பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் குறித்த அதிர்வலைகள் இப்போது இடம்பெற்று வருகின்றன. புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் ஏனைய உரிமைகளும் உரியவாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதற்கிடையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவும், தொழிற்சங்கங்களுக்கு வலிமை சேர்க்கவும் மக்களோடு சேர்ந்து கம்பனிகளுக்கு எதிராகப் போராட்டம் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும், இதற்கு மக்களும் தயாராக வேண்டுமென்றும் தொழிலாளர் தேசிய சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது.
கூட்டு ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. 2 வருடங்களுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களின் நலன்களுக்கு வலுச் சேர்க்கின்றது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொள்வதில் பல அனுபவ ரீதியிலான பிரச்சினைகள் ஏற்கனவே எதிர்கொள்ளப்பட்டன. எனவே இதற்கு மாற்றீடாக கூட்டு ஒப்பந்த முறை சிறந்ததாகக் கருதப்பட்டது. எனினும், கூட்டு ஒப்பந்த நடைமுறை தொடர்பிலும் இப்போது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும். கூட்டு ஒப்பந்தத்தை மரண சாசனம் என்றும் அடிமை சாசனம் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். கூத்து ஒப்பந்தம், கூட்டாளிகளின் ஒப்பந்தம் என்றெல்லாம் கூட இதனை இன்னும் சிலர் வர்ணணை செய்து வருகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தின் சில சரத்துகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக அமைந்துள்ளதாகவும், எனவே இச்சரத்துகளை தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென்றும் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாகவே கூட்டு ஒப்பந்தத்தின் உண்மையான பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க ஏற்கனவே இருந்த சம்பள நிர்ணயசபை முறை நடைமுறையில் இருந்திருந்தால் கூட்டு ஒப்பந்த முறையை காட்டிலும் அதிகமான சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றுக்கொண்டிருப்பர் என்றும் கூட்டு ஒப்பந்த முறை இதற்கு முட்டுக்கட்டையாகியுள்ளதாகவும் சிலர் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இராமநாதன் தனது நூல் ஒன்றில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதற்கமைய தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சம்பள நிர்ணய சபையை விட தோட்டக் கம்பனிகளோடு பேரம் பேசி சம்பளத்தை உயர்த்திக்கொள்வது ஓரளவு சிறந்த வழிமுறை என்பதனையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மேலும் கூட்டு ஒப்பந்தம் மூலமான சம்பள உயர்வு தொழிலாளர்களுக்குப் போதுமானது அல்லது திருப்திகரமானது என்பது எனது விவாதமல்ல என்பதனையும் இராமநாதன் தெளிவாகவே தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றோடு தேசிய மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்த முறையும்கூட தொழிலாளர்களுக்கு சாதகமாக இல்லையெனின் அதைவிட சிறந்த முறையிலான கூடிய நன்மை தரக்கூடிய வழிமுறையைப் பின்பற்ற தொழிற்சங்கங்கள் ஆலோசிக்கலாம் என்றும் அவர் தனது நூலில் ஏற்கனவே (2009) ஒரு கருத்தினையும் முன்வைத்திருக்கின்றார்.
1997 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைச் சம்பளமான நாட்சம்பளம் ரூ.83 ஆகும். 1999 இல் 95 ஆக உயர்வடைந்து 2001ஆம் ஆண்டிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர் சம்பளத்துடனான கொடுப்பனவுகள் மாற்றியமைக்கப்பட்டன. இதேவேளை 1996 ஆம் ஆண்டிலிருந்து வரவு ஊக்குவிப்பும், விலைப்பங்கு அனுபந்தமும் கூட்டு உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டுவரை வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளுக்கான தேவை தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில் 85 வீதத்திற்கு மேலாக இருந்ததாக கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸின் நூல் ஒன்று வலியுறுத்துகின்றது. அதன் பின்னர் 75 வீதத்திற்கு மேலாக குறைக்கப்பட்டது. இத்தேவையைப் பூர்த்தி செய்யாதவர்கள் வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாகமாட்டார்கள். மாதமொன்றிற்கான ஒரு தொழிலாளியின் சராசரி வரவு 18 நாட்களாகும். பேராசிரியர் சின்னத்தம்பியினால் 1985இல் மேற்கொள்ளப்பட்ட கற்கையும், கெயார் சர்வதேச நிறுவனத்தினால் 1999களில் மேற்கொள்ளப்பட்ட கற்கையும் தோட்டங்களில் வழங்கப்படும் மொத்த வேலை நாட்களுக்கும் தொழிலாளர்களுக்கு செல்ல முடியாது என்பதை நிரூபித்துள்ளதாகவும் மேற்படி நூல் வலியுறுத்துகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அப்பாவி தொழிலாளர்களின் உரிமை பறிபோவதாக ஒரு கருத்தும் இருந்து வருகின்றது. இதுபோன்றே கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளின்போது பெருமளவு தொகை கைமாறுவதாகவும் ஏற்கனவே பல வதந்திகள் நிலவியமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இத்தகைய வதந்திகள் கூட்டு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையினை கேள்விக்குறியாக்கியிருந்தன. கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தினையும் சீரழித்திருந்தன.
இழுபறிகள்
கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் இடம்பெறும் போதெல்லாம் பல்வேறு இழுபறிகள் மேலோங்குவது தெரிந்த விடயமாகும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளாது தனது பக்க நியாயங்களை முன்வைத்து கோரிக்கைகளை மழுங்கடிப்பு செய்வதிலேயே பெரும்பாலும் குறியாக இருந்து வந்துள்ளது. கம்பனிகள் நட்டமடைகின்றன. உற்பத்தி செலவு அதிகமாகவுள்ளது. தொழிலாளர்கள் தோட்டங்களில் உரியவாறு தொழிலுக்கு வருவதில்லை. இதனால் கம்பனிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்றெல்லாம் முதலாளிமார் சம்மேளனம் கூறி வருகின்றது. எனினும் கம்பனியினர் இலாபங்களை மூடி மறைத்து தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வருவதாகவும் பிழையான புள்ளி விபரங்களை சமர்ப்பிப்பதாகவும் தொழிற்சங்க தரப்புகள் பலவும் குற்றம் சுமத்தி வருகின்றன.
தேயிலைப் பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதானமாக உழைப்புச் செலவின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் நட்டமடைவதாகக் கூறுகின்றன. இவை உழைப்புச் செலவாகக் குறிப்பிடுவது தொழிலாளர்களின் சம்பளத்தையேயாகும். உழைப்புச்செலவு நேரடி, மறைமுக உழைப்புச் செலவுகளை உள்ளடக்குகின்றது. உற்பத்திச் செலவில் 60 வீதம் உழைப்புச்செலவாகக் கணக்கிடப்படுகின்றது. உழைப்புச்செலவுகள் குறித்த போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் முகாமைத்துவம் இது குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் இவர்கள் சுட்டிக்காட்டுவதோடு கம்பனிகள் நட்டமடைவதாகக் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கான பல உதாரணங்களையும் இவர்கள் முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளின்போது தொழிற்சங்கங்களுக்கிடையே பொது இணக்கப்பாடு என்பது பெரும்பாலும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. தொழிற்சங்க விரிசல்கள், முரண்பாடுகள் இக்காலங்களில் பூதாகரமாக உருவெடுக்கின்றன. இத்தகைய நிலைமைகளும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஒரு வாய்ப்பாகப் போய் விடுகின்றது. தொழிற்சங்க முரண்பாடுகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முதலாளிமார் சம்மேளனம் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றது.
போராட்டங்கள்
கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளின்போது தமது எதிர்பார்ப்புகள் மழுங்கடிக்கப்படும் நிலையில் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தமை கடந்த கால வரலாறாக உள்ளது. மெதுவாக பணிசெய்யும் போராட்டம், கொழும்புக்கு தேயிலையை கொண்டு செல்லவிடாது லொறிகளை மறிக்கின்ற போராட்டம், தேயிலை தொழிற்சாலை நடவடிக்கைகளை முடக்குகின்ற போராட்டம் என்று போராட்டங்கள் பல்வகை தன்மை கொண்டதாக அமைந்தன. எனினும், போராட்டங்களின் பின்னரும் தமக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்ற வெளிப்பாடுகளே தொழிலாளர்களிடத்தில் அதிகமாகக் காணப்பட்டமையும் தெரிந்த விடயமேயாகும்.
அரசாங்கம் குறித்த விமர்சனங்கள்
ஒவ்வொரு அரசாங்கத்தின் எழுச்சிக்கும் மலையக மக்கள் காத்திரமான பங்காற்றி இருக்கின்றார்கள். மலையக மக்களின் வாக்குகள் அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கமும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. நல்லாட்சியை உருவாக்குவதில் மலையகத்தவர்கள் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றார்கள். எனினும் அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் மலையக மக்களைப் புறந்தள்ளியே செயற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மையில்லாமலும் இல்லை. வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வம் அம்மக்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்வதில் காட்டப்படுவதில்லை. மலையக மக்களின் பல்வேறு தேவைகள் இன்னும் நிறைவு செய்யப்படாத நிலையில் உள்ளன. இவைகளை உரியவாறு பெற்றுக்கொடுப்பதில் இன்னும் இழுபறி நிலையே இருந்து வருகின்றது.
இந்நிலையில் கூட்டு ஒப்பந்த விடயங்களிலும் அரசாங்கத்தின் வகிபாகம் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றவர்களும் தமது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றமை நோக்கத்தக்கதாக உள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர முடியாத அரசாங்கத்திற்குத் தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவளிப்பதில் என்ன பயன்? என்று அவர் கேள்வியெழுப்பி இருக்கின்றார். மேலும் நல்லாட்சிக்கு ஆதரவளித்த மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. தோட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாகக் கூறும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் மலையக அமைச்சர்கள், அம்மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதால் மட்டும் அம்மக்களின் பொருளாதாரக் கஷ்டம் தீரப்போவதில்லை. அதனால் இந்த அரசை மாற்ற மலையக மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று திஸ்ஸ விதாரண தெரிவித்திருக்கின்றார். இவ்வாறாக அரசை மாற்ற மலையக மக்கள் ஒத்துழைத்தாலும் வருகின்ற புதிய அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமா? என்பது குறித்தும் சந்தேகம் கொள்ளவேண்டிய நிலையே காணப்படுகின்றது.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு உரியவாறு தோள் கொடுக்க தவறியுள்ளன என்ற கசப்பான உண்மையை சகலரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
முறைப்பாடு
கடந்த 2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களின் தொழில் உரிமைகளையும் ஏனைய விடயங்களையும் மீறியுள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், தொழிற்சட்டங்களுக்கு முரணானது என்று தெரிவித்திருந்த மக்கள் தொழிலாளர் சங்கம் ரிட் மனுவொன்றையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. எனினும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை மீளாய்வு செய்வதற்கு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான இ.தம்பையா கருத்து வெளியிட்டிருக்கின்றார். மேலும், கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்பதை சர்வதேச ரீதியாக கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பையா தெரிவித்திருக்கின்றார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை இனியும் எத்தனை காலங்களுக்குப் பொறுத்துக் கொண்டிருப்பது? இது குறித்து தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்தால் நாம் இங்கு அது குறித்து பேச வேண்டியதில்லை.
இலங்கையின் தற்போதைய வாழ்க்கைச்செலவும் படிப்படியாக சம்பளத்துக்குப் புறம்பாக 7800 ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால், தொழிலாளர்களோ மாதச்சம்பளமாகவே இத்தொகை அல்லது இதற்கும் குறைவான தொகையினை பெறுகின்றனர். இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஒப்பந்தம் கைச்சாத்திட முன்பும் பின்பும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இதனால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. ஏனெனில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு அது தொழில் ஆணையாளரால் வர்த்தமானியில் பிரசுரமாகின்றது. அதுவே சட்டமாகின்றது. அதன் பிறகு இந்த ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? என்றும் தம்பையா விளக்குகின்றார். புதிய சம்பள சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கூட்டு ஒப்பந்தம்
இப்போது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் காலாவதியாகவுள்ளது. இதன் பின்னர் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இது குறித்த முன்னெடுப்புகள் இப்போதிருந்தே ஆரம்பமாகியுள்ளன. புதிய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சம்பள உயர்வு உரியவாறு உறுதிப்படுத்தப்படுவதோடு தொழிலாளர்கள் ஏனைய பல நலன்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களும் கோரிக்கைகளும் வலுவடைந்து வருகின்றன. இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இக்கலந்துரையாடலுக்கு தலைமை வகித்திருந்தார். இராஜாங்க அமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர்களான எம்.ராமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.சக்திவேல், கணபதி கனகராஜ், முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எஸ்.அருள்சாமி, கூட்டுக்கமிட்டி தலைவர் எஸ்.இராமநாதன் உட்பட மற்றும் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இக்கலந்துரையாடலை நல்ல ஒரு முயற்சியென்று தொழிலாளர் தேசிய சங்கமும் வரவேற்றிருந்தது. இதற்கு முன்னர் ஒரு தொழிற்சங்கம் மாத்திரமே சம்பளத்தைத் தீர்மானித்து வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஏனைய தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு தீர்மானிக்க வழி பிறந்துள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.
இதேவேளை மலையகத்தில் இரண்டாவது பெரிய தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் விளங்குகின்றது. எமது சங்கத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு அரசியல் ரீதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் சங்கத்தின் செய்திகள் வலியுறுத்துகின்றன. இந்நிலையில் கடந்த 06 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடந்த முறை (2016) செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யும் விடயங்கள் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாகக் கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமை, தோட்டங்களிலுள்ள தேயிலை மலைகள் துப்புரவு செய்யப்படாமை முதலான விடயங்களும் உள்ளடங்கியிருந்தன. மேலும் இம்முறை செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடே தொழிற்சங்கங்கள் மத்தியில் காணப்படுகின்றது என்றும் வடிவேல் சுரேஷ் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
கருத்து வெளிப்பாடுகள்
புதிய கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பலரும் தனது நிலைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இவையனைத்தும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் நலன்களை மையப்படுத்தியதாக உள்ளன. சம்பள நிர்ணயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொழிலாளர்களின் இன்றைய நிலை அறிந்து தொழிற்சங்கவாதிகளோடு தோட்டத் தொழிலாளர்களின் பால் உண்மையான அக்கறை கொண்ட சமூக, பொருளாதார நிபுணர்களோடும் கலந்துரையாடி அனைத்து புள்ளிவிபரங்களோடு பேரம் பேசி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்று இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் பிரதித்தலைவருமான இரா.தங்கவேல் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர்களின் வாழ்க்கைச்செலவு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் கூட்டு ஒப்பந்தத்தில் உரியவாறு உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் வலியுறுத்தியிருக்கின்றார்.
பெருந்தோட்ட பொருளாதாரம் என்பது இன்று மாறும் நிலையிலிருந்து வருகின்றது. வெளியார் உற்பத்தி முறைமை, சிற்றுடைமை முறைமை என்றெல்லாம் பல்வேறு சிக்கல்களும் மேலெழுந்து வருகின்றன. எனவே இந்த மாறும் நிலைக்கு மத்தியில் கூட்டு ஒப்பந்தமானது விரைவில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் சமகால களநிலைமைகளை கருத்தில் கொண்டு கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்கு வங்கியினை கருத்தில் கொண்டு செயற்பட முனைதல்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், அரசியல் ஆய்வாளருமான ஏ.லோரன்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இதுபோன்று மேலும் பலரும் தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிலாளர் தேசிய சங்கம்
கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட வேண்டுமே தவிர அவர்கள் பாதிக்கப்படும் நிலைமைக்கு வித்திடலாகாது என்று மலையக தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருக்கின்றன. இந்நிலையில், தொழிற்சங்கங்களுக்கு வலிமை சேர்க்கவும், சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவும் தொழிலாளர்களுடன் சேர்ந்து கம்பனிகளுக்கு எதிராகப் போராட்டம் செய்வதற்கும் தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்திருக்கின்றார். மக்களுக்கு அநீதி நேரக்கூடாது என்பதற்காகவே தான் குரல் கொடுத்து வருவதாகவும் தட்டிக்கேட்பதாகவும் தெரிவித்துள்ள திகாம்பரம் தொழிலாளர்களின் கஷ்டங்களை தான் உணர்ந்துள்ளதால் எந்த சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்கு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையமும் முன் வந்திருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கௌரவமானதும் நியாயமானதுமான ஒரு மாதாந்த சம்பளத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தைக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு மாதாந்த சம்பளத் திட்டமொன்றை கோரியிருந்தனர். ஆனால் அரசாங்கம் இதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தமது தொழிற்சங்க மத்திய நிலையத்துடன் இணைந்துள்ள 10 தொழில்சார் தொழிற்சங்க அமைப்புகளுடன் சேர்ந்து தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு குரல் கொடுக்க உள்ளதாக லால் தெரிவித்திருக்கின்றார்.
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
கூட்டு ஒப்பந்தம் குறித்த பல விடயங்களை கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் வலியுறுத்தி இருந்தார். கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொழிலாளர் பக்கம் பெரும்பாலும் வெற்றியைத் தருவதாக இல்லை. வேதனத்தை முன்னிறுத்திய பெருந்தோட்டங்களாக இருப்பதற்குப் பதிலாக உற்பத்தித் திறன்மிக்க பெருந்தோட்டங்களாக இதனை அவதானிக்க வேண்டும் என்று முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தி வருகின்றது. உற்பத்தித் திறனைக் கொண்ட தொழிற்றுறையாக இது காணப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகவுள்ளது. இதற்கென வெளியார் உற்பத்தி முறையையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். 15 தொடக்கம் 20 வீதமான தொழிலாளர்களை இதில் ஈடுபடுத்தி பரீட்சார்த்தமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டத் தொழிலைக் காட்டிலும் 4ஆயிரம் தொடக்கம் 6ஆயிரம் ரூபா மேலதிக வருமானமாக கிடைப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மொத்த விற்பனையில் 65 வீதம் மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. உயர் விளைவு தரும் தேயிலைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்நிலையானது தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதாக அமையும். இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
அரசாங்கம் கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளில் பங்கு பற்றாது ஒதுங்கி நின்று வேடிக்கைபார்ப்பது ஒரு பெரும் குறையாகும். கூட்டு ஒப்பந்தம் முத்தரப்பு ஒப்பந்தமாக மாற்றமடைய வேண்டும். பெருந்தோட்ட மக்களின் வருமானத்தில் அரசாங்கம் தலையிடாக்கொள்கையை கடைப்பிடிக்கின்றது. தொழிலாளரின் வறுமைக்கு இதுவே காரணமாகும். தொழிலாளர் வெளியேற்றத்துக்கும் இதுவே காரணமாகும். வெளியார் உற்பத்தி முறையை சாதகமாக்கிக் கொள்வதற்கு முற்படுதல் வேண்டும். இது தொழிலாளர் வெளியேற்றத்தினை தடுக்கவும் உதவும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...