‘பெருந்தோட்டங்கள் பராமரிக்கப்படுவதில்லை, புற்கள் வளர்ந்து மீண்டும் காடாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு பரவலாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்களே பராமரிக்கப்படாமல் மூடப்படுவதாக தோட்டத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தேயிலைப் பயிர்ச்செய்கை நிலம் குறைவடைந்துள்ளதாகவும், போதிய உற்பத்தி இலக்கை எட்ட முடியாதிருப்பதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு போதிய வேலை கிடைப்பதில்லையென்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பல தோட்டங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இந்தச் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. பேச்சளவிலேயே தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டக் கம்பனிகள் செயற்படுகின்றன.
தோட்டங்களில் வேலை குறைவு காரணமாகவே தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி வெளியிடங்களில் வேலைக்குச்செல்கின்றனர். கொழும்பு போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் தொழில்துறையில் தொழிலாளர்களாக தோட்டங்களிலிருந்து சென்ற தொழிலாளர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அங்கு இவர்களுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் 2000 முதல் 2500 ரூபா வரையில் நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதுபோன்றே தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள், ஆடை உற்பத்தி நிலையங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றிலும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.
தோட்டங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையில் கொட்டும் மழையிலும் கடும்வெயிலிலும் வேலை செய்தால் கிடைப்பது சுமார் 850 ரூபாதான். 1000 ரூபா சம்பள உயர்வுக்காக பெரும் போராட்டம் நடத்தியும் கிடைக்கவில்லை. ஆனால் கொழும்பில் 2000 முதல் 2500 ரூபா வரை நாட் சம்பளம் கொடுத்து தொழிலாளரை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.
அதிகளவிலான பெருந்தோட்டப் பெண்கள் நகரப் பகுதிகளிலுள்ள செல்வந்தர்களின் வீடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ளனர். இவர்கள் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட வேண்டியதொரு அவசியமில்லாமல் செல்வந்தர்களின் வீடுகளில் பணிபுரிந்து வருவதுடன் சுமார் 20,000 ரூபாவரை மாதச் சம்பளமாகப் பெறுகின்றனர்.
அதேபோன்று இளம் பெண்கள் நகரங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் கடமை புரிகின்றனர். காலை –பகல் உணவுடன் நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.
அத்துடன் இன்று கொழும்பிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், கடைகள், காட்சியறைகள் போன்றவற்றில் மலையக யுவதிகளே பெரும்பாலும் தொழில் புரிகின்றனர். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகரங்களில் மட்டுமின்றி மலையக நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் மலையக யுவதிகளே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளுடன் நியாயமான சம்பளம் வழங்கப்படுகிறது.
கொழும்பிலும் வெளிநகரங்களிலும் தற்போது பெரியவர், சிறியவர், ஆண்/ பெண் என்ற வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் தொழில் கிடைக்கின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் இல்லை. பெரும்பாலானோர் வெளியிடங்களில்தான் வேலை செய்கின்றனர்.
1000 ரூபா சம்பளத்தைக்கூட கொடுக்க மறுத்த பெருந்தோட்டக் கம்பனிகள், தற்போது தங்களது தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய தொழிலாளர்களின்றி தடுமாறிக்கொண்டிருக்கின்றன. வெளிப்படையாகவே இதனை தெரிவித்து வருகின்றன. உண்மையில் இந்தக் கம்பனிகள் இப்போது என்ன சொல்கின்றன?
தங்களது தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய தொழிலாளர்கள் இல்லை. இதனால் தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டங்களை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் புலம்புகின்றனர். எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.
தோட்டங்களில் அதிக வேலைப்பளு, மிகக் குறைந்த சம்பளம், அதிகரித்த கட்டுப்பாடுகள் என்பவை காரணமாக புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு விரும்பாதவர்களாகவே காணப்படுகின்றனர். குடும்பச் சூழல், வீடு, கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றை மேற்கொள்ளும் இளைஞர்களே தோட்டத் தொழிலில் ஓரளவு ஈடுபட முன்வருவார்கள்.
தோட்டத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டுமானால் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.
(1000 ரூபா என்ற இலக்கு தற்போதைய கால கட்டத்தில் போதுமானதா என்பது கேள்விக்குறியாகும்) எனவே நல்லதொரு சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வீடமைப்பு பொது வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
தோட்டத் தொழில் துறையில் நவீன உற்பத்தி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
தேயிலை உற்பத்தியில் இலங்கையில் மாத்திரமே இன்றளவு பாரம்பரிய உற்பத்தி முறை பின்பற்றப்படுகிறது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு அத்துறையில் இளைஞர்களை நாட்டம் கொள்ள வைக்க வேண்டும்.
பழைய தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு மீள் நடுகை மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டங்களில் கைவிடப்பட்ட தரிசுக் காணிகளிலும் தேயிலை மீள் நடுகை செய்யவேண்டும். எஞ்சியுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச்செய்கைக்காக தோட்டங்களில் தொழில் புரியும் இளைஞர் யுவதிகளுக்கே வழங்க வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை பாதுகாக்க முடியும். பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்பட்டால் பெருந்தோட்டத் தொழில் துறையை ஒரு போதும் மீளக்கட்டியெழுப்ப முடியாது.
இவ்விடயத்தில் அரசாங்கமும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்றினை தெரிவு செய்து அந்தக் குழுவிடம் தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பது பற்றியும் அதனூடாக அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்வது பற்றியதுமான ஆய்வறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு குறுகிய காலத்திட்டமாக அதற்குத் தேவையான நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் –அரசாங்கம் –பெருந்தோட்டக் கம்பனிகள் ஆகிய மூன்றும் இணைந்தே பெருந்தோட்டத் தேயிலைத் தொழிற்துறையை மேம்படுத்த முடியும். ஒன்றை விட்டு ஒன்று தனியாக செயற்பட முடியாது. இது அனுபவத்தில் கற்றுக்கொண்ட விடயம். எனவே மூன்று துறையும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
இதற்கு ஆரம்ப சுழி போடுவது யார்? அரசாங்கம்தான் இதனைச் செய்யவேண்டும். அதனைச் செய்யும் சக்தி அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது. அரசாங்கம் செய்யுமா?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...