Headlines News :
முகப்பு » » மலையகமும் உயர் கல்வியும்:சில முன்மொழிவுகள் - பேராசிரியர் தை.தனராஜ்

மலையகமும் உயர் கல்வியும்:சில முன்மொழிவுகள் - பேராசிரியர் தை.தனராஜ்


24/06/2018 வீரகேசரி வாரவெளியீட்டில் மலைச்சாரல் பத்தியில் ‘கல்வித்தடைகளைத்தாண்ட வேண்டும்’ என்றத் தலைப்பில் மலையகக்கல்வி தொடர்பான பத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை வரவேற்பதோடு மேலதிகமாக சில முன்மொழிவுகளை இக்கட்டுரையில் தரலாம் என நினைக்கிறோம்.

அறிமுகம்

மலையகக் கல்வி முறைமை என்பது தேசிய கல்வி முறைமையின் ஒரு கூறாகும். எனினும் தேசிய முறைமையுடன் மலையகக் கல்வியை உள்வாங்கும் செயன்முறை 1970 களுக்குப் பின்னரே ஆரம்பமானது. 1952 இல் இழந்த தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை 1977 இல் மலையக மக்கள் மீளப்பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மலையகக் கல்வியில் அபிவிருத்தி ஏற்படத் தொடங்கியது. மேற்படி கல்வி வரலாறு பற்றி பலரும் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுப் பகுதியில் இலங்கையில் அரச பல்கலைக்கழங்களின் தொகை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் உட்பட பதினைந்தாக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் தொகை சுமார் ஐந்தாயிரத்திலிருந்து ஓர் இலட்சமாக அதிகரித்த போதிலும் மலையக மாணவர்களின் சேர்வு ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. எனினும் 2017 ஆம் ஆண்டில் க.பொ.த (உ/த) பெறுபேற்றின் படி சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட மலையக மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவர்.

 இது அனுமதி பெறப்போகும் மொத்த மாணவர் தெகையில் சுமார் 1.6 வீதமாகும். இந்த வரலாற்று சாதனை குறித்து மலையகக் கல்வியில் ஆர்வம் கொண்டோர் பெருமை கொள்ளலாம். எனினும் தேசத்தின் சனத்தொகையில் சுமார் 7 வீதத்தினராக உள்ள மலையக மக்கள் பல்கலைக்கழக கல்வியில் தமக்குரிய நியாயமான பங்கினை பெற்றுக்கொள்ள இன்னும் பல ஆண்டுகள் செல்லலாம்.

இந்த ‘நீண்ட காலத்தை’ குறைத்து தற்போதுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு மலையகம் அரச பல்கலைக்கழங்களில் தமக்குரிய சட்டரீதியான பங்கினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பான சில முன்மொழிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. இது தொடர்பான ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒரு பரந்துபட்ட கருத்தாடலை தொடங்கி வைப்பதுமே இக்கட்டுரையாளரின் நோக்கமாகும்.

இலங்கையில் உயர் கல்வியின் கட்டமைப்பு

இலங்கையில் தேசியரீதியாக உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுதல் மலையகத்தின் உயர்கல்வி தொடர்பான கலந்துரையாடலுக்கு மிகவும் முக்கியமானதாகும். இங்கு உயர்கல்வி (Higher Education) என்பது பொதுவாகப் பல்கலைக்கழக கல்வியையே குறித்து நிற்கிறது. உயர்கல்வி தொழில்நுட்பக்கல்வி, தொழில்சார் கல்வி (Professional Education) ஆகிய மூவகைக் கல்வியையும் இணைத்து மூன்றாம் நிலைக்கல்வி (Tertiary Education) என பொதுவாக அடையாளப்படுத்துவதுண்டு. இங்கு நாம் பல்கலைக்கழக கல்வி குறித்து மாத்திரம் கவனத்தில் கொள்வோம்.

இலங்கையில் பதினைந்து தேசிய பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அவை பின்வருமாறு:

1. கொழும்பு பல்கலைக்கழகம்

2. பேராதனைப் பல்கலைக்கழகம்

3. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்

4. களனி பல்கலைக்கழகம்

5. மொறட்டுவ பல்கலைக்கழகம்

6. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

7. றுகுணு பல்கலைக்கழகம்

8. கிழக்குப் பல்கலைக்கழகம்

9. தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

10. இரஜரட்ட பல்கலைக்கழகம்

11. சப்ரகமுவா பல்கலைக்கழகம்

12. வயம்ப பல்கலைக்கழகம்

13. ஊவா வெல்லச பல்கலைக்கழகம்

14. கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள்  பல்கலைக்கழகம்

15. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

இவை தவிர கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் ஸ்ரீ பாளி வளாகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் வவுனியா வளாகமும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருகோணமலை வளாகமும் இயங்கின்றன.

இவற்றை விட குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களின் கீழ் சில விசேட நிறுவனங்களும் உள்ளன. அவை பின்வருமாறு:

 கொழும்பு பல்கலைக்கழகம்

1. சுதேசிய மருத்துவ நிலையம்

2. கணனி கல்வி நிலையம் (UCSC)

களனி பல்கலைக்கழகம்

3. கம்பஹா விக்கிரமாரச்சி

 ஆயுர்வேத நிலையம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

4. இராமநாதன் நுண்கலைக் கல்லூரி

கிழக்குப் பல்கலைக்கழகம்

5. சுவாமி விபுலானந்தா அழகியல்

கற்கைகள் நிலையம்.

மேற்படி பல்கலைக்கழகங்களும் அவற்றுடன் இணைந்த வளாகங்கள் மற்றும் நிறுவனங்களும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. இவை தவிர மருத்துவம், விவசாயம், முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் நிறுவனங்களும் (Post – Graduate Institute) சில பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்குகின்றன.

குறிப்பிட்ட அமைச்சுகளின் கீழும் சில உயர் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன இவை பின்வருமாறு:

1. இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகம்

2. இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்   கழகம்

3. சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு  பல்கலைக்கழகம் (KDY)

4. இரத்மலானை தொழில்நுட்பவியல்  பல்கலைக்கழகம் (Univotec)

5. சமுத்திர பல்கலைக்கழகம்

6. தேசிய கல்வி நிறுவகம்.

மேற்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்கள் பற்றிய முழு விபரங்களையும் கல்வி உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

பல்கலைக்கழகங்களில் உள்ள கற்கை நெறிகள்

அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உயர்கல்வி நிலையங்களில் பல்வேறு கற்கை நெறிகள் போதிக்கப்படுகின்றன. பின்வரும் அட்டவணை அவ்வாறு போதிக்கப்படும் கற்கை நெறிகளை பருமட்டாக காட்டுகிறது.

கற்கைத்துறை கற்கை நெறிகளின் எண்ணிக்கை

Streams Program

1.கலை 14

2.வர்த்தகம் 05

3.உயிரியல் 29

4.பௌதிகம் 11

5.பொறியியல் தொழில்நுட்பவியல் 28

6.உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் 08

7.தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்06

8.துறைசாரா 35

மொத்தம் 116

துறைசாரா கற்கைநெறிகள் என்பது க.பொ.த (உ/த) வகுப்பில் எந்த துறையில் பயின்றாலும் அனுமதி பெறக்கூடிய கற்கை நெறிகளாகும். உதாரணமாக. IT, Project Management, Translation முதலான கற்கை நெறிகளுக்கு கலை, வர்த்தகம், விஞ்ஞானம் என்னும் வேறுபாடின்றி பல்கலைக்கழக அனுமதி தகைமை கொண்ட எவரும் விண்ணப்பிக்க முடியும்.

மலையக மாணவர்களைப் பொறுத்த மட்டில் மேற்படி 116 கற்கை நெறிகள் இருப்பினும் அவர்கள் பெரும்பாலும் கலை மற்றும் வர்த்தக கற்கை நெறிகளிலேயே அனுமதி பெறக் கூடியவர்களாக உள்ளனர். பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பவியல் முதலான தொழில்வாய்ப்பு நிறைந்த துறைகளுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய மலையக மாணவர்களே அனுமதி பெறுகின்றனர். கலைத்துறை மற்றும் வர்த்தகத்துறை மாணவர் அனுமதி அகில இலங்கை திறமை மட்ட வரிசை நிலை அடிப்படையிலேயே நடைபெறுகிறது. அதாவது மலையகப் பாடசாலைகளில் 1AB, 1C பாடசாலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளபோதிலும் தகுதி வாய்ந்த –ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் மலையக மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் போட்டியிட்டே கலை மற்றும் வர்த்தகத் துறை அனுமதியை பெற வேண்டியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எனவே மேற்படி 116 கற்கை நெறிகளில் பெரும்பாலானவற்றில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை பூச்சியம் தான் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

அரசு சாரா உயர்கல்வி நிலையங்கள் (Non State Higher Education Institutions)

1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை தேசத்தின் அரசில், சமூக, பொருளாதார, ரீதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.

ஆங்கில மொழி திரும்பவும் முக்கியத்துவம் பெற்றதோடு ஆங்கில மொழிப் பாடசாலைகள் கம்பனி சட்டத்தின் கீழ் தோற்றம் பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஆங்கில மொழி மூலமான உயர்கல்வித் தேவையும் எழுந்தது.

இன்று இலங்கையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டங்களை வழங்கும் பெருந்தொகையான உயர்கல்வி நிலையங்கள் உள்ளன.

இவற்றைக் கண்காணிப்பதற்கும் கட்டுப்பத்துவதற்கும் உயர்கல்வி அமைச்சில் அரசுசாரா உயர்கல்வி நிலையங்கள் பிரிவு (Non State Higher Education Institutions Division) என்னும் தனியான பிரிவு இயங்கி வருகிறது.

இப்பிரிவானது சில உயர் கல்வி நிலையங்களை தமது சொந்த பட்டங்களை வழங்குவதற்கு அனுமதித்துள்ளது இவ்வாறு அனுமதி பெற்றுள்ள 16 உயர்கல்வி நிலையங்களும் அவற்றில் வழங்கப்படும் கற்கை நெறிகளின் எண்ணிக்கையும் கீழே தரப்படுகின்றன.

1. nstitute of Surveying and Mapping –01

2. Sri Lanka Institute of Information Technology –28

3. Sri Lanka Institute of Development Agency –02

4. National Institute of Social Development –02

5. Aquinas College of Higher Studies –05

6. South Asian Institute of Technology and Medicine –03

7. National School of Business Management –17

8. Colombo Institute of Nautical Engineering Campus –04

9. Sri Lanka International Buddhist Academy –02

10. Institute of Chartered Accountants –02

11. SANASA Campus –03

12. Horizon Campus –07

13. KAATSU International University – 08

14. Nagananda International Institute for Buddhist Studies –05

15. SLT Campus Ltd  –03

16. Sri Lanka Institute of Nanotechnology Ltd –01

மேற்படி 16 உயர்கல்வி நிறுவனங்களும் சுமார் 90 கற்கை நெறிகளை நடத்தி வருகின்றன. இந்த வரிசையில் சேர்ந்துகொள்ள பல தனியார் நிறுவனங்கள் உயர்கல்வி அமைச்சுக்கு விண்ணப்பித்த வண்ணமுள்ளன. அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசியல் ரீதியான எதிர்ப்புகள் இருந்தபோதும் இலங்கையில் உயர்கல்வியில் அவற்றின் இருப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. இன்று அரச பல்கலைக்கழகங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,50,000 மாணவர்கள் தகைமை பெறுகின்றனர். இவர்களில் சுமார் 30,000 மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகம் செல்லும் அதிஷ்டத்தைப் பெறுகின்றனர். சுமார் 2 வீதத்தினர் மட்டும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் எஞ்சியுள்ள சுமார் ஓர் இலட்சம் மாணவர்களது பல்கலைக்கழக கனவுபற்றி அரசு சாரா உயர்கல்வியை எதிர்ப்பவர்கள் சரியான முன்மொழிகளை பொது விவாதத்துக்கு முன்வைக்க வேண்டும். இன்றைய உயர்கல்விச் சூழ்நிலையில் ஒரு தேசிய உயர்கல்வி கொள்கை உருவாக்கத்துக்கு ஒரு பொதுக் கருத்தாடல் அவசியமானதாகும்.

இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியானது அரசு சாரா உயர்கல்வித் துறையினரின் பங்களிப்புடன் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் பற்றி உயர்கல்வி கோரும் மலையக மாணவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் எனக்கூறுவதற்கில்லை. எனினும் வரலாற்றில் முதன் முறையாக 500 இற்கு மேற்பட்ட மலையக மாணவர்கள் இவ்வருடம் அரச பல்கலைக்கழகத்துக்கு செல்லவிருக்கின்ற நிலையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புக்களை தெரிந்து கொள்ளும் அவசியம் சீக்கிரமே ஏற்படக்கூடும்.

இந்தப் பின்னணியில் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு வீதத்தை அதிகரிப்பதோடு அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்குப் புறம்பாக இருக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றியும் சில கருத்துக்கள் கீழே முன்வைக்கப்படுகின்றன.

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளி விபரத் தகவல்கள்

மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மக்கள் தொகையினரின் ஒரு பிரிவினர் என்பது உண்மை. எனினும் மலையக மக்கள் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரிவினர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வேளைகளில் இம்மக்களை தனியான தேசிய இனத்தினராக பிரகடனப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து வழங்கும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான புள்ளி விபரங்களில் மலையக மாணவர்களின் தொகை தமிழ் மாணவர்கள் என்னும் பொது வகுதிக்குள் அடக்கப்படுகிறது. எனவே மலையக மக்களின் அனுமதித் தொகையை தனியாக தருமாறு கோரப்பட்டுள்ள போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இன்றைய சாதகமான அரசியல் சூழ்நிலையில் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்கல்வி அமைச்சு ஊடாக மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி பற்றிய தனியான புள்ளி விபரங்களை ஆவணப்படுத்துமாறு கோருதல் வேண்டும். மலையக மாணவர்களின் அனுமதியை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்கு இது உறுதியான அடித்தளத்தை அமைக்கக்கூடும்.

2. பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு சமூகத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்று தமது கல்வியைத் தொடரும் மாணவர்கள் மிகக் கடுமையான நிதிசார் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். தமது கல்வியை தொடரமுடியாமல் பல மலையக மாணவர்கள் இடைநிலையில் கைவிட்டுச் சென்றுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்கள் பலர் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்டு தமது பல்கலைக்கழக கல்வியை நிராகரித்த நிலைமைகளும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன.

பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு மகாபொல புலமைபரிசில் கிடைக்கின்றபோதும் இத்தொகை விடுதி வசதிஇல்லாத பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குப் போதுமானதல்ல. கொழும்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மலையக மாணவர்கள் மிகவும் கடுமையான பொருளாதார கஷ்டங்களால் அவதியுறுகின்றனர்.

தற்போது கொழும்பில் இயங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் பதுளையில் உள்ள சந்திரிக்கா குமாரநாயகம் அறக்கட்டளை மற்றும் இக்கட்டுரையாளன் செயலாளராக பணிபுரியும் நன்னம்பிக்கை கல்வி நிதியம் (Good Hope Education Fund) போன்றவை மலையக மாணவர்களுக்கு ஓரளவு நிதி உதவிகள் வழங்கி வருகின்றன. எனினும் இவ்வுதவிகள் பொருளாதார வசதி குறைந்த சகல பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறான நிதி உதவிகளை பின்வரும் வழிகள் மூலம் விரிவுபடுத்த முடியும்.

அ. நிதிவளம் கொண்டோர் தமது பிரதேசங்களிலிருந்து பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்களுக்கு உதவுதல்.

ஆ. பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் முதலியவை தமது பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கு உதவுதல்.

இ. கோயில்கள் முதலிய சமய நிறுவன நிர்வாகங்கள், அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை தமது பிரதேச மாணவர்களுக்கு உதவுதல்.

3. இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்கெனவே தோட்டத் தொழிலாளர் அறக்கட்டளை மூலம் க.பொ.த உயர்தர வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வுதவிகளை இன்னும் விரிவுபடுத்த முடியும். இதற்கு முதற்படியாக இந்த அறக்கட்டளையின் நிர்வாகக்குழு விரிவுபடுத்தப்பட்டு மலையகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் உயர்கல்வி அமைச்சு ஊடாக இந்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர பெருமளவு புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில் நடத்தப்படும் இந்தப் போட்டித் தெரிவில் மலையக மாணவர்கள் பொதுவாக வெற்றியடைவதில்லை. இந்திய உயர் ஸ்தானிகராலயம் மலையக மாணவர்களுக்கென தனியான ஒரு புலமைப்பரிசில் திட்டத்தை நிறுவ வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானது. இதற்கான நடவடிக்கைகளை மலையக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

4. மலையக கல்விச் செயலகம்

மலையகக் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பாக எண்ணிறைந்த பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகளை அறிவுபூர்வமாக ஆய்வு செய்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு பொதுவான அமைப்பு இன்று அவசரமாகத் தேவைப்படுகிறது. இந்நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்கள் இவ்வாறான அமைப்புகளை நிறுவி நமது சமூகத்தின் கல்வி விருத்தியை முன்னெடுத்து வருகின்றது என்பதை இங்கு மனங்கொள்வது நல்லது.

மேற்படி செயலகம் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்:

அ. மலையக் கல்வி குறிப்பாக பல்கலைக்கழக தேர்வு தொடர்பான தகவல்களைப் பெற்று அவற்றை ஆவணப்படுத்தி பகிரங்கப்படுத்தல்.

ஆ. மலையக கல்விக்கு உதவக் கூடிய உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய ஒரு பதிவேட்டை தயாரித்தலும் தொடர்புகளை ஏற்படுத்தலும்.

இ. மலையகக் கல்வி தொடர்பான ஆய்வுகளை வழிப்படுத்தலும் அவற்றின் முடிவுகளைப் பகிரங்கப்படுத்தலும்.

ஈ. மலையகக் கல்வி தொடர்பான ஒரு வருடாந்த மாநாட்டினை நடத்துவதோடு பல்வேறு உரித்தாளர்களையும் அதில் பங்குபெறச் செய்தலும் மாநாட்டின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தலும்.

பேராசிரியர் தை.தனராஜ்
பீடாதிபதி – கல்விப்பீடம் ஹொறைசன் பல்கலைக்கழகம், மாலபே. 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates