1982 டிசம்பரில் நடந்து முடிந்த சர்வஜன வாக்கெடுப்பு குறுக்குவழியில் தனது ஆட்சியை நீடிப்பதற்காக செய்த சுத்துமாத்துத் தேர்தல் என்பதை நாம் பார்த்தோம். அந்தத் தேர்தலில் மேற்கொண்ட தேர்தல் முறைகேடுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்காக இருந்தது. அது ஜே.ஆருக்கு சாதமகாக இருக்கவில்லை. அந்த வழக்குத் தீர்ப்பு சாதகமில்லாமல் போனால் தனது ஆட்சிக்கு எத்தகைய ஆப்பு என்பதை ஜே.ஆர் விளங்கி வைத்திருந்தார். அந்த வழக்கின் மீது நேரடியாக நெருக்கடி கொடுக்க முடியவில்லை. ஆனால் மறைமுகமாக அவ்வழக்கின் பிரதிவாதிகளின் மீது எதாவது செய்து தடுக்க முற்பட்டார் ஜே.ஆர்.
தனது அரசியல் எதிரிகளை பழி தீர்க்க கைகொடுத்தது தான் 1983 இனக்கலவரம். அதுவும் இந்தத் தேர்தல் நிகழ்ந்து 7 மாதங்களுக்குல் நிகழ்ந்தன. இந்த 7 மாதங்களுக்குள் பல முக்கிய நிகழ்வுகளும் அந்த இனக்கலவரத்துக்கான அத்திவாரத்தை ஆழ இட்டன.
சர்வசன வாக்கேடுப்புத் தேர்தலில் அரசாங்கம் மொத்த 168 தேர்தல் தொகுதிகளில் 48 தொகுதிகளில் அரசாங்கம் தோல்வியடைந்திருந்தது. அந்த 48 தொகுதிகளில் பெருவாரியானவை தென்னிலங்கை சிங்களத் தொகுதிகள் என்பது முக்கியமானவை. அதுவும் அரசாங்கத்தில் இருந்த முக்கிய அமைச்சர்கள், தலைவர்களின் கோட்டை என்று அறியப்பட்டவை. அதே தொகுதிகளில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தாமல் முறைப்படி பொதுத் தேர்தல் நடந்திருக்குமானால் அந்தத் தேர்தலில் மேற்படி தொகுதிகளில் அரசாங்கள் தோற்றிருந்திருக்கும் என்பது தான் செய்தி. அது மட்டுமன்றி வரலாறு காணாத தேர்தல் மோசடி செய்தும் இந்தளவு தொகுதிகள் தோல்வியடைந்தன என்றால் நீதியான தேர்தல் நடத்தியிருப்பின் மேலும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் அரசாங்கம். அப்படி நீதியான தேர்தலை நடத்தியிருந்தால் 54.66% வீத வெற்றியைக் கூட கண்டிருக்காது என்பதும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கும் என்பதும் கணிக்கக் கூடியதே. அதாவது அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு மீண்டும் போக வேண்டியிருந்திருக்கும்.
கூட்டணியின் சரிவு
இந்தத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கள்ள மௌனம் பற்றி பலரும் பிரஸ்தாபித்திருக்கிறார்கள். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் வெளியிடப்பட்ட “முறிந்தபனை” நூல் இதுபற்றி இப்படி குறிப்பிடுகிறது.
“பொதுவாக ஜனநாயகத்தில் ஈடுபாடு காட்டாத தமிழ் உயர் குழாத்தினரின் பொதுவான போக்கைத் த.ஐ.வி.மு. பிரதிபலித்தது. ஏனெனில் அக்கட்சியின் பகிரங்க நடத்தை பெரும்பாலும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அமைந்திருந்தது. பொதுசன வாக்கெடுப்பின் போது த.ஐ.வி.மு.வின் செயலின்மை அப்போது பெரிதும் வெளிப்படாதபோதும், அதன் அரசியல் அடித்தளத்திலிருந்து அதன் நிலை தடுமாற்றத்தைக் குறிப்பாகக் காட்டியது. ஆனாலும் யாழ்ப்பாண வாக்காளர் தமக்கென ஒரு நோக்கமுடையவர்கள் என்பதை அரசாங்கத்துக்கு எதிராக 91.37 வீத வாக்குகளை அளித்ததன் மூலம் காட்டினர்.
தனது மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல் ஒரு அரசியற் கட்சி அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபடுவது அதன் அரசியல் தற்கொலையே தவிர வேறொன்றுமில்லை”
தாம் நீதியுடன் நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளவென அரசாங்கம்; தாம் சர்வசன வாக்கெடுப்புத் தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகளைச் சேர்ந்த அரசாங்க உறுப்பினர்களை பதவி விலகச் செய்து அத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்தது ஐ.தே.க. அந்தந்தத் தொகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் வெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல. அவர்கள் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், சபாநாயகர் என பலரது தொகுதிகளும் தொல்வியுற்றிந்தன.
5வது திருத்தச் சட்டம்
பெரும்பான்மையைப் பெறத் தவறிய தொகுதிகளைச் சேர்ந்தவர்களை இராஜினாமா செய்ய வைத்து அந்த வெற்றிடங்களுக்கு மற்றவர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இருந்தது. 1978 இரண்டாவது குடியரசு யாப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் இப்படியான நிலையில் இடைத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஜே.ஆர். இடைத்தேர்தலுக்கு போகவே விரும்பினார். ஆனால் இடைத்தேர்தல் பற்றிய ஏற்பாடு அந்த அரசியலமைப்பில் இருக்கவில்லை. எனவே அதற்கென்று அரசியலமைப்பு திருத்தத்தையும் கொண்டுவர முடிவு செய்தார்.
அதன்படி அதற்கான 25.02.1983 அன்று அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 161 (iii) சரத்து திருத்தப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அந்த திருத்தம் எந்த வித எதிர்ப்பும் இன்றி 122 ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஒருவர் கூட எதிர்த்து வாக்கிடவில்லை. சுதந்திரக் கட்சியைச் சேர்த்த பலர் வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை. சமூகமளித்திருந்த சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழர் கூட்டணியினரும் சபையில் இருக்கவில்லை.
அந்த திருத்தத்தின்படி அந்த வெற்றிடத்துக்கு முப்பது நாட்களுக்குள் அங்கத்தவரை நியமிக்காதுபோனால் ஆணையாளர் அதனை ஜனாதிபதிக்கு அறிவித்து, அந்த அறிவிப்பு கிடைத்து முப்பது நாட்களில் வர்த்தமானியில் அறிவித்து அவ்வேற்றிடத்துக்கான தேர்தலை நடத்தவேண்டும்.
அதன்படி 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி ஒரு அமைச்சர், ஆறு பிரதி அமைச்சர்கள், இரண்டு மாவட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தனர்.
அப்படி சொல்வதை விட இராஜினாமா செய்ய வைத்தார் ஜே.ஆர் என்றே கூறவேண்டும். ஏற்கெனவே கையெழுத்திட்டு கொடுக்கப்பட்டிருந்த இராஜினாமா கடிதங்களில் திகதியிட்டதைத் தான் ஜே.ஆர் செய்தார்.
பாராளுமன்றத்துக்கான இடைத் தேர்தல்களோடு, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்த அரசாங்கம் முடிவெடுத்தது. 18.05.1983 இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்தன.
தமிழ் அமைப்புகள் மத்தியில் இது பற்றிய இரு நிலைப்பட்ட நிலைப்பாடுகளைக் காண முடிந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்கக் கோரியது. ஆனால், அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியோ உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தது.
எச்சரிக்கையை மீறி தேர்தலில்...
அதுமட்டுமன்றி தமிழ் ஆயுதக் குழுக்களின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட சிலர் முன்வந்தனர். அது அவர்களின் உயிருக்கு உலைவைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்த கே.வி.இரட்ணசிங்கம்(பருத்தித்துறை), எஸ்.எஸ். முத்தையா (சாவகச்சேரி) , வல்வெட்டித் துறையில் போட்டியிட இருந்த எஸ்.எஸ்.இராஜரத்தினம் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் 1983 ஏப்ரல் 29 ஆம் திகதி சுடப்பட்டார்கள். சுடப்பட்ட இடங்களில் இருந்த துண்டுச் சீட்டில் புறக்கணிக்கும்படி விடுத்திருந்த அறிவிப்பை மீறியதால் இந்த மரணங்கள் சம்பவித்தன என்கிற செய்தியையும் விட்டுச் சென்றிருந்தார்கள்.
இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்திய பட்டத்தினால் ஐ.தே.க.வும் தமிழ் காங்கிரசும் வடமாகாணத்தில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்த்தது. ஐ.தே.கட்சி வேட்பாளர்கள் பலர் வாபஸ் பெற்றனர்.
83 மே தினத்தன்று வெளியான "வாபஸ்" தலைப்பு செய்தி |
“……ஆகிய நான் ஐ.தே.கட்சி உறுப்பினரோ ஆதரவாளனோ இல்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்”
என்ற விளம்பரங்கள் ‘ஈழநாடு’ பத்திரிகையில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தின் போது அங்கு ஆயுதங்களுடன் வந்த விடுதலைப் புலிகள்; வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்ததுடன் அமிர்தலிங்கத்துக்கு எச்சரிக்கை செய்துவிட்டு அவரின் வாகனத்தையும் எடுத்துச் சென்று சேதப்படுத்தி மயானமொன்றின் அருகில் விட்டுச் சென்றனர். அப்படியிருந்தும் கூட்டணி தேர்தலில் இருந்து பின்வாங்கவில்லை. கூட்டணியின் சில வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர் என்பதும் நிகழ்ந்தது.
தேர்தல் தினத்தன்று ஆயுதக்குழுக்களினால் குழப்பப்படலாம் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தது. அதன் விளைவாக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டார்கள். வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக அனுராதபுர இராணுவ முகாமிலிருந்து மேலதிக இராணுவத்தினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். எதிர்பார்த்தது போலவே யாழ்ப்பாணத்தின் கந்தர்மடம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மீது, விடுதலைப் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு இராணுவத்தினனும் துப்பாக்கிச் சூட்டுக்கிரையானார். அங்கிருந்த மற்ற இரு இராணுவத்தினரும் சில பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்திய போதும், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
சக இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் சினங்கொண்ட இராணுவத்தினர் வழமைபோல பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீதியில் இறங்கி அவர்கள் தனியார் சொத்துக்களை அழித்தும், சேதப்படுத்தியும், சாதாரண அப்பாவி பொதுசனத்தின் மீது தாக்குதல் நடத்தியும் அவர்களின் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். அதன்போது ஒரு அப்பாவித் தமிழர் ஒருவரையும் கொன்றனர்.
இதன் போது இலங்கை இராணுவம் யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.
தேர்தலுக்கு அடுத்த நாள் வெளியான ஈழநாடு பத்திரிகை - 19.05.1983 |
ஈழநாடு பத்திரிகை - 20.05.1983 |
மக்கள் ஆணை தந்த செய்தி
இலங்கையின் வரலாற்றில் ஒரே நாளில் அதிகாமான தொகுதிகளில் (18 தொகுதிகளில்) ஒரே நாளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல் இதுவொன்று தான்.
இந்த இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளில் 14 தொகுதிகளில் ஐ.தே.கவும் மூன்று ஆசனங்களை சுதந்திரக் கட்சியும் ஓரு ஆசனத்தை மாஜன எக்ஸத் பெரமுண (மக்கள் ஐக்கிய முன்னணி) சார்பில் போட்டியிட்ட தினேஷ் குணவர்த்தனவும் வென்றிருந்தனர் (தினேஷ் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானது இந்தத் தேர்தலில் தான்). ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. இந்தத் தேர்தல் தொகுதிகளில் 12 தென் மாகாணத்தைச் சேர்ந்தவை.
வடக்கைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 90% ஆன மக்கள் உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் மொத்த வாக்குகளில் வெறும் 2% வாக்குகளே கூட்டணிக்கு கிடைத்திருந்தன. யாழ்ப்பாணத்தில் 10% வாக்குகளே அவர்களுக்கு கிடைத்திருந்தது. கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே செல்வாக்கிழந்தத்தை காண முடிந்தது. இது ஒரு வரலாறு காணாத முடிவுகள். இது வெறும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலால் மாத்திரம் நிகழ்ந்த முடிவுகள் அல்ல. மாறாக அரச அமைப்புமுறையின் மீதும், அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீதும் கொண்டிருந்த அதிருப்தியின் முடிவுகளும் கூட. தமிழ் மக்களின் மீதான கூட்டணியின் ஏகபோகம் சரிந்துவிழுந்ததையே காணமுடிந்தது. அதுவே அவர்களின் இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.
ஒரு வருடத்துக்கு முன் நடந்துமுடிந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் கூட 80% வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் வெறும் 10% வாக்களிப்பாக குறைந்தத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழ் மக்கள் மத்தியில் கூட்டணி செல்வாக்கிழந்து போய்க்கொண்டிருப்பதையும் ஆயுத இயக்கங்களின் வளர்ச்சியையும் அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வந்தது. கூட்டணியிடம் இருந்த பேரம் பேசும் ஆற்றல் குறைந்து வருவது அவர்களை அரசாங்கம் துச்சமாக மதிப்பதற்கு ஏதுவாக இருந்தது.
ஏகபோகம் கைமாறிக்கொண்டிருந்தது
09.07.1983 ‘லண்டன் டெய்லி டெலிக்ராப்’ (London Daily Telegraph) பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த பேட்டியொன்றில், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயனற்றது; அவர்கள், அவர்களது உயிர்களுக்கு அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒன்றைச் சொல்வார்கள், வேறொருவருக்கு வேறொன்றைச் சொல்வார்கள். நான் அவர்களுக்காக வருந்துகிறேன்” என்று அறிவித்திருந்ததையும் இங்கு கவனிக்க வேண்டும்.
வடக்கில் இராணுவத்தின் மீதும் கை வைக்குமளவுக்கு வளர்ச்சியுற்றுக் கொண்டிருந்த ஆயுத இயக்கங்கள் ஒரு புறம், வடக்கில் தேர்தலை நடத்த முடியாமல் போகும் நிலை தலைதூக்கிக் கொண்டிருந்தமை, ஐ.தே.கவுக்கு சற்றும் இடமில்லாத நிலை உருவாகி வந்தமை போன்ற அனைத்துமே அரசாங்கத்துக்கு சினத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
வடக்கின் இந்த நிலைமை தெற்கிலும் இனவாத சக்திகளின் போக்கின் பிரதிபளித்தன. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பலர் சக சிங்கள மாணவர்களால தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகின. எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் பலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.
தெற்கில் இனவாத சக்திகள் தமது ஆத்திரத்தை இவை எவற்றுடனும் சம்பந்தமே இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது அங்காங்கு வெளிக்காட்டினர். ஒரு பெரும் இன அழிப்புக்கு சிவில் சமூகம் மெதுவாக தயார் படுத்தப்பட்டது இப்படித் தான். ஜே.ஆர். தனது ஆட்சி நீடிப்பை செய்துகொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது மிகையில்லை.
துரோகங்கள் தொடரும்..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...