Headlines News :
முகப்பு » , , » இரண்டு வரிகளில் இருநூற்றாண்டு வரலாறு - மல்லியப்புசந்தி திலகர்

இரண்டு வரிகளில் இருநூற்றாண்டு வரலாறு - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம்  3

இலங்கையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும பாடசாலைகள் மாகாண அரசாங்கத்துக்கு கீழ் வரும் பாடசாலைகள் என்ற குழப்பம் நிலவி வருவது அறிந்த விடயமே. தேசிய பாடசாலைகள் எனும் பெயரில் மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அதேநேரம் மாகாண சபைகள் என அமைக்கப்பட்ட பிரதேசம் சார்ந்த சபைக்கு கீழாக நிர்வகிக்கப்படும் பாடசாலைகள் மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும். இந்த நிலைமை இலங்கையின் சுகாதார துறையிலும் காணப்படுகின்றது. இதனை ஒத்த தன்மை இந்தியாவிலும் காணப்படுகின்றது. 

பல்கலைக்கழங்கள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் அதேவேளை இந்திய மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழும் இயங்குகின்றன. அததகைய ஒரு பல்கலைக்கழகமே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம். இதன் நிர்வாகம் நேரடியாக டில்லியுடன் தொடர்புடையது. இவ்வாறான மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் எந்த மாநிலக்காரரரும் துணைவேந்தராக பதவி வகிக்க முடியும். எனினும் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். 

துணைவேந்தர் பேராசிரியர் சு.நடராசன் மிக எளிமையானவராக மலையகத்தில் இருந்து தமிழகம் சென்ற குழுவினரை வரவேற்க காத்திருந்தார். அதேபோல் இந்த ஆய்வரங்கத்தினை தலைமையேற்று நடாத்துவதிலும் அதிக அக்கறைக் காட்டியிருந்தார். தலைமையுரையில் மலையகம் தொடர்பான அறிமுகத்துடன் சமூக வரலாற்றில் இலக்கியம் கொண்டிருக்கும் வகிபாகம் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார். 

தலைமைவுரை என மாநாட்டின் நோக்கம் குறித்து விரிவான உரையை தொடக்கவிழாவில் ஆற்றியவர் மாத்தளை சோமு. மலையக இலக்கிய செல்நெறியில் மாத்தளைக்கு என ஒரு தனியிடமுண்டு. மாத்தளை பகுதியில் இருந்து எழுதும் படைப்பாளிகள் தங்களது பெயருக்கு முன்னாள் மாத்தளை எனக் குறிப்பிட்டுக்கொள்வது ஒரு மரபாகிவிட்டது. மாத்தளை அருணேசர், மாத்தளை கார்த்திகேசு, பண்ணாமத்து கவிராயர், (பண்ணாமம் என்பது மாத்தளையின் மறுபெயர்), மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன், இப்படி பல பெயர்களுக்கு முன்னால் இந்த மாத்தளை அடைமொழி இருப்பதுபோல் மலையக வரலாற்றிலும் இந்த மாத்தளைக்கு ஒரு வரலாறு உண்டு. 

200 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்து படகுகளில் அழைத்துவரப்பட்ட மக்கள் மன்னாரில் இருந்து நடக்க வைத்தே மலையகப் பகுதிகளுக்கு தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவே சொல்லப்படுகின்றது. அவ்வாறு நடந்து வருகின்றபோது மலைப்பாங்கான பிரதேசம் ஆரம்பிக்கும் இடமாக மாத்தளை அமையப்பெற்றதால் அங்கு தங்கவைக்கப்பட்டே மலையகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இதனை மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை தனது தேயிலைத் தோட்டத்திலே கவிதைத் தொகுப்பில் 'மாத்தளைத் தமிழரூர்' என்ற வரிகளின் ஊடாக எழுதிச் சென்றிருப்பார். இந்த வரலாற்று நடைபயணத்தில்  இடைத்தங்கல் முகாம்போல அமைந்ததன் காரணமாகவே அங்கிருந்த மரத்தடியில் சிறு ஆலயம் அமைத்து மக்கள் வழிபடத்தொடங்கியுள்ளனர். அந்த சிறு ஆலயம்தான் இன்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என புகழ்பெற்று விளங்குகின்றது. 

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது திட்டமிட்டு இந்த ஆலயமும் அங்கு அமைக்கபட்டிருந்த தேரும் எரியூட்டப்பட்டதற்கு பிரதான காரணமே வரலாற்றை அழிப்பதுதான். அந்த நாட்களில் சிதைக்கபட்ட நகரங்களில் மாத்தளை முக்கியமானது. சிதறுண்ட தமிழர் வரலாறும் பெரியது. அவ்வாறு சிதறுண்டு சென்றவர்களுள் ஒருவரே மாத்தளை சோமு என்கிற சோமசுந்தரம். தனது தந்தையின் வியாபாரத்துடன் துணையாக நின்றவர் அந்த நாட்களிலேயே எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டு இலக்கியத்திற்குள் சங்கமமானவர்.  தோட்டக்காட்டினிலே... எனும் மூவர் இணைந்த சிறுகதைத்தொகுதியின் ஒருவராக இருந்து பேராசிரயர் க.கைலாசபதியின் முன்னுரையோடு அறிமுகம் கொண்டவர்.

 83 இனக்கலவரம் காரணமாக தமிழகம் சென்று பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரந்து சென்று வாழ்பவர். சிறுகதையாசிரியராக அறிமுகமாகி பின்னர் குறுநாவல், நாவல், குட்டிக்கதைகள், பயணக்கதைகள், வரலாற்று ஆய்வுகள், பயணக்கட்டுரைகள் என பன்னூலாசிரியாக பரிமாணம் பெற்றவர். புலம்பெயரந்து சென்றபின்னர் மலையகக் கதைக்களங்களுக்கு, புனைவிலக்கியத்துக்கு, அப்பாலும் சென்றுவிட்டாலும் மலையகம் தொடர்பான இவரது பற்றுதலும் அறிதலும், புரிதலும் காரணமாக எப்போதும் மலையகத்தவனாகவே இருந்துவருகிறார்.

 அவுஸதிரேலியாவில்  குடியேறிய பின்னரும் தமிழகத்துக்கும் இவருக்குமான தொடர்பு எப்போதும் நெருக்கமாக இருந்து வந்துள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்ற காப்பாளர்களில் ஒருவரான எம.வாமதேவன் அவுஸ்திரேலியா சென்றிருந்த சமயம் இடம்பெற்ற உரையாடல்களின் நீட்சியாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  மலையக இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை நடாத்தும் ஆரம்ப முயற்சிகள் இடம்பெற்றன. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதற்கான ஒழுங்கமைப்புகளை மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் முயற்சித்த போதும் அது கைகூடாத நிலையிலேயே மலையக இலக்கிய ஆய்வரங்கம் ஒன்றை திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது. 

மாத்தளை சோமுவின் தமிழகத்துடனான தொடர்புகளே இதற்கு  கால்கோல் இட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடக்க விழாவில் மையவுரையை ஆற்றுவதற்கு பொருத்தமானவராக அவரே தெரிவுசெய்யப்பட்டிருந்தார். மலையக மக்களின் இலங்கை வரலாற்றையும் தமிழகத்தில் அவர்கள் மறக்கபட்டிருப்பதையும் தனது மையவுரையில் விளக்கினார். ஈழத்தமிழர் என்றவுடன் அதனை யாழ்ப்பாணத் தமிழர்கள் என புரிந்துகொள்கின்ற மனப்பாங்கு தமிழகததில் நிலவுகின்றது என்றும் தமிழ்நாட்டில் இருந்து தொழிலுக்காக புலம்பெயரந்து சென்ற மலையகத் தமிழர்கள் பற்றிய தெளிவான விளக்கம் தமிழகத்தில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். 

மலையகத் தமிழர்கள் இலங்கையில் தமக்கான இலக்கிய செல்நெறி ஒன்றையே கட்டியெழுப்பியிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் வரலாறும் வாழ்வியலும் அதற்குள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த வரலாறும் வாழ்வியலும் ஆய்வு செய்யப்படல் வேண்டும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அந்த நோக்கத்ததுடனேயே இந்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் எடுத்துரைத்தார். 

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக மலையக கவிதை இலக்கிய செல்நெறி சம்பந்தமான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க சென்றிருந்த நான் (கட்டுரையாளர்) நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகிபாகத்தையும் கொள்ள வேண்டியதாயிற்று. மலையக மக்களின் இலக்கியம், இதழியல், சமூகவியல், கலை பண்பாட்டு வடிவங்களை ஆய்வு செய்யும் மாநாட்டில் அவர்களின் அரசியல் பக்கத்தின் அடையாளமாகவும் பரிணாமமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எனும் மக்கள் பிரதிநிதியாக தொடக்கவிழாவில் தொடக்கவுரை ஆற்ற வேண்டியிருந்தது. 

'இந்தியா, தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி எனும் ஊரைச் சேர்ந்த, பிச்சமுத்து அவர்களின் மகள் வேலம்மாள் அவரது மகன் மயில்வாகனம் அவரது மகன் திலகராஜா இலங்கை மலையகத்தில் இருந்து வந்து தொடக்கவுரை ஆற்றுகிறேன்' என்றும் 'இரண்டு வரிகளில் எமது இருநூறு வருடகால வரலாற்றை என்னால் இப்படிச் சொல்லிவிட முடியும்' என்றுமான எனது அறிமுகத்தின் ஊடாக தலைமையுரையில் மாத்தளை சோமு எடுத்துக்கூறிய வரலாற்றை யதார்த்தமாக எடுத்துச்சொன்னேன். தொடர்ந்து மாநாட்டுக்காக மலையகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் ஆளுமைகளை அவர்களது பின்புலத்தோடு அறிமுகம் செய்வதாக தொடக்கவுரையை அமைத்துக்கொண்டேன்.

 எமது குழுவின் தலைவராகவும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களையும், எழுத்தையும் சமூக அரசியலையும் இரண்டு தோள்களிலும் சுமந்துகொண்டிருப்பவராக எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களையும்  மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச் செயலாளராகவும் சிறுகதையாசியராகவும் விளங்கும் கோ.சேனாதிராஜா தொழின்முறை சட்டத்தரணி என்பதையும் அறிமுகம் செய்து இன்று இலங்கையில் நீதிபதிகளாகவும் மலையகத தமிழர்கள் செயலாற்றுகின்றனர் என்பதையும் நினைவுபடுத்தினேன். 

ஊடகத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ஊடகவியலாளர் கி.பொன்னுத்துரை, வீரகேசரி 'சங்கமம்' பொறுப்பாசிரியர் ஜீவா சதாசிவம், இணையத்தள செய்தியாளர் மகேஸ்வரி விஜயநந்தன் ஆகியோரோடு பத்திரிகை, எழுத்து, நாடகம் எனும் பன்முக ஆளுமை அந்தனிஜீவா அவர்களையும் அறிமுகம் செய்தேன். மலையக அரங்கியல் சார்ந்த கட்டுரைகளை சமர்ப்பித்த 'நிகர்' சஞ்சிகையின் ஆசிரியர் அ.லெட்சுமணன் , நாட்டாரியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த கலைஞர் வேலாயுதம் ராமர் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்ததோடு அவர்கள் இருவரும் பட்டதாரி ஆசிரியர்கள் என்பதையும் மலையகத் தமிழ் சமூகத்தில் இன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு அடுத்த படியாக திரட்சியாக சேர்ந்துநிற்கும் சமூகத்தின அடையாளமாக ஆசிரியர்களே திகழ்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன். 

இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று மேலைத்தேய நாடுகளில் வாழ்வதுபோல் மலையகத்தமிழர்களும் கணிசமான அளவில் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுள் இலக்கியம் படைப்போர் வெகுகுறைவு. எனினும் மாத்தளை சோமு அதில் விதிவலக்கானவர், அவர் இலக்கியம் படைப்பதோடு மாத்திரம் அல்லாமல் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் (சிட்னி) சங்கத்தின் தலைவராகவும் செற்படுவதையும் சுட்டிக்காட்டினேன். 

இறுதியாக ராஜதந்திர பதவிகளை வகிப்பவர்களாகவும் மலையகத் தமிழர்கள் முன்னேற்றமடைந்துள்ளமையின் அடையாளமாக தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி அவர்களையும் சபையோருக்கு அறிமுகம் செய்தேன். 

இலங்கையில் அனைத்துத் துறையிலும் மலையகம் உச்சத்தைத்தொட்டிருக்காவிடினும் எந்தத் துறையிலும் ஈடுபட மலையகம் தகைமையில் குறைந்தது அல்ல என்பதன் அடையளாமே இந்த அறிமுகம் என்பதனை தொடக்கவுரையில் நினைவுபடுத்த வேண்டியிருந்தது. தவிரவும் தாயகம் திரும்பியவர்களாக தமிழகம் சென்ற மலையக உறவுகள் பலர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். அவர்களையும் அறிமுகம் செய்திருந்தேன்.

 அவர்கள் தொடர்பான விபரங்களை அடுத்து வரும் வாரங்களில் பார்க்கலாம். 

(நன்றி சூரியகாந்தி)Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates