"யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழ் மொழியே சரியானது - வடக்கு மாகாண ஆளுநர்."
-உதயன் செய்தியின் தலைப்பு இது-
ஒன்றை "மேல்" என்கிற போதே மற்றயவை "கீழ்" என்று பூடகமாக ஆக்கப்பட்டு விடுகின்றது. இதை ஒரு அரசியல்வாதி தனது இருப்புக்காக கூறிவிட்டுச் செல்லக்கூடும். ஆனால் ஆளுனரின் முழுப் பேச்சிலிருந்தும் இந்த பகுதியை மாத்திரம் எடுத்து "உதயன் பத்திரிகை" தனது தலைப்பாக இடுவதில் உள்ள பெருமிதம் இருக்கிறதே. அதைத் தான் யாழ் மையவாத திமிர் என்கிறோம்.
இந்த போக்கு இன்னமும் தீர்ந்த பாடில்லை. அவரவருக்கு அவரவர் வட்டார வழக்குண்டு. ஏற்கெனவே இந்த “யாழ்ப்பாண மொழி”த் திமிர் மட்டக்களப்பு தமிழையும் அப்படித்தான் பார்த்தது வன்னித் தமிழையும் அப்படித்தான் பார்த்தது. ஏன் இலங்கையில் மன்னாரிலும், மலையகத்திலும், கொழும்பிலும் பேசும் தமிழ் ஒன்றுக்கொன்று வேறானவை தான். ஒரே இடத்தில் இருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் கூட வெவ்வேறு பேச்சு வழக்கைத் தான் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்குள்ளேயே பிரதேசத்துக்கு பிரதேசம் பேசும் தமிழ் மொழி வேறுபடுகிறதே. இதில் எது சிறந்தது - எது குறைந்தது, எது செழித்தது - எது நலிந்தது என்பதற்கான அளவுகோல்தான் என்ன?
பேச்சுவழக்கை வைத்து ஆதிக்க நிலையில் உள்ளவர்கள் தாம் பேசுவது தான் உயர்ந்தது என்கிற கருத்துநிலை உலகில் எங்கெங்கும் இருக்கவே செய்கிறது. எவர் எதைப் பேசினாலும் நாமெல்லாம் எழுதும், வாசிக்கும் மொழி வழக்கு ஒன்றாகி விடுகிறது. அதில் அனைவரும் சங்கமித்து விடுகிறோம். கவிதையாகவும், கதைகளாகவும் இலக்கியம் படைக்கும்போது அந்தந்த வட்டார மொழிகளை, பண்பாட்டு வழக்குக்குரிய பேச்சு மொழியைக் கையாள்கிறோம். மற்றும்படி நாம் கற்கும் – கற்பிக்கும், பேசும் – எழுதும் மொழி ஒன்றாகத் தான் இருக்கிறது அல்லவா? ஒன்றை மேல் என்று சுட்டும் போதே மற்றவற்றை கீழ் என்று கூறும் வழக்கம் மொழி விடயத்தில் மாத்திரமல்ல சகல பண்பாட்டுக் கூறுகளிலும் பிரயோகிக்கவே செய்யப்படுகிறது. இந்த மொழித் திமிரில் ஒரு படிநிலை வரிசையும் இல்லாமல் இல்லை.
அம்பேத்கர் கூறுவார். இடைநிலைச்சாதியினர் தமக்கு மேலுள்ள சாதி மேலிருந்து குத்துதே குடையுதே என்று கத்திக்கொண்டிருக்குமாம். ஆனால் அதேவேளை தனக்கு கீழே உள்ள சாதியினரை குத்திக்கொண்டே, குடைந்து கொண்டே இருக்குமாம். அது தான் சாதியின் படிநிலையாதிக்கம் என்பார்.
அதுபோலத் தான் யாழ்ப்பாணத் தமிழுக்கு மட்டக்களப்பு தமிழ் கீழாக இருக்கும், மட்டக்களப்புக்கு, கொழும்பு தமிழ் கீழாக இருக்கும், கொழும்பு தமிழுக்கு, மலையகத் தமிழ் கீழாக இருக்கும். இந்த அபத்தமான கேவலம்மிக்க கர்வத்தை ஆதிக்கசக்திகளையும், ஆதிக்க சித்தாந்தங்களையும், அவற்றின் திசைவழியையும் புரிந்துகொண்டால் மாத்திரமே விளங்கி ஒழுக முடியும். இல்லையெனில் உதயன் போன்ற தரங்கெட்ட கர்வப் போக்கோடு அழுகி ஒழுகவே நேரிடும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...