Headlines News :
முகப்பு » , , , , » சர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு! - என்.சரவணன்

சர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு -30 

1982 இல் முறையாக நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை தவிர்த்துவிட்டு தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஆள்வதற்கான குறுக்கு வழித் திட்டமே 1982 - சர்வசன வாக்கெடுப்பு. வரலாற்றில் என்றுமே கிடைத்திராத, கிடைக்கவே கிடைக்காது என்று நம்பப்படும் 5/6 பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள அந்த குறுக்கு வழி பிரயோகிக்கப்பட்டது. அது மட்டுமன்றி உலகிலேயே ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்பின் மூலம் எந்த ஒரு நாட்டிலும் வழங்கப்படாத அதிகூடிய அதிகாரத்தை 78 அரசியலமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டிருந்தார் ஜே.ஆர்.

ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெற்று தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட ஜே.ஆர், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தையும் அதுபோலவே நீடிப்பதற்கு வழி பார்த்தார். 77இல் தெரிவான பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 21.07.1983 அன்றுடன் நிறைவடைய வேண்டும். (அது சரியாக கருப்பு ஜூலை படுகொலைகள் நிகழ்ந்த நாள் என்பது வெறும் தற்செயலா)

சர்வாதிகாரத்துக்கான வியூகம்
இரு மாதங்களுக்கு முன் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 52.91% வீத வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார் ஜே.ஆர். சுதந்திரக் கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் பெருகிவரும் ஆதரவானது ஐ.தே.க.வால் பொதுத்தேர்தலில் ஒன்றில் ஆட்சியமைக்க முடியாமல் போகலாம், அல்லது 2/3 பெரும்பான்மை பலத்தை பெற முடியாமல் போகலாம். அப்படி நிகழ்ந்தால் தம்மிஷ்டத்துக்கு அரசியலமைப்பு மாற்றங்களை செய்ய முடியாமல் போகலாம். கைவசம் இருக்கும் 5/6 பெரும்பான்மையை அப்படியே தக்கவைத்துக் கொண்டால் அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்திச் சென்று விடலாம்.

ஆக இந்த ஆட்சி நீடிப்புத் திட்டம் முதலில் அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஐ.தே.க வின் நிறைவேற்றுக் குழுவினாலும் அங்கிகரிக்கப்பட்டது. 29.10.1982 அன்று பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை ஜே.ஆர். ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார். தனது விருப்புக்குக்கு மாறாக நடந்துகொள்பவர்களை நினைத்த நேரத்தில் திகதியிட்டு இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும் கடிதங்கள் அவை. ஆக இத்தகைய முடிவுகளை எதிர்த்து கட்சிக்குள் இருந்து எதிர்ப்புகள் வராதபடி பார்த்துக்கொண்டார். 2/3 பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஆகவேண்டும் அல்லவா.

அதற்குமுன் அந்த திட்டம் பற்றிய அரசியலமைப்பு பொருத்தப்பாட்டினை அறிவதற்காக உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் எதிர்த்து வாதிட்டார்.

ஏழு நீதியரசர்களைக் கொண்ட அந்த அமர்வில் அவர்களுக்கு இடையில் கருத்து ஒருமிக்காத நிலையில் 3/4 பெரும்பான்மையுடன் நான்காவது திருத்தத்துக்கு அனுமதியளித்தனர். (எதிர்த்த நீதியரசர்கள் மூவர்களான நெவில் சமரகோன், டீ.விமலரத்ன, பீஎஸ்.சீ.ரத்வத்த ஆகியோர் இந்த திருத்தம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்கிற முடிவில் இருந்தனர்.) தீர்ப்பின்படி பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றிவிட்டு மக்கள் தீர்ப்பையும் பெறவேண்டும் என்று அறிவித்தார்கள்.

கூட்டணி ஏன் எதிர்க்கவில்லை
அதன்படி பிரேமதாச கொண்டுவந்த நான்காவது திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தபோதும் அக்கட்சியில் வலுவடைந்திருந்த பிளவின் காரணமாக பீலிக்ஸ் மைத்திரிபால சேனநாயக்க போன்றோர் அந்த திருத்தத்தை எதிர்க்கவில்லை. ஏற்கெனவே சிறிமா ஆட்சியின் போது அத்தகைய யோசனையை கொண்டுவந்த போது தான் அதனை ஆதரித்து நின்றதால் இப்போது அதனை எதிர்ப்பதற்கான தார்மீகம் இல்லை என்றார் அவர்.

அதேவேளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்ப்பதாக அறிவித்தனர்.  அமிர்தலிங்கம் எதிர்த்து உரையாற்றினார். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தவேளை அமிர்தலிங்கம் உட்பட கூட்டணியினர் எவரும் சபையில் இருக்கவில்லை. வெறும் நான்கே பேர் தான் அதனை எதிர்த்து வாக்களித்தனர். திருத்தத்தை ஆதரித்து 142 வாக்களித்தனர். சுதந்தரக் கட்சியைச் சேர்ந்த. (அனுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி, ஆனந்த தசநாயக்க ஆகிய மூவரும், கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலவான தொகுதி உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம ஆகிய நால்வர் மாத்திரமே இதனை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.. கொம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான “எத்த” பத்திரிகை அப்போது மிகவும் செல்வாக்கான மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முதல் நாள் அப்பத்திரிகை அராஜகமாக அரசாங்கத்தால் இழுத்து மூடப்பட்டது.

அதுபற்றி சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றியபோது அதற்கு பதிலளித்த பிரேமதாச “அவரசகால சட்டத்தின் கீழ் தான் அது மூடப்பட்டது என்றும் அந்த அவரசகால சட்டத்துக்கு ஆதரவளித்த சரத் முத்தெட்டுவேகம இப்படி மூடுவதற்கும் சேர்த்துத்தான் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்” என்றார்.

இறுதியில் 161வது சரத்தின் (e) இல்லாது ஆக்கி அதற்குப் பதிலாக 04.08.1989 வரை பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான திருத்தம் செய்யப்பட்டது. அதனை மக்கள் தீர்ப்புக்கு   (referendum - ஒப்பங்கோடல்) அனுமதித்தாக வேண்டும். 

1982.11.13 ஆம் திகதியின் 218/23 இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் விடுக்கப்பட்ட அந்த திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதற்கான அப்பிபிராய வாக்கெடுப்பே “1982 சர்வசன வாக்கெடுப்பு”. சர்வசன வாக்கெடுப்பில் 50% வீதத்துக்கு மேல் அங்கீகாரத்தைப் பெற்றாலே போதும் என்பதே ஏற்பாடு. அது இயலும் என்பது ஜே.ஆரின் உறுதியான கணிப்பாக இருந்தது.

விளக்கா? குடமா?
இந்தத் தேர்தலின் படி இரு தெரிவுகளில் ஒன்றுக்கு வாக்கிடலாம். ஆம் என்பவர்கள் விளக்கு சின்னத்துக்கும், இல்லை என்பவர்கள் “குடம்” சின்னத்துக்கும் வாக்களிக்கும் வகையில் அந்தத் தேர்தல் தயாரானது.

இடதுசாரிக்கட்சிகளும், சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, தமிழர் கூட்டணி என்பன குடத்துக்கு வாக்களித்து இதனை எதிர்க்கும்படி பிரசாரம் செய்தனர். 1980 இல் குடியியல் உரிமை பறிக்கப்பட்டிருந்த சிறிமாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பிரச்சாரத்தின் போது “1931இல் இருந்து தாம் விரும்பிய ஒருவரையோ, விரும்பிய அரசாங்கத்தையோ தெரிவு செய்யும் ஜனநாயக சந்தர்ப்பத்தை இழக்கப் போகிறீர்களா” என்றார் அவர்.

“மக்கள் உரிய காலத்தில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமையை பறிக்கும் அதிகாரம் ஜே.ஆருக்கு இல்லை” என்று ரோகண விஜேவீர பிரச்சாரம் செய்தார்.

ஜே.ஆரின் பிரச்சாரத்தின் போது; 70இல் ஆட்சியமைத்த சிறிமா 75இல் முடியவேண்டிய ஆட்சியை மக்களின் ஆணையின்றி தன்னிச்சையாக இரண்டு ஆண்டுகள் நீடித்தார் என்றும், ஆனால் தான் மக்கள் ஆணையைக் கேட்டு வந்திருக்கிறேன் என்றார்.

இதனை சாதிப்பதற்காக ஆரம்பம் தொட்டே ஜே.ஆர். மிகவும் மோசமான குறுக்குவழிகளையும் மோசடிகளையுமே பிரயோகித்தார். தேர்தலுக்கு முன்னரே அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று “நக்சலைட் சதி” என்கிற பிரச்சாரம்.


“நக்சலைட் சதி” என்கிற சதி
அன்றைய கல்வி அமைச்சரும், ஜே.ஆரின் மருமகனும் இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருந்தால் பெரும் “நக்ஸலைட் சதி” ஒன்று நிகழ்ந்து, நாட்டில் பல மாற்றங்கள் நிகழவிருந்தது என்றும், இலங்கைப் படையிலுள்ள தமக்கு சார்ப்பானவர்களின் ஆதரவுடன் விஜயகுமாரதுங்க பிரதமராக நியமிக்கப்படவும் இருந்ததாக தங்களுக்கு அறியக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இந்த கருத்து தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கிடையே பரிமாறப்பட்டன.

சுதந்திரக் கட்சிக்குள் அப்போது இருந்த பதவிப்போட்டியில் ஆளுக்காள் சதி செய்து கொண்டிருந்த நேரம் அது. கட்சிக்குள் விஜய குமாரதுங்கவின் செல்வாக்கு மேலோங்கி வந்ததன் அதிருப்தியில் அனுரா பண்டாரநாயக்க இந்த வதந்தியை தனது பாடசாலை கால நண்பனான ரணிலிடம் போட்டுக்கொடுத்திருக்கலாம் என்று கலாநிதி ராஜன் ஹூல் எழுதிய தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

சர்வசன வாக்கெடுப்புக்காக தயாராகி வந்த வேளை  03.11.1982 அன்று ஜே.ஆர்.வெளியிட்ட அறிக்கையில் தான் இந்த நக்சலைட் சதி பற்றி ஒக்டோபர் 21ஆம் திகதியே அறிந்திருந்ததாகவும் தன்னையும் அமைச்சரவையிலுள்ளவர்களையும், இராணுவத் தளபதிகளையும் கொன்று சிறிமாவை சிறைபடுத்துவதற்கும் சதி செய்திருந்ததாக அறிவித்தார்.

இதே காலப்பகுதியில் இந்தியாவில் ஆங்காங்கு அரசுக்கு  எதிராக நக்ஸலைட் குழுவினரின் ஆயுதப் போராட்டம் தலைதூக்கிக்கொண்டிருந்த நிலையில் இலங்கையிலும் அதேவகை “சதி முயற்சிகள்” குறித்த பீதியை கிளப்பி எதிர்க்கட்சியை மேலும் வலுவிழக்கச் செய்ய ஜே.ஆர் அரசாங்கம் முயன்றது

பாராளுமன்ற ஹன்ஸாட்டை மேற்கோள்காட்டி 14.11.1982 அன்று வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில், எட்டு பிரதான நக்ஸலைட்டுகள் என விஜய குமாரதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிரி விக்ரமநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரட்ண, கே.பீ.சில்வா, ஜீ.எஸ்.பீ.ரணவீர (கொம்யூனிஸ்ட் கட்சியின் “எத்த” பத்திரிகையின் ஆசிரியர்), மற்றும் ஜனதாச நியதபால ஆகியோரின் பெயர்கள் பிரசுரிக்கபட்டிருந்தது. 

சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்த சந்திரிகாவின் கணவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிச் செயலாளரும், இடதுசாரி கருத்துடையவரும் பிரபல முன்னணி நடிகருமான விஜயகுமாரதுங்கவை குறிவைத்தது அரசாங்கம் அவரை “நக்சலைட் சதி” மூலம் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி 19.11.1982 அன்று கைது செய்து மகசின் சிறையில் அடைத்தார்.

நக்சலைட் சதி வழக்கில் சிறையில் இருந்த  கணவர் விஜயகுமாரதுங்கவை வெலிக்கடை சிறைச்சாலையில் சந்திக்கச் சென்ற சந்திரிகா 
சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பலர் அக்குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து உயநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சுதந்திரக் கட்சி. அவ்வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி “சர்வசன வாக்கெடுப்பு” தேர்தல் இடம்பெறும் இந்தச் சூழலில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த செயலாளறையும் பிரதான செயற்பாட்டாளர்களையும் கைது செய்து தடுத்து வைத்திருப்பது நீதியானது இல்லை என்று கூறி சுதந்திரக் கட்சியின் தலைவர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அ.ம.கருணாரத்ன, ஜஸ்டின் நவரத்ன, ஷெல்டன் அபேரத்ன, குசும் பாலபட்டபந்தி தேவப்பிரிய அபயவத்த, ஜகத் நாரங்பெத்த, அனுருத்த ரத்வத்த, மொரிஸ் ராஜபக்ஷ, தமரா குமாரி இலங்கரத்ன, ஆகியோரை 25,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் விஜய குமாரதுங்கவை விடுவிப்பதை நிராகரித்தது நீதிமன்றம். 17.01.1983 வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக இரு மாதங்களுக்கு முன்னர் போட்டியிட்டிருந்த கொப்பேகடுவ இந்த காலப்பகுதியில் 21 தடவைகள் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வாறு சிறையில் அடைத்து இந்த சதியில் சுதந்திரக் கட்சியின் பங்கு இருப்பதாக காட்டுவதன் மூலம் தேர்தலில் அவர்களுக்கு எதிரான அலையொன்றை உருவாக்குவதே ஜே.ஆரின் நோக்கமாக இருந்தது.

தேர்தல் மோசடிகள்
டாலி வீதியிலிருந்த சுதந்திரக் கட்சியின் தலைமையகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்சியின் அச்சகமும் மூடப்பட்டது.

ஏனைய எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை கடுமையாக எதிர்த்து அதன் பாரதூரங்களை அனுபவித்துக் கொண்டிருக்க; ஏற்கெனவே பாராளுமன்றத்தில் வாக்களிப்பிலும் எதிர்த்து வாக்களிக்காத பிரதான எதிர்க்கட்சியான கூட்டணியோ எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கமோ இது எதுவும் தமக்கு சம்பந்தமில்லாத விடயத்தைப் போல நடந்துகொண்டார்கள்.

தமக்கு எதிராக கூட்டணி பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தம்மிடம் வாக்கு கொடுத்திருப்பதாக ஜே.ஆர் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

நடைமுறையிலுள்ள பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும் போது தாமும் தமது பதவிகளை விட்டு விலகிவிடுவதாக முடிவெடுத்த கூட்டணியினர் அதற்கான கடிதங்களையும் 04.11.1982 அன்று அமிர்தலிங்கத்திடம் சமர்ப்பித்தனர். கூட்டணியினரின் போக்கு அரசாங்கத்துக்கு மிகவும் சாதகமாகவே இருந்தது.

அதேவேளை கூட்டணியினர் மக்கள் வழங்கிய ஆணையை மேற்கொள்ளாமல் அதனைப் புறக்கணித்து வருவதாக வடக்கு கிழக்கெங்கும் எதிர்ப்புகள் எழத்தொடங்கின.

இந்தத் தேர்தல் தமது இருப்புக்கு முக்கிய தேர்தலாக இருந்ததால் அரச இயந்திரத்தை முழுமையாக பிரயோகித்து அராஜகங்களில் ஈடுபட்டு பதட்ட நிலை உண்டுபண்ணியது அரசாங்கம்.

பொதுத்தேர்தல் இன்றி; அரசாங்கத்தை அப்படியே 6 ஆண்டுகளுக்கு நீடிக்கவைப்பதற்கான தேர்தல் டிசம்பர் 22 அன்று நடந்தது.

அரசாங்கத்தின் சண்டியர்கள் சகல தேர்தல் நிலையங்களையும் ஆக்கிரமித்திருந்தார்கள், கள்ள வாக்கிடுவது, வாக்காளர்களை மிரட்டுவது, தேர்தல் அதிகாரிகளுடன் சண்டித்தனம் செய்வது போன்ற சம்பவங்கள் பதிவாகின. சிறிமாவின் அத்தனகல்ல தொகுதியில் சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரதிநிதிகள் கொலைமிரட்டல்களுக்கு உள்ளானதால் சிறிமா அவர்களை விலக்கிக்கொண்டார். அதன் விளைவு இரு மாதங்களுக்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி 55.92% வீதத்தை பெற்றுக்கொண்ட அந்தத் தொகுதியில் இத் தேர்தலில் ஐ.தே.கவின் பதவி நீடிப்புக்கு ஆதரவாக விளக்கு சின்னத்துக்கு (ஆம்) 67.21%  வாக்குகள் கிடைத்திருந்தது என்றால் பாருங்கள். காலி, களுத்துறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களிலும் குடம் சின்னம் தான் (இல்லை) வென்றது. விளக்குக்கு அதிகபட்ச வாக்குகள் விழுந்தன..

மலையகப் பகுதிகளில் தான் அதிக வெற்றியை ஐ.தே.க ஈட்டியது. தொண்டமானின் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணம். மொத்த 168 தேர்தல் தொகுதிகளில் 48 தொகுதிகளில் அரசாங்கம் தோல்வியடைந்திருந்தது. அப்படி தோல்வியடைந்த தொகுதிகளில் பல அன்றைய பிரபல அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்ட பலரின் தொகுதிகளாகும். அதாவது இதுவே; உரிய பொதுத்தேர்தல் நடந்திருந்தால் இவர்கள் அனைவரும் தோல்வியுற்றிருப்பார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

மலையகத்தில் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் தீர்மானகரமான வாக்குகள் என்பதை ஜே.ஆர் அறிவித்திருந்தார். நாடற்றவர் பிரச்சினையை தன தீர்த்துத் தருவதாக தொண்டமானுக்கு இந்தத் தேர்தலுக்கு முன்னர் வாக்களித்திருந்ததால் இந்தத் தேர்தலில் தொண்டமான் மலையகம் முழுவதும் விளக்குக்கு வாக்களிக்கும் படி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தொண்டமானை இப்படி பேரம் பேசியே கூட வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்த ஜே.ஆர். 1988 வரை நாடற்றோர் பிரச்சினையை தனது அரசியல் துருப்புச்சீட்டாக வைத்திருந்தார். நாடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை 1988 ஜனவரியில் தான் அவர் ஆரம்பித்தார்.


கருப்பு ஜூலையால் தப்பிப்பிழைத்த ஜே.ஆர்.
இந்தத் தேர்தலில் நாடு முழுவதிலுமிருந்து 54.66% விளக்கு சின்னத்துக்கு வாக்களித்து “ஆம்” என்கிற சமிக்ஞையை அளித்தனர். அதேவேளை இந்தத் தேர்தலில் 29% சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் வரலாற்றில் மக்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத முதல் தேர்தல். வெறும் சின்னத்துக்கு புள்ளடியிட்டு பெட்டியில் இட்டார்கள்.

தேர்தலில் நடந்த முறைகேடுகளையும் அராஜங்கங்களையும் சுட்டிக்காட்டி அத்தேர்தலை செல்லுபடியற்றதாக ஆக்கவேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் விஜேவீர வழக்கு தொடுத்தார். அவரின் வழக்கறிஞராக பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க செயற்பட்டார். இந்த வழக்கில் அவர்கள் வென்றால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க நேரிடும். ஆனால் பின்னர் இந்த வழக்கில் ஆதாரங்கள் இல்லையென்று தள்ளுபடி செய்யப்பட்டது. விஜேவீர மேன்முறையீடு செய்தார். ஆனால் 1983 “கருப்பு ஜூலை” படுகொலைகளை நடத்திய அரசாங்கம் ஜே.வி.பியின் மீது பழியைப் போட்டு ஜே.வி.பியை தடை செய்தது. விஜேவீர தலைமறைவானார். இந்த வழக்கின் வழக்கறிஞராக கடமையாற்றிய பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறி வாழ நேரிட்டது. இதனால் அந்த முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ஒரு வருடத்துக்குப் பின்னர் தேர்தல் ஆணையாளரால் அத்தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் விஜேவீர முன்வைத்திருந்த பல குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டிருந்தன.

மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வாக்குகள்

இந்தத் தேர்தலின் மூலம் ஆட்சிசெய்யப்பட்ட மொத்த 17 ஆண்டுகளில் 17 அரசியலமைப்பு திருத்தங்களை தமக்கு தேவையானபடி செய்துகொண்டது ஐ.தே.க. அது 5/6 பெரும்பானையை நீடித்துக்கொண்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பு தேர்தலால் தான் நிகழ்ந்தது.

இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் திகாமடுல்ல மாவட்டத்தைத் தவிர வேறெந்த மாவட்டத்திலும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வெறும் 8.71% வாக்கு மட்டுமே கிடைத்தது. கூட்டணியின் மௌனத்தையும் தாண்டி அரசாங்கத்துக்கு எதிரான மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெட்டத் தெளிவாக உணர்த்தியது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பே தமிழ் மக்களுக்கு அடுத்துவரப் போகும் விளைவுகளுக்கு வழிதிறந்தது. தமது தீர்ப்புகளை தெட்டத் தெளிவாக கூறிய அம்மக்கள் அடுத்த சில மாதங்களில் எதிர்கொள்ளப் போகும் பயங்கரங்களை அறியாதிருந்தனர்.

பிற்குறிப்பு:“மக்கள் தீர்ப்பு” முறை பற்றிய சிந்தனையைக் முதன் முதலில் 1762இல் கொண்டு வந்தவர் பிரெஞ்சு சிந்தனையாளரான ரூசோ. அது பிரான்சின் அரசியலமைப்பில் 1793 இல் சேர்க்கப்பட்டது. 1776 அமெரிக்க சுதந்திர சாசனத்திலும் இந்த முறைமை சேர்க்கப்பட்டது. மேலோட்டமாக இது ஜனநாயகத்தின் நல்ல அம்சமாகத் தோன்றினாலும் கூட மறுபுறம் உலகில் பல தலைவர்கள் தமது குருக்குவழிக்குப் பயன்படுத்தவே செய்திருக்கிறார்கள். 1802இல் நெப்போலியன் போனபெர்ட் ஆயுள்முழுவதும் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது கூட இந்த மக்கள் தீர்ப்பின் மூலம் தான் என்பதையும் இங்கு குறித்தாக வேண்டும்.
1991 இல் பங்களாதேஸ் ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் முறையைக் கொண்டு வந்தது, 1991இல் வட அயர்லாந்து சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போன்றவை கூட சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தான் நிகழ்ந்தது. கடந்த வாரம் ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிவதற்கான தீர்ப்பையும் மக்கள் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தான் எடுத்திருக்கிறார்கள். நீண்ட கால குர்திஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டம் ஜனநாயக வழியில் அம்மக்களின் கருத்தை அறிந்தது இந்த முறைமையால் தான். ஆனால் இலங்கையின் வரலாற்றில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழ்ந்த இந்தத் தீர்ப்பு ஜே,ஆரின் குறுக்குவழி ஆட்சிக்கே வித்திட்டது.
துரோகங்கள் தொடரும்...


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates