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அல்லது பல் அங்கத்துவ தேர்தல் தொகுதியில் ஒரு கட்சியோ அல்லது குழுவோ பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை பகிர்ந்தளிக்கின்ற கணித ரீதியான ஒரு தேர்தல் முறை இதுவாகும். தேர்தல் தொகுதியொன்றில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குழுவும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கிற்கு ஏற்ப அவற்றிற்குரிய ஆசனங்களை அல்லது பிரதிநிதித்துவத்தினை பங்கிட்டு வழங்கும் தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாகும். 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் ஊடாக இத்தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையை குறிப்பாக தனிமாற்று வாக்கு முறையை கண்டுபிடித்து அறிமுகம் செய்து வைத்தவர்கள் இருவராவர். தனித் தனியாக ஆனால் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் (1850 ஆம் ஆண்டுகளில்), அரசியல்வாதியான சி.சி.ஜி.அந்திரேயும், இலண்டன் பாரிஸ்டரான தோமஸ் குரேயுமே இவ்விருவர்களாகவும் உள்ளனர். ஆனால் இந்த முறை பிரபல்யம் அடைவதற்கு காரணமாக இருந்தவர் பிரித்தானிய அரசியல் மேதையான யோன்ஸ் ரூவோட் மில் என்பதனை பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டுகின்றார்.

நாட்டு மக்களின் அபிவிருத்தி, ஒருமைப்பாடு என்ற பல இலக்குகளை மையப்படுத்தி விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. எனினும் விகிதாசார தேர்தல் முறை இந்த இலக்குகளை உரியவாறு நிறைவேற்றியதா? என்ற கேள்வி இப்போது மேலெழும்பி இருக்கின்றது. பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குதல், கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் அவற்றுக்கு கிடைக்கும் ஆசனங்களுக்கும் இடையே விகிதாசாரத்தைப் பேணுவதாக அமைதல் என்று சாதக விளைவுகள் சிலவற்றை இத்தேர்தல் முறை கொண்டிருந்த போதும் குறைபாடுகளையே விகிதாசார தேர்தல் முறை அதிகமாக கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

விகிதாசார தேர்தல் முறையானது ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமைகளை வளர்ப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. தேர்தலில் எவ்வாறேனும் வெற்றி பெற்று விடவேண்டும் என்கிற நோக்கில் வேட்பாளர்கள் பல பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இத்தேர்தல் முறை வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சிக்குள்ளேயே விரிசல்கள் ஏற்படுவதற்கும் காரணமாக விளங்குகின்றது. மேலும் தேர்தல் மாவட்டமாக அல்லது பல் அங்கத்துவ தேர்தல் தொகுதியாக தேர்தல் தொகுதிகள் அமைந்திருப்பதனால் பிரதிநிதிகளின் கண்காணிப்பு எல்லை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் பிரதிநிதிகள் தமது தொகுதி பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்வது கடினமான செயலாக உள்ளது. மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைந்து காணப்படுகின்றது. இதனால் மக்கள் மற்றும் பிரதிநிதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கின்ற நிலையில் இது பல்வேறு சிக்கல்கள் மேலெழும்புவதற்கும் உந்து சக்தியாக அமைகின்றது. பல் அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை பின்பற்றப்படுவதனால் தமது உண்மையான பிரதிநிதியை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை உருவாகும். இடைத்தேர்தல்கள் இல்லாமையானது அரசின் மீதான மக்களின் அபிப்பிராயத்தினை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். வேட்பாளர் சுதந்திரம் இம்முறையின் கீழ் பாதிப்படைகின்றது.

விகிதாசார முறை கணித ரீதியில் அமைந்துள்ளது. இதனால் பாமர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உரியவாறு உரியவர்களுக்கு வாக்களிப்பதற்கு இவர்களுக்கு இயலாதுள்ளது. இந்நிலைமையால் அநேகமான வாக்குகள் நிராகரிப்பதற்கு உள்ளாகின்றன. மலையக பகுதிகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் தொகை அதிகமாக உள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்குகள் கூட அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளமையானது வாக்களிப்பதில் உள்ள சிரமங்களையே எடுத்துக்காட்டுகின்றது. என்றெல்லாம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இம்முறையின் கீழ் அதிகரித்த தேர்தல் செலவுகள் இடம்பெறுவதால் பிழையான நடவடிக்கைகளை வேட்பாளர்கள் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விகிதாசார தேர்தல் முறையின் அதிருப்தி நிலைகள் புதிய தேர்தல் முறையின் அவசியத்தினை வலியுறுத்தின. அரசாங்கமும் இதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தி இருந்தது.

உள்ளூராட்சி மன்றங்கள்

கீழ்மட்ட மக்களின் நெருக்கமான அரசியல் பங்கேற்பு நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக உள்ளூராட்சி மன்றங்கள் விளங்குகின்றன. அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் சமுதாய மேம்பாட்டு தேவைகளை அவர்களே திட்டமிட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றங்கள் ஊடான சேவையினை உரியவாறு மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மலையக கட்சிகள் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகின்றன.

மலையக பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. மலையக பகுதிகளில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இவ்விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. நாட்டில் பத்தாயிரம் அல்லது அதற்கு குறைந்த மக்களைக் கொண்ட பிரிவுகள் பிரதேச சபைகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட அம்பகமுவ மற்றும் நுவரெலியா என்பவற்றுக்கு தலா ஒரு உள்ளூராட்சி மன்றங்களே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனால் உரிய அபிவிருத்தியை மலையக மக்களிடம் கொண்டு செல்வதில் இடர்பாடுகள் உள்ளன என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்திக் கூறி இருந்தது. இதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறெனினும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமேயாகும். இது மலையக கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை ஐந்து அலகுகளாக பிரிப்பது குறித்து மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் மேலும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றன. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பது தொடர்பிலும் எல்லை மீள் நிர்ணயம் குறித்தும் ஆராய்வதற்கான கூட்டம் ஒன்றும் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், பி.திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் , முத்து சிவலிங்கம் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நுவரெலியா, அம்பகமுவ ஆகிய உள்ளூராட்சி சபைகளை தலா மூன்று சபைகளாக பிரித்து ஆறு சபைகளை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. இதனைவிட நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய உள்ளூராட்சி சபைகளை தலா இரண்டு சபைகளாக பிரித்து ஆறாக அதிகரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் 12 ஆக அதிகரித்ததன் பின்னர் அடுத்த வாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் பைஸர் முஸ்தபா இவ்விடயம் குறித்து கூறுகையில், மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமைச்சரவையிலும் தீர்மானிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் மலையக மக்களுக்கு நீதி வழங்குவதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மனோகணேசனும் அவர்களது யோசனைகளை வழங்குவதாக கூறினார். ஜனவரி தேர்தலை இலக்கு வைத்தே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. மலையகத்தில் உள்ளூராட்சி மன்றங்களை பிரிப்பதற்கு காலம் அதிகளவில் தேவைப்படாது. அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம். ஆகவே இதனை முடித்துவிட்டே வர்த்தமானியில் வெளியிட முடியும். இதன்படி நுவரெலியா மற்றும் அம்பகமுவ மன்றங்களை மும் மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்களது யோசனையை செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கின்றோம் என்று முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். மலையக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் ஜனநாயகம் இலங்கையில் மேலோங்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் இடம்பெற உள்ளன. இத்தேர்தலை விரைவில் அரசாங்கம் நடத்தி ஜனநாயகத்தினை வலுப்பெற செய்ய வேண்டுமென்று கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கலப்பு முறையில் இடம்பெற உள்ளமை குறித்து நீங்கள் நன்கறிவீர்கள். விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறைமைகளின் கலவையாக இத்தேர்தல் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே கூறியதைப் போன்று விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டிருந்தன. எனவே இனியும் இத்தேர்தல் முறையினை தொடரவிடுவதால் அர்த்தமில்லை என்கிற நோக்கில் புதிய தேர்தல் முறை குறித்த சிந்தனை மேலெழுந்தது. இதன் பயனாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கலப்பு முறையில் இடம் பெறும் நிலைமைக்கு வித்திடப்பட்டது. இதேவேளையில் உள்ளூராட்சி திருத்த சட்டமூலத்தில் 55 இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம். மக்கள் விடுதலை முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள திட்டங்களில் சிக்கல் நிலை இருப்பதாகவும் சுட்டிக் காட்டி இருந்தது. எனினும் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதாரமாகவே வாக்களித்திருந்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு முறையில் இடம்பெற உள்ள நிலையில் இது குறித்து பலவிதமான பார்வையை பலரும் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தனது நிலைப்பாட்டினை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டு முதன்முறையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இதில் வட்டார ரீதியாக 60 சதவீத உறுப்பினர்களும் விகிதாசார முறையின் கீழ் 40 சதவீத உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதே வட்டாரமாகும். குறிப்பிட்ட வட்டாரத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்கள் சமூக நலன் சார்ந்த விடயங்களில் ஆர்வத்துடன் செயற்படுகின்றவர்கள், மனித விழுமியங்களைப் பின்பற்றி வருகின்றவர்கள் போன்றோரை மக்கள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதில் பெண்களுக்கு இருபத்தைந்து சதவீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வட்டார முறையில் பத்து சதவீத பெண் உறுப்பினர்களும்,விகிதாசார முறையில் பதினைந்து சதவீத பெண் உறுப்பினர்களும் உள்வாங்கப்படுவார்கள்.கடந்த காலங்களில் பிரதேச சபைக்கோ நகர சபைக்கோ போட்டியிடுகின்றவர்கள் தாம் சார்ந்துள்ள பிரதேசம் தவிர ஏனைய பிரதேச வாக்குகளையும் பெற்று தேர்தலில் வெற்றிப் பெற்று வந்தார்கள். ஆனால் புதிய முறையில் குறிப்பிட்ட வட்டாரத்தில் மாத்திரமே வாக்குகளை கேட்க முடியும். வட்டாரத்தில் வெற்றி பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார்கள். வட்டாரத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அதேபோல் விகிதாசார முறையில் நாற்பது சதவீத உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது தேர்தலில் தோல்வி கண்டவர்களும் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் கட்சிகளுக்கு கிடைக்கும் மொத்த வாக்குகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்ப விகிதாசார நியமனம் வழங்கப்படும். நியமன உறுப்பினர்கள் தமது வட்டாரத்துக்கு மாத்திரம் அல்லது ஏனைய வட்டாரங்களுக்கும் சேவை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளுமை நிறைந்தவர்களாகவும் மக்கள் நலனை உரியவாறு பேணுகின்றவர்களாகவும் தாம் சார்ந்த கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களினதும் எதிரணி வாக்காளர்களினதும் மனங்களை வென்றெடுக்க கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். எல்லோருடனும் சுமூகமான உறவினைப் பேணுபவராகவும் இருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசார முறையில் அமைந்த கலப்பு முறையிலான தேர்தல் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவார். கட்சியின் சின்னத்துக்கு மாத்திரமே வாக்காளர் புள்ளடியிட வேண்டும் என்று திலகராஜ் தெரிவித்திருக்கின்றார்.

இ.தொ.கா. என்ன சொல்கின்றது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையின் கீழ் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருக்கின்றது. விகிதாசார தேர்தல் முறையே சிறுபான்மையினருக்கு உகந்தது என்கிறது. இ.தொ.கா. இது குறித்து இ.தொ.கா. வின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கூறுகையில் விகிதாசார தேர்தல் முறை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மிகவும் சாதகமானது. இந்த முறையின் மூலமாக நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்களை இலங்கை முழுவதும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற மாவட்டங்களில் மட்டுமல்லாது மாத்தளை, குருநாகல், அவிசாவளை, களுத்துறை இங்கெல்லாம் கூட உறுப்பினர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. கலப்பு முறையின் கீழ் இப்பகுதிகளில் வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்படும் அபாயமே அதிகமாக காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டம் எமக்கு சாதகமாக அமையலாம். ஏனைய பகுதிகளில் பிரதிநிதித்துவம் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு சில உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பெரும்பான்மைக் கட்சிகள் எமது வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் நிலை கலப்பு முறை மூலமே அதிகமாக காணப்படுகின்றது.

மாகாணசபைத் தேர்தல் குறித்தும் தொகுதி நிர்ணயம் குறித்தும் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமையே அவதானிக்க கூடியதாக உள்ளது. இதன் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தொகுதி நிர்ணய விடயத்தில் அரசாங்கம் விட்ட குறையை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் தோட்டங்களில் குறைந்த வாக்குகளும் தோட்டத்தை சுற்றியுள்ள கிராமத்தில் அதிகளவு வாக்குகளும் உள்ள நிலையில் எமக்கு பாதிப்பே ஏற்படும். ஒன்றுக்கொன்று நிலத் தொடர்பற்ற முறையில் சிங்கள மக்களுக்கென்று பிரதேச சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை போன்ற இடங்களில் எமது மக்களின் நலன் கருதி தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது அவசியமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ஜனநாயகத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பு மலையக மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். மலையக மக்கள் வாக்களித்தும் அரசியலில் பங்கேற்க உரிய வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படாதிருக்குமிடத்து இது ஒரு அநீதியான செயல் என்றே கூறத் தேன்றுகின்றது. அரசாங்கம் மலையக மக்களுக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது மிக முக்கிய கடமையாகும். இதிலிருந்தும் விலகிச் செல்ல அரசாங்கம் முற்படுதல் கூடாது என்கிறார் முத்துசிவலிங்கம். சமூக முன்னேற்றத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அவசியமாகியுள்ள நிலைமையில் அரசாங்கம் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

செறிந்து வாழும் இடங்களில் சாதகம்

கலப்பு தேர்தல் முறை மலையக மக்கள் செறிவாக வாழும் இடங்களில் சாதகமாகவும் பரந்து வாழும் இடங்களில் பாதகமாகவும் அமையும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய சந்திரன். நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் முன்பு இருந்ததை விட அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏனைய இடங்களில் இது கேள்விக் குறியாகலாம். இப்போது இருக்கும் பிரதிநிதித்துவமும் இல்லாது போகலாம். பரந்து வாழும் இடங்களில் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிப்படைய கூடும். கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது பிரதி நிதிகள் தெரிவாவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லாது போகும். மலையகத்தவர்கள் பரந்து வாழும் இடங்களில் இம் மக்கள் தமது அரசியல் விடயங்கள் உள்ளிட்ட ஏனைய பல நடவடிக்கைகளுக்கும் ஏனைய இனத்தவர்களை தங்கி வாழக்கூடிய ஒரு சூழ்நிலை காணப்படும். தங்கள் இன அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களிலும் இத்தகையோர் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிறார் விஜய சந்திரன்.

இதேவேளை கலப்புமுறை தேர்தல் குறித்து விளக்கங்களை உரியவாறு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. பூரண தெளிவுபடுத்தல் மிகவும் அவசியமாகும். கலப்பு முறையின் தேர்தல்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates