Headlines News :
முகப்பு » , » ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்

ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்


இன்று நிகழவிருக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் “சாகித்திய விருது” வளங்கப்படுபவர்களில் இரு பெண் ஆளுமைகள் இடம்பெறுகின்றனர். இருவருமே இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் “நமது மலையகம்” சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். “நமது மலையகம்” இணையத்தளத்தில் இருவரதும் தரமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்விருது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் பலமூட்டட்டும்.


ஜீவா சதாசிவம்
மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக (Trainee Sub - Editor) அறிமுகமானவர்.  முதல் ஆறு மாதம் தினக்குரலில் பெற்ற  பயிற்சியின் பின்னர் பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். அதனை திறம்பட நேர்த்தியாக செயற்வதற்காக ஊடகத்துறையில் உள்ள சக நுணுக்கங்களையும் கற்றிருக்கிறார். ஊடகத்துக்கான கணினித்துறை நுட்பம், தட்டச்சு, பக்க வடிவமைப்பு, புகைப்படவியல், கிராபிக் தொழிநுட்பம், இணையத்தள வடிவமைப்பு என சகலதையும் கற்றுகொண்டார்.

தினக்குரலில் இரண்டரை வருட காலத்திற்குள் பத்திரிகைக்கு தேவையான பயிற்சி, பத்திரிகை ஆசிரியருக்கு தேவையான பயிற்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களை அங்குள்ள ஏனைய ஆசிரியிர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதுடன் தனது தேடலை விரிவாக்கிக் கொண்டவர்.

அந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் (Sub - Editor), செய்தி சேகரிப்பாளர் (Reporter), பாராளுமன்ற செய்தியாளர் (Parliement Reporter) என்றவாறு செயற்பட்டதுடன் மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.

ஞாயிறு தினக்குரல் பகுதிக்கு விவரணக்கட்டுரைகள் எழுதுவது, நூல் விமர்சனங்கள்  எழுதுவது, நேர்காணல்கள் செய்வது போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டு வீரகேசரியில் 2009ஆம் அண்டு உதவி ஆசிரியராக இணைந்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் ஞாயிறு வீரகேசரியில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்ததுடன் மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் 'குறிஞ்சிப்பரல்கள்எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். வீரகேசரி இணையத்தளத்தில் சுமார் ஆறுமாதங்கள் கடமையாற்றியதுடன் அதற்கான செய்திகள் எழுதுதல் வீடியோ நேர்காணல்களையும் மேற்கொண்டு வந்தார்.

இப்போது வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக அலசல் என்கிற பத்தி எழுத்தின் மூலம் அவரின் பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார்.

வீரகேசரி நாளிதழின் கலை இலக்கிய விடயங்களை சுமந்து வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் 'சங்கமம்' சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.

“சங்கமம்” பகுதி ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி பல சந்தர்ப்பங்களில் முற்போக்கான வழியில் தரமான உள்ளடக்கங்களுடன் அதனை நடத்தி வருவது அதன் முக்கிய சிறப்பு. இன்றைய தேசிய வெகுஜன பத்திரிகைச் சூழலில் அப்படி தரமான ஒரு இலக்கிய இதழாக நடத்திச் செல்வது சவால் மிகுந்த விடயமே.

கலை, இலக்கிய கட்டுரைகள் , நேர்காணல்கள் (உள்நாடு, புலம்பெயர் எழுத்தாளர்கள்) , இலக்கிய பத்தி போன்ற பலதரப்பட்ட விடயங்களை செய்துவருவதுடன் பல புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருந்து கொண்டு ஊடகத்துறைக்கும் தனது பரவலான கடமையை ஆற்றிவருகிறார். ஊடகத்துறை சார்ந்த பல பயிற்சிகளுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சியாளராகவும் கலந்து வருகிறார்.

தனது எழுத்துக்களை பதிவு செய்வதற்காக “அலசல்” (https://lindulajeeva.blogspot.no/) என்கிற இணையத்தளத்தையும் தொடக்கி இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 6 அன்று ஜீவாவுக்கு தமிழகத்தில் “இலங்கை ஊடகத் துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமைக்கான “பூவரசி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பத்திரிகைத்துறையில் பத்தாவது வருடத்தைக் கடக்கும் ஜீவா சதாசிவம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் முக்கிய பெண் ஆளுமையாக தன்னை பலப்படுத்திவருகிறார்.


தயானி விஜயகுமார்

நுவரெலியா மாவட்டத்தில் இராகலை நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட தயானி விஜயகுமார் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் மூன்றாவது புதல்வியாவார். இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பாடசாலையில் மிகச் சிறந்த சித்தியினை பெற்று பாடசாலையில் முதல்தர பெறுபேறினை பெற்றுள்ளதோடு க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் 4வது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் பாடசாலை கல்வியை மேற்கொண்ட காலத்தில் குப்பி லாம்புகளோடு போராடி கற்றதோடு அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கையில் இன்னலுற்று முட்டி மோதி வெளிவந்தவர்.

2010ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவியல் பாடத்தை சிறப்பு கற்கையாக தெரிவு செய்து 2015 ஆம் ஆண்டு இளங்கலைமாணி பட்டத்தினை பூர்த்தி செய்துள்ளதோடு 2017ஆம் ஆண்டு அதே பாடத்தில் முதுமாணி பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற போது கண்டித் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் ஒன்றில் பங்குபற்றியதோடு "ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு" என்ற தலைப்பில் கவிதை வாசித்து பலரின் பாராட்டை பெற்றார். பல்கலைக்கழக இதழான இளங்கதிர் இதழில் கவிதை எழுதியதோடு பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு கட்டுரையை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தினக்குரல் பத்திரிகைக்கு அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர் சில காலம் தமிழ்த்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றினார்.

2016 ஆம் ஆண்டு கவிதைத் துறையில் காலடி வைத்தார். இவரின் கவித்திறமையை கண்டு வியந்த தென்னிந்தியாவிலுள்ள "வளரி" கவிதை நூலின் இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் உதவியுடன் முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட உதவி செய்தார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37வது வெளியீடாக இராகலை தயானியின் "அக்கினியாய் வெளியே வா" கவிதைத் தொகுப்பு வெளியானது. இவரின் கவிதைத் தொகுப்பு சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாகவும் உயிர்ப்புள்ள,புரட்சிகரமான கவிதைகளை உள்ளடக்கியதாகவும் எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய திறனாய்வு கட்டுரைகள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி,உதய சூரியன் உதயம்போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.

இவரின் நேர்காணல்கள் தினக்குரல் பத்திரிகையிலும் கல்குடா நேசன் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.

தற்போது நு/ஹ/கபரகல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும் தயானி தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates