சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 03.10.2017 அன்று பாராளுமன்றில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற் றது. இந்த அமர்விற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழி மொழிந்தார். ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றுவார் என பிரதமர் விடுத்த வேண்டு கோளின்படி ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார்.
ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஐ.தே.க.வின் பிரதமகொறடா கயந்த கருணாதிலக் கவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் உரையாற்றும் வரை பாராளுமன்றின் அருமை பெருமைகளும் அதற்குள் அவரவர் கட்சித் தலைவர்களின் பெருமைகளுமே சபையில் ஒலித்துக் கொண்டிருந்தன.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் மக் கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்ற தொடங்கிய பின்னர்தான் ஜனநாயகத்தின் காப்பிடம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் மறுப்பிடமும் இந்த பாராளுமன்றம்தான் என்பது நினைவுபடுத்தப்பட்டது. பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஒன்று இருப்பதை அனுர குமாரவின் உரையே நினைவுபடுத்தியது. எதிர்க்கட்சி என்பதற்காக இந்த பிரேர ணையை எதிர்த்துப் பேசாமல் உண்மையில் நமது பாராளுமன்றம் ஜனநாயகத்தைப் பாது காத்து வந்துள்ளதா என்கின்ற விமர்சனமாக அவரது உரை அமைந்தது.
அந்த உரையினைத்தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தா உரையாற்றிய போது மீணடும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்க ளுடன் பிணைந்ததான உரையாக அது அமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் ஆளும் கட்சி அமைச்சரான போதும் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரை இந்த பாராளுமன்றம் எவ்வாறு கையாண்டது எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விமர்சனப்பாங்கோடு உரையாற்றியிருந்தார். அதேபோல கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தனவும் தமது கூட்டணி சார்ந்த வரலாற்று குறிப்புகளுடன் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வாறு பேணப்படு கின்றது என்பதை விமர்சன ரீதியாக முன் வைத்தார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலை வர்களுக்கு அல்லது பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட பிரதிநிதிகளுக்கு மாத்திரமே அன்றைய தினம் உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. விதிவிலக்காக கூட்டுஎதிரணிக்கு மாத்திரமே வாய்ப்பு அமைந் திருந்தது. ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டி யிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிகஹெல உறுமய போன்றன பாராளுமன்றில் தனியான அரசியல் கட்சிகளாக கொள்ளப்ப டாததன் காரணமாக குறிப்பிட்ட கட்சிக ளின் தலைவர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி யில் இணைந்து போட்டியிட்ட போதும்ம ட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் (அலிசாஹிர் மௌலானா) பெற்றுக்கொண்டுள்ள மையால் தனியான ஒரு கட்சியாக கிடைக் கப்பெற்ற அங்கீகாரத்துடன் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியிருந்தார்.
நமது நாடு அந்நியர் ஆட்சியில் இருந்துவிடுபட்டு சுதந்திரமடைந்து இன்று 70 ஆண்டுகளாக சுதந்திரமான பாராளுமன் றமாக செயற்படுகின்றது என்பது மகிழ்ச் சிக்குரியதே. உண்மையில் 1972ஆம் ஆண்டுக்குப்பின்னதான 45 வருடங்களே பூரணமான சுதந்திர பாராளுமன்றமாக இலங்கை பாராளுமன்றம் செயற் படுகின் றது. அதற்கு முன்னதான 25 வருடங்களிலும் பிரித்தானியர் வழங்கிவிட்டுச் சென்ற சோல்பெரி அரசியலமைப்பின் பிரகாரமே நமது பாராளுமன்றம் இயங்கியது. பிரித்தா னிய மகாராணியாரின் பேரிலேயே அது வரை சத்தியப்பிரமாணம் செய்ததாகவும் தினேஷ் குணவர்தன தனதுரையில் தெரிவித்து இருந்தார்.
எது எவ்வாறாயினும் இந்த எழுபது வருடகால வரலாற்றில் நம்மை நாம் ஆண்டு கொண்ட விதம் ஜனநாயக முறைப்படியா னதுதானா என்கின்ற கேள்வியை, 70 ஆவது ஆண்டு நிறைவு நாளில் சபையில் உரை யாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொறடா அனுரகுமார திசாநாயக்கவின் உரை ஏற்படுத் தியது.
1948 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நமது பாராளுமன்றம் உருவாக்கிய சட்டங்கள், குடியரசு அரசியல் அமைப்புகளை உருவாக்கிக்கொண்டதன் பின்னர் கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தங்கள் நமது நாட்டின் சுபீட்சத்துக்கு வழிவகுத்தனவா, அழிவுக்கு வழிவகுத்தனவா போன்ற கேள்விகளை அவர் அடுக்கிக்கொண்டு போன மையை அவதானிக்க முடிந்தது.
அவற்றுள் முதன்மையானதாக அவர் முன்வைத்த விடயம் சுதந்திரம் கிடைத்த கையோடு நமது பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களில் ஒன்றான 1948 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைகள் சட்டம். இந்த சட்டத்தினை இலங்கை சுதந்திர பாராளுமன்றம் அங்கீகரித்த நாளில் இருந்தே இந்த நாட்டில் உள்நாட்டு குழப் பங்களுக்கு வித்திட்டது எனலாம்.
1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் நடந்தது என்ன அன்றைய திகதியில் சுமார் ஏழு லட்சத்து எண்பதினாயிரம் அளவான சனத்தொகையைக் கொண்டிருந்த இலங்கை நாட்டில் வாக்குரிமை கொண்டிருந்த இந்திய தமிழர்கள் என சட்டரீதியாக பதிவு பெற்றிருந்த மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை ரத்துச்செய்யப்பட்டது.
மொத்தச் சனத்தொகையில் 11.7வீதமாக இருந்த இலங்கை சனத்தொகை அள வில் இரண்டாம் நிலையில் இருந்த இந்திய (மலையகத்) தமிழர்கள் இன்று எண்ணிக்கையில் நான்காம் நிலைக்குத் தள்ளப் பட்டதற்கும் இன்றைய நாள் வரை மூன்றாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுவதற்கும் இந்த சட்டமே காரணம் என்பது மறுக்கப்பட முடியாதது.
இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரமடைந்து வெறும் 285 நாட்களுக்குள் யாரெல்லாம் இலங்கை நாட்டவர்கள் என்பதை தீர் மானிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் யாரெல்லாம் இலங்கை பிரஜை கள் அல்ல என்பதை தீர்மானிப்பதற்கான சட்டமாக மாறி இந்த நாட்டின் இரண்டாவது அதிகளவான சனத்தொகையைக் கொண் டிருந்த சமூகத்தை இலங்கையில் நாடற்றவர்களாக்கிய கரும்புள்ளி வரலாற் றுடனேயே இலங்கை பாராளுமன்றம் தனது வரலாற்றைத் தொடங்குகின்றது.
இந்த சட்டம் பற்றிய தேடலுக்காக இணையப்பக்கம் தேடினால் பிரபலமான விக்கிபீடியா தகவல் தளம் இவ்வாறு பதிவு செய்கின்றது. (The Ceylon Citizenship Act No. 18 of 1948 was a controversial law passed by the Ceylon [Parliament which failed to grant citizenship to Indian Tamils which were 11% of the population) சர்ச்சைக்குரிய நிலையில் இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள 1948ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க இலங்கை பிரஜைகள் சட்டம் இலங்கை சனத்தொகையில் 11 சதவீதமாக உள்ள இந்திய தமிழர்களுக்கு குடியுரிமையை வழங்க மறுத்துள்ளது என்பதாக இந்தச் சட்டத்திற்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் 1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 7 உறுப்பினர்கள் பாராளுமன்றில் அங்கம் வகித்தார்கள்.
மொத்த உறுப்பினர்கள் 95 ஆக இருக்கும்போது 7 உறுப்பினர்கள் என்பது கணிசாமான எண்ணிக்கை. கே.ராஜலிங்கம், சௌமியமூர்த்தி தொண்டமான், சி.வி.வேலுப்பிள்ளை, டி.ராமானுஜம், எஸ்.எம்.சுப்பையா, ஜி.ஆர்.மோத்தா, கே.குமார வேல், ஆகியோர் மலையக மக்களின் பிரதிநிதிகளாக சபையில் இருக்கத்தக்கதாக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்க ளின் பிரஜாவுரிமையை பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றிப் பறிப்பது என்பது எந்த வகையில் ஜனநாயகம் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியிலேயே இரண்டு தரப்பினரும் அங்கம் வகித்தனர். இடதுசாரி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்திருந்தன. அப்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எனும் ஒரு கட்சியாகவே இருந்த இலங்கை தமிழர் தரப்பு இந்த சட்டத்தி ற்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பது தொடர்பாக எழுந்த வாதப்பிரதி வாதங்களின் பின்னர்தான் தமிழரசுகட்சி என்ற ஒன்று உருவானதாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இதனை அனுரகு மார திசாநாயக்க தனதுரையிலே நினைவு படுத்தியிருந்தார்.
இந்த வரலாற்றுத்துரோக சட்டம் இலங்கையில் சுதந்திர பாராளுமன்றத் தின் ஆரம்ப காலத்திலேயே நிறைவேற்றப் பட்டமையை அமைச்சர் ரவூப் ஹக்கீம், தினேஷ் குணவர்தன ஆகியோரும் நினைவுபடுத்திச் சென்றனர். தமிழரசுக் கட்சி உருவானதற்கு காரணமாக இருந்த இந்தச் சட்டம் தொடர்பில் தமிழரசுக்கட்சி எதிர் கட்சி தலைவர் ஆசனத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தமதுரையில் இது பற்றி எடுத்துரைக்காமை துரதிர்ஷடமே. இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு அவ்வப்போது ஒப்பந்தங் களின் மூலமும் சட்டங்கள் மூலமும் மீளவும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க பிரஜாவுரிமைகள் சட்டத்தின் கீழ் அனைத்து இந்திய தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப் பினைப்பெற 55 வருடங்களை மலையக மக்கள் செலவழிக்க வேண்டியிருந்தமை இங்க நினைவுகூரத்தக்கது. இருந்தபோதும் மலையக மக்கள் நாட்டில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாகவே இன்றும் உள்ளனர் என்பதை 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் சுட்டி நிற்கின்றது.எனவே மலையக மக்கள் பின்தங் கிய நிலையில் உள்ளனர் என அனுதாப ப்படும் அல்லது அவர்களை எள்ளி நகையாடும் எவரும் இந்த வரலாற்றுப்பின் புலத்தை தெளிவாக புரிந்துகொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டி யவர்களாக உள்ளனர். நமது நாட்டின் பாராளுமன்றத்திற்கு 70 ஆண்டுகள் நிறைவு பெற்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க இந்த நாட்டில் ஒரு பகுதி மக்களை நாடற்றவர் களாக்கிய 70 வருட ஆண்டு நிறைவையும் நாம் மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...