Headlines News :
முகப்பு » , » இடுப்பில் கொழுந்துக் கூடை - மல்லியப்புசந்தி திலகர்

இடுப்பில் கொழுந்துக் கூடை - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம்  5

தொடக்கவிழாவில் வாழ்த்துரைகளை  ஆய்வரங்க மலையகக் குழு சார்பில் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள் துறையின் புலத்தலைவராக கடமையாற்றும் பேராசிரியர் வ.ராசரத்தினம் ஆகியோர் வழங்கினர். 

ஈழத்து தமிழ் இலக்கியத்தின் ஒரு செழுமைமிக்க கூறாக மலையகத் தமிழ் இலக்கியத்தையும் கொள்ள வேண்டும் என விமர்சன ஜாம்பவான்களான பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவுக்கு ஈழத்தில் மலையகத் தமிழ் இலக்கியம் தனது இடத்தை உறுதிசெய்துள்ளது. 

ஈழத்து இலக்கியம் என்றாலே அது யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற எழுத்துக்களைத்தான் குறிக்கின்றது  என்ற மனோநிலை ஓங்கியிருக்கின்ற தமிழ் நாட்டு இலக்கிய சூழலுக்கு,   மகாத்மா காந்தியின் நினைவின் பேரில் இயங்கும் இந்திய பல்கலைக்கழகம் மலையக இலக்கிய கலை பண்பாட்டு வடிவங்களை ஆய்வு செய்வதற்கு இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளமை பாராட்டுக்குரியது.

இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் பேராசியர்கள், முனைவர்கள், ஆய்வு மாணவர்கள் மட்டுமல்லாது வெளியில் இருந்து ஆய்வாளர்கள் விமர்சகர்களையும் ஒன்றிணைத்து இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதனால் இந்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கே எனது வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

குறிப்பாக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், எமது மலைநாட்டு எழுத்தாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாத்தளை சோமு ஆகியோரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் இந்த ஆய்வரங்கினை ஒரு வெற்றி விழாவாக மாற்றியிருக்கிறது. நாட்கூலிக்கு வேலை செய்பவர்கள்தானே இவர்களுக்கு என்ன தெரியும், இவர்களைப் பற்றிய எழுதவும் நாங்கள்தான் வரவேண்டும் என கிண்டல் செய்த இலங்கையின் பிற பிரதேச இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் சிலருக்கு, எங்களாலும் எழுத முடியும் என இலக்கியம் படைத்துக்காட்டிய மலையகத் தமிழ் இலக்கியம் தொடர்பில் தமிழ்நாட்டில் ஆய்வு மாநாடு என்பது அதன் உழைப்பையும் அர்ப்பணிப்பையுமே காட்டி நிற்கின்றது. 

இலங்கையின் கிழக்குப்பகுதியில் இருந்து வெளிவந்த தேனருவி எனும் இலக்கிய இதழுக்கு ஒரு முறை நான் கதை ஒன்று எழுதி இருந்தேன். அந்த கதையில் கொழுந்தெடுக்கும் பெண் ஒருவர் பாத்திரமாக வருகிறார். அட்டைப்படத்திலோ உள்பக்கத்திலோ பெண்கள் படைத்ததைத்தானே போடுவார்கள் (சிரிக்கிறார்). அதுபோல எனது கதையிலும் வந்த அந்த பெண்பாத்திரத்தை படமாக ஓவியர் வரைந்து போட்டிருந்தார். அந்த ஓவியத்தில் வந்த பெண் கொழுந்து கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றார். (மேடைக்கு முன்னாள் வந்து கூடையை இடுப்பில் வைத்திருப்பதுபோல பாவனையும் செய்து காட்டினார்.) இது என்னத்தைக்காட்டுகிறது? மலைநாட்டில் எப்படி பெண்கள் கொழுந்து எடுக்கும் பெண்கள் கூடை மாட்டியிருப்பார்கள் என்பதுகூட தெரியாமல்தான் கிழக்கில் இருந்திருக்கிறார்கள்.  பிறகு என்னவென்று அந்த மக்களின் வாழ்க்கையை அவர்கள் அறிவார்கள். 

இலங்கையிலேயே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டைப்பற்றி சொல்லவும் வேண்டுமா? எனவே இலங்கை மலையகத்தைப்பற்றி தமிழகம் தெரிந்துகொள்ள இத்தகைய செயலமர்வுகளும் கருத்தரங்குகளும் அவசியம்தான். அந்த நோக்கத்துடனேயே  மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என தெளிவத்தை ஜோசப் தெரிவித்தார். 

வாழ்த்துரை வழங்கிய காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள் துறையின் புலத்தலைவரான வ.ராசரத்தினம் எந்தவொரு சமூகமும் தமது வாழ்வியல் வரலாற்றை பதிவுசெய்ய வேண்டுமெனில் தமது கலை இலக்கிய பண்பாட்டு வடிவங்களை பேணி பாதுகாக்க வேண்டும்.  

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் காலனித்துவவாதிகளால் கூலிகளாக அழைத்து ச்செல்லப்பட்ட தமிழச்சமூகம் இன்று தம்மை இலங்கையில் மலையகத் தமிழ் சமூகமாக அடையாளப்படுத்தி, தமது கலை, இலக்கிய, பண்பாட்டு வடிவங்கள் ஊடாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதை இந்த செயலமர்வில் வெளிப்படுத்துகின்றார்கள். இங்கே இடம் பெற்ற உரைகளின் ஊடாக அவர்களின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் எந்தளவு உறுதியாக இருந்துள்ளது எனபதனை அறியமுடிகின்றது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.  

ஆய்வரங்கத்தின் கட்டுரைகளை அடங்கிய தொகுப்பு நூல் 'இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம் - கலைப்பண்பாட்டு வடிவங்கள்' எனும் தலைப்பில் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரை தொகுப்பாசிரியராகக் கொண்டு தொடக்கவிழாவின்போது வெளியிடப்பட்டது. ஆய்வரங்கில் பங்குபற்றிய அனைவரதும் கட்டுரைகள் இதில் இடம்பெறாதபோதும் முன்கூட்டியே கட்டுரைகளை அனுப்பியவர்களதும் ஆய்வரங்கிற்கு வருகைதர முடியாமல் போனவர்களதும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த விழா மலர் அமைந்திருந்தது.  இந்த தொகுப்பு மலையகத்தைச் சார்ந்தவர்கள், மலையகம் சாரா ஆனால், மலையகத்தின்பால் அக்கறையுள்ள பிற பிரதேசத்தைச் சார்ந்தவர்கள், மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பியவர்களாக தமிழகத்தில் வாழும் மலையக உறவுகள் என பலரதும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்ட தொகுப்பாக அமைந்துள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது. 

 'மலையக வரலாற்றில் அரசியல்' (மு.சி.கந்தையா - இவர் கண்டி பிரதேசத்தில் வாழ்ந்து இப்போது தமிழகத்தின் கூடலூரில் வாழ்ந்து வருகிறார்) , 'மலையகத் தமிழர் - ஒரு சுருக்க வரலாறு'- 1823 முதல் 1864 வரை (இரா.சடகோபன் - மலைநாட்டு எழுததாளர் மன்ற இணைச்செயலாளர்), 'மலையகத் தமிழர் தாயகம் திரும்பியதன் பின்னணி' (சி.பன்னீர் செல்வம் - இவர் கண்டி பிரதேசத்தில் வாழ்ந்து இப்போது தமிழகத்தின் மதுரையில் வாழ்ந்து வருகிறார்), 'மலையக கவிதை இலக்கிய செல்நெறியும் மலையக தேசியமும்' (மல்லியப்புசந்தி திலகர் - கட்டுரையாளர்), 'மலையக நவீன இலக்கிய வரலாற்றாக எழுத்துக்கள்' (செல்லத்துரை சதர்ஷன் - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவர் இப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். 

தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு மாணவராக உள்ளார் ), 'குறிக்கோளோடு கவிதை எழுதிய குறிஞ்சித்தென்னவன்' (மாத்தளை சோமு – மலையகத்தவரான இவர் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்வதுடன் அவுஸ்திரேலியா (சிட்னி) தமிழ் எழுத்தாளர் சங்க தலைவராகவும் செயற்படுகின்றார்.), 'புலப்பெயர்வு இலக்கியமும் நிலம் இழந்தவர்களின் குரலும் - மலையக இலக்கியத்தை முன்வைத்து' (மேமன்கவி –  மேமன் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் தமிழ் கவிஞரும் மலையக இலக்கியம் குறித்த ஈடுபாடும் கொண்டவராவார்), 'சக்தீ பால ஐயா கவிதைகளும் நீண்ட பயணமும்' (பாலதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸ் - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவர் அவுஸதிரேலியாவில் வாழ்ந்துவருகிறார்), 'குருதிமலை நாவலில் மலையக மக்களின் வாழ்வியல்' (தி.மோகன்ராஜ் - தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்), 'மலையகத்தில் தாய் தெய்வ வழிபாடு' (பொ.சந்திரசேகரம்- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவர் இப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். 

தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு மாணவராக உள்ளார்), 'மலையக அரங்கியல் களம்' (அ.லட்சமணனன் - ஆசிரியரும் அரங்கியல் கலைஞருமான இவர் நிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்) என மாநாட்டில் பங்குகொண்டவர்களினதும் பங்குகொள்ளாதவர்களினதுமாக 11 ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக இந்த நூல் தொகுக்கப்பட்டிக்கிறது.

தொடக்க விழாவில் மலையக எழுத்துக்கள் அடங்கிய நூல்களை கலைஞர் அந்தனிஜீவா, எழுத்தாளர் மு.சிவலிங்கம், எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், ஊடகவியலாளர் கி.பொன்னுத்துரை ஆகியோர் தமது நூல்களை காந்திகிராம பல்கலைக்கழக நூலகத்துக்கு வழங்கி வைத்தனர். கோ.நடேசய்யர் எழுதி 1936 இல்வெளிவந்த 'இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளரின் அந்தரப்பிழைப்பு'  எனும் நாடகநூல் குமரன் பதிப்பகம் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  

எழுத்தாளரும் நாடகக்கலைருமான அந்தனி ஜீவாவின் முயற்சியினால் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள இந்த நூல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக மலையக ஆய்வரங்கில் அறிமுகப்ப டுத்தப்படுத்தப்பட்டது. இந்த நூலின் உள்ளடக்கம் தொடர்பான பார்வையை அடுத்தவாரம் பார்க்கலாம். 

நன்றி சூரிய காந்தி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates