Headlines News :
முகப்பு » , , » 'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்

'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்


இலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ, திசைதிருப்பவோ ஊடகங்களால் முடிகிறது. அப்பேர்பட்ட ஊடகங்களை தமது கட்டுப்பாட்டிற் வைத்திருக்கவென ஆளாய்ப் பறக்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், முதலாளிகளையும் நாம் இன்று நேரடியாக காண முடிகிறது.

சமீபகாலமாக இனவாதத்தை ஊதிப்பெருப்பிக்கும் சக்திகளாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரான சக்திகளாகவும் மகிந்த சார்பு அணியினர் விளங்குகின்றனர் என்பது சாதாரண பொதுப்புத்திக்கும் விளங்கும்.

அந்த வகையில் இனவாத (பாசிச) – ஊழல் மிகுந்த – சர்வாதிகார – இராணுவவாத - சமூக விரோத சக்திகளின் கூட்டாக ஆகியிருக்கிற மகிந்த கும்பல் தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பித்து வருவதற்கு அரச சட்டங்களில் உள்ள ஓட்டைகள் மட்டும் காரணமல்ல, அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கி வரும் ஊடகங்களும் தான் காரணம்.

ஊடகங்கள் மக்களின் சிந்தனையை வழிநடத்துகின்றன. அந்த வகையில் அவர்களின் சிந்தனையை கட்டுப்படுத்தும் – திசை திருப்பும் பலத்தையும் – வளத்தையும் இந்த சக்திகள் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. ஆனால் சிங்கள ஊடகங்களை கட்டுப்படுத்த முடிந்த அளவுக்கு தமிழ் ஊடகங்கள் அதே அளவு அவர்கள் கைகளில் இல்லை என்கிற ஒன்றையும் கூறியாக வேண்டும். தமிழில் அவர்கள் புதிதாக கொண்டு வர இருந்த ஊடகங்களும் தோல்வியில் முடிந்தன. அதே வேலை பல ஊடகங்களில் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டு மாதாந்தம் கிம்பளம் பெரும் ஊடகர்களையும் பல ஊடக நிறுவனங்களில் நட்டு (Plant) வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஊடகத்துறையில் உள்ளோர் பலரும் அறிந்த பரகசியம்.

அந்த ஊடகங்களில் ஒவ்வொன்றாக இங்கு அடையாம் காண்போம்.

விஜயகலாவின் பேச்சை தேசிய அளவில் முக்கியத்துவம் பெறச் செய்த கைங்கரியத்தை தொடக்கியது தெரண தொலைக்காட்சி என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த மகிந்த சீனாவிடம் கையூட்டு பெற்றது பற்றிய "நியூ யார்க் டைம்ஸ்” பத்திரிகையின் செய்தியை திசைதிருப்பி, காணாமல் செய்யப்பண்ணியது. அது மட்டுமல்ல, கூடவே மகிந்த அணிக்கு சாதகமான இனவாத பரப்புரைக்கு வழிகளை திறந்துவிட்டது. விஜயகலாவின் அந்த பேச்சை முதல் தடவை தலைப்புச் செய்தியாக பரபரப்புடன் வெளியிட்டது மாத்திரமல்ல அதனை திரித்துத் தான் சிங்கள மொழிபெயர்ப்பையும் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிழைகளை பின்னர் சில சிங்கள ஊடகவியலாளர்களே அம்பலப்படுத்தினார்கள். ஆனால் அதற்குள் அந்த செய்தி வேறு பரிமாணம் பெற்று ஆர்ப்பாட்டங்கள், உருவப்பொம்மை எரிப்பு, ஊர்வலங்கள், வழக்குப் பதிவுகள், கண்டன அறிக்கைகள், பதவி நீக்க கோரிக்கை, பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு என கடந்து சென்று கொண்டிருந்தது.

திலித் ஜயவீர - அர்ஜுன் அலோசியஸ்
தெரண
தெரண தொலைக்காட்சி இலங்கையின் இன்று முன்னணி சிங்கள-ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அவர்களின் செய்திகள் ஏனைய செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. இன்று சிங்கள – ஆங்கில - தமிழ் செய்திகளில் முன்னணி வகிக்குமளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளது.

அதன் உரிமையாளர் திலித் ஜயவீர ஒரு பெரும் கறுப்புப் பண தொழிலதிபர் என்று அழைக்கப்படுபவர். ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவரும் கூட.  மகிந்த ஆட்சிகாலத்தில் வருணி அமுனுகம (அமைச்சர் சரத் அமுனுகமவின் மகள்) வுடன் கூட்டுசேர்ந்து திலித் ஜயவீர தெரணவை ஆரம்பித்தார். அதற்கான (Derana Macro Entertainment (Pvt) Ltd) அனுமதியை மகிந்த இலவசமாகவே வழங்கினார் என்கிறது newsofcolombo.com என்கிற இணையத்தளம். ஒரு விளம்பர நிறுவனமாகவும் இந்த நிறுவனம் இயங்கிய நிலையில் திடீரென பெரும் பணக்கார நிறுவனமாக குறுகிய காலத்தில் ஆனது எப்படி என்கிற சந்தேகம் இன்றும் உண்டு. அரச விளம்பரங்கள் பலவற்றை மகிந்த அரசு இவர்களுக்கு வழங்கியது.

சமீபத்தில் கோத்தபாயவின் அரசியல் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட “தியத்மக” ஆரம்ப விழாவுக்கான அழைப்பிதழைக் கூட தெரண தான் வெளியிட்டது.

மத்தியவங்கி பிணைமுறி ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அர்ஜூன் அலோசியஸ் மூன்று மொழிகளிலும் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலியை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார். சிங்களத்தில் “ஜனயுகய” என்கிற பத்திரிகையை ஆரம்பித்துமிருந்தார். தமிழில் நடத்துவதற்காக சக்தி ரங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு அது இழுபரிபட்ட நிலையில் பின்னர் ரங்காவை கழற்றிவிட்டு அதை முன்னால் வீரகேசரி ஆசிரியரான வீ.டி.தேவராஜைக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. கடந்த ஜனவரி அது வெளியிடும் திகதி கூட நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பிணைமுறி விவகாரம் பூதாகரமாக ஆகி அந்த முயற்சியை அர்ஜூன் ஆலோசியஸ் கைவிட நேரிட்டது. சிங்களத்தில் அவர்கள் வெளிவந்த “ஜனயுகய” பத்திரிகையை தெரண உரிமையாளர் திலித் ஜயவீரவின் கைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த பத்திரிகையையும் மூடிவிட்டார்கள்.

"தெரண" மகிந்த கும்பலின் முக்கிய பிரச்சார ஊடகமாகவும் மகிந்தவின் எதிரிகளையும், அரசாங்கத்தையும் தாக்குவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் பணம்

அடுத்தது “ஹிரு” தொலைக்காட்சி, வானொலி (Asia Broadcasting Corporation) என்பவை பச்சை இனவாதத்தைக் கக்கும் முக்கிய ஊடக நிறுவனம். அதன் தமிழ் வெளியீடான சூரியன் எப்.எம் இல் இந்தளவு இனவாதத்தை நேரடியாக காணமுடியாவிட்டாலும், மகிந்த தலைமையிலான இனவாத அணிக்கு அனுசரணையாக இயங்குவதைக் காண முடியும். இது முன்னாள் அமைச்சர்  துமிந்த சில்வாவின் சகோதரன் ரெனோ த சில்வாவின் பெயரில் இயங்கும் நிறுவனம். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனைக் கைதியாக தற்போது சிறையில் இருக்கிறார் துமிந்த. அவர் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஜாம்பவானாக பரவலாக அறியப்படுபவர். மகிந்த அணிக்காக தொடர்ந்து இயங்கும் ஊடகம் இது.

ராஜாக்களை தீர்மானிக்கும் மகாராஜா

மகாராஜா நிறுவனம் ஊடகத்துறையில் பெரும் ஜாம்பவானாக ஆகி கொலோச்சி வருவது உங்களுக்குத் தெரியும் சக்தி, சிரச, எம்டீவி என மும்மொழியிலும் தொலைக்காட்சி, வானொலி என்று ஊடக நுகர்வில் பெரும் செல்வாக்கை செலுத்தி வருகிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான இலங்கை மக்களின் சிந்தனையை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்திருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 1992இல் தொடங்கப்பட்டபோதும் அதன் தொலைக்காட்சி அலைவரிசை 1998இலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் கிலி மகாராஜா இலங்கையின் அதிகாரத்தில் இருப்பவர்களை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படுபவர். ஒரு காலத்தில் ஐ.தே.க ஆதரவு நிலையை எடுத்த அவர்கள் அரசியலிலும் தமது பினாமிகளை அனுப்பி தமது ஆளுமையை அரசியலில் செலுத்த முனைந்தார்கள்.

சக்தி ஸ்ரீ ரங்கா போன்றாரை அப்படி திட்டமிட்டு ஐ.தே.கவுக்கு ஊடாக அனுப்பிய போதும் அதற்கும் மேல் தமது திட்டங்கள் ஐ.தே.க வுக்கு ஊடாக ஈடேராத நிலையில் ஐ.தே.க எதிர்ப்பு நிலைபாட்டையும், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான  நிலைப்பாட்டையும் எடுத்தது மட்டுமன்றி இன்றைய மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கும் முக்கிய நிறுவனமாக ஆகியிருக்கிறது.
இனவாதத்துக்கு இருக்கும் சந்தைப் பெறுமதியை துல்லியமாக எப்போதோ கணித்த மகாராஜா குழுமம்; இனவாத தரப்புக்கு போதிய தளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை நாடே அறியும்.

குமார வெல்கம - நிமல் வெல்கம சகோதரர்கள்
“உபாலி” - பேரினவாதிகளின் பெருந்தளம்

திவயின பத்திரிகையின் இனவாத பாத்திரத்துக்கு  நீண்ட கால வரலாறு உண்டு. அதிகளவு சிங்கள மக்களைச் சேரும் இலங்கையின் முன்னணி பத்திரிகையாக அது திகழ்கிறது. யுத்த காலத்தில் அதன் முக்கிய விற்பனை பண்டமே யுத்தச் செய்திகளும், இனவாத பரப்புரையுமாகத் தான் இருந்தது. இன்றும் சகல இனவாத சக்திகளும் தமக்கான நம்பிக்கைக்குரிய சக்தியாக கருதுவது உபாலி நிறுவனப் பத்திரிகைகளைத்தான். உபாலி நிறுவனம் (Upali Newspapers (Private) Limited (UNL)) பெரிய வியாபார, வர்த்தக நிறுவனம். 

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இளைய சகோதரன் சீவலி ரத்வத்த. அவரது இரண்டு மகள்களில் மூத்த மகள் லக்மினி ரத்வத்த உபாலி விஜயவர்த்தனவை மணமுடித்தார். உபாலி விஜயவர்தன முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆரின் மைத்துனர். ஜே.ஆர். பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குவுக்கு உபாலியை தலைவராக்கினார். 1983 ஆம் ஆண்டு உபாலி விஜயவர்தன சொந்த ஜெட்டில் பிரயாணித்த வேளை மர்மமான முறையில் காணாமால் போனார். அதன் பின்னர் சீவலி ரத்வத்த உபாலி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். கணவரை இழந்திருந்த லக்மினி நிமல் வெல்கமவை மணமுடித்தார். சீவலி ரத்வத்த உபாலி நிறுவனத்தை நிமல் வெல்கமவிடம் ஒப்படைத்தார். நிமல் வெல்கம மகிந்த குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். யுத்த காலத்தில் அரசுக்கு யுத்த நிதி வழங்கியவர். மகிந்த காலத்தில் ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். நிமல் வெல்கம மகிந்த காலத்தில் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதை பலரும் விமர்சித்தார்கள்.  மகிந்த அரசாட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவரும் தற்போதைய மகிந்த அணியின் முக்கியஸ்தருமான குமார வெல்கம தான் நிமல் வெல்கமவின் உடன் பிறந்த சகோதரன்.

வெல்கம சகோதரர்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கமர்த்துவதற்கு தமது வளங்களையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கிவரும் முக்கிய நபர்கள். உபாலி பத்திரிகைகள் உச்சபட்ச அளவில் அதற்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

“ரிவிர” – மகிந்தவின் பினாமி

இந்த வரிசையில் மகிந்த காலத்தில் இலங்கையின் பிரபல கெசினோ வியாபாரியான ரவி விஜேரத்னவால் ஆரம்பிக்கப்பட்டு ராஜபக்ச குடும்பத்தின் ஊதுகுழலாக இயங்கி வந்த “ரிவிர” பத்திரிகையை பின்னர் மாதம் ஒரு கோடி செலவாவதால் தன்னால் நடத்த முடியாது என்று அன்றைய ஜனாதிபதி மகிந்தவுக்கு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அப்படி மூடப்படவிருந்த மகிந்தவின் பினாமி சிங்களப் பத்திரிகைகளான “இறுதின”, “The Nation”, “Bottom line” மற்றும் ஒரு காலத்தில் மகிந்த கும்பலுக்கு சிம்மசொப்பனமாக இருந்து அதன் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின் நட்டத்தில் போய்க்கொண்டிருந்த சண்டே லீடரையும் வாங்கி அவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் திட்டமும் போடப்பட்டது. ஆனால் இறுதியில் ஏனைய பத்திரிகைகள் மூடப்பட “ரிவிர”வை மட்டும் விட்டுவைத்தார்கள். “ரிவிர” தற்போது மகிந்தவின் உறவினர்களான திலங்க ராஜபக்ஷ மற்றும் பிரசன்னா விக்கிரமசூரிய ஆகியோர் உரிமை வகிக்கின்றனர்.

ரிவிர மகிந்தவின் உறபத்தி. ராஜபக்ச குடும்பத்துக்கான ஊடகம். ரிவிர பத்திரிகை இடைக்கிடை நிறுத்துவதும் மீள வெளிக்கொனர்வதுமாக இருக்கிறது. இந்த நாட்களில் மீண்டும் பத்திரிகையை காணோம். ஆனால் அதன் இணையத்தள செய்திகள் தினசரி பதிவேற்றப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

செபே (யதார்த்தம்)
“செபே” என்கிற பெயரில் பத்திரிகை கடந்த யூன் 8இலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது. கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவது என்கிற முடிவுக்கு மிகவும் சமீபத்தில் தான் ராஜபக்ச சகோதரர்கள் ஒரு வழியாக உடன்பாடு கண்டார்கள். ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பல்முனை நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிய அவர்கள் “மொட்டு” கட்சிக்கு புறம்பாக வெகுஜன பிரச்சாரத்தை முன்னேடுக்கவென “வியத்மக” என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி பெரும் எடுப்புடன் பிரச்சாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். “வியத்மக”வின் வேலைத்திட்டமாகத் தான் இப்போது இந்த “செபே” பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகைக்கு ஆசிரியராக பந்துல பத்மகுமார நியமிக்கப்பட்டுள்ளார். சென்ற யூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை ரணில் – மைத்திரி கூட்டைக் கலைப்பதற்கான பிரச்சாரங்களில் மும்முரமாக இறக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

பந்துல பத்மகுமார முன்னால் “லக்பிம” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். அதன் பின்னர் மகிந்த ஆட்சியமர்ந்ததும் பந்துலவை லேக்ஹவுசின் தலைவராக ஆக்கினார். அவரது மகள் முது பத்மகுமாரவை இங்கிலாந்திலுள்ள தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளராக ஆக்கினார். பின்னர் பந்துல பத்மகுமாரவை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் தலைவராகவும் ஆக்கினார். பந்துல அப்பதவிகளை வகித்தவரை லேக்ஹவுஸ் பத்திரிகைகள் கூட இனவாதப் பத்திரிகைகளாகத் தான் இயங்கின.

அரசாங்கம் மாறியதும் பந்துலவின் பதவிகள் அனைத்தும் பறி போயின. பந்துல அனுபவித்த சுகபோக வாழ்க்கை இழக்கப்பட்ட நிலையில் விரக்தியை ரணில்-மைத்திரி கூட்டின் மீதான எதிர்ப்பாக வெளித்தெறித்தது. பந்துலவின் இனவாத செயற்பாடுகளுக்கு அவரின் முகநூலே சாட்சி சொல்லும். இப்போது அவரைக்கொண்டு தான் “செபே” பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"லக்பிம"

“லக்பிம” பத்திரிகை 90 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அது ஏனைய தினசரிகளுக்கு போட்டியிடும் வல்லமையைக் கொண்டிருந்தது. ஆனால் போகப்போக இனவாத செய்திச் சந்தையில் அதுவும் போட்டியிட்டு இனவாத ஊடக அணியில் இணைந்துகொண்டது. ஆனால் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய இனவாத ஊடகங்களை விட சற்று பரவாயில்லை என்றே கூற வேண்டும். லக்பிமவின் உரிமையாளர் திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொரல்லை மாவட்ட அமைப்பாளர். சமீபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மகிந்த அணியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர். அதன் காரணமாகவே அவரை பிரதி சபாநாயகராக ஆக்கினார் ஜனாதிபதி மைத்திரி. ஆனால் திலங்க மகிந்த ஆதரவாளராகவே சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தார். இறுதியில் சுதந்திரக் கட்சியில் இருந்து 16 பேரைக் கொண்ட அணி மகிந்தவுடன் இணைந்தபோது அந்த அணியில் திலங்கவும் ஒருவரானார். திலங்கவின் “லக்பிம” பத்திரிகை மகிந்த அணிக்கு சாதகமான ஊடகமாக இயங்குவதில் ஆச்சரியமில்லை.

இலங்கையில் இனவாதத்தைப் பரப்புவதற்காகவும், இனவாத சக்திகளை பலப்படுத்துவதற்காகவும் கறுப்புபணத்தை வெள்ளையாக்குவதற்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தனை ஊடகங்கள் தோற்றம் பெறுவதும், கைமாறுவதும் சாதாரண போக்காக இருக்கும் போது சமீபத்தில் தமிழர் ஒருவருக்கு ஒரு ஊடகம் கைமாறுவது மட்டும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

சுவர்ணவாகினி - லைக்கா 

ஈ.ஏ.பீ எதிரிசிங்க குழுமத்தின் உரிமையாளர் சோமா எதிரிசிங்கவின் இறப்பையடுத்து அந் நிறுவனத்தின் ஊடகங்களான சுவர்ணவாகினி தொலைக்காட்சி, உள்ளிட்ட வானொலி நிலையம் அனைத்தும்  (Swarnawahini, Shree FM, RanOne , E FM) விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தார்கள். சுவர்ணவாகினி 1994 இலிருந்து இயங்கிவந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம். இதனை கொள்வனவு செய்வதற்கு முன்வந்தது இங்கிலாந்தைச் சேர்ந்த லைக்கா நிறுவனம். லைக்கா நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான தொலைபேசி அழைப்பு நிறுவனமாக வளர்ந்து மேலும் பல தொழிற்துறைகளில் முதலீட்டைக் கொண்டு பெரும் வளர்ச்சியடைந்த நிறுவனம். இந்திய திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

அதன் உரிமையாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் இன்று பிரித்தானியாவில் பெரும் தொழிலதிபராக விளங்குகிறார். இலங்கையில் யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வீடமைப்பு, பள்ளிக்கூடங்கள் அமைப்பது என பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது லைக்கா நிறுவனம்.

லைக்கா நிறுவனத்தின் வளர்ச்சி மீது அதிசயித்த ஐரோப்பிய நாடுகள் பல சந்தேகம் கொண்டு அதன் மீது பணமோசடி குறித்த விசாரணைகளை நடத்தி வருகிறது என்பது உண்மை. ஆனால் இலங்கையில் அந்த நிறுவனத்தை எதிர்த்து நிற்கின்றன பல சிங்கள  ஊடகங்களும், சிங்கள பேரினவாத அரசியல் சக்திகளும். லைக்கா வைத்திருக்கும் பணம் என்பது விடுதலைப் புலிகளின் பணமென்றும், வெளிநாடுகளில் இருந்தபடி விடுதலைப் புலிகளைப் பலப்படுத்த உலகம் முழுவதும் முதலீடு செய்துவரும் நிறுவனமே லைக்கா என்றும் கதைகளைப் பரப்பி வருகிறது. மகிந்த தரப்பு அரசியல் சக்திகள் விடுதலைப் புலிகள் லைக்காவின் பேரில் உள்நுழைகிறார்கள் எனவே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

உலகம் முழுவதுமிருந்து இலங்கையை சுரண்டிச் செல்வதற்கு தாராளமாக திறந்துவிட்ட இவர்கள் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த ஒரு இலங்கையர் தொழிலதிபராகி யுத்தத்தின் பின் தனது சொந்த நாட்டுக்கு வந்து முதலிடுவதை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர் என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறில்லை. தாம் கட்டியெழுப்பிவருகிற ஊடக பலத்துக்கு எந்த விதத்திலும் சவால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இனவாத அணி கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பட வேண்டும்.

டி.என்.எல். 

TNL தொலைக்காட்சி சேவையை நாட்டின் பல பாகங்களிலும் பார்ப்பதற்கான தடையை சமீபத்தில் மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம்  விதித்தது. பாராளுமன்றத்திலும் கூட இது தொடர்பில் மைத்திரி மீது பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.

டி.என்.எல். தொலைக்காட்சி இலங்கையின் முதலாவது தனியார் தொலைக்காட்சிச் சேவை. அது மட்டுமன்றி இன்றைய தொலைக்காட்சிகளின் பல நிகழ்சிகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அரசியல்வாதிகளையும், ஏனையோரையும் அரங்குக்கு அழைத்து விவாதங்களை நடத்தும் மரபை அவர்கள் தான் தொடங்கினார்கள்.

அதன் உரிமையாளர் ஷான் விக்கிரமசிங்க இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடன்பிறந்த சகோதரன். 1979 இலங்கைக்கு முதன் முதலாக தொலைக்காட்சிச் சேவையை அறிமுகப்படுத்தியவர் தான் ஷான்.  அவரை இலங்கைத் தொலைக்காட்சியின் பிதாமகன் என்று அழைப்பார்கள். 1979 ஏப்ரல் மாதம் அவர் ITN தொலைக்காட்சி சேவையைத் தொடங்கி இரண்டே மாதத்தில் - யூன் மாதம் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு அரச தொலைக்காட்சி சேவையாக ஆக்கப்பட்டது.

அதன் பின்னர் ஷான் மேற்கொண்ட பகீரதப் போராட்டத்தின் பின் 1993 இல் தான் மீண்டும் அவருக்கு தொலைக்காட்சி சேவைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் டி.என்.எல். ஊடகம் ரணிலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது கிடையாது. தற்போதைய “நல்லாட்சி” அரசாங்கத்தில் ஐ.தே.கவுக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையில் நிகழ்ந்துவரும் அதிகாரப் போட்டியின் விளைவாகவே ரணிலை பழி வாங்குவதாக எண்ணி ஷான்னுக்கு அநீதி இழைத்திருகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள் பலர். 40 வருடங்களுக்கு முன்னர் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட தொலைக்காட்சி அனுமதி 40 ஆண்டுகளில் அதே யூன் மாதம் பறிக்கப்பட்டிருக்கிறது.

முடிவாக...

தற்போதைய பேரினவாத கூட்டு என்பது வெறும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களை மாத்திரம் கைப்பற்றவில்லை. இணைய ஊடகங்கள் பலவற்றையும் கூட இயக்கி வருவது மட்டுமன்றி தமது ஆதரவாளர்களைக் கொண்டு பல சமூக வலைத்தளங்களையும் இயக்கி எதிரிகளை காயடித்து வருகிறார்கள்.

இன்னொருபுறம் ஜனநாயக சக்திகள் பல இந்த பாரம்பரிய - சமூக விரோத பெரும்போக்கு ஊடகங்களை எதிர்த்து நிற்க இந்த சமூக வலைத்தளங்ககளைத் தான் அதிகம் நம்பியிருக்க - தங்கியிருக்க வேண்டியிருக்கிறது என்பது நிதர்சனம்.

இலங்கையின் ஊடகச் சந்தை என்பது தேசியவாதத்தை சந்தைபடுத்தும் துறையாகத் தான் வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியவாதத்தை எந்தளவு இனவாதம் கலந்தோ, அல்லது பாசிசம் கலந்தோ விற்பது என்பதைப் பொறுத்து அவர்களின் மூலதனம் காக்கப்படுகிறது. பன்மடங்கு பெருப்பிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்துவதில் ஊடகத்தின் வகிபாகத்தை அறிந்த ஆதிக்க சக்திகள் எந்த ஊடகத்தையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை. 

நன்றி - தமிழர் தளம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates