Headlines News :
முகப்பு » , , » தமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு - என்.சரவணன்

தமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு - என்.சரவணன்


“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.

நவீன பாசிச அரசியல் போக்குகளிலும் இதனைக் காண முடிகிறது. யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி  அழித்த செய்தியை நாமறிவோம்.

நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று இட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பெர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு.

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள்.

வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

சிங்கள பௌத்த சித்தாந்தம் ஒரு பேரினவாத அரச கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் இது இலகுவாக கைகூடிவிடுகிறது. பேரினவாதமயப்பட்ட இலங்கை சூழலில் சிவிலியன்களும், சிவில் அமைப்புகளும், அரச நிர்வாக துறைகளும், நீதித் துறையும் மொத்த அரச கட்டமைப்பும் இந்த அழித்தொழிப்புக்கு நன்றாகவே பழக்கப்பட்டிருக்கிறது.

ஒரு புறம் தமிழர்களின் சுவடுகளை அழித்தொழிக்கும் போக்கும் மறு புறம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அதற்குப் பதிலாக பிரதியீடு செய்வதும் அதனை ஸ்தூலமாக நிலை நிறுத்துவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆக சிங்கள பௌத்த விஸ்தரிப்பு நடவடிக்கையும் இந்த நிலையை பன் மடங்கு பெருக்கிவிட்டிக்கிறது.

இலங்கையின் தொல்பொருள் திணைக்களம், தேசிய சுவடிகூடத்தினைக்களம், நூதனசாலை மற்றும் நூதனசாலை நூலகம், தேசிய நூலக சேவைகள் சபை என்பன பல்வேறு வடிவங்களில் இலங்கையின் வரலாற்று மூலாதாரங்களை ஆவணப்படுத்துவதிலும் களஞ்சியப்படுத்துவதிலும் முக்கிய அரச நிறுவனங்களாகும்.

செனரத் பரனவிதான
இலங்கையில் தொல்லியல் துறையையும், ஆவணப்படுத்தலையும் சிங்களமயப்படுத்தியத்தில் பேராசிரியர் செனரத் பரனவிதானவுக்கு பாரிய பங்குண்டு. தொல்லியலாளரான அவர் 1940 இலிருந்து 17 ஆண்டுகள் தான் இலங்கையின் தொல்லியல் ஆணையாளராக பதவி வகித்தார். ஆனால் அந்த குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள் பல செய்து பல தமிழ் பிரதேசங்களைக் கூட  சிங்கள பௌத்தர்களின் பூமி இது என்பதை நிறுவினார். தமிழர்களின் தாயகக்கோட்பாட்டை மறுத்து அன்றே பிடிவாதமான வாதங்களை முன்வைத்தவர் அவர். அவர் வெளியிட்ட பல நூல்கள் அனைத்தும் சிங்கள பௌத்த தொல்லியல் சம்பந்தப்பட்டதே.  அவர் எழுதிய “சிங்களவர்” (சிங்ஹளையோ) என்கிற நூல் அவற்றில் முக்கியமானது. இன்றும் சிங்கள பௌத்தர்கள் கொண்டாடும் முக்கிய அறிஞர் அவர். சிங்களவர்களின் வரலாற்றை வரைவிலக்கணப்படுத்தியத்தில் அவருக்கு முக்கிய பங்குண்டு. ஆனாலும் கணிசமான சிங்கள பௌத்தர்கள் அவரை தள்ளிவைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் வருகை தந்ததாக மகாவம்சம் கூறுவது பச்சைப் புழுகு என்றார். அப்படி ஒரு நிகழ்வு இலங்கையில் நடக்கவில்லை என்று அடித்துக் கூறினார். துட்டகைமுனுவால் கட்டப்பட்டதாக கூறப்படும் எல்லாளனின் சமாதி என்று அறியப்படும் இடம் சமாதியே இல்லை. அது “தகண தூப” என்கிற கட்டிடமே என்றும் வாதிட்டார். இன்றும் பேராசிரியர் நளின் டீ செல்வா போறோர் அவரை நிந்தித்தே எழுதுகிறார்கள்.

சென்ற வருடம் திவய்ன பத்திரிகைக்கு பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுமேத வீரவர்தன என்பவர் எழுதிய ஒரு நூல் விமர்சனத்தில் “தமிழர் தாயக மாயையை உடைப்பதற்கு இன்று நம்மோடு ஒரு செனரத் பரணவிதான இல்லை.” என்கிறார்.

இலங்கையின் இன்றைய இனவாத தேசியக்கொடியை தயாரித்தவர்களில் அவரும் ஒருவர். தேசியக் கொடி குழுவின் செயலாளராக முக்கிய பங்காற்றினார் பரணவிதான. இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று இன்று மறுக்கிறார்கள். அன்றே தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டுவருகிறது. தேசிய கீதத்தை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்ததும் பரணவிதான தான்.

சுவடி தேடிய அனுபவம்
ஆவணப்படுத்தலைப் பொறுத்தளவில் 1977க்கு முன்னரான பத்திரிகைகள் வெளியீடுகளை இலங்கை தேசிய சுவடிகூடத் திணைக்களத்திலும், (National Achives) மியூசியம் நூலகத்திலும் தேடிப் பார்க்க இயலும். 1977க்குப் பிந்திய வெளியீடுகள் பிரசுரங்களை தேசிய நூலக சேவைகள் சபை (National Library service board) இலும் பார்க்கலாம். இந்த மூன்று இடமும் ஏறத்தாழ நடந்து போகக் கூடிய தூரங்களில் அருகருகாமையில் தான் உள்ளன. தேவையான பகுதிகளை பிரதி எடுத்து வரமுடியும். 10 வருடங்களுக்கு முன்னர் வரை நூலொன்றில் இருந்து மூன்றில் ஒரு பகுதி வரை பிரதி எடுக்க அனுமதித்தார்கள். இப்போது அதனை 10 வீதத்தை மட்டுமே பிரதி எடுக்கலாம் என்கிற விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவற்றைப் பயன்படுத்தியதில் எனக்கு ஏறத்தாழ 24 வருட அனுபவம் உண்டு. தமிழ் ஆவணங்கள் பல திட்டமிட்டே காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்றன. அது  குறித்து விரிவாக சில கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறேன். அதுபற்றி விரிவான கட்டுரையொன்றும் எழுதப்பட வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த இடங்களை போதிய அளவு பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். கடந்த காலங்களில் தமிழர்கள் நுழையமுடியாதபடி செயற்கையான நெருக்கடிகள் இருந்தன. இவற்றுக்குள் நுழைவதில் தமிழர்களுக்கு இருந்த கடும் கெடுபிடிகள் அதனை அனுபவிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக யுத்தம் நடந்த காலப்பகுதியில் இதற்குள் நுழையும் தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார்கள். அங்கே சிவில் உடை தரித்த புலனாய்வுப் பிரிவினர் எப்போதும் இருந்து வந்தார்கள். அவர்கள் தமிழர்களை இலக்கு வைத்து அதிக விசாரணை செய்த பின்னர் தான் உள்ளே அனுமதித்தார்கள். 20வருடங்களுக்கு முன்னர் சிவராம், வ.ஐ.ச.ஜெபாலன் போன்றோர் கூட வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அங்கே போனபோது அப்படி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். எனக்கு இருந்த சிங்கள மொழிப் பரீச்சயத்தாலும் எனது ஊடக அடையாள அட்டையின் பாதுகாப்பிலும் என்னால் அவ்வப்போது சென்று எனது ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. இந்த பின்னணி இல்லாத சாதாரண தமிழ் ஆய்வாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்களின் நிலை மோசம் தான்.

உள் அனுமதி பெறுவதற்கும், ஆவணங்களை குறிப்பிடுவதற்கும் வழங்கப்படும் படிவங்கள் சிங்களத்திலேயே உள்ளன. அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்களில் தமிழர்கள் இல்லை. தமிழில் உதவி பெற முடியாத சூழல் பல்லாண்டுகளாக நீடித்தே வருகிறது. யுத்த காலத்தில் இருந்த கெடுபிடிகளின் போது வீணாக நம்மை சந்தேகப்பட்டு விடுவார்களோ என்று ஒரு பீதி அங்கே எப்போதும் நெருக்கிக் கொண்டிருக்கும். இப்போது அது இல்லை. ஆனால் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் ஆவணங்களைத் தேடிப் பெறமுடியாத நெருக்கடி எப்போதும் இருக்கும்.

சிங்கள ஆவணங்களின் மீது இருக்கும் கவனம், கரிசனை தமிழ் ஆவணங்களில் அங்கு கிடையாது என்பது அங்கு போய் அனுபவித்த அனைவருக்கும் தெரியும். உண்மையை சொல்லப்போனால் அங்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி இன்னமும் முழுமையாக பட்டியல்கள், தரவுகள் தொகுக்கப்படவில்லை. ஆகவே என்னென்ன இருக்கின்றன என்பது குறித்த விபரம் அறியும் வாய்ப்பில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு அதிகார மட்டத்தில் பணியாற்றத் தொடங்கிய நளாயினி என்பவர் தன்னால் முடிந்தளவு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த வெளியீடுகள் சிலவற்றை அவற்றின் பெயர், காலம் போன்றனவற்றை சிறிய கோப்பு ஒன்றில் தனது கையெழுத்தில் தொகுத்தார். அது தான் இன்றும் பல ஆய்வாளர்களுக்கும் பயன்படுகின்றன. ஆனால் அவர் தொகுத்தது சொற்ப அளவு தான் என்பதை அவர் விலகுமுன்னர் அவர் தெரிவித்திருந்தார். அங்கிருந்த இனவாத போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் குறுகிய காலத்தில் விலகி வெளிநாடு சென்று குடியேறிவிட்டார். அவர் விலகுமுன்னர் தேசிய சுவடிகூட திணைக்களத்தை எந்தளவு பயன்படுத்தலாம் என்பது குறித்து எனக்கு வழிகாட்டியதை இன்றும் நினைவு கூறுகிறேன். வரலாற்றோடு தொடர்புபட்ட எனது பல கட்டுரைகள்; அவரது அந்த வழிகாட்டலினாலேயே இன்றும் சாத்தியமாகிறது.

நூதன சாலை
கொழும்பிலுள்ள தேசிய நூதனசாலையின் பின்புறமாக அதே கட்டடத்தில் இன்னொரு நூலகம் இருக்கிறது. அந்த நூலகத்தில் மிகப்பழைய நூல்கள் ஆவணங்களைப் பார்க்க முடியும். உள்ளே என்னென்ன ஆவணங்கள் இருக்கின்றன என்பது குறித்த பட்டியல் சிறிய லாச்சுகளில் அடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள இலக்கங்களைக் குறிப்பிட்டு தமிழ் ஆவணங்களை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரிடம் கேட்டால் ஏறத்தாழ இருபதில் ஒன்று கிடைக்குமா என்பது கூட ஆச்சரியம் தான். “பட்டியலில் இருப்பதைத் தானே கேட்கிறேன் ஏன் இல்லை என்கிறீர்கள்?” என்றால் அவை தர முடியாத நிலையில் உள்ளன என்பார்கள். தமிழ் ஆவணங்களின் மீது அவ்வளவு அஜாக்கிரதையா? அவற்றை கொடுப்பதற்கு அஞ்சுகிறார்களா? அல்லது அழித்தே விட்டார்களா? இந்த ஏமாற்றத்தின் காரணமாக அங்கே போவதே வெறுக்கும். அங்கு செல்வதில் அர்த்தமில்லை என்று தோன்றும். ஆனாலும் சிங்கள ஆவணங்களுக்காக அங்கே போய்வருகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னர் அங்கே என்னை நன்கு அறிந்த அங்கு பணிபுரிந்த ஒரு தமிழர் இருந்தார். அவர் கூறிய தகவல்களின்படி மேலே ஒரு பெரிய அறையில் பல பழைய நூல்களும், ஆவணங்களும் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றில் பல தமிழ் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவை எறியப்பட இருக்கும் நூல்கள் என்பதை அவர் தெரிவித்திருந்தார். கையறு நிலையில் இருந்தேன். அவர் அப்படி கூறி சில வருடங்கள் ஆகின்றன. அப்போது அமைச்சர் சந்திரசேகரன் உயிருடன் இருந்தார். அவரிடம் இதனை எடுத்துக்கூறி அதிகாரத்திலுள்ள தமிழர்களால் இந்த நிலைமை குறித்து தேடிப்பார்த்து சரி செய்ய முடியும் என்றேன். அவர் உடனேயே அவரது சில அதிகாரிகளை அழைத்து குறிப்பெடுத்தார். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை என்பதை நான் அறிவேன்.


நூலக சேவைகள் சபை
தேசிய நூலக சேவைகள் சபையில் 1977க்குப் பிற்பட்ட பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், அரச வெளியீடுகள், ஆவணங்கள் என பலவற்றைப் பார்வையிடமுடியும், அதன் பிரதிகளைப் பெறமுடியும் அங்கேயும் ஒரு தமிழரையும் காணக்கிடைக்காது. படிவங்களும் சிங்களத்திலேயே இருக்கும். சில படிவங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. தேசிய நூலக சேவைகள் சபையானது எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் ஊக்குவிக்குமுகமாக வெளியீடுகளைக் கொள்வனவு செய்கிறது. ஆனால் தமிழ் வெளியீடுகளை போதியளவு கொள்வனவு செய்வதில்லை என்பது குறித்து பல்வேறு விசனங்கள் தொடர்கின்றன. அது தவிர சமீபகாலமாக அங்கே உள்ள ஆவணங்களின் பட்டியலை கணினியில் தேடக்கூடிய வசதி செய்திருக்கிறார்கள். மூன்று கணினியில் ஒன்று தான் ஒழுங்காக வேலை செய்யும். அதிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே தேடும் வசதி இருக்கிறது. தமிழில் கிடையாது. இப்படி இந்தத் துறையில் பாரபட்சத்துக்கு மேல் பாரபட்சம் தொடர்கின்றன.

இந்த விடயத்தை எந்த தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரத்திலிருந்த அமைச்சர்களும் இதுவரை கண்டுகொண்டதே இல்லை. இதுவரை திட்டமிட்டு அழிக்கப்பட்டவை மீள கிடைக்கப்போவதில்லை. குறைந்தபட்சம் இருப்பதையாவது ஆவணப்படுத்துவதும், அதனைப்பேணுவதும், கண்காணிப்பதும், அவற்றை தமிழ் மக்கள் கெடுபிடியின்றி நுகர்கின்ற சூழலை உருவாக்குவதும் இனிவருவோரின் கடமை.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates