செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! – 7
கொலம்பியா லத்தீன் அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ஒரு பெரிய நாடு. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்நாட்டு கிளர்ச்சியில் ஸ்தம்பிதமற்ற அரசாட்சிப் போக்கைக் கொண்ட ஒரு நாடாக ஆகியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் காணப்படுகிறது. அந்நாட்டின் பன்முக நிலவியல் தோற்றம் பல இனக்குழுமங்களைக் கொண்ட பன்முக அடையாளங்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது.
அமேசன் காட்டின் ஒரு பகுதி கொலம்பியாவுக்குள் இருப்பதால் அமேசன் மீதான உலக கரிசனையின் போது கொலம்பியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. கொலம்பியாவின் பெரிய வளமே அது கொண்டிருக்கும் காடு தான். உலகில் 2600 வகையான செம்பனைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் அதிகமான வகைகள் கொலம்பியாவில் தான் இருக்கிறது. கொலம்பியாவின் தேசிய மரமே மெழுகு பனை (wax palm) தான். தென்னை மரம்போல மெல்லிய - உயரமானதாக அது இருக்கும். பனை வகையிலேயே உயரமானதும் அது தான். 200 அடிகள் வரை வளரக் கூடிய அது 100 வருடங்கள் வரை கூட வாழக் கூடியது.
மாபியாக்களின் தேசம்
இடதுசாரிகளின் வலுவான போராட்டம், அரசாங்கத்தின் ஆயுத அடாவடித்தனம், துணை இராணுவக் குழுக்கள், அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற வலதுசாரி ஆயுதக் குழுக்கள், மாபியா குழுக்கள் என பல்வகைப்பட்ட வன்முறைகள் அதிகரித்த நாடாக அது இருக்கிறது. இந்தப் பின்னணியில் இருந்துதான் அங்குள்ள பசுமைக் காடுகளின் பாதுகாப்பு, அதன் மீதான கரிசனை, செம்பனை உற்பத்தியில் செலுத்தும் தாக்கம் என்பனவற்றை நோக்க வேண்டும். எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்பார்கள். இங்கு இந்த சூழலை பயன்படுத்தி உலக கார்ப்பரேட் மாபியா நிறுவனங்கள் தாராளமாக கடைவிரித்துள்ளன. ஒரு தரப்பு ஆதரிக்காவிட்டால் மறுதரப்பிடம் இருந்தாவது லாபம் சம்பாதிக்கும் கைங்கரியத்தை தாராளமாக கைகொள்கிறார்கள். உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைச்சு செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் 21 பிரதான கம்பனிகளுடன் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அது வெறும் கண் துடைப்பே என்று சூழலியலாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.
போராட்டக் குழுக்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களைப் போலவே தமது கட்டுப்பாட்டில் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்து போர் புரிந்து வந்தது. அரசுக்கும் பிரதான இடதுசாரிப் போராளிக் குழுவுக்கும் இடையில் (Armed Forces of Colombia-People’s Army -FARC-EP) 2016ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் மூலம் ஐந்து தசாப்த கால போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு நோர்வேயும் கியூபாவும் அனுசரணை வழகியிருந்தன. அதுவரைகால போரில் 220.000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
உலக போதைப்பொருள் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பெரிய இடம் கொலம்பியாவுக்கு உண்டு. உலக போதைப்பொருள் உற்பத்தியில் 75% சதவீதம் கொலம்பியாவில் இருந்து தான் வெளிச்செல்கிறது. தீவிரவாத இயக்கங்களும் கூட தமது நிதித் தேவையை ஈடுசெய்ய போதைப்பொருள் உற்பத்தியில் இறங்கியிருப்பது உலகளவில் அறிந்த விடயம்.
உலகில் அதிகளவு சூழலியலாளர்கள் கொல்லப்படுவது லத்தின் அமெரிக்க நாடுகளில் தான். 2017இல் மாத்திரம் உலகம் முழுவதும் 207 பேர் கொல்லப்பட்டனர். பிரேசில் பிலிப்பைன்ஸ், கொலம்பியா ஆகிய நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டன. கொலம்பியாவில் கடந்த வருடம் 27 சூழலியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம் ஒஸ்லோவில் நிகழ்ந்த காடழிப்புக்கு எதிரான மாநாட்டில் கொலம்பியாவைச் சேர்ந்த இராணுவத் தளபதியொருவர் தான் அந்நாட்டுப் பிரதிநிதியாக வந்திருந்தார். அங்கு வந்திருந்த கொலம்பிய சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலம்பியாவின் இராணுவவாத போக்கு பற்றி பகிரங்கமாக கருத்துவெளியிட்டார்கள்.
கொலம்பியாவில் செம்பனை உற்பத்தியை 1945 ஆம் ஆண்டு தொடக்கி வைத்ததே ஒரு அமெரிக்க கார்ப்பரேட் கம்பனி தான். ஏற்கெனவே இருந்த பாரிய வாழைமரத் தோட்டங்களை அழித்துத்தான் பதிலாக செம்பனை செய்கை தொடங்கப்பட்டது.
செம்பனை உற்பத்தியில் லத்தின் அமெரிக்க நாடுகளிலேயே முதன்மை இடத்தையும் உலகில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது கொலம்பியா. செம்பனை எண்ணெய் உற்பத்தி பெரும் இலாபமீட்டும் துறையாக இருந்ததால் மேலதிக இலாபமீட்டுவதற்கென எந்தவிதமான தீமைகளையும் கணக்கிற் எடுக்காமல் குருகுவளிகளைக் கையாண்டு வருகின்றன. அதன் விளைவு காடழிப்பு, பறவைகள் - விலங்குகளின் அழிவு, வளிமாசடைய செய்தல், பழங்குடி மக்களின் இருப்பையும் வாழ்வாதாரத்தையும் நாசமாக்குதல், பெருமளவு கார்பன்டை ஆக்சைட் வெளியீடு என பாரிய தீமைகளை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறது.
யுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை என்பவற்றின் ஒரு அங்கமாக போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக புதிய பொருளாதாரத் திட்டங்கள், விவசாயத் திட்டத்தை விரிவாக்குவது என்பன அறிவிக்கப்பட்டன. இந்த புதிய மறுசீரமைப்புத் திட்டத்தின் படி சட்டவிரோத செம்பனை உற்பத்திக்கெல்லாம் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்து விசாலிப்பதற்கு வழி சமைத்தது. சுற்றுச் சூழல் விடயத்தில் எந்தவித ஆரோக்கியமான மாற்றத்தையும் இந்த அமைதி முயற்சியால் மேற்கொள்ள முடியவில்லை.
பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒரே வருடத்தில் 42% வீதத்தால் செம்பனை எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பனையோடு தொடர்புடைய ஏற்றுமதியால் மாத்திரம் 414 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாயாக 2017இல் கொலம்பியா பெற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே அதன் பெருமளவு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் கொலம்பியாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை கணிசமான அளவு ஈடுசெய்கிறது செம்பனை எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எண்ணெய் (Bio fuel).
கடந்த ஆண்டு (2017) கொலம்பிய விவசாயத்துறை, காணித்திட்டமிடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கொலம்பிய நிலத்தில் 16 மில்லியன் ஹெக்ரெயர் நிலம் செம்பனை உற்பத்திக்கு தகுதியான நிலமாக கணிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. அது மொத்த கொலம்பிய நிலப்பரப்பில் 14% சதவீதமாகும்.
இலங்கை கற்க வேண்டிய பாடம்
உள்நாட்டு யுத்தம், அதில் குளிர்காய வந்த செம்பனை கார்ப்பரேட் கம்பனிகள், அதற்குப் போட்டியாக வளர்ந்திருக்கும் மாபியா வர்த்தகம், எதிர்க்கும் மக்கள் மீது ஏவப்படும் படுகொலைகள் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அக்கிரமக்காரர்களுக்கு சலுகை செய்யும் மக்கள் விரோத அரசு என்கிற நிலைமையை ஒரு கணம் இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ இலங்கையின் நிலைமையும் ஏறக்குறைய இதற்கு ஒத்ததாக பயணிப்பதைக் காணலாம். இலங்கையில் செம்பனை உற்பத்தியில் நேரடி ஆயுததாரிகள் நுழையாவிட்டாலும் நாகரிக போர்வையில் கார்ப்பரேட் கம்பனிகள் கோலோச்சுவத்தையும் அவற்றுக்கு அரசே போதிய காணிகளை வழங்கி அரச அனுசரணை வழங்கி ஊக்குவிப்பதும் நடக்கிறது.
இன்னமும் இலங்கை மக்கள் இது தொடர்பில் போதியஅளவு விழிப்படையவில்லை என்கிற தைரியத்தில் தான் அது நிகழ்கிறது. செம்பனை பற்றிய இலங்கை மக்களின் அறியாமை நிலை தற்போது கணிசமான அளவு மாறிக்கொண்டுவருவதை இப்போதெல்லாம் காண முடிகிறது. செம்பனை உற்பத்தியாளர்கள் கதிகலங்கிப் போய் தற்போது எதிர்ப் பிரசாரத்துக்கென பெருமளவு பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஊடக செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. ஆக, நமக்கு எதிர்ப்பிரச்சாரத்தை எதிர்த்து நிற்கும் பலம் தேவைப்படுகிறது. விழிப்புணர்வுக்கான பணியே அதன் முதன் படியாக இருக்க முடியும். இக்கட்டுரைத் தொடரின் இலக்கும் அது தான்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...