இலங்கையின் வரலாற்றில் கருப்புக் கறை 83 கலவரம். கருப்பு யூலை என்றும், அழைக்கப்படும் 83 கலவரமானது தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான நியாயத்தை உலக அரங்கில் உறுதிபடுத்திய முக்கிய நிகழ்வு. 83 கலவரத்தின் போது தமிழ் மக்கள் கொடுத்த விலை அந்தளவு கொடியது.
இதற்கான பின்புலம் உருவான கதையை கடந்த வாரங்களில் வெளியான தொடர்களில் பார்த்தோம்.
சாதாரணமாகவே பெரும்பான்மை சிறுபான்மை மக்களுக்கிடையே வகுப்பு கலவரங்கள் இடம்பெறும்போது அம்மக்கள் கொண்டுள்ள பலத்தைப் பொறுத்து அதன் அகோரம் தீர்மானிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். கூடவே அரச அதிகார பலமும் குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு கிடைக்கும் போது அது குரூரமான வடிவத்தை அடைத்து விடுகிறது. உலகெங்கிலும் இதன் உதாரணத்தை வரலாறு நெடுகிலும் காண முடியும்.
இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒரு சிறு தீப்பொறி போதும் ஒரு பெரும் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு என்கிற உண்மையை வரலாறு நெடுகிலும் பல தடவைகள் நிரூபித்திருக்கிறது. அதன் இன்னோர் அர்த்தம் ஒரு நூற்றாண்டாகவே இன அமைதியின்மையும், இனப்பதட்ட நிலையும், இனக் கெடுபிடி நிலையும் இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை உணர முடியும்.
83 கலவரத்திலிருந்து தான் முதலாவது ஈழப்போரின் ஆரம்பம் என அழைக்கப்படுகிறது.
83 கலவரமும் அப்படித்தான் ஒரு பொறிக்காக காத்திருந்தது. அதற்கான ஒத்திகை திருகோணமலையில் நடந்தது என்று தான் கூறவேண்டும். திருகோணமலையில் அரச படையினரின் ஒத்தாசையுடன் சிங்கள இனவாத காடையர் கூட்டம் இனவேட்டையைத் தொடங்கியது.
திருமலை வன்செயல்கள்
இதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் இளைஞர் குழுக்கள் அரச படையினரின் மீதும், அரச சொத்துக்களின் மீதும் இலக்கு வைத்து ஆங்காங்கு தாக்கினர்.
திருகோணமலையில் நிகழ்ந்த அட்டூழியங்கள் குறித்து யூன் 11 வெளியான் “சற்றடே ரிவியு” பத்திரிகை அங்கே கொலைகளும் குண்டுத் தாக்குதல்களும் நடந்ததை பதிவு செய்தது.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில்
“இவ்வெறித்தாக்குதல்கள் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தபோது நடைபெற்றிருக்கிறது. ஆயுதப்படைகளின் மறைமுக ஒத்துழைப்புடனேயே இவை நடந்திருக்கிறது என்பது வெளிப்படை. திருகோணமலையில் இக்கொடூரமான நாட்களை அனுபவித்த பல தமிழர்கள் ஊரடங்கினபோதுஅவர்களது வீடுகளில் இனவெறுக் குண்டர்கள் தாக்கியபோது தாங்க முடியாது ஓடித்தப்ப முயலும்போது, ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்று பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்கள்.”
திருகோணமலையில் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்த மக்கள் அகதி முகாம்களுக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்த வன்செயல்கள் தொடங்கிய நேரத்தில் ஜே.ஆர் நாட்டில் இருக்கவில்லை. யூன் 12-27 வரையான காலத்தில் அவர் எகிப்து, ரோம் போன்ற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இடைக்கால ஜனாதிபதியாக பிரேமதாச செயற்பட்டார்.
ஜூலை 3ஆம் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டவிதி 15A ஆனது, பாதுகாப்புப் படைகளுக்கு, அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனடியாகப் புதைக்கவோ, எரிக்கவோ அதிகாரத்தைக் கொடுத்தது.
அதாவது, படையினரால் கொல்லப்படுபவர்களது அடையாளத்தை அறியாமலும், மரணவிசாரணை நடத்தப்படாமலும், உடனடியாகப் பாதுகாப்புப் படைகளால் அந்தவுடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடிய அதிகாரத்தை, இந்த அவசரகாலப் பிரகடனம் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது.
அதாவது தாம் நினைத்தபடி, நினைத்த இடத்தில் நினைத்தவர்களைக் கொன்று மறைப்பதற்கான அனுமதியை (License to Kill) வழங்கியதற்கு இது ஒப்பானது
அமைச்சரே கதறினார்
இந்தக் கலவரங்களைக் கண்டு அன்றைய அரசாங்கத்தைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைச்சருமான எச்.ஜீ.பி நெல்சன்.
“தமிழ் மக்கள் தாக்கப்படுகிறார்கள், ஒரு வயதுக் குழந்தை துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி துடிதுடித்து மாண்டது, நான்கு வயதுக் குழந்தை கருகிச் செத்தது. இவர்கள் எவரும் சிங்கள மக்களில்லை. திருமலையில் தமிழ் மக்கள் படும் சித்திரவதையை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்நிலை நீடிக்குமானால் நான் மாவட்ட அமைச்சர் பதவியை மாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யத் தீர்மானித்துவிட்டேன்.”
என்று கண் கலங்கியபடி கூறினார். அவர் ஜூன் முதலாம் திகதி கூட்டிய சமரச மாநாட்டின் போதே வேதனையுடன் பேசினார். அந்த மாநாட்டுக்கு திருமலை எம்.பி. இரா.சம்பந்தனுக்கு அனுப்பியிருந்த அழைப்பை சம்பந்தன் நிராகரித்திருந்தார். அ.தங்கத்துரை உள்ளிட்ட பலர் அந்த மாநாட்டை பகிஸ்கரித்திருந்தனர்.
முதல் இரண்டு வாரங்கள் மாத்திரம் 225 வன்செயல்கள் இடம்பெற்றதாக பொலிஸ் அறிக்கை வெளியிட்டது.
பிரபாகரனின் சகோதரி வீட்டுக்கு தீ
இதற்கிடையில் பிரபாகரனின் சகோதரி அவரின் கணவர் நில அளவையாளர் ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் குடும்பத்துடன் வத்தளை- எந்தலை அல்விஸ் டவுனில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து விட்டுச் சென்றதன் பின்னர் ஜூலை 4 அன்று அவரது வீட்டைத் தேடிச் சென்ற காடையர் கூட்டம் அவர்களின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.
ஜூலை 8 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற விவாதத் தொடரில் திருமலை சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள் காரசாரமாக சூடுபிடுத்தது.
எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நடந்துமுடிந்த வன்செயல்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “புள்ளிவிபரங்களை வெளியிட இது சரியான சமயமல்ல. நிலைமை சீரானதும் வெளியிடுவோம்.” என்றார்.
அமிர்தலிங்கத்தின் உரையில் “18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அனைவரும் தமிழர்கள். 40பேர் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கிச் சூட்டினாலும் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 35 பேர் தமிழர்கள். 200 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 190 வீடுகள் தமிழர்களின் வீடுகள். 1600 பேர் நொச்சிக்குளம்,பன்குளம், பாலையூர் ஆகிய முகாம்களில் உள்ளனர். என்றார்.
அதே விவாதத்தில் அன்றைய பேர்பெற்ற இனவாதியும், கைத்தொழில் அமைச்சருமான சிறில் மெத்தியு எழுந்தபோது சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்கப் போகிறீர்களா என்று வினவினார். அதற்கு :இல்லை! நான் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சிறில் மெத்தியு பதிலளித்தார். அவர் பேசும் போது
“யாழ்ப்பாணத்தில் 20,000 சிங்களவர்கள் இருந்தார்கள் இப்போது ஒருவரும் இல்லை. முன்னர் பல்கலைக்கழகத்தில் 400 சிங்கள மாணவர்கள் இருந்தார்கள் இப்போது அவர்கள் ஒருவரும் இல்லை. முணர் யாக்ப்பானத்தில் பல பேக்கரிகள் இருந்தன இப்போது ஒன்றும் இல்லை. யாழ்ப்பாணத்தின் நிலைமையை திருகோணமலையிலும் கொண்டுவரப் பார்க்கிறீர்கள். திருகோணமலையில் சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும்.”
என்று அடுக்கிக் கொண்டு போக..
அமிர்தலிங்கம் சபாநாயகர் அப்துல் பாக்கீர் மாக்காரை நோக்கி “இவை முற்றிலும் தவறான தகவல்கள் இவற்றை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. இப்படியான தகவல்களை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்.” என்று கூறிய போது சபாநாயகர்;
“சபையை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் கூறத் தேவையில்லை.” என்று கடுப்புடன் பதிலளித்ததுடன் சிறில் மெத்தியு தொடர்ந்தும் இனவாத அவதூறு செய்ய இடமளித்தார்.
நல்லூர் எம்.பியான சிவசிதம்பரம் தனதுரையில்
“பிரதமரிடம் கேட்ட கேள்விக்கு கைத்தொழில் அமைச்சர் பதிலளிக்கிறார். இதற்கு முன்பு கூறியவற்றையும், தவறானவையும் அவர் இங்கு கூறுகிறார். ஆக யாழ்ப்பாணத்தில் நடந்தவற்றிற்கு பதிலாகத் தான் திருகோணமலையில் செய்கிறீர்களா? அதுதான் உங்கள் கொள்கையானால் வெளிப்படையாகச் சொல்லுங்கள். பலாத்காரத்தை வெறுக்கிறோம், வன்செயலை வெறுக்கிறோம் என்று கூறி விட்டு திருமலையில் இப்படி செய்கிறீர்களே. ஜூன் 3 இலிருந்து ஜூலை 3 வரை 19 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் கூட சிங்களவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் பேக்கரிகள் இல்லையென்று கூறப்பட்டது. அமைச்சர் என்னுடன் வந்தால் அங்கு எந்தவித சிரமுமின்றி பேக்கரிகள் நடப்பதைக் காட்டுகிறேன்.” என்றார்.
சு.நடராஜாவின் இராஜினாமா
திருமலை வன்செயல்களின் காரணமாக யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவரும் முன்னால் செனட்டருமான சு.நடராசா இராஜினாமா. தன்மானத்தோடு தமிழர் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, நாம் எல்லோரும் பதவிகளை தூக்கியெறியும் நாள் வந்துவிட்டது நான் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். என்பதற்காக நன்றாக சிந்தித்து எடுத்த முடிவு இது. இப்பதவியிலிருந்து தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவும் முடியாது. என் முடிவு தமிழினத்துக்கு ஒரு விடிவு” என்று சபைக் கூட்டத்தில் அறிவித்தார். 13ஆம் திகதியே ஜனாதிபதிக்கு தனது விலகல் பற்றி விரிவாக கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடராசாவை விலக வேண்டாம் என்று கோரி உரையாற்றினார்கள். மானிப்பாய் எம்.பி தர்மலிங்கம் பேசும் போது
"தந்தை செல்வாவின் பிரதம சிறந்த சிஷ்யராக நீங்கள் இருந்தீர்கள். பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டபோது கூட அவர் பதவி விலகவில்லை. அவரைப் பார்க்க துணிச்சல் மிக்க நீங்கள் விலகுவதால் மாவட்ட சபை சிறந்த நிர்வாகத்தை இழந்து விடும்" என்றார்.
சிவசிதம்பரம் பேசும் போது,
“ஜே.ஆர். அனுமதியுடனோ அல்லது அவரை திருப்திபடுத்துவதர்காகவோ நீங்கள் தலைவராக வரவில்லை. ஆகவே விலக வேண்டாம் என்றார்.
“கூட்டணியின் போக்கில் அதிருப்தியுற்றிருப்பதாகவும், நாம் நம் இலட்சியத்திலிருந்து விலகிவிட்டோம், தளர்ந்துவிட்டோம், எனக்கு பதவி முக்கியம் அல்ல தமிழினத்தின் விடிவு தான் முக்கியம்”
என்று சு.நடராசா பதிலளித்து விலகினார்.
வட்டமேசை மாநாடு புறக்கணிப்பு
ஜே.ஆர். இந்த நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தாம் வட்டமேசை மாநாடொன்றை 13ஆம் திகதியன்று நடத்துவதாகக் கூறி கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் யூலை 16ஆம் திகதி கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், எதிர்க்கட்சிகளின் தலைவருமான அமிர்தலிங்கம் அனுப்பிய கடிதத்தில் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்ற வன்செயல் நடவடிக்கைகள் இத்தீவில் பிடித்துள்ள அரசியல் வியாதியின் ஒரு அறிகுறியாகும். தமிழரின் முழுப் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படாத மாநாட்டில் கூட்டணி கலந்துகொள்ளப் போவதில்லை” என்று அறிவித்தார்.
20ஆம் திகதி நடந்த வட்டமேசை மாநாட்டில் எந்த எதிர்க்கட்சியும் கலந்துகொள்ளாமல் தோல்வியில் முடிந்தது. மறுபுறம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மோசமாக நசுக்கவென 6வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் ஏற்பாட்டில் அரசாங்கம் தீவிரமாக இருந்தது.
இதேவேளை 22ஆம் திகதி அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி தமது மாநாட்டை 23, 24 ஆகிய நாட்களில் மன்னாரில் நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வந்தது. அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடலாம் என்பதற்காக அனைவரும் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாள் 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலின் படி இலங்கையின் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியவேண்டிய நாள். ஆனால் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை நீடித்துக் கொண்டார் ஜே.ஆர். ஆனால் கூட்டணி அதே நாள் பாராளுமன்றப் பதவிகளை இராஜினாமா செய்வது பற்றி ஆலோசித்து வந்தது. அதுபோலவே மாநாட்டில் சகல கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை வீ.என்.நவரத்தினம் கொண்டுவந்த பிரேரணை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அதே நாள் இலங்கையின் எதிர்கால நிலையை தலைகீழாக புரட்டிப்போடப்போகும் நிகழ்வும் நிகழப்போகிறது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.
துரோகங்கள் தொடரும்
கலவர நாட்குறிப்பு16.05.1983
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடும் தாக்குதல். தமிழ் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறி ஊர் திரும்புதல்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அப்பாவி இளம் வான் சாரதி சபாரத்தினம் பழனிவேல் இராணுவத்தினரால் முகாமுக்கு இழுத்துச் கோப்ரல் விமலரத்னவால் செல்லப்பட்டு சுட்டுக் கொலை. அமிர்தலிங்கம் கண்டனம்.
30.06.1983
திருகோணமலையில் நிகழ்ந்த இனவெறித் தாக்குதல் பற்றி ரஷ்யா, கியூபா, லிபியா, ஈராக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு தந்தியனுப்பி முறைப்பாடு.
01.07.1983
வவுனியா – கோவில்குளத்தில் இயங்கி வந்த காந்தீயத்தின் பண்ணையை எரித்தும், நொறுக்கியும் நிர்மூலமாக்கியது இராணுவம்.
திருமலையில் மாத்திரம் தமிழர்களின் 50 வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. நொச்சிக்குளத்தில் 24 வீடுகளும் சீனன்குடாவில் 26 வீடுகளும் அடங்கும். மத்திய வீதியில் உள்ள கடைகளும் எரிப்பு.
திருகோணமலையில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால். TELA எனும் தமிழீழ விடுதலை இராணுவம் அரசுக்கு சொந்தமான பஸ்கள், அரச அலுவலகங்களுக்கு தீயிட்டு, தாக்கி எதிர்ப்பைத் தெரிவித்தல். யாழ் தேவி ரயில் கோண்டாவில் இரயில் நிலையத்தில் வைத்து இளைஞர்களால் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டது.
02.07.1983
மேற்படி சம்பவத்துக்கு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டு ‘சற்றடே ரிவ்யு’, ‘சுதந்திரன்’ ஆகிய தமிழ் பத்திரிகைகளுக்கு அரசாங்கம் சீல் வைத்து, இழுத்து மூடியது. அவற்றின் ஆசிரியர்களான எஸ்.ஏ.தர்மலிங்கம், கோவை மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமில் அடைப்பு.
03.07.1983
அவசரகால சட்டம் அமுல். 15A விதியின்படி சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், மரண விசாரணை கூட நடத்தாமல் எரித்துவிடவோ, புதைத்துவிடவோ இராணுவத்துக்கு கூடிய அதிகாரம் அளிக்கப்பட்டது.
திருகோணமலையில் ஆயுதப்படையினரின் உதவியுடன் காடையர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழர்கள் மீதான படுகொலைகள், வன்செயல்களை தடுத்துநிறுத்தும்படி அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு தநதி
06.07.1983
சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் பற்றி கடுமையான கண்டத்தையும், பரிந்துரைகளையும் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.
09.07.1983
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு கூடி 21 அன்று மன்னாரில் மாநாட்டை நடத்துவதென தீர்மானம்
10.07.1983
காந்தீய இயக்கத்தின் கோவில்குளத்திலிருந்த பண்ணை நிலத்தையும், அநாதை சிறுவர் இல்லக் கட்டடங்களையும் சுவீகரிக்கும் முடிவை வவுனியா அரசாங்க அதிபருக்கு அறிவித்தது அரசாங்கம்.
11.07.1983
லண்டன் “டெய்லி ரெலிகிராப்” (Daily Telegraph) பத்திரிகைக்கு ஜே.ஆர் வழங்கிய நேர்காணலில் “வடக்கு மக்கள் பற்றி யோசிக்க முடியாது... அவர்களுக்கு எந்தளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ அந்தளவு சிங்கள மக்கள் சந்தோசப்படுவார்கள்” என தெரிவிப்பு.
13.07.1983
திருமலை வன்செயல்கள் பற்றி விசாரணைக் குழு அமைக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
15.07.1983
மீசாலை இரயில் நிலையத்தருகில் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை.
15.07.1983
திருமலை வன்செயல்களின் காரணமாக யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவரும் முன்னால் செனட்டருமான நடராசா இராஜினாமா. தன்மானத்தோடு தமிழர் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, நாம் எல்லோரும் பதவிகளை தூக்கியெறியும் நாள் வந்துவிட்டது நான் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ப்பதாகவும், கூட்டணியின் போக்கில் அதிருப்தியுற்றும்,
16.07.1983
ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அறிவித்திருந்த வட்டமேசை மாநாட்டுக்கு கூட்டணி கலந்துகொள்ளாது என்று ஜனாதிபதிக்கு அமிர்தலிங்கம் அறிவிப்பு. சுதந்திரக் கட்சியும், கொம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளாது என்று அறிவிப்பு.
20.07.1983
ஜே.ஆர்.நடத்திய வட்டமேசை மாநாட்டில் எந்த எதிர்க்கட்சியும் கலந்துகொள்ளாமல் பிசுபிசுத்துப் போனது.
22.07.1983
பாராளுமன்றத்தில் அவரசகால சட்டத்தை நீடித்தது அரசாங்கம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...