இந்தக் கட்டுரை சரிநிகரில் எழுதப்பட்டு 20 வருடங்களைக் கடந்துவிட்டது.
சந்திரிகா ஆட்சியின் போது இனப்பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு காண்பதற்காக தயாரிக்கப்பட்ட "தீர்வுப்போதி"யை எதிர்த்து தென்னிலங்கையில் எழுந்த பேரினவாத எழுச்சிக்கு அரசாங்கம் அடிபணிந்தது. அன்றைய இனவாத எழுச்சி இன்றைய அரசியல் களத்திலும் அப்படியே நிகழ்வதை காண முடிகிறது. இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் அந்தக் காட்சிகளையும் பாத்திரங்களையும் அப்படியே ஒப்பிட்டு உணர முடியும்.
-என்.சரவணன் -
"எமக்கு இருப்பதோ இந்தச் சிங்கள ஸ்ரீ லங்கா மட்டுமே. எமக்குப் போவதற்கு வேறு இடமெதுவுமில்லை. சிங்கள மக்கள் தமது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்குப் போயுள்ளனர் தான். ஆனால் நமக்கிருப்பதோ இந்த நாடு மட்டுமே. அது உண்மை. இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.”
இந்தக் கூற்றை இனவாதியான நளின் த டி சில்வாவோ, குணதாச அமரசேகரவோ, எஸ்.எல்.குணசேகரவோ, சம்பிக்க ரணவக்கவோ, சூரிய குணசேகரவோ, தினேஸ் குணவர்தனவோ அல்லது போனால் ஹரிச்சந்திர விஜேதுங்கவோ கூறியிருக்கக் கூடும் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஏனெனில் இதனை கூறியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நமது மாட்சிமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா அவர்களே தான்.
இந்தக் கூற்றை இனவாதியான நளின் த டி சில்வாவோ, குணதாச அமரசேகரவோ, எஸ்.எல்.குணசேகரவோ, சம்பிக்க ரணவக்கவோ, சூரிய குணசேகரவோ, தினேஸ் குணவர்தனவோ அல்லது போனால் ஹரிச்சந்திர விஜேதுங்கவோ கூறியிருக்கக் கூடும் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஏனெனில் இதனை கூறியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் நமது மாட்சிமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா அவர்களே தான்.
அவர் ஆசிரியர்களுக்கான மாநாடொன்றிலேயே இவ்வாறு உரையாற்றியுள்ளார். இதை அக்கறையுடன் வெளியிட்டுள்ளது "வெண்தாமரை இயக்கம்" அதன் “சமாதானம், அரசியல் தீர்வு மற்றும் நாட்டின் எதிர்காலம்” எனும் நூலில்.
சிங்கள பௌத்த மரபு ரிதியிலான பேரினவாத கோஷத்துக்கு அப்பால் நின்று எந்த சிங்கள தலைமையாலும் ”சமாதானம்” பேச முடிவதில்லை என்பதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் மீண்டும் உணர்த்தும் சைகைகளே இவை.
இந்த லட்சணத்தில் தான் சமாதான பேச்சுவார்த்தை முஸ்தீபுகளும், தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடன் 3வது முறை முன்வைக்கப்பட்டிருப்பதும், அது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவகையில் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டுள்ள உடன்பாடுகளும் நடந்து வருகின்றன.
இவை குறித்து விமர்சிப்போரை தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாக சித்திரிக்கும் பலரும் உள்ளனர். ஆனால் அரசின் நேர்மையற்ற முயற்சிகள் இதனை நம்பச்செய்யும் வகையில் இல்லையே. இந்தத் தீர்வு முயற்சிகளை தமிழ் மக்கள் நம்ப வேண்டுமெனில் அரசு தான் நேர்மையானது என்பதை வெளிக்காட்டுவது முன்நிபந்தனையாக உள்ளது. அந்த நேர்மையை வெளிப்படுத்தும் தார்மீக பொறுப்பையுடைய அரசு, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தமது வரலாற்று ரிதியிலான ஏமாற்றங்களை நினைவுபடுத்தும் வகையில், சிங்கள பேரினவாதத்தோடு சமரசம் செய்து கொண்டு அதனை திருப்திப்படுத்தித்தான் தீர்வை வழங்கலாம் என்று கருதுகையில் தமிழ் தரப்பு நம்பிக்கையிழக்காமலிருப்பது எப்படி?
அரசின் இந்த நேர்மையின்மைக்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட லாம் என்பது உண்மையே. ஆயினும் இந்தக் காரணிகளை மீறி இதுவரை எந்த அரசாங்கமும் செயற்பட்டதில்லை என்பதுதான் வரலாற்று அனுபவம்.
இதைப் புரிந்து கொள்ள அரசின் தீர்வுத் திட்ட முஸ்தீபுகள் குறித்து ஒரு மீள்பார்வையை செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.
தீர்வுத் திட்டத்தின் வளர்ச்சி
பேச்சுவார்த்தை முறிவும் தீர்வு யோசனையும்:
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொ.ஐ.மு.வின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக சமாதானம், பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பன அமைந்திருந்தன. இவற்றைக் கூறி அமோக வெற்றியீட்டி அது ஆட்சியையும் அமைத்தது. அதே வருட இறுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையையும் தொடக்கியது. ஆயினும், இப்பேச்சுவார் த்தையின் போது அது தொடர்ச்சியாகப் பல இழுத்தடிப்புகளை செய்துவந்தது. இதன் காரணமாக 1995 ஏப்ரல் 19ம் திகதி பேச்சுவார்த்தை முறிவடைந்த போது புலிகளின் திருமலை கப்பல் தாக்குதலை காரணம் காட்டி முறிவுக்கான முழுப்பொறுப் பையும் புலிகளின் மீது சுமத்தியது. புலிகளுக்கும் இம்முறிவில் பங்குண்டு என்ற போதும் முழுப்பொறுப்பையும் அவர்கள் மீது போடுவது அப்பட்டமான பொய்யாகும். ஆயினும் அரசு, தனது தொடர்பு சாதனங்களுக் கூடாக இக்கருத்தை நம்பச்செய்யும் வகையில் தீவிரமாகச் செயற்பட்டது.
”தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்?”
இழப்பு புலிகளுக்கா? மக்களுக்கா?
பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த எந்த வித தயாரிப்புமே நகல் அளவில் கூட இல்லாததும் அரசு பக்கமிருந்த பலவீனங்களிலொன்று என்பதை பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 3வது ஈழ யுத்தம் தொடர்ந்த போது ”பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கும் யுத்தம்” என்றும் ”சமாதானத்துக்கான யுத்தம்” என்றும் அரசு பிரச்சாரம் செய்தது. ஆனால் வடக்கில் ஏற்பட்ட - ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புகளைக் கொண்டு இருப்பதையும் இழந்தவர்கள் புலிகளா? மக்களா? என்பதை எவருமே அறிவர் . அப்படியாயின் இழக்கச் செய்தவர்களின் இலக்கு என்ன? யாரை திருப்தி செய்ய இவ்வாறு அரசு நடந்து கொண்டது? அவை நிச்சயமாக தமிழ் மக்களை திருப்தி செய்யும் ஒன்றாக இருந்திருக்க முடியாது.
உண்மையில் அரசு தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் தமிழ் மக்கள் தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் நேருக்கு நேர் முரணான பன்புகளைக் கொண்டுள்ளன. ஏனென்றால் அரசு யுத்தத்தை தொடங்கியது பேரினவாத சக்திகளை தாஜா செய்யவே. புலிகளோ தமது அரசியல் இருப்பைப் பேண யுத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
“புலிகளுக்கு யுத்தம்! தமிழ் மக்களுக்கு பொதி!” என உலகுக்கு கூறிக்கொண்டு ஒரு பக்கம் யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களை களைப்படையச் செய்து, போராட்டம் மீதே வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களைப் பணிய வைப்பது அல்லது சரணடையச் செய்வதே யுத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
அந்த நம்பிக்கையிலேயே ஓட்டைத் தீர்வை தைரியயமாக அரசு முன்வைத்தது. முதற் தடைவையாக 1995 ஓகஸ்ட் 3ம் திகதியன்று முதல் நகல் வெளியிடப்பட்டது. இந்த நகலை ஏற்கெனவே ஜீ.எல்.பீரிஸ் தலைமையி லான குழு (ஜீ.எல்.பீரிஸ் பொ.ஐ.முவுடன் சேருவதற்கு முன்னமிருந்தே) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல கால உழைப்பின் பின் தயாரித்திருந்தது. அக்குழுவில் புத்திஜீவிகள் என சொல்லப்படும் பல சட்டநிபுணர்களும் இருந்தார்கள். இந்த நகல் மிகவும் முன்னேறிய ஒன்று என்பதே பலரது கருத்து. ஆயினும், அதில் உள்ள விடயங்கள் நன்றாக குறைக்கப்பட்ட பின்பே அரசின் தீர்வுத் திட்ட நகலாக அது வெளியிடப்பட்டது. இது குறித்து கட்சிகள், அமைப்புகள், தனிநபர்களது கருத்துக்களை ஆராய்வதற்கான அரசின் குழுவொன்றும் இயங்கியது. இறுதியாக இவையெல்லாம் ஆராயப்பட்டு முடிந்ததாகக் கூறி 1996 ஜனவரி 17ம் திகதியன்று (அரசியலமைப்பு நகலுடன்) அரசின் திட்டமாக அது வெளியிடப்பட்டது.
தீர்வுத்திட்டம் யாருக்கானது?
தீர்வுத்திட்டத்தை கொண்டு வருவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காகவே என்று சொல்லப்பட்டது. அவ்வாறெனில் மக்களின் விமர்சனத்துக்காக வெளியிடப்பட்ட வேளை, தமிழ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் முடிந்தளவுக்கு பரிசீலிப்புக்கும் கவனத்துக்கும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி எடுக்கப்படும் முடிவும் கூட தமிழ் மக்களின்அபிலாஷைகளைத் தீர்ப்பனவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 1995 ஓகஸ்ட் தீர்வு யோசனையானது தமிழ் தரப்பு கோரிக்கைகளை கருத்திற் கொண்டிராதது மாத்திர மன்றி பேரினவாதக் கோரிக்கைகளைக் ஈடுசெய்யும் வகையில் - ஏற்கெனவே இருந்த அதிகாரங்களும் குறைக்கப்பட்டே வெளிவந்தன.
இந்த இடத்தில் அரசு யாரைத் திருப்தி செய்வதற்காக அந்த நிலைப்பாட்டை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக தமிழ் மக்களின் தரப்பில் எழுந்த கோரிக்கையை விட சிங்கள பௌத்த பேரினவாதக் கோரிக்கைக்கே அரசு இசைந்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் இவ்விடயத்தில் அரசை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை இந்த பேரினவாதத்திடமே உள்ளது என்பதும், அரசின் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது என்பதும் புரியும். எந்த ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு பயந்து பண்டாரநாயக்காவும், பின்னர் டட்லியும் செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய நேரிட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுக் கவே சிங்கள அரசாங்கங்கள் தயாராக முனைகின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
நிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் முன்னால்...?
சிங்கள பௌத்த சக்திகளின் பேரினவாத முஸ்தீபுகள் எளிதான சிறிய விடயமாக நோக்கக் கூடியவை யல்ல. சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுள்ளது, அரசைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் வல்லது, (பார்க்க பெட்டி செய்தி) அரச யந்திரத்தின் மூலமாகவே சிங்கள மக்களிடம் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலை ஊட்டி வருவது.
“இலங்கையின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே ஜனநாயகமயப் படுத்தலும், பேரினவாதமயப்படுத்தலும் சமாந்தரமாகவே வளர்ந்து வந்து (அரசியலமைப்புக்களுக்கூடாக) பின்னர் ஒரு கட்டத்தில் பேரினவாதம் மேலாட் சிக்கு வந்து தானே ஜனநாயகமயப் படுத்தலையும் தீர்மானிக்குமொன்றாக நிலைபெற்று விட்டது” என்று பேராசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவதுண்டு.
அரசின் நடத்தையை தீர்மானிப் பது சிங்கள பௌத்த பேரினவாதமே என்றால் அது மிகையல்ல. யுத்தத்தை நடாத்துவதன் பின்புலமும் கூட அது தான். சிங்கள பேரினவாதத்தின் ஆதரவு அரசுக்கு வேண்டுமெனில் யுத்தம் அவசியம். யுத்தத்தை நடத்துவதன் மூலம் இரு விடயங்களை அரசு சாதித்து வருகிறது. ஒன்று பேரினவாதத்தை ஓரளவு கட்டுப்படுத்துவது, மற்றையது ஏனைய பிரச்சினைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது. ”ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல் தலையீடுகள் பற்றி கதையாதீர்கள் (சிறிய உதாரணம் ஏழுயு), சுரண்டல்கள் குறித்து கதையாதீர்கள், வாழ்க்கை செலவுப் புள்ளி குறித்து கதையாதீர்கள், எந்த பிரச்சினையானாலும் யுத்தத்துக்கு முன் இரண்டாம் பட்சமே. யுத்தம் செய்ய விடுங்கள். வெல்லும் வரை பொறுங்கள்.” என்பதே அரசின் நிலை.
யோசனையை எதிர்க்கும் அணிகள்
தீர்வு யோசனையை எதிர்க்கும் கூட்டில் பல அணிகளைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அதனைப் பிரதானமாக நான்காகப் பிரிக்கலாம். நான்கு தளங்களிலிருந்து இதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்.
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் சிங்கள பௌத்த நாட்டில் கொடுப் பதை வாங்கிக்கொண்டு கம்முண்ணு இருக்க வேண்டியவர்கள் ஏனைய இனத்தவர்கள். அதை மீறி உரிமை கேட்போரை-போராடுவோரை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதே இவர்களின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள்.
தீவிர இடதுசாரிகள்: பாட்டாளிகளை இனரிதியிலும் புவியியல் ரிதியிலும் கூறுபோடும் அரசினதும் தமிழ் இனவாதிகளதும் முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுபவர்கள். இவர்கள் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை இதுவே.
தமிழ் தரப்பு:- தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு குறைந்தபட்சத் தீர்வாகக் கூட இது இல்லை. (பார்க்க பெட்டி செய்தி)
எதிர்க்கட்சி: இது ஒற்றையாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யோசனை.
ஆதரிக்கும் சக்திகள்
ஆதரிக்கும் சக்திகளாக, (ஸ்ரீமணி தலைமையிலான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தவிர்ந்த) அரசுடன் இணைந்து செயல்படும் கட்சிகள், மரபு இடதுசாரிக் கட்சிகள், புத்திஜீவிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் (NGO) என்போர் காணப்படுகின்றனர். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதைய தீர்வு யோசனையை பிரச்சாரப்படுத்துவதற்காகவே பல நாடுகள் நிதியுதவி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. பல லட்சங்கள் செலவளித்து இதனை இவர்கள் செய்து வருகிறார்கள். இந்த பலவீனமான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கு இவையும் துணைபோகின்றன. இந் நிறுவனங்கள் பல இதில் உள்ள குறைபாடுகளை தட்டிக் கேட்பதோ அல்லது அதனை திருத்துவதற்காக அரசை நிர்ப்பந்திப்பதோ கிடையாது. மாறாகத் தீர்வு யோசனையை விமர்சிப்பவர்களை, தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாகக் காட்டுவதில் தான் முனைப்பாக உள்ளன. தீர்வுக்கான முயற்சிகளை தமிழ் தரப்பு ஒருபோதும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. அதற்காக தீர்வுத்திட்டம் ”போதுமானதாக இல்லாதபோது அதை ஏற்க முடியாது என்று கூறவுமா முடியாது?
வீணாக அடம் பிடிக்காதீர்கள்! அழியாதீர்கள்!
தீர்வு யோசனைக்கு ஏன் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் இவைதான்.
- முதற் தடவையாக நேர்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
- ஒரு அரசாங்கம் இத்தனை தூரம் இறங்கி வந்ததே அதிசயம். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதை விட்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
- முன்னைய மாகாண சபையை விட இது மேலானது.
- நேர்மையாக பேச்சுவார்த்தையை நடாத்தி தோல்வி கண்டிருக்கிறது அரசு.
- பேரினவாத சக்திகள், எதிர்க்கட்சி என்பவை எதிர்க்கின்ற போதிலும் தைரியமாக முன்வைக்கப்பட்ட இதை நாம் ஊக்குவிக்க வேண்டும். வெற்றியடையச் செய்ய வேண்டும்.
இவற்றின் மூலம் மொத்தத்தில் கூறப்படுவது இது தான். இனியும் வீணாக அழியாதீர்கள். இழக்காதீர்கள்! விட்டுக்கொடுங்கள்!! கைவிடுங்கள்!!! சரணடையுங்கள்!!!! (இவர்களில் பெரும்பாலானோர் இனப்பிரச் சினையை வெறும் மனிதாபிமான பிரச்சினையாக நோக்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) டொக்டர் கொன்ஸ்ரன்ரைன் ஒரு கூட்டத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.
“கடந்த ஐ.தே.க. காலத்தில் யாரை நான் புத்திஜீவிகள் என நம்பியிருந் தேனோ, அவர்கள் அனைவருமே ஐ.தே.க எதிர்ப்பாளர்களாகவும், பொ.ஐ.மு ஆதரவாளர்களாகவும் இருந்ததாலேயே அப்படி தெரிந்தார்களென்பது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது.”
உண்மை நிலையும் அது தான். இந்தச் சக்திகள் அவ்வளவு துச்சமான சக்திகளல்ல. சர்வதேச அளவில் இவர்களது குரலுக்கு இடமுண்டு. பொ.ஐ.மு வை பதவிக்கு கொண்டு வருவதிலும் முக்கிய பாத்திரமாற்றியவர்கள் இவர்கள். அது தவிர அரசாங்கத்தை முற்போக்கானதாக நம்பியவர்கள். நம்புபவர்கள்.
ஐ.தே.கவின் முடிவு உறுதியானதா?
சரி, இன்று தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்று அரசினால் கூறப்படுகிறது. ஐ.தே.க ஆரம்பத்தில் “தெரிவுக்குழுவிலுள்ள எமது அங்கீகாரத்தை பெறாமல் எப்படி தெரிவுக்குழுவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என கூற முடியும்” என கேட்டு சலசலப்பை ஏற்படுத்திய போதும் பின்னர் பிரித்தானியாவின் நெருக்குதலின் பின்னர் மெனமாகியது. என்றாலும் இத்தீர்வு யோசனையை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்கு குந்தகமான ஒன்றாக கருதும் அதன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மேலும் ஐ.தே.கவுக்குள்ளேயே பலர் ஐ.தே.க.வின் சமரச முயற்சியை ஏற்கவில்லை என்பது பத்திரிகை அறிக்கைகளி லிருந்து தெரிய வருகிறது.
தாண்ட வேண்டிய தடைகள்!
இத்தனை குறைபாடுகளையுடைய தீர்வு யோசனையைக் கூட இன்னும் பேரினவாத சக்திகள் எதிர்க்கத்தான் செய்கிறன. இந்நிலையில் தீர்வு யோசனை அமுலுக்கு வருவதற்குள் அது கடக்கவிருக்கும் தடைகளை அறிந்தால் மேலும் பீதியே மிஞ்சும். அது கடக்க வேண்டிய தடைகள் இவை.
- யோசனை முன்வைத்தல் (18 அத்தியாயங்கள் முன்வைக்கப்பட்டு விட்டது)
- அதனை திருத்தங்களுக்குள்ளாக் கல் (முடிந்தது)
- நகலாக முன்வைத்தல் (முடிந்தது)
- எதிர்க்கட்சியின் சம்மதத்தைப் பெறல் (இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது)
- தெரிவுக்குழுவின் அங்கீகாரத் தைப் பெறல் (பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது)
- பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரல்
- மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் நிறைவேற்றுதல்
- மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டு, வெற்றி பெறல்.
இதில் கடக்க வேண்டிய முதலாவது தடையரணுக்கு முன் இப்போது வந்துள்ளது. பாராளுமன்றத் தில் ஐ.தே.க.வின் அங்கீகாரமில்லாமல் முன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஐ.தே.க. சம்மதிக்குமா?
அடுத்த தடையரண் மக்கள் தீர்ப்பு. “மக்கள் தீர்ப்பு” என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிங்கள பெரும்பான்மை மக்களிடம் அனுமதி கேட்பது உணள்மையில் ஒரு கேலிக்கூத்தே அன்றி வேறல்ல.
தீர்வை அமுல்படுத்த முடியுமா?
சரி, அவற்றிலும் வெற்றியடைந்தது என வைத்துக் கொண்டாலும் தமிழ் கட்சிகளே ஏற்காத ஒன்றை (நியாயமற்ற தீர்வை) புலிகளும் ஏற்கப்போவதில்லை. அப்படியெனில் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக யுத்தத்தை தொடர்ந்து நடாத்த வேண்டும். அப்படியென்றால் மீண்டும் அழிவு, இழப்பு என்பனவே தொடரும். அரசின் தரப்பிலோ புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிலத்தை மீட்காமல் அங்கு தீர்வை அமுல் படுத்தவே முடியாது. இவற்றுக்கெல்லாம் அப்பால் இது எப்போது சாத்தியம். தீர்வு யோசனையை முன்வைப்பதிலேயே அரசாங்கம் தனது ஆட்சியின் பாதி ஆயுட்காலத்தை இழந்துவிட்டது. இனித்தான் முக்கியமாக கடக்க வேண்டிய அரண்களே உள்ளன. இதற்குள் எத்தனை அரசாங்கங்கள் வந்து போகவேண்டிவருமோ...? அவற்றின் பண்புகள் எப்படி அமையுமோ...?
உண்மையில் ஸ்ரீ லங்கா அரசுக்கு ஒரு நிரந்தரத் தீர்வில் அக்கறை இருப்பின் நேர்மையான முறையில் எந்தச் சக்திகளுக்கும் சோரம் போகாத முறையில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு இணைந்த, அதனை தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கிற வகையில் செயல்படுவது அவசியமானது. அதற்கு முன்நிபந்தனையாக அது தன்னை அகவயமாக சிங்கள-பௌத்த பேரினவாத பண்பிலிருந்து மீட்டெடுப்பது அவசியமாகும். அடுத்தது, அரசாலேயே வளர்த்துவிடப்பட்ட பேரினவாத கருத்தியலை அரசே பொறுப்புடன் புறவயமாக களைந்தெறி வதற்கான வேலையை செய்வது அவசியமாகும். இவற்றைச் செய்யாமல், சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதி கேட்பது என்பது ஒரு வகை ஏமாற்றே. வளர்த்த கிடாய் மாரில் முட்டிய கதையாக அரசே வளர்த்துவிட்ட பேரினவாதமானது அரசின் சிறிய முயற்சியைக் கூட ஆதரிக்க அனுமதிக்காது என்பதை கவனத்தில் எடுத்து செயற்படுவது அவசியமாகும்.
தொடர்பு சாதனங்கள்
சிங்கள இனவாத அணியில் உள்ள முக்கிய விடயம் தொடர்பு சாதனங்கள். இனவாதத்தை தூண்டுவதில் இவை முக்கிய பாத்திரமாற்றி வருகின்றன. மக்களின் சித்தாந்தத்தை தீர்மானிப் பதாகவும், சிந்தனையை வழிநடத்துவ தாகவும் இவையே உள்ளன. எனவே இவற்றை இலகுவாக அலட்சியம் செய்து விட முடியாது.
பத்திரிகைகள்
தினசரி பத்திரிகைகளில் முக்கியமாக மூன்று உள்ளன. பேரினவாதத்தைக் கக்குகின்ற ”வத்மன”, ”சட்டன”, ”திரி சிங்களே”, ”சிங்கள பௌத்தயா” என்பனவும் வெளிவருகின்ற போதும் கருத்தை உருவாக்கும் வலிமை இந்த தினசரிகளுக்கே உண்டு.
தினமின - அரசு சார்பு லேக் ஹவுஸ் பத்திரிகை. ”புலிகளுக்கு எதிரான நடவடிக்கை” எனும் பேரில் தமிழ் மக்களின் மீதான அரச பயங்கரவாதத் தை மறைக்கும் அல்லது நியாயப்படுத் தும் வேலையை இது செய்து வருகிறது.
திவய்ன - உப்பாலி பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகை. இதன் உரிமையாளர் ஒரு ஆயுத வியாபாரி என்பது கடந்த காலங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. இதை அம்பலப்படுத்துவதில் முக்கியமாக முன்னின்றவர் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன். சகல இனவாதிகளுக்கும் இது களமமைத்துக் கொடுத்துள்ளது. மிகவும் மோசமான முறையில் நேரடியாக இனவாதத்தைக்கக்குகின்ற, பாரிய விற்பனையுள்ள பத்திரிகை. உரிமையாளர் தனது ஆயுத வியாபாரத்தை செவ்வனே நடத்த வேண்டுமெனில் இந்த யுத்தத்தை ஊக்குவித்தல் வேண்டும். அதற்கு சிங்கள மக்களை உசுப்பி விட வேண்டும். இனவாதத்தை பரப்புவதற்காகவே இந்த பத்திகைகையை நடத்தப்படுகிறது என்றும் கூறுவர். இதன் உரிமையாளர் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர் என்ற போதும் ஜனாதிபதியாலேயே ஆயுத வியாபாரி என வர்ணிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லங்காதீப- இது விஜய நிறுவனத்தினது. இது திவய்ன அளவு இல்லாவிட்டாலும் இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சளைத்ததல்ல. இதன் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர் என்பதும் அதற்காகவே இந் நிறுவனத்தின் ஏனைய பத்திகைகளான Sunday Times, Midweek Mirror போன்ற பத்திகைகள் ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் கூறலாம். இதன் உரிமையாளரையும் ஆயுத வியாபாரத்துடன் சம்பந்தப்படு த்தி கதைப்பது வழக்கம். ஆனால் திவய்னவை நிரூபித்ததைப் போல் இதனை நிரூபிக்க முடியவில்லை.
வானொலி
இது தவிர வானொலியை எடுத்துக்கொண்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையோடு அதன் ஸ்ரீ லங்கா எப்.எம் மற்றும் விஷ்வ ஷ்ரவணி எனும் சேவையும் அரசு சார்பு சேவைகளாக இயங்குகின்றன. இவற்றைத் தவிர சிரச, லக்ஹண்ட, சவண, ரஜரட்ட ஆகிய தனியார் சிங்கள வானொலி சேவைகளும் Yes FM, Capitol Radio, FM 99, TNL, Radio போன்ற தனியார் ஆங்கில வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இவை அனைத்தும் மிகவும் பேரினவாத சார்பான முறையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன.
தொலைக்காட்சி
தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகியவை அரசு சார்பு நிறுவனங்களாகவும் ஸ்வர்ணவாகினி, Dyna Vision, ETV, TNL, MTV, BBC போன்ற தனியார் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றிலும் இனவாத சார்புடைய நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன.
தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதாவது காட்டப்பட்டாலும் அவை தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை. எப்போதாவது நடக்கும் ஓரிரு கலந்துரையாடல்களில் மட்டும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ரூபவாஹினி, ஐ.டீ.என். ஆகிய அரசு சார்பு சேவைகளில் மாத்திரமே தமிழ் செய்திகளும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. டீ.என்.எல். எம்.டீ.வி ஆகியவற்றில் சிங்கள மொழியில் அரசு சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட்ட போதும் தமிழில் அப்படியான வாய்ப்புகள் எதுவுமில்லை.
மொத்தத்தில் இந்த தொடர்பு சாதனங்கள் அத்தனையும் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இல்லை. அவை ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள சிங்கள பேரினவாதத்துக்கு தேவையான இனவாத தாகத்தை தணிக்கும் கடமையை - அந்த இயுடைவெளியை நிரப்பும் பணியையே செய்து வருகின்றன. தமது இனவாத சார்புக் கொள்கை, மூலதனத்தை பெருக்குதல், ஆயுத வியாபாரம், அரசியல் லாபம் என்பனவற் றுக்காக முழு மக்களையும் பலிகொடுத் துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
பேரினவாதத் தரப்பின் அணிவகுப்பு!
அரசு தீர்வு யோசனைகளை முன்வைத்ததிலிருந்து சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு தீவிரமாக மேலெழும்பி வருகிறது. இந்தச் சக்திகளை மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது. குறிப்பாக சிங்களப் பேரினவாதக் கட்சிகளைக் கூட சில வேளை அரசினால் எதிர்த்து நின்று விடமுடியும். ஆனால் பௌத்த மகாசங்கத்தினரையும், மகாநாயக்கர்க ளையும் அப்படி எதுவும் பண்ணிவிட முடியாது. அரசியலமைப்பு ரிதியில் பௌத்த மதத்துக்கும், பௌத்த பீடத்துக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது (ஸ்ரீ லங்கா கூதந்திரக் கட்சி ஆட்சியிலேயே 1972ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் முதல் தடவையாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது தெரிந்ததே) அதை மீறி செயற்பட முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. தீர்வு யோசனைக்கு எதிராக மகாசங்கத்தினர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூட திடீரென ”தீர்வுத் திட்டமானது தமிழர்களுக்கு சிங்கள நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒன்று” என கூறி அதனை வாபஸ் பெறாவிட்டால் தாமெல்லோரும் மகாசங்கத்தை விட்டு விலகப் போவதாகவும் பொளத்த மகாசங்கத் தின் உயர்பீட மகாநாயக்கர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி செய்தும் காட்டினர். பாதயாத்திரை, சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் என்பனவற்றையும் நடாத்தினர். சிங்கள பத்திரிகைகளும் அதனை வரவேற்று வாழ்த்தின. இறுதியில் அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடாத்தி சரணடைய நேரிட்டது. அரசு என்ன அடிப்படையில் மகாசங்கத்தினரை கைவிடச்செய்தது என்பதோ வழங்கிய வாக்குறுதி என்ன என்பதோ இறுதி வரை வெளிவரவில்லை. அரசியலமைப்பு-தீர்வு யோசனையில் கூட ” பௌத்த மதம் அரச மதமாகவும் அதனை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையெனவும். பௌத்தத்தைக் காக்கவென மீயுயர் பேரவையொன்று அமைக்கப்படுமெனவும் இம்முறை கூறப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளின் போதனைகளை சிங்கள மக்கள் மேலானதாக மதிக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இது தவிர இனவாத கட்சிகள், அமைப்புகள் என்பனவும் முக்கியமானது. குறிப்பாக கட்சி மட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக்க சிந்தனய, ஹெல உருமய, ஜனதா மித்துரோ என்பன முக்கியமானவை இவை தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளையும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் சத்தியாக்கரகங்க ளையும் நடாத்தி வருவதுடன் பல நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றன. தீர்வுத்திட்டம் குறித்து மாத்திரம் இரண்டு முக்கிய நூல்கள் இவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரிய நூல்களெனக் கொண்டால் "புலி மத்தியஸ்தர்களும் எமனின் பொதியும்" எனப் பெயர் கொண்ட ஒரு சிங்கள மொழி நூலை எஸ்.எல். குணசேகர என்பவர் வெளியிட்டுள்ளார். இவர் நளின் த டி சில்வா அணியை சார்ந்தவர். இந்நூல் 224 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ”Tiger's, Moderates' and Pandoras Package” எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர். இனவாதி என அழைக்கபடும் காமினி ஈரியகொல்ல என்பவரே இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் ”சிங்கள ஆணைக்குழு” விசாரணை நடக்கும் இடங்களிலெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சிங்கள ஆணைக்குழு விசாரணை நடக்கும் இடத்துக்கு சென்றும் கூட வாங்க முடியவில்லை அத்தனையும் தீர்ந்திருந்தது. பல இடங்களில் அலைந்து திரிந்த பின்னரே இதனை வாங்க முடிந்தது. அந்த அளவுக்கு விற்பனையாகிக் கொண்டிருக் கும் நூல் இது. விலை ரூபா 100.
இது தவிர சட்டத்தரணி சதிஸ்சந்திர தர்மசிறி என்பவர் "நாட்டைத் துண்டாடும் யோசனையை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?" எனும் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் 120 பக்கங்களைக் கொண்ட சிங்கள மொழி நூல். விலை 50 ரூபா.
தர்மசிறி செனவிரத்ன என்பவர் "தம்பி, நமது தாய்க்கு அப்படி செய்யாதே!" என்ற பெயரில் 30 பக்கங்களைக் கொண்ட ஒரு நுலை வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூபா. 25.
இதைத் தவிர இன்னும் பல பேரினவாதத்தைப் பரப்பும் நூல்கள் பலவற்றில் தீர்வு யோசனைகளுக்கு எதிராக பல விடயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சிங்கள ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணைகளை நடாத்தி வருகிறது. தீர்வு யோசனைக்கெதிரான தொடர் நடவடிக்கையின் அங்கமே இது.
இதில் சிங்கள பேரினவாத சக்திகள் அனைத்தும் இணைந்துள்ளன. இந்த ஆணைக்குழு இது வரை சிங்கள மக்களுக்கு நடந்த அநீதிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை இனவாதத்தின் உச்ச வடிவம் எனலாம். ஏனெனில் முழுக்க முழுக்க சிங்களவர் களுக்குத்தான் தமிழ்-மலையக - முஸ்லிம் மக்களால் அநீதிகள் நடந்துள்ளன என்றும், அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அரசே என்றும், அரசு சிங்களவர்களுக்கு சேரவேண்டிய பல உரிமைகளை சிறுபான்மையி னருக்கு வழங்கிவிட்டது என்பதையும் கண்டுபிடிப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இவ்வாணைக்குழுவின் முடிவானது சிங்கள மக்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
தீவிர இடதுசாரிகள்!
தீவிர இடது சாரி தரப்பில் ஜே.வி.பி, ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி, போன்றவை உள்ளன. இவைகளில் ஜே.வி.பி ஒரு முக்கியமான சக்தியாகும். ஜே.வி.பி. தீர்வு யோசனைக்கு எதிராக பாரிய அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஜே.வி.பி மீதான மக்கள் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் அதன் தீவிர செயற்திறன் இந்த தீர்வு யோசனைக ளுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்கலைக்கழக மட்டங்களில் இனப்பிரச்சினை தொடர்பான விவாதங்களை நடாத்தி
வருகிறது. இவ்விவாதங்களில் ஜே.வி.பி.யின் கருத்துக்கு கூடிய ஆதரவுண்டு.
ஜே.வி.பி. இத்தீர்வுத் திட்டத்தை நாட்டைத் துண்டாடும் ஒன்றாகவே பிரச்சாரப்படுதி வருகிறது. அண்மையிலும் இனப்பிரச்சினை குறித்து மூன்று சிங்கள நூல்களை வெளியிட்டுள் ளது.
நேரடியான இனவாதமாக அல்லாவிட் டாலும் குறுகிய பார்வையே தொடர்ந் துமுள்ளது. பாட்டாளிகளை
இனரீதியில், புவியியல் ரிதியில் கூறுபோடும் ஒரு அமெரிக்க சதியென் றும். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளை கூறுகூறாக சிறுசிறு நாடுகளாக பிரித்துவிட்டு அதன் பின் சுரண்டுவது இலகுவானதாக கருதுவதாகவும்.
அதற்காகவே சீ.ஐ.ஏ நிறுவனம் இனவாத புலிகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டை உடைப்பதாகவும், அந்த சதியை முறியடிக்க தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வர்க்கப் புரட்சியை முன்னெடுக்க வேண்டுமெ னவும் கூறி வருகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியமும், கடந்த கால முதலாளித்துவ தலைமைகளுமே பிரச்சினைக்கான காரணகர்த்தாக்களென்றும் ஒரு சோஷலிச ஆட்சியில் அப்படி நடக்க இடமளிக்கப்படாது என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் இது வரை தமிழ் மக்கள் நடைமுறையில் அன்றாடம் சிங்கள இராணுவத்தினராலும், அரசாலும் முகம் கொடுத்து வரும் பிரச்சினை குறித்து ஒரு போதும் இவர்கள் குரலெழுப்பியதில்லை.
இந்நிலையில் இதைக் கூற அவர்களுக்கு என்ன தார்மீக உரிமையுள்ளதோ? அவர்களே சொல்லுவதைப் போல் புரட்சிக்காக தமிழ் மக்கள் அணிதிரண்டாலும் அது வரையான தமிழ் மக்களின் அவலங்களுக்கு என்ன தீர்வென்பதை ஒரு போதும் கூறியதில்லை. கூறவும் முடியாது என்பது தான் உண்மை.
(சரிநிகர்- இதழ்-120-மே.97)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...