Headlines News :
முகப்பு » , , , » இனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்

இனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்

இலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம்


83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொரொந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.

வரலாறு

“கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.

உலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள். 

ஆனால் 1925 இல் இலங்கையில் முதலாவது பேசாத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் பிரதான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கலாநிதி என்.எம்.பெரேரா (பிற்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்தவர்). அவருக்கு அப்போது 20 வயது தான். இலங்கையின் முதலாவது திரைப்படக் கதாநாயகன் அவர் தான். “ராஜகீய விக்ரமய” (ராஜரீக சாகசம் - Royal Adventure) என்கிற தலைப்பிலான அந்தத் திரைப்படத்தை இயக்கியவரும் தமிழகத்தைச் சேர்ந்த குப்தா என்கிற தமிழர் தான். அதனைத் தயாரித்தவர் டி.ஏ.நூர்பாய் என்கிற போரா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர். நூர்பாய் அதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரைப்படங்களை தருவித்து திரையரங்குகளுக்கு விநியோகித்து வந்த வர்த்தகர். இதில் உள்ள விசித்திரம் என்னெவென்றால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அந்த முதல் திரைப்படம் இலங்கையர் எவரும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது 1925 இல் பம்பாயிலும், சிங்கப்பூரிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திரையிடுவதற்காக கொணர்வதற்காக இருந்த வேளையில் வியாபார போட்டியின் காரணமாக அது பம்பாயில் எரிக்கப்பட்டுவிட்டது.

1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட்  ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

கெப்பிட்டல் தியாட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை  பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

1946இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துரைசிங்கத்தின் முயற்சியில் “லைலா மஜுனு” கதையைத் தழுவி “திவ்ய பிரேமய” என்கிற ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக படக்குழுவுடன் மெட்ராஸ் புறப்பட்டார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இடைநடுவில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்தும் ஸ்தம்பிதமானது. படக்குழுவினரும் சில நாட்களில் இலங்கை திரும்பிவிட்டனர். அத்தோடு அந்த முயற்சியும் நின்றுபோனது. அது அப்போதே வெளிவந்திருந்தால் அது தான் இலங்கையின் முதலாவது பேசும் சினிமாவாக இருந்திருக்கும். ஆனால் அது பின்னர் 1948 இல் வெளியானது.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட சிங்கள சினிமாத் துறை

எஸ்.எம்.நாயகத்தின் சிங்கள நண்பர்களின் பரிந்துரைக்கிணங்க அவர் 1947இல் “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone) என்கிற திரைப்பட நிறுவனத்தின் பேரில் திருப்பரங்குன்றத்தில் இருந்த அவரது ஸ்டூடியோவிலேயே  முழுவதும் படமாக்கினார். இலங்கையில் இருந்து படக்குழுவினரை அவர் கப்பலில் ஏற்றிக்கொண்டு சென்றார்.  “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார். மொகிதீன் பேக் மற்றும் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்களான ஏ. எம். ராஜா, ஜிக்கி, ஜமுனாராணி, என். சி. கிருஷ்ணன் (என்.எஸ்.கிருஷ்ணன் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள முடியவில்லை) ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

திரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய முதன்மை அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

கிங்க்ஸ்லி தியட்டரில் "கடவுனு பொரொந்துவ" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947
கிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ஜிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.எம்.நாயகம் ஆரம்பத்தில் குமரகுரு (1946), தாய் நாடு (1947) இரு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்ததன் பின்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்கிடையில் மிகவும் பிரபலமான 8 சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். 

இந்தத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியபடுவதை நீங்கள் அறிவீர்கள்.

சிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்தக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.

முதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.

ஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூகம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.

மறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உறபத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.

முதலாவது தமிழ் திரைப்படம்

ஈழத்து தமிழ் சினிமாவுக்கான தேவையை உணர்ந்தபோது தமிழர் தரப்பில் அதற்கான பலமும், வளமும், அனுசரணையும் இருக்கவில்லை. இலங்கையின் முதலாவது சிங்கள சினிமாவை தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை கிறேஷன் ஜெயமான்ன என்கிற சிங்களவர் ஒருவரே இயக்கினார். 1947 இல் வெளியான  “செங்கவுனு பிலிதுரு” (மறைந்திருக்கும் விடை), என்கிற அந்த திரைப்படம் தமிழ் மொழிமாற்று திரைப்படமாக “குசுமலதா” என்கிற பெயரில் 1951இல் வெளியானது. மொழிமாற்று என்பதால் அதை முதலாவது தமிழ் திரைப்படமாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” நாவலைத் தழுவி “சமுதாயம்” என்கிற பெயரில் 1962இல் வெளிவந்த திரைப்படத்தையே இலங்கையில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக கொள்ளப்படுகிறது. அதை இயக்கியவரும் ஹென்றி சந்திரவன்ச என்கிற சிங்களவர் தான்.

சுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது.  தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் பெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே  கூற முடியும்.

இனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. இலங்கை சினிமா என்பது இன்றும் சிங்கள சினிமா என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவம் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.

புறக்கோட்டை போதிமரச் சந்தி - 83
83 ஏற்படுத்திய அழிவு

சிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.

சினிமாஸ் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா தியட்டர் சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியட்டர் அதை தீயிட்டு அளித்தது மாத்திரமல்ல அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததிக்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள் இந்தக் கலவரத்தில். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். விஜயா திரையரங்கு எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சிநிமாதுரயைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள்.  (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் "சிரிபத்துல" வைத் தான்)

"சிரிபத்துல" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.

பிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை”

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.

பல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.

போதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்

அன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.

அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனான அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.

பின்னேரம் தெஹிவள பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.

அந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு  தீயிட்டார்கள்.

அந்த உடல் தீயில் வெந்துகொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.  அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.

அப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய சிரிபத்துல திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...

“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!”
(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)

அந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்றைய ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates