Headlines News :
முகப்பு » , , , , » என் சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ - தகவற்பெறுமதி மிக்க நூல் - கவிதா லட்சுமி

என் சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ - தகவற்பெறுமதி மிக்க நூல் - கவிதா லட்சுமி


ஊடகவியலாளர் என். சரவணனின் ‘அறிந்தவர்களும் அறியாதவையும்’ நூல் இதுவரை தொட்டிராத புதுவிடயங்களைப் பேசுபொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறது. காலனித்துவக்காலப்பகுதியில் ஏதோ ஒருவகையில் இலங்கையோடு தொடர்புடைய ஆளுமையுடைய தனிநபர்கள் பற்றிய தகவல்கள் இந்நூலின் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

வீரகேசரி, சங்கமம் பத்திரிகையில் வாரம்தோறும் வெளியான தொடர் கட்டுரைகள் இவை. இந்த நூலில் இருபத்தைந்து கட்டுரைகள் இருக்கின்றன. அறிந்தவர்களும் அறியாதவையும் நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் வரலாற்றுத் தகவல்களைக்கொண்டவை.

கட்டுரைகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களின் அறிமுகக்குறிப்பாகவே இருக்கிறன. இந்த அறிமுகக்குறிப்புகளை வைத்து நாம் என்ன செய்துப்போகிறோம்? இவர்களைப் பற்றி அறிவதில் எமது சமூகம் பெறப்போகும் பலன் என்ன என்பதன் சாரத்தையே எழுத விளைகிறேன்.

ஒட்டுமொத்தமாக இந்த நூலின் நோக்கம் நூலில் இடம்பெற்ற கட்டுரைகளானவை நாம் எமது சமூகத்திற்குச் செய்யத் தவறிய, செய்ய வேண்டிய விடயங்களை எடுத்துக்கூறுகிறது என்றே சொல்ல வேண்டும்.

நம்மில் எல்லோருக்கும் தெரியும் எமது போராட்டம். அதன் பிண்ணனி, அது கொண்டு சென்ற பாதை, இன்றைய எமது நிலை. அதே போல அடுத்தது என்ன என்று எல்லாருக்கும் இருக்கும் கேள்வி. இந்த கேள்விக்கு யாரிடமும் இன்னும் சரியான விடையில்லை. எனினும் ஒரு விடயத்தை மட்டும் என்னால் சொல்லமுடியும்.

இனிவரும் காலங்களில் ஆயுதம் என்பது அறிவாகவே இருக்கமுடியும். அது எப்படியான அறிவு என்றால் தகவல்கள்களை அடிப்படையாகக்கொண்ட அறிவு. எவர் ஒரு விடயம் தொடர்பாக தகவல்களையும் அதுசார்ந்த அறிவையும் வைத்திருக்கிறாரோ அவரே அந்த இடத்தின் ஆளுமையாக உருவெடுப்பார். ஏனெனில் நாம் வாழ்வது இந்தத் தகவல்யுகத்தில். தகவல் மட்டும் வைத்திருந்தால் போதுமா. நாம் வைத்திருக்கும் தகவல்களை வைத்து நாம் என்ன விடயங்களைக் கண்டுகொண்டோம், எம்மையும் எமது சமூகத்தின், அல்லது உலகத்தின் சுயரூபத்தை எப்படி நோக்கிறோம் என்பதில்தான் தகவல்களின் பெறுமதி உள்ளது.

இந்த இடத்தில் எமது சமூகம் தவறு விட்டுவிட்டது, விட்டுக்கொண்டிருக்கிறது. இனியும் இப்படியே விட்டுவிடுமா என்ற மனப்பயம் நூலை வாசிக்கும் போது வருகிறது.

சரவணன் தமது கட்டுரைகளில் சில விடயங்களை கூறியது கூறல் செய்கிறார். கூறியது கூறல் என்பதைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் நாம் வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கூறியது கூறலை முக்கியமான விடயமாக நான் பார்க்கிறேன்.

ஒன்று, இந்த நூலில் இடம் பெற்றவர்கள் பலரும் இலங்கைத்தீவைப் பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார்கள். அதில் தமிழர்க்குச் சாதகமான வரலாற்றுத் தகவல்கள் பல இருக்கின்றன என்பது. இரண்டாவது, அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் குறிப்புகள் மற்றும் நூல்கள் பலவும் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதாகும். அதை அவர்கள் பல சந்தர்பங்களில் வெளிப்படையாகவே தமக்குச் சாதகமான விதத்தில் திரித்து மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் மற்றும் அவை மக்களிடைய பரவலாகப் பாவிக்கவும்படுகின்றன.

இந்த தகவலை நூல் நெடுகிலும் என்னால் அவதானிக்க முடிகிறது.

நூலில் குறிப்பிடப்படும் அறியப்படவேண்டிய தனிநபர்கள் பற்றிய வரலாற்றக் குறிப்புகள் முக்கியமானவை. அறியப்படவேண்டியவர்கள் எழுதிய மூல நூல்கள், குறிப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவேண்டியவை. இத்தத் தகவல்களும், வரலாறுகளும் தொடர்பாக எமது சமூகம் கொண்டிருக்கவேண்டிய அறிவு முக்கியமானது. இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள்தான் குறிப்பிட்ட வரலாற்றின் ஒரு காலகட்டத்தின் ஊடாக சமூக, அரசியல், பொருளாதார விடயங்களை விளங்கிக் கொள்வதற்கும். அவை தொடர்பாக செயலாற்றவதற்கும் மூலமானவை. வெறும் உணர்வுகளை வைத்து நாம் எந்தவிடயத்தையும் அடையமுடியாத காலத்தில் இருக்கிறோம் என்பதை சமூகக் கட்டமைப்புகளில் இயங்குபவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இப்படியான தகவல்களைகொண்டு நாம் செயலாற்றும் தன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில் சரவணனின் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமானவை.

சரவணனின் எழுத்துநடை நிச்சயமாக எல்லாராலும் வாசிக்கக்கூடிய இலகு தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.; சீராகக் கதைசொல்லும் பாணி அவரது அனுபவதின் வழிவந்ததாக இருக்கலாம். இலகுதமிழ் இந்த நூலின் பலம். கட்டுரையில் குறிப்பிட்ட நபர்களில் பல நபர்கள் என்னை கவர்ந்தார்கள். எல்லோரையும் பற்றி சொல்ல முடியாது. இதில் ஒரு அற்புதமான காதல் கதை ஒன்றும் இருக்கிறது. மௌன்ட் லவனியா என்ற இடப்பெயர் வந்ததற்கான பதிவொன்றில் வரும் லவன்யாவின் கதை. அது ஒரு திரைக்கதைக்கான பதிவு. இப்படியாக பல வரலாற்றுக் கதைகள் இதிலுள்ளன.

நம்மிடம் எவ்வளவு கதைகள் இருக்கின்றன. நாம்தான் எமக்குத் தேவையான கதைகளைத் தேடிப்போவதில்லை, எழுதுவதில்லை, யாருக்கும் கொடுப்பதில்லை. உலகம் என்ன எதிர்பாரக்கிறதோ அதற்கேற்றபடி இயைந்து செயலாற்றி, அறியாமை அடிமைகளாக வாழப்பழகி அதில் திருப்தி கண்டுகொண்டிருக்கிறோம். எம் சமூகத்தினது வாசிப்பின் குறைபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள முடியும்.

அவர் எழுதிய கட்டுரைகளும் மிகநீண்டவையல்ல ஒரு 5 -10 நிமிடங்களுக்குள் ஒரு கதையை படித்துவிட முடியும். இது ஒரு தகவல் நூல். இதில் குறைகள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. தேவையான கட்டமைப்புடன் எழுதப்பட்டிருக்கிறன.

ஆனாலும் சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும். கட்டுரைகளில் நம்பகத்தன்மை வருவதற்கு நாம் தகவல்களைத் திரடடும் மூலம் குறிப்பிடப்படுவது வழக்கம். இது பெரும்பாலும் நமது கட்டுரை எழுத்தாளர்கள் கையாளுவது இல்லை. சில நாட்களுக்கு முன் எஸ். எஸ் பாண்டியனின் ஒரு கட்டுரைத்தொகுப்பு படித்தேன். அதுதான் இதுவரைக்கும் நாம் படித்த நூல்களில் மிகச்சிறப்பாக மூலஆதாரம் குறிப்பிடப்பட்ட நூல். சரவணனின் இந்த கட்டுரைகளிலும் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும். எனக்கு அது போதாமையாகவே உள்ளது. மூலம் குறிப்பிடுவதில் பல முறைகள் உண்டு. இப்படியான கட்டுரைகளுக்கு ‘அக்கடமிக்கல்’ முறையில் ‘சிக்காகோ16’ என்ற ஒரு முறை இருக்கிறது அதைக் கையாண்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். அது கட்டுரைகயின் நம்பகத்தன்மையையும் அதுதொடர்பாக தேடலை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கும் முக்கியமானது.


உண்மையான ஒரு கலைஞனோ எழுத்தாளனோ சமூகத்தின் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவர்களாக இருக்கிறார்கள். எப்பவுமே படைத்தல் மனோநிலையில் இருப்பார்கள் என்று பேராசிரியர் மௌனகுரு சொல்வதுண்டு. அது எத்தனை உண்மை என்பது என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்படியான கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அரசுகள் பல திட்டங்களையும் வசதிகளையும் அளிக்கிறது. அவர்களின் வளர்ச்சியை தமது சமூகத்தின் வளர்ச்சி என்ற வகையில் பாதுகாக்கிறது.

அது இலக்கியம் தொடர்பாக இயங்கும் அனைவருக்குமான ஒரு கட்டமைப்பை நாம் ஈழத்து படைப்புகளுக்கு உருவாக்கவேண்டும். அரசு இல்லாத நிலையில் நாமே அதை உருவாக்கிக்கொள்வேண்டிய தேவை இருக்கிறது.

புலம் பெயர் தேசங்களில் எமது சமூகம்

புலம் பெயர் தேசங்களில் எல்லாவகையான வசதிகளும் வாய்புகளும் இருந்தும் எமது பெரும்பான்மை சமூகம் எதுதெற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துகொண்டிருக்கிறது?

தொழிமுறைக் கல்விப் பெருமையோடு எமது புலம்பெயர் சமூகம் திருப்பதி கண்டுகொள்கிறது.

கலாச்சார விழாக்கள் பொருளாரரீதியான மிகைப்படுத்தல்கள்

ஆடம்பர கொண்டாட்டங்கள், கேலிக்கைகள்

சொந்தப் படைப்பாக்கமற்ற கலைநிகழ்வுகள்

உலக ஓட்டத்தோடு சுயசிந்தனையற்று பின்னால் ஓடுவது

உணர்வுகளைத்துண்டும் செயற்பாடுகள்

எம் சமூகத்திற்கென்று ஒரு அரசு இல்லை என்பது பெரும் துயரம். ஆனாலும் அதைவிடத் துயரம் என்னவென்றால் நமக்கு என்ன வேண்டும் என்று நாமே அறியாமல் இருப்பது. இப்படியாக விடயங்களை தனிமனிதராக சிறிதளவேணும் கொண்டுவருபவர்களின் முக்கியத்துவத்தையும் உணராமல் விடுவது பெருந்துயரம்.

சாதாரணமாக எல்லாரும் படிக்காவிட்டாலும் புதுமைப்பித்தன் சொல்வது போல வாழையடி வாழையாக வரும் ஒருவருக்கானது உங்கள் படைப்பு. நிச்சயம் காலங்களைத் தாண்டி அதன் பயனைப் பெறும்.

அறிந்தவர்களும் அறியாதவையும் நூல் புறப்பொருளைச் சொல்வதாக இருந்தாலும் சரவணனின் அகச்சீற்றத்தை, அல்லது அகத்தினது வேண்டுதலை, அல்லது அகத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கத்தை சுமந்தபடியே எம்மோடு பயணிக்கிறது. இந்த ஆதங்கத்தின்; ஆகத்தூண்டுதல்தான் நூலை எழுதத் தூண்டிய உந்துசக்தியாகக் கருதுகிறேன்.

நன்றி - காக்கைச் சிறகினிலே


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates