Headlines News :
முகப்பு » , , , , » 13 படையினரும் 83 கலவரமும் - என்.சரவணன்

13 படையினரும் 83 கலவரமும் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 33
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”
குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்த நாள் அவர்களின் இறுதி ஆசையைக் கேட்டபோது குட்டிமணி ஆற்றிய உரையில் கூறியது அது.

தமிழீழத்தைக் காண அந்தக் கண்களை மிச்சம் வைக்கப்போவதில்லை என்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த சிங்களக் கைதிகள் வெறித்தனமாக அந்தக் கண்களை நோண்டி எடுத்தனர். மிகக் கொடூரமாக அவர்களை சித்திரவதை செய்து கொன்றனர். மொத்தம் 53 தமிழ் சிறைக்கைதிகள் இரு நாட்களாக அந்த சிறைக்குள் நிகழ்ந்த தொடர் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டனர்.

83 கலவரத்தின் கோரமான சம்பவங்களில் அதுவும் ஒன்று. ஆனால் இந்த வன்செயல்களுக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த திருநெல்வேலி சம்பவம்.
திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 படையினர் 
சாள்ஸ் அன்ரனிக்காக பழி வாங்கல்
திருநெல்வேலியில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலானது அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் புலிகளின் தலைமையைச் சேர்ந்த பிரபாகரனின் நெருங்கிய தோழன் சாள்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதகாகவே நடத்தப்பட்டதாக பிரபாகரன் பின்னர் தெரிவித்தார். பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய நேர்காணலின் போது அந்த உண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

ஜூலை 23. இரவு 9.45. குருநகர் முகாமிலிருந்து இராணுவ ஜீப்களும், கவச வாகனங்களும் இரண்டாம் லெப்ரினன்ட் வாஸ் குணவர்தன இரவு ரோந்துக்காக புறப்பட்டன. குருநகர், யாழ்ப்பாணம், நாகவிகாரை, நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கொண்டாவில்ம் கள்ளியங்காடு, மாதகல் ஆகிய பகுதிகலில் இரவு ரோந்துக்காக அன்றைய தினம் அனுப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தினருகில் ஏற்பட்ட வாகன நெரிசலின் காரணமாக  திருநெல்வேலி தாண்டிய இராணுவ வாகனங்கள் வேகத்தை குறைக்க நேரிட்ட அதே வேளை பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கவச வாகனத்தின் முன்னால் இருந்த ஜீப் வண்டி தூக்கி எறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ வாகனங்கள் சுற்றி வளைக்கப்பட்டு  அவற்றின் மீது கைக்குண்டுத் தாக்குதலும், பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. கொல்லப்பட்டிருந்த படையினர் போக உப்பாலி பெரேரா, சுமதிபால என்கிற இரு படையினர் மாத்திரமே காயங்களுடன் தப்பி எதிர்த்தாக்குதல் நடத்தி பின் வாங்கி காயங்களுடன் தப்பிச் சென்றனர்.


இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் செல்லக்கிளி கொல்லப்பட்டார். இராணுவத்தினரின் ஆயுதங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கைப்பற்றிவிட்டு மறைந்து போயினர் விடுதலைப் புலிகள்.

ஸ்தலத்திலேயே 11 பேர் போக படுகாயமடைந்த இரு படையினரும் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர்களும் அடுத்த நாள் 24 அன்று இறந்து போனார்கள்.

24ஆம் திகதி முற்பகல் தமது சக படையினர் கொல்லப்பட்ட ஆத்திரத்தைத் தீர்க்குமுகமாக குருநகர், பலாலி, யாழ்ப்பாணம் கோட்டை பகுதிகளிலிருந்த இராணுவ முகாமிலிருந்து வந்த படையினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கும், தாக்குதலுக்கும் அப்பாவித் தமிழர்கள் பலியானார்கள்.

இராணுவத்தினரின் உடல்களை அரச இராணுவ மரியாதையுடன் வட பகுதியிலேயே புதைப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் “எனது வீரர்கள் நாய்கள் போல் கொல்லப்பட்டுள்ளனர். நாய்கள் போல் அவர்கள் புதைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்” என மேஜர் ஜெனரல் வீரதுங்க யாழ்ப்பாணத்தில் புதைக்கும் முடிவுக்கு இணங்க மறுத்துவிட்டார்.

1981 ஒக்டோபரில் முதலாவது தடவையாக புலிகளால் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்டிருந்தாலும் இலங்கை இராணுவத்தின் மீதான முதலாவது திட்டமிட்டத் தாக்குதல் திருநெல்வேலித் தாக்குதல் தான் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட “போர்ப்பதையில் நந்திக்கடல்” என்கிற நூலில்மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விளக்குகிறார்.

பதின்மூன்று இராணுவத்தினரதும் உடல்களும் வேண்டுமென்றே பொலித்தீன் பைகளில் போடப்பட்டு விமானமூலம் இரத்மலானைக்குக் கொண்டுவரப்பட்டன. அந்த செய்தி காட்டுத் தீ போல் மேலும் இனவாத ரீதியில் சோடனை செய்யப்பட்டு வேகமாக பரப்பப்பட்டன.

இது சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் தாக்குதலாக சித்திரிக்கப்பட்ட செய்திகளால் சிங்களவர்கள் ஆவேசப்படுத்தப்பட்டனர். சிதைந்த உடல்களை பொலித்தீன் பைகளில் போட்டுக் கொழும்புக்கு கொண்டு போவதைப் போல காட்டப்பட்டன. துண்டுகளாகவும் சிதறல்களாகவும் இராணுவ வீரர்களின் உடல்கள் பொலீத்தீன் பைகளில் வந்துள்ளன என்ற செய்தி தென்னிலங்கை எங்கும் பரவியது. இராணுவ அதிகாரிகள் திட்டமிட்ட இந்தச் செயலால் சிங்கள மக்கள் கொதித்தெழுந்தனர்.

பொரல்லையில் தொடங்கிய பதட்டம் - கலவரமாக ஆகியது
சடலங்களின் அரசியல்
கொழும்புக்கு உடல்கள் வந்து சேர்வதற்கு முதலே நாடெங்கும் தகவல் பரவிவிட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி 4.00 மணிக்கு இரத்மலானைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் பலாலியில் இருந்து இரவு 7.30 மணிக்குத்தான் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு இரத்மலானைக்கு வந்து சேர்ந்தது. பொரல்லை கனத்தை மயானத்தில் 5000க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் குழுமியிருந்தார்கள். 13 சவக்குழிகள் வெட்டப்பட்டு தயார்படுத்தப்படிருந்தன. ஆனால் அதற்குள் சடலங்களை குடும்பத்தினரிடமே கையளிப்பதற்காக நேராக இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்தி பரவியது. வீணான வதந்திகள் பரவவும், மோசமான பதற்ற நிலை உருவாகவும் இந்தத் தாமதமும் முக்கிய காரணமாகும். துவேசமான மனநிலை அங்கு மேலிடத் தொடங்கியது. இந்த தாமதத்தால் கனத்தை மயானத்தில் கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் பெருகத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல அங்கு குழுமியிருந்தவர்கள் பரஸ்பரம் ஆத்திரங்களை வெளிக்காட்டத் தொடங்கினர்.

சிங்களக் காடையர்களும் வெகுண்டெழுந்தனர். பொலிஸ் மா அதிபர் உருத்திர ராஜசிங்கம், உதவிப் பொலிஸ்மா அதிபர் எர்னஸ்ட் பெரேரா, பொலிஸ் அத்தியட்சகர் கபூர், சார்ஜண்ட் வெலிகல ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகள் முன் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி இரவு பொறளைச் சந்தியில் உள்ள தமிழருக்குச் சொந்தமான உணவு விடுதி ஒன்று தாக்கி நொறுக்கப்பட்டது முதல் கலவரம் ஆரம்பமாகியது. பொரல்லையிலிருந்து ஆரம்பமானது அந்தக் கலவரம். செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது போன்று கலவரமும் திம்பிரிகஸ்யாய, நாஹேன்பிட்டிய, கிரில்லப்பனை, அன்டர்சன் பிளட் போன்ற இடங்களுக்கு பரவி பின் கொழும்பை ஆக்கிரமித்து கொண்டது.  அன்று ஞாயிறு தினம். அன்றிரவு தமிழர்களுக்குச் சொந்தமான பல கடைகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.

பொரல்லை பஸ் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சுற்றியிருந்து சித்திரவதை செய்துகொண்டு ஆடும் புகைப்படம் (புகைப்படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க) இன்றளவிலும் பிரசித்தம் பெற்றது.

கண்ணில் பட்ட தமிழர்கள் இரும்புகளாலும், பொல்லுகளாலும் தாக்கப்பட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டகொள்ளையர்கள் கொல்லையடிக்கப்பட்டவற்றை வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். எஞ்சியவற்றை ஏனையோர் கட்டிக்கொண்டு சென்றார்கள். இப்படி கொள்ளையடிதவர்களை, சிங்களவர்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும், தமிழர்களும் கூட இருந்தார்கள் என்பதை இங்கு நினைவு படுத்தியே ஆக வேண்டும்.

இனவாதிகள் – காடையர் – படையினர்
கொல்லப்பட்ட தமிழர்களின் சடலங்கள் தெருக்களில் அநாதரவாக சிதறிக் கிடந்தன. தெருக்கள் வீசியெறியப்பட்ட பொருட்களால் சின்னாபின்னமாக காட்சியளித்தன.

தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளும், தமிழர்களின் வியாபாரஸ்தளங்களாக அறியப்பட்ட பகுதிகளும் பிரதான இலக்குகளாக ஆக்கப்பட்டன. இனவாத கும்பலும் அவர்களோடு இணைந்து கொண்ட கொள்ளையடிக்கும் கூட்டமும் வீதிகளை நிரப்பின. இராணுவம், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இந்த கொடுமை அரங்கேறின. பல இடங்களில் அவர்களே நேரடியாக இந்த வன்செயல்களில் ஈடுபட்டார்கள். ஏனைய இடங்களில் அட்டூழியங்களை கண்டும் காணாது பாராமுகமாக இருந்தார்கள். இப்படி அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த கலவரம் இலங்கையின் வரலாற்றையே திசைதிருப்பிப் போட்டது என்றால் அது மிகையில்லை.

“சிங்கள இனத்தை மீட்போம்!” “அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”, “சிங்களப் படைக்கு வெற்றியுண்டாகுக”,  போன்ற கோஷங்களை எங்கெங்கும் காண முடிந்தது.

கொழும்பு சொய்சாபுர தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்த 92 தமிழர்களின் வீடுகளில் 81 வீடு தாக்கியழிக்கப்பட்டிருந்தன.

தமிழர்களின் வீடுகளும், சொத்துக்களும் இலக்கு வைத்து தாக்கப்பட்டவேளை தாக்கியவர்களின் கைகளில் தயார்படுத்தப்பட்டிருந்த விலாசப் பட்டியலையே கொண்டிருந்தனர். அவை வாக்காளர் பட்டியலைக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்தவை என்கிற தகவல் பல இடங்களில் பதிவாகியிருக்கின்றன.
தமிழ் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்துச் செல்லும் கூட்டம் - 25.07.1983

25ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவிருப்பதாக அன்று காலை அறிவிக்கப்பட்டிருந்த போது மேலும் மோசமாக வன்செயல்கள் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் நான்கு மணிக்கு முன்னகர்த்தப்பட்டு, அதன் பின்னர் 2 மணிக்கு முன்னkaர்த்தப்படுமளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தன. ஆனால் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது கூட கொழும்பு, களுத்துறை, மலையகப் பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கவே செய்தன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவசிதம்பரத்தின் வீடும் எரிந்து கொண்டிருந்தது. அரசாங்கம் உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தும் அது உடனடியாக நடக்கவில்லை. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதகான முதற்கட்ட நடவடிக்கை அதுதான்.  ஆனால் ஜே.ஆர். அதனைச் செய்யவில்லை.

‘இலங்கை: பெரும் இன அழிப்பும் அதன் பின்னும்’ (Sri Lanka: The Holocaust and After) என்ற நூலில் எல்.பியதாச இப்படி பதிவு செய்கிறார்.
“நிகழ்ச்சி தொடங்கியிருந்தது; அது ஜே.ஆரின் இல்லம் அமைந்திருந்த வோட் ப்ளேஸின் எல்லையிலேயே ஆரம்பித்திருந்தது. ஜே.ஆர் அன்றிரவு அங்குதான் இருந்தார். அவருடைய விசேட இராணுவப் பிரிவின் பாதுகாப்புடனும் ஆயுதம் பொருத்திய கார்கள் மற்றும் டாங்கிகளுடனும் நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் பற்றி ஜே.ஆருக்கு அறியத் தந்துகொண்டிருந்தார்கள் அதிகாரிகள். அவர்கள் கூட உடனடியாக ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என நம்பியிருந்தார்கள். ஆனால் அது நிகழவில்லை”.

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“உண்மையைச் சொல்வதானால், ஜே.ஆர்.  ஜெயவர்த்தனவின் வீட்டின் எந்த யன்னலிலிருந்து பார்த்தாலும் கொழுந்து விட்டெரியும் நெருப்பைக் காணக்கூடியதாக இருந்திருக்கும். பொலிஸாருக்கும் என்ன நடந்ததென்று தெரியவில்லை; பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு மூலம் கலவரத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்;”
இது பற்றித் தன்னுடைய, ‘நெருக்கடியில் இலங்கை: 1977-88’ (Sri Lanka in crisis, 1977-88) எனும் நூலில் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, “அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையைச் சொல்வதானால், மறுநாள் நிலைமை இன்னும் மோசமாகியது. அரசாங்கம் மறுநாள் மாலைவரை முன்னேற்றகரமாக எதையும் செய்யவில்லை” என்கிறார். 

ஜே.ஆரின் மகன் ரவி ஜயவர்த்தனவின் தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்ட முதலாவது மனைவி சாமைன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு படையை ஜே.ஆர் அனுப்பியிருந்ததாகவும் பதிவுகள் இருக்கின்றன.

சிறிமாவோ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியர் நீலக் காற்சட்டையுடனும், பனியனுடம் அவரது வெள்ளவத்தை வீட்டிலிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் வெளியே இழுத்து வரப்பட்டார்.

இத்தனையும் இராணுவத்தினரின் முன்னிலையில் நிகழ்ந்தன. அங்கிருந்த ஒரு இரானுவதினனிடம் தான் முன்னால் அமைச்சர் என்று எடுத்துக் கூறியபோது “பலயங் யண்ட” (போய்த் தொலை) என்று கூறியபடி நின்றதாகவும் ராஜன் ஹூல் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆனால் அவருக்கு ஏதேனும் நேருமுன்னர் வேறு இராணுவத்தினர் வந்து அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
1983 vauxhall street
கொழும்பைத் தாண்டி அடுத்தடுத்த நாட்களில் மலையகப் பகுதிகளில் அந்த கலவரம் தாண்டவமாடின. மலையகத்தில் மோசமான கொடுமைகளை அரங்கேற்றினர். இழப்புகள் குறித்து பல வகையான தரவுகள் கூறப்படுகிற போதும் ஏறத்தாள 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கருதமுடியும். 23000க்கும் மேற்பட்டோர் சொந்த வீடுகளை இழந்தார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்களும் பதிவாகின. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள்.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலர் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் சென்றார்கள். மலையகத்திலிருந்து பலர் வடக்குக்கு அகதிகளாக சென்று குடியேறினார்கள். இந்த நிகழ்வுகள் நாட்டை விட்டு ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையச் செய்தது. இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் நிலையை உருவாக்கியது. தமிழர்களின் போராட்டத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கும் நிலையை உருவாக்கியது. இந்தியாவின் பல இடங்களில் இயக்கங்களுக்கான போர்ப்பயிற்சிகளை வழங்கும் முகாம்கள் அமைக்குமளவுக்கு அதன் தலையீடு நீண்டது. தமிழ் மக்கள் மத்தியிலிருந்து விடுதலை இயக்கங்களுக்கான ஆதரவை பெருக்கியது. பலர் போராளிகளாக ஆயினர். உலக அளவில் தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. அதுவரை கிடைத்த அனுதாபம் ஆதரவு நிலைக்கு இட்டுச் சென்றன.

முதலாவது ஈழப்போரின் ஆரம்பம் இந்த கலவரத்திலிருந்து தொடங்குகிறது.

துரோகங்கள் தொடரும்...

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates