தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 4
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக மலையக இலக்கிய பண்பாட்டு கலை வடிவங்களின் ஆய்வு மாநட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டவர் தென்னிந்திய மாநிலங்களுக்கான இலங்கையின் துணைத்தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி.
இலங்கை நிர்வாக சேவை (SLAS – Sri Lanka Administrative Service) பொது நிர்வாக பணிகளுக்காகவும், இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS – Sri Lanka Education Administrative Service) கல்விநிர்வாக பணிகளுக்காகவும், இலங்கை திட்டமிடல் சேவை, பொருளாதார திட்டமிடல் சேவைக்காகவும் (SLPS – Sri Lanka Planning Service) நடாத்தப்படுவதுபோல வெளிநாட்டு சேவை (SLFS – Sri Lanka Foreign Service) பரீட்சைகளும் இலங்கையில் நடாத்தபடுகின்றன.
அண்மைக்காலத்தில் SLEAS எனப்படும் கல்வி நிர்வாகத்திற்கான போட்டிப் பரீட்சையில் மலையக ஆசிரியர்கள் பலர் சித்திபெற்று பெருமை சேர்த்திருந்தனர். ஏற்கனவே சித்தி பெற்ற பலர் கல்வித்துறையில் ஆணையாளராக, பணிப்பாளர்களாக பணியாற்றி மலையகத்துக்கு பெருமை சேர்க்கின்றனர். கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களாகவும், அனுபவங்களின் ஊடாகவும் இந்த பொதுப்பரீட்சைக்கு தோற்றும் மலையகத்தவர்கள் கணிசமான அளவில் SLEAS பரீட்சைகளில் ஆர்வம் காட்டினாலும் SLAS எனப்படும் பொது நிர்வாகத்துறைக்குள் நுழைவதற்கான போட்டிப்பரீட்சையில் மலையக பட்டதாரிகள் களமிறங்குவதும் சித்தியடைவதும் குறைவாகவே காணப்படுகின்றது.
அண்மையில் கொட்டகலை பிரதேசத்தில் கஜேந்திரகுமார் எனும் பட்டதாரி இந்த பரீட்சையில் சித்திபெற்று இப்போது உதவி அரசாங்க அதிபராக பதுளை மாவட்டத்தில் பணியாற்றுகின்றார்.
அண்மைக்காலங்களாக மலையகப் பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை அரசியல் ரீதியாக முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கோரிக்கை வெற்றியடைகின்றபட்சத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சுமார் ஆறு பிரதேச செயலகங்கள் (Divisional Secretaries) மலையகத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் அமையக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அமையுமிடத்து அத்தகைய பிரதேச செயலகங்களுக்கு செயலாளர்களாக நியமிப்பதற்கு போதுமான SLAS தகுதிபெற்றவர்கள் மலையகத்தவர்களாக இல்லை என்பது கசப்பான உண்மை. இப்போதைக்கு மேலே குறிப்பிட்ட ஒருவரே நேரடியாக அத்தகைய பரீட்சையில் சித்திபெற்றவராக உள்ளார்.
இதற்கு முன்னர் சில மலையகத் தமிழர் இந்த பரீசையில் சித்தி பெற்றிருந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும் மலையகம் என்ற உணர்வோடு அதனை வெளிப்படுத்தி நிர்வாகத் துறையில் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. எனவே மலையகப் பட்டதாரிகள் ஆசிரிய தொழிலுக்கு அப்பால் பொது நிர்வாக துறையில் பதவிகள் பெறும் வகையில் SLAS பரீட்சையில் ஆர்வம் காட்டுதல் அவசியம். இது சிரமமானதும் போட்டி நிறைந்ததுமான பரீட்சைதான் ஆயினும் இதில் சித்திபெற்று பொது நிர்வாகப்பணிக்குள் நுழைவதும் மலையக சமூகத்திற்கு ஆற்றும் பணிதான். இதனை இளம்பட்டதாரிகளே மேற்கொள்ள வேண்டும்.
இன்னும் நிர்வாக அதிகாரங்கள் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையிலேயே மலையக மக்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்பது அரசியல் ரீதியாக பேசப்படுகின்றது. அந்த நிர்வாக முறைச் சிக்கல் சீர் செயய்யப்படுமிடத்து அதில் பணியாற்ற போதுமான நம்மவர்கள் இல்லாதபோது அதிகாரங்கள் கிடைத்தாலும் உணர்வுடன் மலையக மக்களை சேவைகள் சென்று சேராது என்பதை உணர வேண்டும்.
இந்தத் தொடர் கட்டுரை இலங்கை மலையக, தமிழக மலையக உறவுகளுடன் தொடர்புகொண்டது என்ற வகையில் இலங்கை மலையகத்தவராக இருந்து ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் திரும்பியவராக தமிழகம் சென்ற மலையக சமூகத்தில் இருந்து இந்தியாவில் இதே தகைமைக்கு ஒப்பான IAS (Indian Administrative Service) போட்டிப் பரீட்சையில் ஒருவர் சித்திபெற்று இப்போது கேரள மாநிலத்தில் கல்லிகட் மாவட்ட ஆட்சியராக (IAS அதிகாரியாக) பணியாற்றுகின்றனர் என்ற தகவலைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதனை நினைவுபடுத்தும் மாநாடு அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற போது இந்தியாவில் இருந்து இணைய வழியாக சிறப்புரை ஆற்றிய இந்திய பேராசிரியர் சூரியநாராயணனன் இந்த அடைவினை மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தியிருந்தார். எனவே இப்போதைக்கு 'இலங்கை' மலையகத்திலும் 'இந்திய' மலையகத்திலுமாக ஒவ்வொரு இளைஞர் தமது திறமையை வெளிக்காட்டி இலங்கை நிர்வாகத்துறையிலும் இந்திய நிர்வாக துறையிலும் அரச ஆட்சியர் பதவிகளுக்கு தெரிவாகியுள்ளனர் என்று மலையக சமூகம் பெருமை கொள்ளலாம். எனினும் இந்த துறையில் உள்ள மலையகத்தவர் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இதே நிலைமையினை SLPS எனப்படும் திட்டமிடல் துறையிலும் அவதானிக்கலாம். அமைச்சுக்களில் அரச திணைக்களங்களில் திட்டமிடல் அதிகாரிகளாக நம்மவர்கள் குறைவாக இருக்கின்றபோது தேசிய திட்டமிடலில் நாம் உள்வாங்கப்படுவதும் குறைவடையும். இன்றைய நிலையில் திட்டமிடல் துறையிலும் பின்னர் அமைச்சு செயலாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கலாநிதி பிரதாப் ராமானுஜம், எம்.வாமதேவன் போன்ற சிலரைத் தவிர வேறு மலையகத்தவர்களை திட்டமிடல் துறையில் SLPS பரீட்சையில் சித்திபெற்றவர்களாக அடையாளம் காண முடியாதுள்ளது.
இதே நிலைமைதான் SLFS எனப்படும் வெளிநாட்டு சேவைக்கான போட்டிப்பரீட்சையும் அந்த துறையில் பணியாற்றுவதும். இதுவரை மலையகத்தில் இருந்து மூவர் இந்த துறைக்கு போட்டி பரீட்சைகளின் ஊடாக சென்றுள்ளனர். திருமதி. கிறேஸ் ஆசீர்வாதம், திரு.பி.செல்வராஜ், திரு. வடிவேல் கிருஸ்ணமூர்த்தி வெளிநாட்டு சேவைக்காகவென நடாத்தப்படும் SLFS பரீட்சையில் சித்திபெற்று வெளிநாடுகளில் தூதுவர்களாக துணைத்தூதுவர்களாக பணியாற்றுகின்றனர். மேலே குறிப்பிட்ட ஏனைய பதவிகள் போன்று மலையக சமூகத்துக்கு நேரடியான ஒரு பணியினை இந்த பதவிகள் மூலம் ஆற்ற முடியாதபோதும் கூட மலையகத்தவர்கள் இந்த துறையிலும் கால்பதிக்க கூடியவர்கள் எனும் கௌரவத்தினை மலையக சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்கலாம். அத்தகையதொரு பெருமையாகவே தென்னிந்தியாவுக்கான இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தியின் பிரசன்னம் ஆய்வு மாநாட்டின்போது அமைந்தது.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று ஆசிரியப்பணியில் சேவையாற்றியதுடன், ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய தறுவாயில் SLFS பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக பல்வேறு நாடுகளில் தூதுவராண்மை பணியாற்றி இன்று சென்னையை தளமாகக் கொண்டு தென்னிந்தியாவுக்கான இலங்கை அரசாங்கத்தின் உதவி உயர்ஸ்தானிகராக பணியாற்றுகின்றார்.
ஆய்வரங்கின் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட அவர் தனதுரையில், உலகின் பல சமூகங்கள் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு பயணித்த அல்லது பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட வரலாறுகள் பல உண்டு. அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்ச் சமூகம் என்ற வகையில் மேற்கிந்திய தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, பர்மா, மொறீசியஸ், இலங்கை போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு காலப்பகுதிகளில் அழைத்துச்செல்லப்பட்ட இந்த மக்கள் அந்தந்த நாடுகளில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தமது இருப்பை தக்கவைத்துக்கொணடுள்ளனர். அந்த வகையில் இலங்கை மலையகத்துக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச்செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கையில் சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் தமது இருப்பை இன்று இலங்கை பிரஜைகளாக நிலை நாட்டிக்கொண்டுள்ளனர். குறிப்பாக தங்களது கலை, கலாசார, பண்பாட்டு வடிவங்களை தங்களது மொழியின் ஊடாக பாதுகாத்தும் பின்பற்றியும் வருகின்றனர்.
பல்வேறு நாடுகளில் பணியாற்றியவன் என்ற வகையில் இலங்கை மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தமது தமிழ் மொழியினை கைவிட்டு விடாமல் தமது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளனர் என்பதை உறுதியாக செல்ல முடியும். மேற்கிந்திய தீவுகள், பர்மா, கம்போடியா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் அவர்கள் தமது தமிழ் மொழியினை வேற மொழிகளின் ஊடாகவே புரிந்துகொள்கின்றனர்.
இலங்கை மலையகத் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் துவண்டு விழுந்து கிடந்தோம் என்ற நிலையில் மாத்திரம் நின்றுவிடாமல், எழுந்தோம், நிமிர்ந்தோம், வெற்றிகொள்வோம்!!! என்ற நம்பிக்கையில் தமது வரலாற்றுப் பயணத்தை முன்கொண்டு செல்கின்றனர்.
அந்த பயணத்தின் ஓர் அடையாளமே இன்று இலங்கையில் இருந்து ஒரு குழுவினர் மலையக மக்களின் கலை பண்பாட்டு வடிவங்களின் ஆய்வு மாநாட்டுக்காக வருகை தந்து தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். இந்த குழுவினரோடு நானும் ஒரு மலையகத்தவனாக ராஜதந்திர பதவி நிலையில் நின்று பங்கு கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என தெரிவித்தார்.
நன்றி சூரிய காந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...