செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! -3
ஒஸ்லோவில் இத மாதம் 27,28 ஆகிய தினங்களில் நடைபெற்ற காடழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. உலகெங்கிலும் இருந்து காடழிப்புக்கு எதிரான 500 க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களும், பன்னாட்டு அமைச்சர்களும், காடழிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பழங்குடி மக்களின் தலைவர்களும், அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் வெவ்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நிகழ்ந்ததால் எதைத் தெரிவு செய்வது என்கிற சிக்கல் இருந்தது. ஆனாலும் செம்பனையோடு தொடர்புடைய தலைப்புகளை நான் தெரிவு செய்துகொண்டேன்.
காடழிப்பில் இன்று பெரும் பங்கை எற்படுத்திவதில் செம்பனைக்கு பெரும் பங்குண்டு. செம்பனை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளான, பிரேசில், பெரு, கொலொம்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் அமைச்சர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். அந்த அமைச்சர்கள் தாம் “நிலைபேண்தகு செம்பனை எண்ணெய்” (Sustainable Palm Oil) உற்பத்தியை மேற்கொள்வதாகவும், சூழலியல் விடயங்களில் அதிக அக்கறை கொண்டிருப்பதாகவும் அங்கு புனைந்தார்கள். கலந்துனர்கள் அவர்களை நோக்கி எழுப்பிய கேள்விகளால் அவர்கள் நிலைதடுமாறினார்கள்.
வழமையாக ஒரு மாநாட்டில் கலந்துனர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்கள், வெளியீடுகள் மட்டுமன்றி நிகழ்ச்சிநிரல் கூட எவருக்கும் வழங்கப்படவில்லை.
இது ஒரு சூழலியல் மாநாடு கடுதாசிகளை விரயப்படுத்துவதை கொள்கை ரீதியில் தவிர்ப்பதாக தெரிவித்தார்கள். அதற்குப் பதிலாக சகல விபரங்களையும் அறிவதற்கு செல்பேசி அப்பை (APPS) அனைத்து கலந்துனர்களுக்கும் கிடைக்கச் செய்திருந்தார்கள். அந்த அப்பை நிறுவிகொண்டால் நிகழ்ச்சிநிரல், பேசுபவர்கள் பற்றிய விபரங்கள், நடக்குமிடங்கள் பற்றிய வழிகாட்டல்கள், தேவையான ஆவணங்களைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி. நிகழ்வுகளில் நேரடி காணொளி ஒளிபரப்பு, கேள்விகள் கேட்பதற்கான வழிகள், புகைப்படங்களை தவேற்றி பகிரும் வசதி, தரவிறக்குவதற்காண வசதி என வியப்புமிக்க வசதிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் படிப்பினையாகவும் பல விடயங்களை இந்த மாநாட்டில் காண முடிந்தது.
நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய நோர்வேஜிய சூழலியல் அமைச்சர் ஊல எல்வஸ்தூவன் (Ola Elvestuen) “காடழிப்பை நிறுத்துவதற்கான முயற்சிகள் படிப்படியாக உயர்ந்துகொண்டிருக்கும் போது இன்னொருபுறம் காடழிப்பு பல மடங்கு வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.” என்றார்.
மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஓட்சிசனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் காடுகளை அழித்துவிட்டு எப்படி உயிர்வாழப்போகிறது அடுத்த சந்ததி என்கிற பொருள்பொதிந்த பல உரையாடல்கள் நிகழ்ந்தன.
நோர்வேயின் முன்னால் பிரதமரும் தற்போதைய நேட்டோ (NATO) தலைவருமான யான் ஸ்தொல்தன்பேர்க் (Jens Stoltenberg) ஓரிடத்தில் “உலகின் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தற்போதைய பருவநிலை மாற்றம் தான் என்று நேட்டோ அடையாளம் கண்டுள்ளது.” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மூன்று அமர்வுகளில் முக்கிய பங்கெடுத்த எரிக் சுல்ஹைமின் உரைகள் மிகவும் முக்கியமானவை. எரிக் சுல்ஹைம் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் போது பல்லாண்டுகளாக சமாதானத் தூதுவராக செயற்பட்டது நமக்குத் தெரியும்.
அதன் பின்னர் அவர் வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராகவும், சுற்றுச் சூழல் மற்றும், சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சராகவும் இருந்தார். 2016ஆம் ஆண்டு அவர் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆக இன்று அவர் உலகறிந்த சுற்றுச் சூழல் நிபுணராகவே கொள்ளப்படுகிறார்.
“உலகில் சனத்தொகை அதிகரித்த நாடு சீனா, இந்தியா. இந்த நாட்டின் மக்கள் தொகைக்கு தேவையான வளங்களை வழங்குவதே பெரும் திண்டாட்டம். ஆனால் அதையும் மீறி இந்த நாடுகள் கார்பன் குறைப்பு திட்டம், காடழிப்பை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என நீண்ட காலத் திட்டங்களை அறிவித்துள்ளன. அவர்களாலேயே முடிகிறபோது ஏனைய நாடுகளால் முடியாதா? “பசுமையே தங்கம்” (Green is Gold) என்கிற சுலோகத்தை சீன கொம்யூனிஸ்ட் கட்சி தமது அரசின் பிரதானமான வேலைத்திட்டமாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது. பசுமையும் அபிவிருத்தியும் சமாந்தரமாக பயணிக்க வேண்டிய ஒன்று என்கின்றனர் அவர்கள். இது முக்கிய முன்னுதாரணம்” என்றார் எரிக் சுல்ஹைம்.
என்னைக் கவர்ந்த நிகழ்வு; காடழிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட அமர்வு. கலந்துகொண்டவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் அரசால் “பயங்கரவாதி” என்று அழைக்கப்படும் விக்டோரியா தவுளி (Victoria Tauli-Corpuz) என்கிற பெண்; அங்கு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் பழங்குடி செயற்பாட்டாளர். ஐ.நாவின் பழங்குடி அறிக்கையாளராகவும் இருக்கிறார். பிலிப்பைன்ஸ் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டிருந்தததை கண்டித்து பிலிப்பைன்ஸ் அரசுக்கு கடந்த மார்ச் மாதம் காட்டமான ஒரு கடிதத்தை எரிக் சுல்ஹைம் அனுப்பியிருந்தார்.
“No1more” (இனி ஒருவரும் இல்லை) என்கிற அமைப்பைச் சேர்ந்த பிரான் லம்றிக் (Fran Lambrick), பேராசிரியர் பெலிப்பே மிலானஸ் பெரெய்ரா (Felipe Milanez Pereira) ஆற்றிய உரைகளும், வெளியிட்ட பயங்கரங்களையும் அங்குள்ளவர்களை கொதிநிலையில் வைத்திருந்தது. இவர்கள் இருவரோடும் முதல் நாள் நீண்ட நேரம் தனியாக உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. இடதுசாரிப் பின்புலத்தைக் கொண்ட இவர்கள் ஆய்வாளர்களாக மட்டுமன்றி தீவிர களச் செயற்பாட்டாளர்களாக போராடி வருகின்றனர். கடந்த 2017இல் மாத்திரம் உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதும் அவர்களின் உரையாடலில் இருந்த அறிய முடிந்தது.
நோர்வேயின் முன்னுதாரணம்
என்னை செம்பனை தொடரை எழுதத் தள்ளிய முதல் விடயம் ஒஸ்லோவில் “ரேமா 1000” (Rema1000) என்கின்ற ஒரு சாதாரண பல சரக்குக் கடையொன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரம். இங்கே செம்பனை கலந்த எந்த பொருட்களும் விற்பதில்லை என்கிற அந்த வாசகம் வியப்பை ஏற்படுத்தியது. செம்பனை அந்தளவு ஆபத்தானதா? எனக்கு அதுவரை தெரியாதிருந்த விபரங்களை வீட்டுக்கு வந்தததும் இணையத்தின் மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். இன்று உலகம் முழுவதும் பாவனையில் உள்ள எண்ணெயில் 50% வீதத்துக்கு அதிகமாக செம்பனை எண்ணெய் தான் ஆக்கிரமித்து உள்ளது. சமையல் எண்ணெய்க்காக மட்டுமன்றி சோப்பு, ஷேம்போ, அழகு சாதனங்கள், சொக்கலட் உள்ளிட்ட சிறுவர்களின் இனிப்புப்பண்டங்கள் என பலவற்றை பட்டியலிடலாம். இப்போது எழுந்துள்ள புதுப் பிரச்சினை என்னவென்றால் உயிரியல் எரிபொருளுக்காகவும் செம்பனையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தான்.
ஏற்கெனவே சோளம், சோயா உள்ளிட்ட பல தானியப் பொருட்களை எண்ணெய்க்காக உற்பத்தி செய்கின்ற பாரிய தொழிற்துறை தோன்றி, வளர்ந்து, வியாபித்து வருகிறது.
உலகில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் செத்து மடிந்துகொண்டிருக்கையில் அந்த உணவை எரிபொருள் தேவைக்காக பயன்படுத்துவதானது உலக அளவில் எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
செம்பனை பாவனை சகல நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது. வருடாந்தம் அதன் பாவனையை குறைத்துக் கொண்டே வந்த எட்டுத்துக் காட்டான நாடு நோர்வே. நோர்வே தம்மால் அது முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.
இந்தியாவும், சீனாவும் உலகில் செம்பனை எண்ணெய் இறக்குமதியில் முன்னணி வகிக்கும் இரண்டு நாடுகள். இந்தியாவில் அதிகரித்திருக்கும் இருதய நோய்க்கும் இந்த “பாமாயில்” பாவனைக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றிய நிறைய ஆவணங்களையும் கட்டுரைகளையும் இணையத்தில் காண முடியும்.
ஒஸ்லோ மாநாடானது காடழிப்பின் பன்முக - மைக்ரோ பிரச்சினைகளை வெளிப்படையாக நிபுணத்துவத்துடன் மிகவும் ஆழமாக ஆராய்ந்த மாநாடு என்று தான் சொல்ல வேண்டும். மண் வளம், காற்று, நீர், உணவு, உயிரினங்கள், பசுமையழிவு என சகல கோணங்களிலும் பேசப்பட்ட ஒரு மாநாடு.
இலங்கை இந்த மாநாட்டிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நன்றி - தினக்குரல்
ஒஸ்லோ மாநாடு பற்றிய மேலதிக விபரங்களுக்கு
https://norad.no/en/front/events/oslo-tropical-forest-forum-2018/
நன்றி - தினக்குரல்
ஒஸ்லோ மாநாடு பற்றிய மேலதிக விபரங்களுக்கு
https://norad.no/en/front/events/oslo-tropical-forest-forum-2018/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...