இந்த பூமியின் அழிவு பற்றி தினசரி புதிய புதிய வடிவத்தில் பீதி கிளப்பப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த பீதி வெறும் புனைவல்ல. அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கபட்டுக்கொண்டிருக்கும் நமக்கு கசப்பான அறிவியல் உண்மை.
அதில் உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அறியாமையால் கடந்துபோகக் கூடிய மனிதக் கூட்டத்தை விளங்கிக் கொள்ளலாம் ஆனால் அறிந்தவர்கள் கூட அசட்டையாக தமது தற்காலிக இலாபத்துக்காக மேலும் இந்த அழிவை வேகப்படுத்திக் கொண்டிருப்பது தான் இதன் ஆபத்து பற்றி உணர்ந்த பாமரர்களையும் கையறுநிலையில் சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த அழிவைப் பற்றி பேசுவதல்ல இந்தக் கட்டுரை ஒரு வேளை இயற்கையாகவோ, செயற்கையாகவோ இந்த உலகம் அழிவுக்கு உள்ளானால் மறுபடியும் உயிர்கள் தழைக்க என்ன செய்ய முடியும் என்பது பற்றிய மாற்று வழிகளையும் தொடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னொருபுறம்.
பூமி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை, சூழலில் மாற்றம் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு வேளை உலகம் அழிந்தால்?, விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால்?, உலகம் அழிந்து அதில் தப்பிழைக்கும் சிறு மனித கூட்டம் உணவில்லாமல் உயிருக்குப் போராடினால்?
இது போன்ற கேள்விகளுக்கு பதிலைத் தான் நோர்வேயின் வடக்கில் இன்னும் சொல்லப்போனால் வட துருவ பகுதியில் ஸ்வால்பார்ட் (Svalbard) என்கிற இடத்தில அமைக்கப்பட்டுள்ள “உலக விதைப் பெட்டகம்". இதனை இன்னொரு பெயராலும் அழைப்பார்கள் “பேரழிவுப் பாதுகாப்புப் பெட்டகம்” (Doomsday Seed Vault).
பேரழிவுப் பாதுகாப்புப் பெட்டகம்
இது போன்ற விதைப் பெட்டகம் உலகில் வேறு சில நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நோர்வேயில் அமைக்கப்பட்டுள்ளத்து தான் உலகின் பெரிய விதை வங்கி. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகள் பல வகையான விதைகளை அந்த வங்கிக்கு அன்பளிப்பு சேமிக்கச் செய்திருக்கின்றன. இதன் அமைவிடம் இந்த உலகின் அழிவில் இருந்து தப்பக்கூடிய சாத்தியம் அதிகபட்சம் இருக்கக்கூடியதாக நம்பப்படும் இடம். அதன் சீதோஸ்ன நிலை கூட இந்த விதைகளை பல்லாண்டுகள் பாதுகாக்கக்கூடியது என்கிற அறிவியல் பூர்வமான வழிமுறைகளுடனேயே அமைக்கப்பட்டிக்கிறது.
ஸ்வால்பார்ட் நோர்வேக்கு வெளியில் வடதுருவத்தில் தனிப்பெரும்தீவாக இருக்கிறது. கிட்டத்தட்ட இலங்கையின் பரப்பளவில் உள்ள தனித் தீவு இது. (ஸ்வால்பார்ட் = 61,022 km2 , இலங்கை = 65,610 km2). வருடத்தில் மூன்று மாதங்கள் முழுமையான இருளில் தான் இந்தப் பிரேதேசம் இருக்கும். அதுபோல நள்ளிரவுச் சூரியனுடன் வசந்த காலத்தில் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும். மொத்த சனத்தொகையே 2667 பேர் மட்டும் தான். அதிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் நோர்வேஜியர்கள் அல்லாதவர்கள்.
அங்கே எந்த மரங்களையும் காண முடியாது. வசந்த காலத்தில் புற்களோடு சேர்ந்து வளரும் சிறு மலர்களைப் பறிப்பது கூட தண்டனைக்குரிய குற்றம் என்று எங்களிடம் மேயர் தெரிவித்தார். பனிக்கரடியின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அங்குள்ளவர்கள் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரணம். ஆர்க்டிக் கண்டத்தை ஆராய்வதற்கான சர்வதேச பல்கலைக்கழகமும் இங்கு தான் இருக்கிறது.
இன்றும் இந்தத் தீவின் மற்ற பகுதியில் சோவியத் யூனியனுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களும், சோவியத் யூனியனின் ஒரு குட்டி நகரமும் இருக்கிறது. அங்கே லெனினின் பாரிய சிலைகளைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். சோவியத் யூனியன் ஆக்கிரமித்து வைத்திருந்த பகுதியை அப்படியே அவர்களின் பயன்பாட்டுக்கு உடன்படிக்கையின் பேரில் அனுமதித்திருகிறது நோர்வே.
விதை வங்கி
ஸ்வால்பார்ட்டிலுள்ள ஒரு மலையை 120 மீற்றர் தூரம் வரை குடைந்து உள்ளே அறைகளைக் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது இந்த விதை வங்கி. மைனஸ் 18 பாகையில் இந்த விதை வங்கி பேணப்படுகிறது. எனவே இங்கு அந்த விதைகள் இயற்கையாகக் கெடாமல் பாதுகாக்க முடிகிறது.
இந்தத் திட்டத்திற்காக 2008 ஆம் ஆண்டளவில் 8.8 அமெரிக்க மில்லியன்களை நோர்வே செலவு செய்திருந்தது. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் இந்த விதை வங்கியின் பாதுகாப்பு பற்றிய ஒரு சிக்கல் எலவே அதனை மீள ஒழுங்கமைப்பதற்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது நோர்வே அரசு.
2006 ஆம் ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லேண்ட் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வந்து கூட்டாக அடிக்கல் நாட்டினார்கள். இது திறக்கப்பட்டது 2008 ஆம் ஆண்டு.
இதற்கிடைப்பட்ட 2007ஆம் ஆண்டு அது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே கிட்டத்தட்ட 15 பத்திரிகையாளர்களைக் கொண்ட குழுவுடன் நானும் அங்கே சென்றிருந்தேன். சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பான எரிக் சுல்ஹைம் எங்களுடன் வந்தார். இலங்கையிள் போர் நிலவியபோது சமாதானத் தூதுவராக இருந்த அதே எரிக் சுல்ஹைம் தான். அந்தப் பயணம் ஒரு சுற்றுச் சூழல் பயணம் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து வட துருவத்தில் பணிகள் உருகும் பிரதேசங்கள் வரை பயணித்து உண்மை நிலையைக் கண்டறிந்தோம். அது ஒரு ஓகஸ்ட் மாத வசந்த காலப் பகுதியாக இருந்ததினால் இருபத்திநான்கு மணிநேரமும் நள்ளிரவுச் சூரிய வெளிச்சத்தை அனுபவித்தோம் எங்கள் பயணமும் கடினமாக இருக்கவில்லை.
Spitsberg பயணத்தைத் தொடர்ந்து பனியுருகும் ஆர்க்டிக் பகுதிக்கான கடல் பயணம் |
ரஷ்யர்கள் வாழும் பகுதி - Spitsberg |
பனிக் கரடியிடமிருந்து தற்காத்துக்கொள்ள பலரிடமும் இருக்கும் துப்பாக்கி - அருகில் இருந்தவரிடமிருந்து தற்காலிகமாக சுட்டது |
வட துருவம் சென்ற எங்கள் பத்திரிகைக் குழு - "கரடிகள் எச்சரிக்கை"ப் பலகைக்கு கீழ். |
விதை வகையின் முகப்புப் பகுதி கட்டிக்கொண்டிருக்கும் போது. 2017இல் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்ட எரிக் சுல்ஹைம் |
ஸ்வால்பார்ட் விதை வங்கியின் இயக்குனர் ஹாகாவுடன் (Åslaug Marie Haga) நாங்கள் |
உலகம் முழுவதும் பல வகையான தாவரங்கள் அழிந்து அடிச்சுவடே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இங்கே 13000 வருட பாரம்பரியமுள்ள விதைகள் வரை சேமிப்பில் உள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் மட்டும் 76,000 மாதிரி விதைகள் அங்கு சேர்க்கப்பட்டது. ஆகவே இப்போது 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட விதை மாதிரிகள் அங்கு உள்ளன. 76 நாடுகள் இவ்வாறு விதைகளை வைப்பிலிட்டிருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்லப்போனால் கோதுமை வகைகள் 140,000, அரிசி வகைகள் 150,000, பார்லி வகைகள் 70,000 இதில் அடங்கும்.
நம் இலங்கை மாத்திரம் 2527 விதமான மாதிரி 1,777,566 விதைகளை வைப்பு செய்திருக்கிறது (இந்தியா 72,161 மாதிரிகளைக் கொண்ட 94,931,359 விதைகள்). இப்படி வைப்பு செய்யப்பட்ட விதைகளை மறுபடியும் மீளப் பெரும் உரிமை வைப்பு செய்த அந்தந்த நாடுகளுக்கு உண்டு. அவர்களின் இணையத்தளத்தில் இதுபற்றிய விபரங்கள் நாளாந்தம் துல்லியமாக புதுப்பிக்கப்படுகிறது. நீங்களும் பார்வையிடலாம் (http://www.seedvault.no/).
மீளப் பெற்ற முதலாவது நாடு
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா தமது நாட்டு விதைகள் பலவற்றை வைப்பு செய்திருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் அங்கு அழிக்கப்பட்ட விவசாயத்துறையை மீள கட்டியெழுப்புவதற்காக தாம் வைப்பு செய்திருந்த 325 பெட்டி விதைகளில் 130 பெட்டிகளை (116,000 விதை மாதிரிகள்) 2015 இல் மீள பெற்றுக்கொண்டது. அவர்கள் மீண்டும் அதுபோல ஒருநாள் திரும்பவும் வைப்பிலிடலாம். அப்படி மீள பெற்றுக்கொண்ட முதலாவது நாடும் அது தான்.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கிய விண்கல்லால் பூமியில் இருந்த டைனோசர்கள் உள்ளிட்ட பல வகை உயிரினங்கள் அழிந்துபோன வரலாறும் உண்டென்பதால் அப்படி ஒன்று நிகழ்ந்தால் என்ன செய்யலாம் என்று சிந்திக்கிற விஞ்ஞானிகள் தாவர விதை வங்கி போலவே, உலக உயிரினங்களின் டீ.என்.ஏ மாதிரிகளையும் வேறு பாதுகாப்பான கிரகத்தில் இப்படி ஒரு வங்கியை உருவாக்கி சேமிக்கலாம் என்கிற அளவுக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.
எப்படியோ நம்மால் நேரடியாக நடைமுறை சாத்தியப்பட்டிருக்கிற இந்த விதை வங்கி உலகையே காக்கவல்ல ஒரு முக்கிய முன்னுதாரணம். உலக சுற்றுச்சூழல், உலக பாதுகாப்பு, உலக அமைதி விடயத்தில் நோர்வே வெறும் பேச்சோடு நில்லாது நடைமுறையில் பலவற்றை மனித கோத்துக்காக சாதித்து வருகிறது.
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...