அரசியல் தந்திரோபாய செயற்பாட்டில் “ஊடுருவல்” (Infiltrate) என்பது பல வடிவங்களில் இயங்குவதை நாம் அறிந்திருக்கிறோம். எதிரிகளை கண்காணிக்க, தகவல் திரட்ட, அதனை இரகசியமாக பேணிப் பாதுகாக்க, உரிய இடங்களுக்கு அதனை சேர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை நாம் உளவாளிகளாக அடையாளப்படுத்துவோம்.
அரசாங்க, இராணுவ, அரசியல் விவகாரங்களை இரகசியமாக நீண்டகால ரீதியல் வேவு பார்ப்பவர்களை “espionage” அல்லது உறங்குநிலை முகவர் ("sleeper agent) என்றும் அழைப்பார்கள். இவர்கள் அவர்களுடன் இரண்டறக் கலந்திருப்பார்கள். அமைதியாகவும், பொறுமையாகவும் தமது இலக்கை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வடிவங்களில் ஒரு வகையாக ஒற்றர்களை நடுவது (Planting) என்கிற ஒரு வடிவத்தையும் கொள்ளலாம். உலக அளவில் கொம்யூனிச நாடுகளையும், சோஷலிச அரசுகளை நிறுவ முயற்சிக்கும் சக்திகளை அழிப்பதற்கு சீ.ஐ.ஏ நிறுவனம் ஆங்காங்கு போலி கொம்யூனிஸ்டுகளை உருவாக்கி ஆங்காங்கு இரண்டறக் கலக்கச் செய்து உரிய நேரத்தில் அந்த அமைப்பை சிறிது சிறிதாகவோ அல்லது சடுதியாகவோ சிதைப்பதை மேற்கொண்டிருக்கிறார்கள். இது அரசியல், இராணுவ தந்திரோபாயத்தில் மட்டுமல்ல இன்றைய வர்த்தக பொருளாதாரத் துறைகளிலும், சிவில் அமைப்புகளிலும் கூட இருக்கும்.
இந்த “Planting” வகையைப் பற்றிய கதைகள் ஈழப்போராட்டத்தில் நிறைய உதாரணங்களும், ஐயங்களும் உள்ளன. ஆங்காங்கு அந்த உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிவரவுமிருக்கின்றன.
இலங்கையின் பேரினவாத வரலாற்றில் காலத்துக்கு காலம் பல சக்திகள் தோன்றி, வளர்ந்து, இயங்கி பின்னர் சிதைந்து மறுபடியும் இன்னொன்று அந்த இடத்தை நிரப்பும் தொடர் நிகழ்வை நாம் கண்டிருக்கிறோம். அப்படி அமைப்புகள் சிதைக்கப்பட்ட நிகழ்வுகளில் பின்னணியில் இப்படி plant செய்யப்பட்டவர்களின் கையோங்கியிருந்திருக்கிறது என்று இனவாதத் தரப்பில் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள். அதாவது தமிழர்களுக்கு சாதகமானவர்களோ அல்லது தமக்கு எதிரானவர்களோ அல்லது றோ, சி,ஐ.ஏ, மேற்குலகு, டயஸ்போரா போன்ற அந்நிய சக்திகளோ கூட இயங்கியிருக்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் இயல்பாக சுமத்தி வந்திருக்கிறார்கள். அல்லது ஐயப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது அவர்கள் பேசிக்கொண்டிருப்பது, ஜாதிக ஹெல உறுமயவின் வழிமாற்றத்துக்குப் பின்னால் உள்ள சதிகளும், சக்திகளும் பற்றிய உரையாடல்.
“யுத்துகம சங்வாதய”
“யுத்துகம - சங்வாத கவய” (கடமை – உரையாடல் வட்டம் - යුතුකම සංවාද කවය ) என்கிற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இது சமகாலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு சித்தாந்த பலத்தைக் கொடுக்கும் ஒரு பின்புல அமைப்பு. இதில் பல சிங்கள பௌத்த பேரினவாத புலமையாளர்கள் சம்பந்தப்படிருக்கிறார்கள். தலைமை கொடுப்பவர் கெவிந்து குமாரதுங்க என்பவர் (இவர் சிங்களப் புலவரான குமாரதுங்க முனிதாசவின் பேரன்). இவர்கள் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. தேர்தல் அரசியலிலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு சித்தாந்த வழிகாட்டலை செய்துவருபவர்கள். அவர்களின் செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்து அவதானித்து வருகிறேன்.
அவர்களின் இணையத்தளத்தில் சிங்கள பௌத்தத்துக்கு வலுவூட்டும் ஆழமான கட்டுரைகளையும், பிரசுரங்களையும் காணலாம். பெரும்பாலான கட்டுரைகளுக்கு தனிப்பட்ட எவரும் உரிமை கோருவதில்லை. அந்த வட்டத்தின் பேரில் தான் வெளியிடுவார்கள். பல சிங்கள ஊடகங்கள் இவர்களுக்கு தாராளமான இடத்தை வழங்கி வருகின்றன. விவாதங்களில் இவர்கள் மிகுந்த தயாரிப்புடன் வந்து சிங்கள ஜனநாயக சக்திகளுடன் வாதம் புரிவார்கள். ஒரு காலத்தில் இவர்கள் சிங்கள வீர விதான - ஜாதிக ஹெல உறுமயவுடன் சம்பந்தப்பட்டவர்கள். பின்னர் அவை தமது சித்த்தாந்தப் பணியை குறைத்து கட்சி அரசியலுக்குள் நுழைந்ததும் அந்த இடத்தை நிரப்பவென “யுத்துகம” போன்ற அமைப்புகள் தோன்றின.
இப்போது இவர்கள் ஜாதிக ஹெல உறுமயவை விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த வாரம் வெளியிட்டிருக்கிற கட்டுரையின் தலைப்பு “இலங்கை அரசியலில் மறைந்திருக்கும் ட்ரோஜன் குதிரை ஹெல உறுமயவா?”.
அதாவது அரசுக்குள் ஊடுருவி பின்னர் அதைக் கைப்பற்றி சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தை அமைக்கும் திட்டத்துடன் உள்நுழைந்த “ஹெல உறுமய” மீது தாம் எமாற்றமடைந்துவிட்டதாகவும், தாங்கம் நம்பிய “ட்ரோஜன் குதிரை” ஹெல உறுமய இல்லை என்பதை பல தரவுகளுடன் விபரித்துச் செல்கிறது அக்கட்டுரை. இன்னொரு வகையில் சொன்னால் அதற்கான மாற்றீடு அவசியம் என்கிறது.
“ட்ரோஜன் குதிரை”யின் இதிகாசம்
ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை உள்ளது. கிரேக்க தேசத்தின் அழகியான ஹெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும் இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு கிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். கோட்டைக்கு வெளியே போர் நடக்கும். கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.
ஒருநாள் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு பெரிய மரத்தாலான பிரமாண்டமான குதிரையை விட்டுச் சென்றனர். அந்த மரக் குதிரையின் வயிற்றுக்குள் போர்வீரர்களை இரகசியமாக நிறைத்து வைத்திருந்தனர். போர் நடந்து கொண்டிருந்தபோது மரக்குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு கிரேக்கர்கள் தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டார்கள் என்று நம்பிய ட்ரோஜன் வீரர்கள் குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட கோட்டைக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள்.
ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினார். எவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் போதையில் வீழ்ந்து உறங்குகையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். ஹெலன் மீட்கப்பட்டு கணவனிடம் சேர்க்கப்பட்டதாக அந்த கதை முடிகிறது.
இது புனைகதை அல்ல. History Channel இல் கூட இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சிறந்த வரலாற்று ஆவணத்தை ஆய்வுபூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்த கதையை மையமாக வைத்து 1961 இல் "The Trojan Horse" திரைப்படம் வெளிவந்தது. மீண்டும் பிரெட் பீட் நடித்து 2004 ஆம் ஆண்டும் “TROY” என்கிற பெயரில் மிகப் பிரபல்யமான ஒரு திரைப்படம் கூட வெளிவந்தது. இந்தக் குதிரைக் காட்சி அத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக வைக்கப்பட்டிருக்கும். பல விருதுகளை வாங்கிக் குவித்த திரைப்படம் அது. அதே பெயரில் தொடர் நாடகமாகவும் அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது. சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளும் வெளிவந்துள்ளன.
கொம்பியூட்டர்களை இப்படி ஊடுருவித் தாக்கி சிதைக்கும் ஒரு வைரசுக்கு கூட “ட்ரோஜன்” என்று பெயர் வைத்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அரசியல் உரையாடல்களிலும், ஆய்வுகளிலும் “ட்ரோஜன் குதிரை” என்கிற பதமானது துரோகத்தைக் குறிக்கவும், ஊடுருவுதல், வேவு பார்த்தல், ‘ஒற்றர்களை நட்டு’ சிதைத்தல் என்பவற்றை குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இனி நமது அரசியலிலும் ட்ரோஜன்களை இனங்காணுங்கள்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் பேரினவாத சக்திகள் தம்மைப் பலப்படுத்த அரசாங்கத்திலும், அரச அதிகார கட்டமைப்புகளிலும், சிவில் அமைப்புகளிலும், ஊடகங்களிலும் ட்ரோஜன்களை உருவாக்கி கவனமாக காய் நகர்த்தும் போது. அடக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு இனம் தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், உரிமைகளை வென்றெடுக்கவும் தமக்கான ட்ரோஜன்களை உருவாக்கிக் கொண்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள் தோழர்களே.
நன்றி - அரங்கம்
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...