தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 6
'பொது ஜனங்களிடையே உணர்ச்சியைக் கிளப்ப மூவகைச் சாதனங்கள் உண்டு.பிரசுரங்கள் மூலம் உண்டாக்குவது முதலாவது. பத்திரிகைகளும், புஸ்தகங்களும், வேறு பிரசுரங்களும் ஒருவாறு பலம்கொடுக்கும் எனினும் போதிய அளவு கொடுக்கும் என எண்ணவிடமில்லை. நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். இனாமாய்த் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுப் பரப்புவதற்காகச் செலவாகும் தொகைக்குத் தக்க பலன் கிடைக்குமென்பதே சந்தேகம்.
பிரசுரங்கள் மூலம் அறிவைப் பரப்புவது இரண்டாவது ஆகும். பிரசுரங்களைவிட பிரசங்கங்கள் அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனினும், அதுவும் போதிய பலனைக் கொடுக்கும் என்று எண்ண இடமில்லை. மூன்றாவதாக நமக்குள்ள சாதனங்கள் நாடகம் மூலம் ஆகும்....'
இவ்வாறு 'இலங்கைத் தோட்ட இந்திய தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு' எனும் நாடகம் எழுதப்படுபவதன் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார் கோ.நடேசய்யர். இப்படி அவர் சொன்னது 1936 ஆம் ஆண்டு. மலையக மக்கள் உணர்வுபெறவேண்டுமெனில் எவ்வாறான உத்திகளைக் கையாளவேண்டும் என அவர் விபரித்துச் செல்கின்றார்.
நாடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த கோ.நடேசய்யர். 'கோவில் திருவிழாக்காலங்களில் பள்ளுப்பாடி காப்புக் கட்டுவது என்ற புராதன வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. புராதன முறைப்படி பள்ளு நாடகம் நடாத்தப்படாவிட்டாலும் அந்தப்பெயர் கொண்டு ஏதோ ஒரு பாட்டைப்பாடி காரியங்கள் முடிக்கும் வழக்கமிருக்கிறது. அவ்வித சந்தர்ப்பங்களில் பிறநாடுகளுக்கு சென்றவர்களின் பரிதாப நிலையை உள்ளது உள்ளபடி காட்ட கூடிய முறையில் நாடகங்கள் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யப்படுவதுடன் அவர்களுடைய செல்வ நிலையை உயர்த்துவதற்கான காரியங்களும் கைகொள்ளப்படுமானால் இந்திய கிராமவாசிகள் கூடிய சீக்கிரம் விருத்தி அடைவார்கள் என்பது திண்ணம்' என குறிப்பிடுகின்றார்.
1990 கள் வரை மலையகத் தோட்டப்பகுதிகளில் திருவிழா காலங்களில் நாடகம் போடும் கலாசாரம் இருந்து வந்தது. ஐந்து நாள் திருவிழா எனில் அதில் ஒரு நாள் இரவை நாடகத்திற்கு என ஒதுக்கிக்கொள்வார்கள். அந்த தோட்டத்தில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தாமே அதனை இயக்கி விடியும் வரை மேடை நாடகம் அரங்கேறும். பிற பிரதேச இசைக்கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள். சுற்றுவட்டாரங்களில் இருந்து நாடகம் பார்க்க வருவார்கள்.
தொன்னூறுகளுக்குப்பின்னான காலப்பகுதியில் இதுவே இசைக்குழுக்களின் இசைக்கச்சேரியாக மாறி சினிமாப்பாடல்களை அவர்கள் பாட கேட்டு ஆட்டம் போடும் நடைமுறையாக அது மாறிவிட்டது. இப்போது திருவிழா கால நாடகம் என்பது அறவே மலையகத்தில் இல்லை எனலாம். அதே நேரம் நாடகம் போடுவதற்கு பதிலாக நாடகம் பார்ப்பது எனும் கலாசாரம் பல்கிப்பெருகிவிட்டது. நடேசய்யர் சொல்வது போல தொழிலாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி அவர்களது பொருளாதார நிலையை உயரத்திக்காட்டும் முயற்சியாக இப்போதைய நாடகங்கள் இல்லை. இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் குடும்பத்தை கூறுபோடும் நாடகங்களையே பார்க்கப் பழகியிருக்கிறோம்.
நாடககக்கலை மீது அதீத நம்பிக்கைக் கொண்டிருந்த கோ.நடேசய்யர் அந்த காலத்திலேயே அதனை நூலாக்கி வெளியிடவும் முனைந்திருப்பது பாரிய ஓர் அர்ப்பணிப்பைக்காட்டுகின்றது. அந்த நூலை இன்று ஏறக்குறைய எண்பது வருடங்கள் கழிந்த நிலையில் அந்தனிஜீவா அவர்களின் முயற்சியினால் குமரன் பதிப்பகத்தின் ஊடாக மறுபதிப்பு செய்திருப்பதும் அதனை தமிழ்நாட்டில் இடம்பெற்ற மலையக இலக்கிய ஆய்வரங்கில் வெளியிட்டு வைத்தமையும் மிகுந்த பாராட்டுக்குரியது. விரைவில் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த நாடக நூல் மலையக மக்களின் இலங்கை வருகை குறித்த வரலாற்றுப்பதிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமகாலத்தில் இடம்பெற்ற விடயத்தை அதே காலத்தில் அந்த மக்களுடன் மக்களுக்காக பணியாற்றிய தலைவர் ஒருவரால் எழுதப்பட்டது என்கின்ற அடிப்படையில் இந்த நூல் முக்கியம் பெறுகின்றது.
இந்த நூலின் பிரதியை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து அந்தனிஜீவாவுக்கு பெற்றுக்கொடுத்த மாற்றுவெளி ஆய்விதழின் ஆசிரியர் அ.மங்கை தனது குறிப்பில் அரசியலில் தீவிரமாக பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சி என்று குறிப்பிடுகின்றார். இலங்கைக்குச் சென்ற இந்திய வம்சாவளியினரின் வாழ்முறை குறித்த சித்திரிப்பாக இந்நாடகம் அமைந்துள்ளது. கங்காணிகள், துரைமார் ஆகியோரின் போக்கும், இந்திய அரசு இவ்வாறு வேலைக்குச் சென்ற மக்களிடம் எடுத்துக்கூறிய சட்டங்கள், தொழிலாளர் நலத்துக்கான சங்கப்பணி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன என நாடக உள்ளடக்கம் பற்றி அ.மங்கை குறிப்பிடுகின்றார்.
எனவே அந்த காலத்தில் மலையக சமூகத்துக்கு எது தேவையான விடயங்களாக இருந்தனவோ அதை நாடக வடிவில் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை கோ.நடேசய்யர் முன்னெடுத்திருக்கினாறார் என்பது தெளிவாகின்றது. மேலும் 'நானறிந்த வரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றை எழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாக இந்நாடகத்தைக் காணலாம் என ஆய்வாளர் அ.மங்கை குறிப்பிடுவது நடேசய்யரின் முக்கியத்துவத்தைக் குறித்து நிற்கிறது.
அ.மங்கையின் கூற்றுக்கு மகுடம் வைத்தாற்போல 'ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் நடேசய்யர்' என ஆய்வாளர் மு.நித்தியானந்தன் கோ.நடேசய்யர் தொடர்பாக எழுதிய குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் காட்டுத்தர்பார் நடாத்திய தோட்டத்துரைமார், தோட்டத்தொ ழிலாளர்கள் மீது மேற்கொண்ட குரூர அடக்குமுறைகளை வெளிப்படுத்தி சரண் சட்டோ பாத்யாய என்பவர் 1875 ல் மேடையேற்றிய நாடகமானது காலனித்துவத்துக்கு எதிரான வலிமை யான ஆயுதமாக நாடகங்கள் செயற்படும் அபாயச்சங்காக வெள்ளை அதிகார வர்க்கத்தினருக்கு ஒலித்தது.
இவ்வாறு தொடர்ந்து நாடகாசிரியர்கள் வெளிப்படையாகத் தாக்குவதை சட்டவிரோதமாக்கும் வகையில் 1876 ஆம் ஆண்டு நாடக அரங்காற்றகைச் சட்டம் (Dramatic Perfomance Act of 1876) அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நாடக மேடையேற்றங்களை தடைசெய்து சட்டமியற்றி அறுபது ஆண்டுகளின் பின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து எதிர்க்குரல் எழுப்பும் புரட்சிகர நாடகாசிரியராக நடேசய்யரைக் காண்கிறோம் என மு.நித்தியானந்தன் தனது குறிப்பிலே தெரிவிக்கின்றார்.
இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர சுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடக நூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான் நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும் எனவும் மு.நித்தியானந்தன் குறித்துரைக்கின்றார்.
1927, 1928, 1936 ஆகிய காலப்பகுதிகளில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த நாடக எழுத்து முயற்சிகள் அன்றைய நாடகப்போக்கினை கோடிட்டு காட்டிய போதும் அன்றாடம் உழைத்து அல்லலுறும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுரண்டப்படுவோரின் பிரச்சினைகளுக்கும் இந்த நாடகங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. நாடகங்களை இயற்றியவர்கள் தமது சைவ சித்தாந்த அறிவினையும் பா புனையும் ஆற்றலையும் வெளிப்புடுத்தும் கருவியாகவும் நாடகங்களை கருதிய நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு வாழ்க்கையை அவர்களின் பேச்சுவழியில் நாடகமாக்கிய நடேசய்யர் வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலை நாடக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முனைந்த புரட்சியாளராகவே தென்படுகின்றார் என மு.நித்தியானந்தன், கோ.நடேசய்யரின் வகிபாகத்தை விபரிக்கின்றார்.
இந்நாடகத்தின் நோக்கம் எனும் தலைப்பில் கோ.நடேசய்யர் இந்த நூலுக்கு எழுதியுள்ள குறிப்பில், தெனனிந்தியாவில் அதிலும் நெற்களஞ்சியம் என்று பெயர்பெற்றுள்ள தஞ்சை, திருச்சி ஜில்லக்களினின்றும், குடியானவர்கள் தங்கள் தங்கள் நிலங்களையும் பயிர் செய்யாது விட்டுப் பிறநாடு சென்றுள்ளார்கள் என்பதை கவனிக்கையில் நமது நாடு எவ்வித கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பது வெளியாகும்.
நமது நாட்டில் உள்ள நிலங்களைப் பயிர்ச்செய்ய போதிய தொழிலாளர் கிடைக்காதிருக்கையில் பிற நாடுகளில் நம்மவர்கள் கஷ்டப்பட்டு சிறுமைப்படுவதை கவனித்து, உணர்ந்து அதன் காரணத்தை நீக்க முயலவேண்டுவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமையாகும் என அன்று இந்தியருக்கு கோ.நடேசய்யர் விடுத்த வேண்டுகோள் இன்றும் பொருந்திப்போகின்றது. இந்தியாவில் விவசாய நிலங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமை விவசாய நிலங்களில் வேலை செய்யும் சூழ்நிலை இல்லாமை, அதனால் வெளிநாடு போய் வேலை செய்தல் போன்றன இந்தியாவைப் பொறுத்தவரை நூற்றாண்டு காலப் பிரச்சினையாக இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
பணந்தான் பெருஞ் சப்தம் உண்டாக்கக் கூடியது. பணமில்லாதவனுடைய குரல் அவனை விட்டு வெளியில் பரவாது என்பது உண்மை. அவ்வுண்மையை தோட்டத் தொழிலாளர்களுடைய நிலைமையினின்றும் அறிந்துகொள்ள க்கூடும். இந்நிலைமையை போக்கவே இந்நாடகம் எழுதப்பெற்றது. பிறநாட்டுப் பத்திரிகைகள் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டவை. அதிலும் தொழிலாளர் விஷயத்தை கவனிக்க அவசியமில்லாதவை. இந்தியாவில் உள்ள கிளர்ச்சி காரணமாய் இந்திய பத்திரிகைகள், இவர்களது விஷயமாய் அதிக கவலை செலுத்த முடியாதவையாயிருக்கின்றன என்பது உண்மை என இந்திய பத்திரிகைகள் மலையக மக்கள் விடயத்தை அன்றே பேச மறந்திருப்பது பற்றி குறிப்பிடுகின்றார்.
'எனவேதான் நாடகமெழுதியும் நடித்துக்காட்டியும் அவற்றின் மூலமாக இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு இந்நாடகம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த நாடகத்தில் காட்டப்பெறும் ஒவ்வொரு விஷயமும், நடைபெற்ற சம்பவங்களினின்றுமே தொகுக்கப் பெற்றவையென்பதை நாம் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே, இந்நாடகத்திற்கு ஒவ்வொரு தமிழனும், தன்னாலியன்ற முறையில் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறான்' என நடேசய்யர் கோரி நிற்கின்றார்.
நடேசய்யரின் இந்த நாடக நூல் காட்சிகள் விபரிக்கப்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களினதும் ஆடை, அணிகள் ஊடாக எவ்வாறு அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் கூட கவனம் செலுத்தப்பட்டு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த அரிய நூலை மறுபதிப்பு செய்து மலையக வரலாற்றில் மிக முக்கிய ஆவணப்பதிவைச் செய்தவராக அந்தனிஜீவா இடம் பிடிக்கின்றார். இன்றைய தலைமுறையினர் வாங்கவும் வாசிக்கவும் வரலாற்றை மீட்டிப்பார்க்கவும் உகந்த நூல் இது.
நன்றி சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...