Headlines News :
முகப்பு » , , , » உயிரி எரிபொருளுக்காக “செம்பனை” - என்.சரவணன்

உயிரி எரிபொருளுக்காக “செம்பனை” - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! -4 

பசுமைக் காட்டை அழித்து செம்பனை வேளாண்மை நடக்கிறது. இரண்டு விதத்தில் கரிக்காற்று (கார்பன்-டை-ஆக்சைடு) அளவை வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்கிறது. ஒன்று காட்டுத் தீ, அடுத்தது செம்பனை வெளியிடும் கார்பன். தீ என்பது வேளாண்மைக்காக பசுமையான காடுகளை செயற்கையாக அழிப்பதாலும் ஏற்படுகிறது. அடுத்தது செயற்கையாக வறண்ட பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக உருவான கட்டுக்கடங்காத தீயினாலும் உருவாகின்றன. 

செம்பனைகள் வளர வேண்டுமாயின் மற்ற காட்டுத் தாவரங்கள் வளராமல் தடுக்க வேண்டும். எனவே செம்பனை பயிரிடுவதற்கு முன்னரே அடியோடு அனைத்தையும் எரித்து அழிப்பது செம்பனை பயிர்ச்செய்கை இடம் பெரும் அனைத்து இடங்களிலும் நடக்கும் வழமையான நடைமுறை. 

ஆக செம்பனை என்பது நட்டதன் பின்னர் மாத்திரமல்ல அது நடுமுன்னமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தித் தான் உள் நுழைகிறது. 

உயிரி எரிபொருளாக 

உணவு உற்பத்திக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம் கடந்த சில தசாப்தங்களாக எரிபொருளுக்கு மாற்றீடான எண்ணெய்க்காகவும், எரிவாயுவுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருவதை அறிவீர்கள். இதனை உயிரி எரிபொருள் (Bio-fuel) என்கிறோம். தாவரங்களில் இருந்தும், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்தும் பெரும்பாலான உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுகின்றன. 


2030 ஆம் ஆண்டு அளவில் 67 மில்லியன் தொன் செம்பனை எண்ணெய் உயிரி வாயு தயாரிப்புக்காக தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4.5 மில்லியன் ஹெக்ரயர் காடுகள் அளிக்கப்படவுள்ளன. 2.9 மில்லியன் ஹெக்ரயர்களுக்கு கரி வெளியிடப்படவுள்ளது. 7 பில்லியன் தொன் கார்பன்-டை-ஆக்சைட்” வாயு இதனால் வெளியிடப்படவுள்ளது. (ஆதாரம் - 2018 Cerulogy and Rainforest Foundation Norway). 

இந்த அதிர்ச்சி ஒருபுறமிருக்க உணவுக்கான உற்பத்தி எரிபொருளுக்காக மாற்றத்  தொடங்கியதும் அந்த வகை உணவுகளுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் நாளாந்தம் உணவின்றி பல்லாயிரக்கனகனக்கானோர் இறக்கின்றனர்.   

அடிப்படை உணவுத் தேவை இந்த நிலைக்கு உள்ளாவது குறித்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் உலக அளவில் கிளம்பிய வண்ணம் உள்ளன.  

உணவுப் பொருட்களின் விலை விஷம் போல ஏறி வருவதற்கும் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வெள்ளம் / வறட்சி போன்ற நொண்டிச் சாட்டுகளை அதிகார வர்க்கம் சொல்லித் தப்பிவிட முனைகிறது. ஆனால் உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சில வகையான கிழங்குகள், எண்ணெய் வித்துகள் போன்ற விவசாய விளைப் பொருட்கள்  மாற்றீடாக ஆக்கப்பட்டதும் முக்கிய காரணம். 

உலக எரிபொருள் தேவை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. இருக்கும் எரிபொருளின் விலையும் நாளாந்தம் ஏறிக்கொண்டு வருகிறது. உலக எரிபொருள் எண்ணெய்ப் பாவனையில் 58% சதவீத எண்ணெயை 10 நாடுகள் தான் பயன்படுத்துகின்றன. அவற்றில் பெரும்பாலான நாடுகள் வளர்ந்த நாடுகள். ஆக வளர்ந்து வரும் நாடுகளிடம் இருந்து தான் இந்த எண்ணெயை அந்த நாடுகள் இறக்குமதி செய்து வந்தன. இப்போது உலக எண்ணெய் தேவை, அதன் விலை என்பவற்றை கருத்திற் கொண்டு வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் கண்டுபிடித்த மாற்றீடு தான் இந்த உயிரி எரிபொருள் திட்டம். 

இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு அதனிடத்தில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என ஏகாதிபத்திய நாடுகள் உபதேசித்தன. 

அதுவும் அதற்கான உற்பத்தியை ஏழை விவசாய நாடுகளின் மீது சுமத்தி, அந்நாடுகளின் சுதேசிய அத்தியாவசியத் தேவைகளில் கைவத்தன. அதன் விளைவு ஏழை நாடுகள் தமது உணவுக்கான உள்நாட்டு விவசாயத் துறையை திசைதிருப்பி பணக்கார நாடுகளின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். 

பெட்ரோல், டீசல் போன்ற கச்சா எண்ணெய் பாவனையை இதன் மூலம் குறைத்து புவி வெப்பமடைதலை குறைக்கலாம், தேசிய பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் அடுக்கடுக்கடுக்காக கட்டுக்கதைகளை புனைந்து வருகின்றனர். உலக அளவில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். 

கடந்த வாரம் காடழிப்புக்கு எதிரான ஒஸ்லோ மாநாட்டில் சர்வதேச சுற்றுச் சூழலியலாளர்கள் பலரும் இந்த உயிரி எரிபொருள் உடனடியாக குறைக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 

செம்பனை  எண்ணெய் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மலேசியா. முதலாவது நாடு இந்தோனேசியா. 90 வீத உலக உற்பத்தியில் இந்த இரு நாடுகளுமே நிரப்புகின்றன. மலேசியாவின் பிரதான வருவாய் செம்பனை உற்பத்தியின் மூலமே பெறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தான் அதன் பிரதான ஏற்றுமதி நாடுகள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் செம்பனை எண்ணெய் பயன்பாட்டில் பெரும்பகுதி உயிரி எண்ணெய்க்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு மலேசியாவை அதிர வைத்திருப்பதுடன் ஆத்திரப்படவும் வைத்திருக்கிறது. அதாவது செம்பனை எண்ணெய் பாவனையை குறைத்துக் கொண்டே போவது பற்றிய அந்த முடிவு செம்பனை ஏற்றுமதி நாடுகளைக் கலக்கமடையச் செய்தது. குறிப்பாக “இது செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் மீதான மீதான அநீதி” என்று மலேசிய பெருந்தோட்ட அமைச்சர் மா சீவ் கியோங் (Mah Siew Keong) கடும் அதிருப்தியை வெளியிட்டார். அது மட்டுமன்றி “இப்படிச் செய்தால் நாங்கள் ஐரோப்பிய பொருட்களை வாங்குவோம் என்று நீங்களும் எதிர்பார்க்காதீர்கள்” என்று வெருட்டினார். 

கடந்த ஆண்டு ஜூலையில் பாரிசில் நடந்த மாநாட்டின் பின்னர் பாரிஸ் செம்பனை எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக எடுத்த முடிவை எதிர்த்து பிரான்சுடனான வர்த்தக உறவுகளை மறு பரிசீலனை செய்யப்போவதாக மிரட்டியது மலேசியா. 

ஐரோப்பாவில் எரிபொருள்களில் செம்பனை எண்ணெயைக் கலந்து விற்கிறார்கள். வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எண்ணையில்  இந்த பாமாயில் கலப்பது அங்கு தடையில்லை. அதனால் வாகனங்களுக்கும் பாதிப்பில்லை. அப்படி இருந்தும் அங்கு அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதற்கான காரணம் உலக அளவில் உயிரி எரிபொருள் உற்பத்தி மீது பொதுவாக எழுந்திருக்கும் கண்டனங்களும், விழிப்புணர்வும் தான்.


பிரேசிலில் அமேசன் காடுகளை அழித்து அங்கு கரும்பு, செம்பனை, சோளம், சோயா என்பவற்றை உற்பத்தி செய்வது உணவு உற்பத்தியை பெருக்குவதற்கல்ல. அவற்றின் மூலம் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்காகத்தான். கடந்த வார ஒஸ்லோ மாநாட்டில் ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் தொர்க்க்ஷெல் லைறா (Torkjell Leira) மற்றும் பிரேசில் சூழலியல் செயற்பாட்டாளர்களுடன் மதிய உணவின் போது உரையாடிக்கொண்டிருந்தோம். லைறா பிரேசில் பற்றிய விபரங்கள் அறிந்த நோர்வேஜிய நிபுணராக அறியப்படுபவர். பிரேசிலில் பல ஆண்டுகாலம் வாழ்ந்தவரும் கூட இயற்கை வளத்திற்கு நேர்ந்துள்ள கதி பற்றி “பூதம் கிளம்பியது” என்கிற தலைப்பில் ஒரு பெரும் ஆராய்ச்சி நூலை  2014இல் எழுதி வெளியிட்டவர். 

நோர்வே ஒரு புறம் பல மில்லியன் டொலர்களை பிரேசில் “அமேசனைப்” பாதுகாப்பதற்கென உதவி வழங்கி வருகிறது. ஆனால் அதேவேளை நோர்வேஜிய எண்ணெய்க்கம்பனிகள் அங்கே சென்று உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பெரும் தொகையை முதலிட்டுள்ளன. இந்த இரட்டை வேடம் ஏன். என்று என்னிடம் விலாவரியாக விளக்கினார். 

நோர்வேயின் பிரதான வருவாய் எண்ணெய் உறபத்தியிலிருந்தே கிடைக்கின்றன. பல ஆண்டுகளுக்கு உலகத் தேவைக்கு விநியோகிக்கும் அளவுக்கு கச்சாய் எண்ணெய் வளமுண்டு. ஆனால் எண்ணெய்ப் பணத்தில் ருசி கண்ட கம்பனிகளோ மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இயற்கை வளங்களையும், உழைப்பையும் சுரண்டி உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்வது அதைவிட லாபம் தரக்கூடியது என்று களமிறங்கியிருக்கிறது. 

பல மேற்குலக நாடுகளின் அனுதாபமும் அனுசரணையும் இத்தகைய முதலைக் கண்ணீராகத்தான் இருக்கிறது. 

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates